“சொல்லாம இப்படித் திடீர்ன்னு சேர்ந்து வந்திருக்கீங்க. இப்படி எல்லாரையும் ஒண்ணா பார்க்கறது மகிழ்ச்சியா இருக்கு. எவ்ளோ நாளாச்சு எல்லாரையும் பார்த்து. வேலை, குடும்பம்னு ஒரு பக்கம் ஓடிக்கிட்டே இருக்கோம், சந்திக்க வாய்ப்பு அமையாமலேயே போய்டுது. அப்புறம் வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” படபடவென மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனார் சரண்யா.

“எல்லாரும் நல்லா இருக்காங்க. நீதான் கிளினிக் தொடங்குனதுல இருந்து ரொம்ப பிஸியா இருக்க. நாங்க வாய்ப்பு இருக்கும்போது இப்படி ஒண்ணா சேர்ந்து வழக்கம்போல சுற்றதான் செய்யறோம். உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு உன்ன பார்க்க கிளினிக்குக்கே போயிடலாம்ன்னு நந்தினிதான் சொன்னா, எல்லாரும் வந்துட்டோம்” என்று முடித்தார் சுகன்யா.

“நானே வேலை வேலைன்னு ஒரே சோர்வா இருந்தேன். உடல் ஒரு பக்கம் சோர்வாயிடுச்சுன்னா மனசும் சோர்வாயிடுச்சு. எல்லாரும் தனியா எங்கயாவது போலாம்ன்னு கேட்கலாம்னு நினைச்சேன். பெண்கள் தனியா பயணம் போறது எவ்ளோ பெரிய தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி கிடைக்கும் தெரியுமா? எங்க போலாம்னு சொல்லுங்க. வாய்ப்பிருக்கறவங்க ஒருங்கிணைங்க. என்னால முடிஞ்சத நான் ஒருங்கிணைப்புல செய்யறேன். என்னடி சொல்றீங்க?” என்றார் சரண்யா.

“எங்கன்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணுங்க. நான் ஒருங்கிணைக்கிறேன். எனக்கும் வெளில போயி ரொம்ப நாளாச்சு. அதும் நாம எல்லாரும் சேர்ந்து தனியா போறோம்ன்னா ரொம்ப ஆர்வமா இருக்கு. சரண்யா நீ கிளினிக்ல பிஸின்னு வராம போன நான் செம்ம கடுப்பாயிடுவேன்” என்றார் நந்தினி.

“நான் வேலைகளை முறைப்படுத்திக்கிட்டு கட்டாயம் வந்துடுவேன். கவலைப்படாத. நாம தனியா பயணம் போறத போயி மிஸ் பண்ணுவேனா?” என்றார் சரண்யா.

“ஆகா! என்ன அதிசயம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கிங்க. பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு. எங்கயோ எல்லாரும் டூர் போறீங்களே எங்களையும் சேர்த்துக்கோங்க நாங்களும் வரோம்” என்றார் சரண்யாவின் இணையர் பாண்டியன்.

“இப்பதான் வர்றீங்களா? பயணம் நாங்க மட்டும்தான் போறோம். மத்தவங்களுக்கு அனுமதி இல்ல. நாங்க போற அன்னிக்கி குட்டீஸ்களைப் பார்த்துக்கோங்க” என்றார் சுகன்யா.

“சரி சரி எல்லாரும் சந்தோசமா போய்ட்டு வாங்க. நம்ம எல்லாரும் குடும்பமா சேர்ந்து போற மாதிரியும் ஒரு ட்ரிப் போடுங்க. எல்லாரும் பேசிக்கிட்டிருங்க. உங்களைப் பார்த்ததும் சரண்யாவைக் கையில பிடிக்க முடியாது. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வரேன்” என்றார் பாண்டியன்.

“அப்புறம் நட்புகளைப் பார்த்தா மகிழ்ச்சியா இருக்காதா பின்ன! எல்லா குடும்பங்களும் சேர்ந்து போற ஒரு ட்ரிப் போட்டிருவோம்” என்றார் சுகன்யா. பாண்டியனும் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

“பொதுவா இந்தச் சமூகத்துல ஆண்களுக்குத்தான் திருமணத்திற்குப் பிறகு இது போல நட்பைத் தொடர்வது, பயணம் போவதுன்னு இயல்பா வாய்ப்பை ஏற்படுத்திக்க முடியுது. நாம இப்படி ஒண்ணா இருப்பது எவ்ளோ தடைகளுக்கு நடுவில சாத்தியப்படுத்தியிருக்கோம்ன்னு நெனச்சா நெகிழ்வா இருக்கு. பல பேருக்கு நாம முன்னோடியாவும் இருக்கோம்ல” என்றார் சரண்யா.

“நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும். இன்னும் எவ்ளோ காலம் ஆகும்னு தெரில. மாற்றம் வரட்டும்” என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையில் மனித வள மேம்பாட்டாளராகப் பணிபுரியும் சுகன்யா.

“தலைகோனா அருவிக்குப் போலாமா? அடுத்த சனி, ஞாயிறு இரண்டு நாள். வாய்ப்பு என்னன்னு சொல்லுங்க?” என நந்தினி முன்மொழிய, “சரி என்பது போல ஏனையோர் தலையாட்டிக் கொண்டிருந்தனர்.

“இவ தமிழ்ல 81 தான் எடுத்திருக்கா அவன் எவ்வளவு எடுத்திருக்கான். ஓ 87 ஆ…. 6 மார்க் அதிகம் எடுத்திருக்கான். கணக்குல 85 , சயின்ஸ்ல 83 தான் இந்த முறை கொறைஞ்சிடுச்சு”

எனப் பாண்டியன் தன் நண்பருக்கு போன் செய்து தன் குழந்தையின் வகுப்பில் பயிலும் தோழனின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தார். உரையாடல் சத்தமாக, சீரியஸா அமைந்ததால் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு அவரின் உரையாடலைக் கவனிக்கலாயினர்.

“இவர் எப்பவும் இப்படித்தான் பண்றார். பாப்பாவோட எக்ஸாம் பேப்பர் வந்ததும் அவரின் நண்பரின் குழந்தையோடு கம்பேர் பண்ணத் தொடங்கிடுவார். இதைப் பார்த்து பாப்பாவுக்கு ரொம்ப கவலை ஆயிடும் ஒரு பக்கம். நானும் எவ்ளோ தூரம் சொல்லிட்டேன். இப்படிப் பண்ணாதீங்கன்னு. ஆனா, எங்க நான் சொல்றதைக் கேட்கறார். எப்பவும் அடுத்த குழந்தையோடயே கம்பேர் பண்றார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடி” என்றார் சரண்யா.

“பார்க்கவே கொடுமையா இருக்குது. அந்தக் குழந்தையின் மனது என்ன பாடுபடும். நம் கல்விமுறைல நடத்தப்படும் எழுத்துத் தேர்வு என்பதே தேவையில்லாத ஒன்று. மதிப்பீடுன்னா குழந்தைகளுக்கு என்ன தெரியுதுன்னு பார்த்து அந்தத் திறனை மதிப்பிடணும். ஒரு குழந்தைக்குப் பல திறன்கள் இருப்பினும் அந்தக் குழந்தை எழுத்தின் மூலமாத்தான் நம் கல்விமுறை மதிப்பிடுது. பல திறன்கள் இருந்தும் எழுதும் திறன் இல்லாத குழந்தை, தேர்வில் தோல்வி அடையுது. இப்படித் தேர்வே தேவையில்லாத ஆணி மாற்றத்துக்கு உட்படணும். கல்விங்கிறது ஒரு குழந்தைக்கு இருக்கும் திறனில் புதியதாக படைப்பை உருவாக்கக்கூடிய வகைல இருக்கணும். ஒரு குழந்தைக்கு இசை திறன் இருக்குன்னா அந்தக் குழந்தை தானே இசைக்கோர்வைகளை உருவாக்கி புதுமையைக் கொண்டு வருவதுதான் உண்மையான கல்வி, அதுவே சமூகத்திற்குத் தேவையானது” என்றார் கல்வி செயல்பாட்டாளராக இருக்கும் அருள்மதி.

“ஒரு குழந்தை வளர்க்கும் பொறுப்பிருக்கற அனைவரும் இதெல்லாம் நிச்சயம் தெரிஞ்சிக்கணும்டி. அவர்கிட்ட ஒப்பிடாதிங்கன்னு சொல்லி சொல்லிப் பார்த்துட்டேன். இன்னும் எப்படிச் சொல்லணும்ன்னு தெரியல. கொஞ்சம் ஐடியா குடேன் நந்தினி” என்று ஆற்றாமை பொங்கக் கேட்டார் சரண்யா.

“சரண் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி திறன்கள் இருக்கு. அத்தனை மனிதர்களும் வேற்றுமையுடனே இருக்கின்றனர். நம்மள்லயேகூட பாரு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி திறன் இருக்கு. நீ மருத்துவத்துறைல ஆர்வமா இருந்த மருத்துவராயிட்ட. சுகன்யா மக்களோட அதிகம் தொடர்புல இருப்பா, எச்.ஆர். இருக்கா. எனக்குக் கல்வி, குழந்தைங்கன்னு ஆர்வம் நான் கல்வித்துறைல இருக்கேன். ஆனா, அவங்கவங்களுக்குத் திறன் இருப்பினும் அது சார்ந்து வேலைவாய்ப்பு அமைந்திடறதில்லதான். நீ புரிஞ்சிக்கறதுக்குச் சொன்னேன். நந்தினியைப் போயி நிறைய பேர்கிட்ட பேசுனா பேசுவாலா? அவளுக்கு அதிகம் பேசறதுன்னா பிடிக்காது. ஆனா, பிடிச்சவங்ககிட்ட காதுல ரத்தம் வர்ற வரை பேசுவா இல்லையா?” என்று பொறுமையாக விளங்க வைத்துக் கொண்டிருந்தார் அருள்மதி.

“அடியே சரண், இதெல்லாம் நீ முதல்ல புரிஞ்சுக்கோ பிறகு அவர்கிட்ட நிதானமா அவர் கேட்கும் மனநிலைல இருக்கும் போது பேசு. உரையாடல் மாற்றவல்லது” என ஐடியா கொடுத்த சுகன்யா, “சரி அருள், ஒப்பிட்டுப் பார்த்தா குழந்தை இன்னும் நல்லா படிக்கும்ல. அடுத்த முறை இன்னும் நல்லா படிக்கணும்ன்னு ஒரு ஊக்கமா இருக்கும்ல. ஏன் அப்படிச் சொல்ற?” எனப் பொதுசமூகம் தன்னிடம் ஏற்றிவைத்த ஐயத்தையும் கேட்டார்.

“அப்படித்தான். ஒப்பிடறவங்க தான் செய்யும் செயலுக்கு இப்படிக் காரணம் கற்பிச்சுக்கறாங்க. இயல்பாகவே உடல் அமைப்பு, பொருளாதாரம், சாதி அமைப்புல என்ன படிநிலைல இருக்கோம், தொழில் இப்படின்னு பலவற்றை பெரியவர்களும் ஒப்பிடறாங்க. பார்க்கப் போனா எல்லோர்க்கும் திறன்கள் ஒன்றுபோல இல்ல. அதிலும் ஒப்பிடுவது பொருத்தமற்றது. ஒப்பிடுவதால் குழந்தைக்குத் தன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு தன்னம்பிக்கை குறையுதாம், அவங்ககிட்ட என்ன திறன் இருக்குன்னு கண்டறிந்து வளர்க்காம தனியாள் திறன் / வேறுபாடு மறைந்து மந்தைப் புத்தி உருவாகுது. மேலும் தொடர்ந்து ஒப்பீடு செய்யும் குழந்தைகளுக்குப் பதட்டம், உளவியல் சிக்கல், மன அழுத்தம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுதுன்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. நீயே யோசிச்சுப் பாரு, பாப்பாவுக்கு வீட்டுக்கு வந்தாவே அப்பா தன் தோழனோட தன் மார்க்கை ஒப்பிட்டுப் பார்ப்பாருன்னு ஒரு பதட்டம், பயம்லாம் வராதா பின்ன” என்றார் அருள்மொழி.

“அதென்னவோ உண்மைதான் அருள். பேப்பரை வாங்கும்போதே அவ பதட்டத்துல ஒரு மாதிரி ஆயிடுவா. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு பக்கம் முழிச்சிக்கிட்டு இருப்பேன்” என்று நொந்து கொண்டார் சரண்யா.

“சரண், இப்படி யோசியேன்… நாம ஒரு நல்ல பெற்றோராதான் இருப்போம்ன்னு நம்பறோம். ஆனா, பாப்பா இன்னொரு அப்பாவோட இவரை ஒப்பிட்டா இவர் ஒத்துக்குவாரா? பாப்பா தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு விசயத்திலும் வேற வீட்டோட ஒப்பிட்டுக்கிட்டே இருந்தா நாம் அதை ஏத்துக்குவோமா? இப்படி யோசிச்சுப் பார்க்கச் சொல்லி அவர்கிட்ட பேசலாம். ஒப்பிடறதால என்னென்ன பிரச்னைன்னு நிறைய ஆய்வுகள் இருக்கு அதை அவரப் படிக்கச் சொல்லலாம்” என்றார் அருள்மதி.

“நம்ம பசங்க வேற யாரோட ஒப்பிட்டா நாம தாங்கமாட்டோம்தான். உடனே அது வேற நாம வேறன்னு லெக்சர் அடிக்கத் தொடங்கிட மாட்டோம். சரி, அவர்கிட்ட நிதானமா பேசி படிக்கச் சொல்றேன்” என்றார் சரண்யா.

“பொதுவாகவே சமூகத்துல இயல்பா ஒப்பிடுதல் நடந்துக்கிட்டுதான் இருக்கு குழந்தை முதல் பெரியவங்க வரை. அது தவறுன்னு சிறு கீறல்கூட விழாத மாதிரி இயல்பா நாம் ஒப்பீடு செய்யப் பழக்கப்பட்டிருக்கோம். அது நிறைய பாதிப்புகளையும் ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கு. இதுலயும் நுண்ணிய அளவில ஆண், பெண் குழந்தைகளில் ஒப்பிடறதுல வேறுபாடு, ஏன் பாகுபாடுன்னே சொல்லலாம் அது இருக்கத்தான் செய்யுது” என்றார் அருள்மதி

“ என்னடி சொல்ற இதுலகூட வித்தியாசமா? என்னவோ போ… எங்க போனாலும் பாகுபாடு மட்டும் இல்லாம இல்ல போல போ” என்றார் சுகன்யா.

“உங்க வீட்டுக்காரர் படிச்சவரா இருக்கறதால ஆண் குழந்தையோட ஒப்பிடும்போது மதிப்பெண்களை ஒப்பிடறார். ஆனா, இது குறித்து விழிப்புணர்வு இல்லாதவங்க ஆண் வீரம், வலிமை, வெளில போறது, கம்பீரம், சம்பாரிக்கறதுன்னு ஒப்பிடுவாங்க. அதுவே பெண்கிட்ட வரும்போது சமைக்கத் தெரியுமா, நல்லா பொறுப்போட குடும்பத்தைப் பார்த்துக்கறியா, வீட்டைச் சுத்தமா வைச்சிக்கிறியான்னு ஒப்பிடும்போதுகூடப் பொதுசமூகம் பெண்ணுக்கு வைச்சிருக்கிற வரையறைகள் கொண்டே பெண்ணை ஒப்பீடு செய்யறாங்க! ஏன் நல்லா கோலம் போடத் தெரியுதானுகூட ஒப்பிடல்களெல்லாம் சாதாரணமா நடக்கறதக் கண்கூடா பார்க்கத்தான் செய்யறேன்” என்றார் அருள்மதி.

“என்னவோ போடி! ஒவ்வொரு மனிதரையும் தனித்தனி நபரா பார்க்கப் பழகுவோம். நாம் மாறுவோம். எனக்கு அவர்கிட்ட பேச ஒரு நம்பிக்கை வந்திருக்கு. பேசிட்டுச் சொல்றேன். வாய்ப்பிருக்கும் இடங்களில் இதைப் பத்திப் பேசுவோம். சீக்கிரம் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க. நான் ஆவலா இருக்கேன். இருக்கும் கடும்பணி சூழல்ல இருந்து கொஞ்சம் ஆசுவாசம் தேவைன்னு தோணுது” என்றார் சரண்யா.

“நாங்க கிளம்பறோம். எங்க எப்போ போறோம்ன்னு வாட்சப் குழுவுல பேசிக்குவோம். இப்ப நாங்க கிளம்பறோம். நேரம் வேற ஆயிடுச்சு. பாப்பாவைப் பார்த்துக்கோடி. அவர்கிட்ட சொல்லிடு நாங்க கிளம்பறோம்ன்னு” என்று நந்தினி சொல்ல, அனைவரும் கிளம்பினர். சரண்யாவுக்கோ என்றும் இல்லாத நிம்மதியும் மனநிறைவும் அன்று வந்து அப்பிக்கொண்டிருந்தது மனதில். என்றும் நட்புகள் வலிமைதானே என்று எண்ணி சிலாகித்துக்கொண்டிருந்தார் சரண்யா. தன் இணையரிடம் பேசக்கூடிய தருணத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தார்.


(தொடரும்)


படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.