‘ஒரு மனிதனால் முடிகிற எந்த ஒரு விஷயமும் இன்னொரு மனிதனால் முடியும்’ என்கிறார் மார்கஸ் அரேலியஸ்.

மொட்டை மாடியில் இரண்டடி அகலச் சுவரில் நடக்க முடியுமா என்று நினைத்துப் பார்த்தோமானால், நாம் முடியாது என்று நினைப்போம். ஆனால், இப்படி நினைத்துப் பாருங்கள். நமது தின வாழ்வில் நாம் நடந்து செல்வதற்கு ஒன்றரை அடி அகலம் எடுத்துக்கொள்கிறோமா, அந்த அகலத்தில்தான் நாம் நடக்கிறோம். அதைவிடவும் அதிகமாகத்தான் இருக்கிறது இரண்டடி அகலச் சுவர். ஆனால், அதில் நடக்க முடியாது என்று நாமாக நினைத்துக் கொள்வோம்.

அதே போல இன்னொரு விஷயம், பொதுவாகக் கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்போது கீழே விட்டுவிடுவோமோ என்று பதற்றம் கொள்வோம். ஆனால், தினமும் மற்ற பொருள்களை எத்தனை முறை எடுக்கிறோம்; அப்படி எடுக்கும்போது எத்தனை முறை கீழே விட்டோம்? இப்படி யோசித்துப் பார்த்தால், கண்ணாடிப் பொருள்கள் மேல் நமக்கிருக்கும் பயம், போய்விடும்.

இந்தப் பிரபஞ்சம் நமக்காகச் சிந்தித்து, நமக்காகச் செயல்படும் என்பதை நாம் நம்ப மறுப்போம். ஆனால், உண்மை அப்படி இல்லை. ஓர் உதாரணம் மூலமாக இதை விளக்க விரும்புகிறேன். நமது ஆட்காட்டி விரல் கதவிடுக்கில் நசுங்கிவிடுகிறது என வைத்துக்கொள்வோம். வலி உயிர் போய்விடும் இல்லையா? நாளெல்லாம், அது ஆறுகிறவரை அந்த வலிதான் நம் நினைவில் இருக்கும் இல்லையா?

ஒரு கதை உண்டு. புதுமைப் பித்தன் எழுதியதாக நினைவு. பரம ஏழை ஒருவர் மகளுக்குக் கல்யாணம் நிச்சயித்திருப்பார். அவருக்கு ஆயிரத்தெட்டு தேவைகள் இருக்கும். எங்கெங்கோ கடன் வாங்கி இருப்பார். அப்போதும் போதாமல் அதிக தேவைகள் இருக்கும்.

இப்போது கடவுள் தன் எதிரில் வந்தால், அவரிடம் இதைக் கேட்க வேண்டும் அதைக் கேட்க வேண்டும்; கடவுள் மட்டும் ஒரே ஒருமுறை எதிரில் தோன்றினால் எப்படி இருக்கும் என்றெல்லாம் நினைத்தபடி, பக்கத்து ஊருக்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருப்பார்.

அப்போது அவருக்குத் திடீரென சிறுநீர் கழிக்க வேண்டுமென உந்துதல் ஏற்படும். அந்தப் பேருந்துப் பிரயாணத்தில் ‘அப்பா எப்படா பஸ் நிற்கும்’ என அவரின் பதற்றம் அதிகமாகிக்கொண்டே போகும். இந்த நிறுத்தத்தில் நின்றால், நாம் இறங்கிப் போய்விட்டு வரலாம்; இதில் நின்றால் போய் வரலாம் என்று பார்த்தால், பேருந்தோ நிற்காமல் போய்க்கொண்டிருக்கும்.

அப்போது திடீரென அவர் முன் கடவுள் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்’ எனக் கேட்பார். ஆனால், அவரோதான் கேட்க நினைத்திருந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ‘எனக்கு இப்போது அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டும்’ என்பார்.

அந்தக் கதை போலத்தான் உடம்பிற்கு ஒன்று என்றால், அதைத் தவிர மனம் வேறெதையும் நினைக்காது.

இதே உடல், வலி, வாதை வைத்துப் பிரபஞ்ச ரகசியத்தையும் நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

‘கடலின் ஒரு துளி நாம்; ஒரு துளி கடல் நாம் – ரூமி’
என்றெல்லாம் நாம் வாசித்திருப்போம். ஆனால், நமக்காக இந்தப் பிரபஞ்சமே வேலை செய்யக் காத்திருக்கிறது; மொத்தப் பிரபஞ்சமுமே நாம் நினைப்பதை நிறைவேற்றித் தரும் என்பதை நாம் நம்ப மாட்டோம்.

நமது பிரச்னை என்ன என்று நம்கூட இருப்பவர்களுக்கே தெரியாதபோது, உணர முடியாத போது, இவ்வளவு பெரிய பிரபஞ்சம் புரிந்துகொள்வதாவது எனக் கேலியாக நினைப்போம். நாம் விரும்புவதற்கு எதிராக நாமே சிந்தித்து அதை நடக்க விடாமல் தடுப்போம். இந்த இருவித சிந்தனைகளும் ஒருவித முரண்பட்ட பல் சக்கரங்கள் போல இறுகி இயங்க விடாமல் செய்துவிடும்.

சரி, நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொடுப்பதற்கோ நமதான விருப்பங்களை நடத்திக் கொடுப்பதற்கோ பிரபஞ்சம் ஓடி வருமா வராதா?

வரும்; நிச்சயம் வரும்; ஒரு நகக் கண் அளவு வலிக்கு எப்படி மொத்த உடலுமே பதறித் துடிக்கிறது இல்லையா? அது ஆறும் வரை நமது நினைவிலேயே அது இருக்கிறது இல்லையா? அதே போலத்தான் நமக்கு ஒன்று என்றால் இந்தப் பிரபஞ்சமும் பதறும். அதையே நினைவில் கொண்டு, நாம் நினைப்பதை நிச்சயம் நிறைவேற்றித் தரும். அதை நாம் உணர வேண்டும்; நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

நாம் நமது எண்ணங்களைச் சரி பண்ணப் பண்ண, நமது மொத்த உலகமுமே மாறும்.

நிறைவாக, ‘சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு’ என்பார்கள். அப்படித்தான் மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் அறிவுரைகள். அவை நம்மை எப்போதும் காப்பாற்றும் என்று சொல்லிவிட முடியாது.

ஆளுமைத் திறன் வகுப்புகளும் சரி, ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளும் சரிசெய்வது ஒன்றைத்தான்.

ஒரு ஜென் கதை:

ஒரு சம்சாரி, ‘சாமி எனக்கு நிம்மதியே இல்லை; சாமி வாழப் பிடிக்கவில்லை’ என்று துறவியிடம் சென்றானாம்.

அவனது பிரச்னைகளை எல்லாம் செவிமடுத்த துறவி, அவன் வைத்திருந்த ஆடுகளை எல்லாம் வீட்டிற்குள் கொண்டுவந்து கட்டச் சொன்னாராம். ஒருவாரம் கழித்து திரும்ப வந்தானாம்.

துறவி, ‘எப்படி இருக்கிறாய்’ என்று கேட்க, ‘ஐயோ, அத ஏன் சாமி கேக்கறீங்க; ஆடுங்க கழியுறதைச் சுத்தம் பண்ணவே பொழுது போயிருது. ‘மே’னு ஒரே சத்தம் வேற’ என்று புலம்பினானாம்.

துறவி, அவனிடமிருந்த கோழிகள், பன்றிகள் யாவற்றையும் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ளச் சொல்லி, சிறிது நாள்கள் கழித்து வந்து சந்திக்கச் சொன்னாராம்.

கொஞ்ச நாள்கள் கழித்து துறவியிடம் வந்த அவன், அழமாட்டாத குறையாகப் புலம்பினானாம்.

அனைத்தையும் கேட்ட துறவி, ‘கோழிகள், பன்றிகள், ஆடுகள் என யாவற்றையும் ஒவ்வொன்றாக வெளியே விடு; கொஞ்ச நாள் கழித்து வா’ என்றாராம்.

ஒருநாள் மிகுந்த முக மலர்ச்சியுடன் அவன் துறவியிடம் வந்து, ‘வீடு சொர்க்கம் போல இருக்கு சாமி’ என்றானாம். கூர்ந்து கவனித்தவர்களுக்குத் தெரியும். அப்படித்தான், இதைத்தான் இந்த ஆளுமைத் திறன் வகுப்புகளும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளும் செய்கின்றன. அது தற்காலிகமாக விடுதலை உணர்வைத் தருபவை. வெளியே இருக்கிற பிரச்னைகளை உள்ளே விட்டு, மறுபடியும் வெளியே விடுகிற கதைதான். ஆனால், பிரச்னைகள் என்பவையோ மாறாமல் எப்போதும் இருப்பவைதான். பசி, தூக்கம், காலை, மாலை இரவு போல திரும்பத் திரும்ப வருவனதான்.

நாம் மெத்த படித்து நிறைய யோசிக்கிற, உயர்ந்த பண்பாளர்களாக இருந்தாலுமே, ஒரு விபத்து போல எதிர்பாராமல் திடீரென நம் வாழ்வைக் குலைக்கிற விஷயங்களில் தடுமாறித்தான் போவோம். அல்லது மெதுவாக கண் முன்பாகவே, மனம் உணராமல், ஒரு செடியாக / மரமாக வளர்ந்து நிற்கிற விஷ விருட்சங்களை, திடீரென உணர்ந்த நாளில் வேரறுக்க முடியாமல் திண்டாடுவோம்.

முக வாதம் என்பார்கள், சிலருக்கு ஸ்ட்ரோக் திடீரென ஒரே நாளின் ஒரு பொழுதில் ஏற்படும்; சிலருக்குத் தூசி படர்வது போல அடர்ந்து மெதுவாக ஏற்படும். வாழ்க்கை சூழல்களும் அப்படித்தான். அப்படியான சூழல்கள் ஏற்படும் போது – அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது, நாம் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தந்த நேரத்தை – அப்போதைய மனநிலையை – மன தைரியத்தைப் பொறுத்தது.

முகத்திற்கு க்ரீம் தடவுவதால் சுருக்கங்கள் மறைந்து பொலிவுடன் இருப்பதாக நினைக்கிறோம். மாறாக, க்ரீமை விரல்களால் தொட்டு முகத்தின் தசைகளை சில நிமிடங்கள் நாம் செய்யும் மசாஜ் காரணமாகவே முகத்தின் பொலிவு நிகழ்கிறது.

அந்த க்ரீம் போலத்தான் ஆளுமைப் பயிற்சி வகுப்புகள்; ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள்! அந்தப் பயிற்சி வகுப்புகளால் அல்ல, அந்தப் பயிற்சிகளின்போது ‘நமது மனம் கொள்ளும் உத்வேகங்களால்’ மட்டுமே நம் வாழ்க்கையில் மகிழ்வுறும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

‘லூயிஸ் ஹே’ தொடங்கி ‘லேண்ட்மார்க் ஃபாரம்’ வரை, ‘மகரிஷி’ தொடங்கி ‘ஜக்கி’ வரை எல்லாருமே – எல்லாமே வெறும் க்ரீம் மட்டுமே.

நமது வாழ்வின் மனச்சுருக்கங்களை நாம்தான் சரிசெய்ய முடியும். சொல்லப்போனால் நாம் நினைத்தால் மட்டுமே சரி பண்ணிக்கொள்ள முடியும்.

மருத்துவர்கள் அறிவார்கள், எலும்பு முறிவோ மனமுறிவோ – தானே தன்னைத் தகவமைத்துக்கொள்ளும்படிதான் – நமது உடலும் மனமும் படைக்கப்பட்டிருக்கிறது. என்ன, கதவைத் திறக்கும்போது ‘திறந்திடு தீசேம்’ மந்திரத்தை மறந்து விடாதிருக்க வேண்டும்; இல்லாவிடில், வாழ்க்கைத் துண்டாடிவிடும்.

யாரும் எதையும் கொண்டு வரவில்லை; எதையும் கொண்டு போவதுமில்லை.

ஒரே முறைதான் இந்த வாழ்வு; அதை யாரையும் துன்பப் படுத்தாமல், எந்தளவு மகிழ்வாக வாழ்கிறோம் என்பதில்தான் நமது மனப் பக்குவம் இருக்கிறது. அப்படி வாழ்வோம்.

(நிறைவு பெற்றது)

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.