இதுவரை:

மதி அவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அக்காவின் திருமணத்தை அவள் குடும்பம் செய்துவைத்து, இப்போது கடனில் இருக்கிறார்கள். இதற்கிடையில் மதி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறாள்.

முதற்பெயர்வு

வந்துவிட்டேன். என் வாழ்வின் புது அத்தியாயத்திற்கு… பெற்றவர்களை, சொந்த ஊரைவிட்டுப் பெயர்கிறேன் அடுத்த அடிக்காக!

புது இடம் வருகையில் மனம் ஒருகணம் லேசாகிறது, மறுகணம் கனமாகிறது. புது மனிதர்களைக் காண்கையில் தோன்றும் பயம் தவிர்க்க இயலாதது. ஆனால், எங்கிலும் நமக்காக ஓர் உலகம் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கொண்டிருக்கிறது. அவ்வாறான என் அடுத்த உலகினிலில் நான் அடி எடுத்து வைத்தேன், அது நான் எதிர்பார்த்திரா எனக்கே எனக்கான எனது உலகத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதை அறியாது!

சென்னை!

எங்கும் நிரம்பி வழியும் மக்கள்கூட்டம். அடுக்குமாடி முதல் குடிசை வரை. வாழ்வின் எல்லா வண்ணங்களும் ஓரிடத்தில். பேருந்துகள், தொடர்வண்டிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், டாக்சிகள் எல்லாம்.

பயத்தோடு கனவுகளும் நெஞ்சை நிறைத்தன.

முதலில் மித்ராவின் தோழியின் விடுதியில் தங்குமாறு ஏற்பாடு. பிற்பாடு விடுதி பார்க்கலாம் என்று மித்ரா அறிவுறுத்தி இருந்தாள்.

முதல்நாள் அலுவலகம் கண்டதும் பிரமித்தேன். அலுவலகம் அடையும் வரை வீட்டிலிருந்து மூன்று முறை அழைப்பு. மாதுவும் அழைத்திருந்தாள். அம்மா, அப்பா இருவரும் வாழ்த்தினர். பெருமிதம் குரலில் வழிந்தது. எனக்கும் கண்களில் நீர் பனித்தது.

முதல் மூன்று நாள்கள் பணிச் சேர்ப்புப் பணிகள், உயரதிகாரிகள் உரை என்று ஓடின. அடுத்த ஒருவாரம் தொடக்கப் பயிற்சிகள், சரியாகப் பத்தாவது நாள் என் பணிக்கான துறை அறிவிக்கப்பட்டு, என்னையும் என்னுடன் வந்த அறுவரையும் ராபர்ட் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று எதிரில் இருப்பவரை அஃப்தர் என்று அறிமுகப்படுத்தினார்.

அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆச்சரியமான புத்தகங்கள். ஒருவித பயம், இவர்தான் மேலதிகாரியா? அனைவரும் வணக்கமிட்டு அவர் வழங்கிய சிற்றுரையைக் கவனித்தோம்.

“ஒருவாரம் இதைப் படித்துப் பாருங்கள். சந்தேகம் இருப்பின் கேளுங்கள். பிறகு உங்களுக்கான பணி வழங்கப்படும்.” அந்தக் கண்டிப்பான குரல் தேர்ந்த ஆங்கிலத்தில் முடிந்தது. குரலுக்கான முகம் ஒருகணம் இதயத்தை ஏதோ செய்தது. கம்பீரம் கொண்ட வசீகரம்!

ராபர்ட் விளக்கினார், இவர்தான் மேனேஜர் என்று. திலீபன் எனது குழுத் தலைவர். அடுத்ததாக திலீபனிடம் அறிமுகம். அவர் என்னை இனிதாக வரவேற்றதகாகத் தெரியவில்லை.

“புது ஆளா? சரி, சரி. வெங்கட் இவங்க பேர் என்ன?”

“மதி.”

“ஆ, வெங்கட் இவங்க மதி, புது குழு உறுப்பினர். வேலையைப் பற்றி அறிமுகம் கொடுத்துடுங்க, மதி ஏதாவது சந்தேகம் இருந்தால் வெங்கட்டைக் கேளுங்க” என்றபடி சட்டென்று நகர்ந்துவிட்டார் திலீபன்.

வெங்கட் என்னைவிட இரண்டு, மூன்று வருடங்கள் பெரியவராகத் தெரிந்தார். நேசப்புன்னகையுடன் அவர் இருக்கையின் அருகில் அமர வைத்தார். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், மதி கையில் என்ன இது என்றார். நடந்ததைக் கூறிடவும், அஃப்தர் வித்தியாசமானவராகத்தான் தெரிகிறார். முன்னர் இருந்தவர்கள் போல் இல்லை என்றார். புரியவில்லை சார் என்றேன்.

“மதி இரண்டு விஷயம் சொல்றேன் தெரிஞ்சுக்கோங்க, அஃப்தர் கோவையிலிருந்து பணி உயர்வில் இங்கு மாற்றலாகி வந்து ஒருவாரம் ஆகிறது. இங்கு சார் என்று கூறும் வழக்கம் கிடையாது. நான் வெங்கட், அவர் திலீபன், மேனேஜர் அஃப்தர் அவ்வளவுதான்”, என்றார். சரி வெங்கட் என்றேன் தயக்கமாக.

ஒருவாரம் என்ன நடக்கிறதென்றே எனக்குப் புரியவில்லை. வெங்கட் வேலை விஷயங்களை அவ்வப்போது கூறி வந்தாலும் என் பணி என்ன என்பது ஒதுக்கப்படாமலே இருந்ததால் எதுவும் வழக்கமாகவில்லை. இடையிடையே அஃப்தர் கொடுத்த தாள்களில் என் கவனத்தைப் பதித்தேன். நிறைய கேள்விகள் எழுந்தன. வெங்கட் சிலவற்றிற்குப் பதில் அளித்தார். திலீபன் என்னிடம் ஒருபோதும் பேசவே இல்லை. பலமுறை சந்தேகம், பணி குறித்துப் பேச முயற்சித்த போதும் பதில் சரியாக இல்லை.

அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.

முதன்முதலில் எனக்கு அப்படித் தோன்றியது…

அஃப்தரிடமே கேட்டால் என்ன?

அதுவரை அவரிடம் எதுவும் பேசவில்லை. முதல் அறிமுகத்திற்குப் பிறகு அன்றைய தினம்தான் அவரிடம் பேசப் போகிறேன். உண்மையில் தயக்கம் ஏதுமின்றி சற்றும் யோசிக்காமல் அவர் அறையைத் தட்டிவிட்டேன்.

கணினியிலிருந்து என்னை நோக்கி கண்கள் உயர,

வாருங்கள், நீங்கள் என்று அவர் என் பெயர் தேடி அலைகையில், மதி சார் என்று நான் கூற, அவர் புருவம் உயரவே நாக்கைக் கடித்து மதி அஃப்தர் என்றேன்.

“சொல்லுங்க மதி.” கண்டிப்பான குரல்.

உண்மையில் எனது பள்ளித் தலைமையாசிரியர் முன் நிற்பது போலவே பயம் தின்றது.

அது இந்தக் கோப்பில் இந்த வரி எனக்கு மிகவும் குழப்பம் தருகிறது என சந்தேகத்தை முன்வைக்கவே, முப்பது வினாடிகள் அதனை வாங்கி உற்று நோக்கியவர், இதிலென்ன சந்தேகம் என்று கோப்பை என் கையில் திணித்தார்.

இல்லை இது தவறாக இருப்பதுபோலத் தோன்றுகிறது என்று, சரியானது என்று நான் நினைத்த ஒன்றைக் கூறியதும் சட்டென்று கோப்பினை வாங்கி முப்பது வினாடிகள் திருப்பிவிட்டு, எதையோ எழுதி கையில் மீண்டும் திணித்து விட்டு, நீ போகலாம் என்றார்.

‘நீ போகலாம்.’ இந்தப் பதில் நான் எதிர்பாராதது. சந்தேகம் கேட்டு வந்தேன். அதற்குப் பதில் சொல்லாமல், என்னைச் செல் என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த நிமிடம் எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. சந்தேகம் கேட்கவந்தால் இப்படியா செல் என்று அவமானப்படுத்துவது? அமைதியாக எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டேன்.

இது போதாதென்று வெளியில் வந்தால் எதிரில் திலீபன்.

“என்னைக் கேட்காமல் எப்படி அஃப்தரை நீ சந்திக்கலாம்?” என்று ஒரே அர்ச்சனை. கண்களில் நீர் கோத்து வெளியே செல்லட்டுமா என்றது. ஒற்றை வார்த்தையில் சாரி என்று சொல்லிவிட்டு அவ்விடம் அகன்றேன்.

மேஜையில் கோப்பை வைத்துவிட்டு அமர்ந்தால் அழுகை வந்தது. இருக்கையில் அலுவலகத்தில் அழுதால் பார்ப்பவர் என்ன சொல்லக்கூடும்? இருக்கையை விட்டு செல்கையில் தீபா, கணேஷ், சுதா என்னைச் சூழ்ந்தனர்.

திலீபன் இப்படித்தான், இருந்தாலும் அஃப்தரைக் காணும்முன் திலீபனிடம் சொல்லிவிட்டுச் செல்வதுதான் சரி என்று என்னைத் தேற்றியதுடன் தவறை மறுமுறை செய்யாதிருக்க அறிவுறுத்தினர்.

சரியென்று தலையை ஆட்டினேன். இவர்களிடம் எப்படிச் சொல்வது? என் அழுகையின் காரணம் திலீபன் அல்லவென்று?

உண்மையில் திலீபன் திட்டியது என்னைச் சற்றும் வருத்தவில்லை. மனம் முழுதும் அஃப்தர் என்னைச் செல்லலாம் என்று கூறியதே வியாபித்து அவமானம் பிடுங்கித் தின்றது.

கண்களைத் துடைத்தபடி இருக்கையில் வந்தமர்ந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பார்ப்பது போல் மனதில் தோன்றவும் சுற்றியும் பார்த்தேன், யாருமில்லை.

என்முன் இருந்த அந்தக் கோப்பினைப் பார்க்கவே கோபம் கோபமாக வந்தது. ஆனால், ஏதோ ஒரு மூலையில் அவர் அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று பார்க்கும் ஆவல் பிறந்தது.

என்ன எழுதி இருந்தால்தான் என்ன? அதுதான் செல் என்று அவமானப்படுத்திவிட்டாரே?

சற்று நேரம் வெங்கட் கொடுத்த குறிப்புகளில் கவனம் செலுத்தினேன்.

(அஃப்தர் அப்படி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான்? அது மதிக்கு எப்படித் தெரியும்? நாம் அஃப்தரிடமே கேட்டால்தான் என்ன?)

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’