பயன்பாட்டில் இருந்த பொருட்கள் – 4

திருக்குச் செம்பு / கூஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…

கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

நேற்று இல்லே நாளை இல்லே

எப்பவும் இவர் ராஜா

இது அக்னி நட்சத்திரப் பாடல். 1959 இல் வெளிவந்த தலை கொடுத்தான் தம்பி திரைப்படத்தில்

கூஜா கூஜா கூஜா

கூஜா கூஜா கூஜா .ஏய்

கூஜா தூக்கி உடல் வளர்த்து

ராஜா போலே நடை நடக்கும்

நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன்

நானில்லேடா கூஜா-உன் போல்

நடிகையின் பின்னே சுத்தித் திரியும்

அடிமைப் பசங்க தாண்டா கூஜா

ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள்கூட

உன்னைப் போல் கூஜா பசங்களாலே

நாசமாய்ப் போனதுண்டு

என்பதாக ஒரு பாடல் வருகிறது.

இவ்வாறு கூஜா தொடர்பாகப் பல பாடல்கள் உள்ளன. பொதுவாகப் பணிவிடை செய்பவர்கள் இந்த கூஜாவைத் தூக்கிக்கொண்டு முதலாளியின் பின்னால் சென்றதால், தனது தேவைக்காக ஒருவர் பின் அலைபவரைக் கூஜா தூக்கி என ஏளனமாக பேசுவது வழக்கமானது.

ஆனால், எங்கள் ஊரில் இதன் பெயர் திருக்குச்செம்புதான். மூடியைத் திருகி திருகி மூடவும் திறக்கவும் செய்வதால் இந்தப் பெயர். அழகிய காரணப் பெயர். ரயில் பயணத்தின் போது பலர் இதைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருக்கும் தண்ணீர்க் குழாய்களில் இருந்து, தண்ணீரைச். சிந்தாமல் பிடித்துவர இது பயன்பட்டது. இதனால் மும்பைவாசிகள் வீடுகளில் பெருமளவில் இருந்தது.

இது பூஜைக்கான கூஜா.

இது வீடுகளில் தண்ணீர் குடிப்பதற்காகப் பயன்படுத்திய கூஜா.

கைப்பிடி இல்லாத மூடி வைத்த பாத்திரத்தை ஜாடி என்றார்கள். இது மோர் போன்றவை குடிக்கப் பயன்படுத்திய சாடி.

இவை உப்பு, ஊறுகாய்  போன்ற பொருட்கள் வைப்பதற்கான சாடி. இவை இன்றும் பல வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

உழக்கு

உழக்கு என்பது தானியங்கள் அளப்பதற்குப் பயன்படும் முகத்தல் அளவையின் பாத்திரம். மாகாணி பிடி, கால்படி, அரைப்பக்கா, பக்கா என்ற அளவுகளில் கீழே உள்ள படத்தில் உழக்குகள் உள்ளன.

சோழாந்தகன் நாழி, அருள்மொழித்தேவன் மரக்கால் என அரசன் பெயரினைத் தாங்கிய அளவை உழக்குகளும் இருந்திருக்கின்றன. பாக்காவின் பெரிய அளவாக மரக்கால், கோட்டை இருந்தது. வயலைப் பற்றிச் சொல்லும் போது இத்தனை மரக்கால் விதைப்பாடு, இத்தனை கோட்டை விதைப்பாடு எனச் சொல்வார்கள்.

‘உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம் என்கிறது ‘நல்வழி’ நூல். 

‘உழவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அது உண்மையும் கூட; அவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கெல்லாம் கூலி போடத் தொடங்கினால், அவர்களுக்கு எதுவுமே மிஞ்சாது.

அரை மகாணி / கால் அரைக்கால் படி, அரை கால் படி, அரைப் படி, ஒரு படி.

இடியாப்பக் குழல் / நாழி

இப்போது பல்வகை இடியாப்பக் குழல்கள் வந்துவிட்டன. இது பழங்கால இடியாப்பக் குழல். இதை இடியாப்ப நாழி என்றும் சொல்வார்கள். உள்ளீடற்ற இந்த மர நாழியின் கீழே பெரிய துளை இட்டு, அதைச் சிறு சிறு துளைகளிட்ட பித்தளைத் தகடு கொண்டு மூடியிருக்கிறார்கள்.

இடியாப்பத் தட்டு இது பனை நாரினால் செய்யப்பட்டது. இதன் மேல் இடியாப்பத்தைப் பிழிந்து, வழக்கம் போல இட்லி கொப்பரையில் வைத்தோ, இடியாப்பத் தட்டின் மேல் (ஸ்டாண்டில்) வைத்தோ அவிக்கலாம். பனை நாரின் வாசனையுடன் நன்றாக இருக்கும்.

சுளவு / சுளகு/ முறம்

சுளவு தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. சுளவு,  பொதுவாக முக்கோண வடிவில் இருந்தாலும், பல்வேறு வடிவங்களில் சுளவு இருக்கிறது. பீடி சுற்றுபவர்கள், வட்ட சுளவு பயன்படுத்துவார்கள். பூ விற்பவர்கள் பெரிய வட்ட சுளவு பயன்படுத்துவார்கள். 

முறத்தைக் கொண்டு நெல்லை ஒரு தமிழ்ப் பெண் தூற்றிக் கொண்டிருந்த பொழுது, புலி ஒன்று வந்ததாகவும், அந்தப் பெண் புலியை முறத்தைக் கொண்டே விரட்டியதாகவும் ஒரு கதை உள்ளது.

அறுவடை முடிந்த பிறகு நல்ல தானியத்திலிருந்து, சாவி எனப்படும் பதரைப் பிரித்தெடுக்க சுளவு பயன்படுத்துவார்கள். அந்த முறைக்குத் தூற்றுதல் என்று பெயர்.

தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப்  பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, ஒருவிதமாக தூக்கிப் புடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கனம் குறைந்த பொருள் முன்பக்கம் வந்து விடும்.

அதே போல சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, பக்க வாட்டில், சரிவாக ஒருவிதமாக ஆட்டினால், இவ்வாறு, கனம் குறைந்த பொருள் பக்கவாட்டில் வந்துவிடும். இதற்குக் கொழித்தல் என்று பெயர். அவ்வாறு கொழித்த, நொறுங்கல் அரிசி கொழியல் அரிசி என்றே அழைக்கப்படுகிறது. நன்றாகப் புடைக்கத் தெரிந்தவர்கள், புடைத்தால், கனம் குறைந்த பொருட்கள் வலது பக்கம் வழியாக வெளியே வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

நான் காய்கறி நறுக்கும் போது சுளவிற்குள் காய்களை வைத்து வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு வெட்டுவேன். வெங்காய / காய்கறி/ பூண்டு தோல் என அனைத்தையும் வைத்துக் குப்பையில் போட வசதியாக இருக்கும். பொருட்களை வெயிலில் காய வைக்க உதவுகிறது. ஒரு சுளவு குறைந்தது பத்து ஆண்டுகள் வரும்.

 பெட்டிகள் 

பனை ஓலையை வெட்டி சமமாக ஓரிரு நாள் வைத்து, பட்டை, கடவம் பெட்டி , சுளவு (முறம்), நார்பெட்டி, தட்டு பெட்டி, சிறு பெட்டி போன்றவை செய்யலாம். என் அப்பம்மா அழகாக எல்லாம் செய்வார்கள். தாயம் போடுவதற்கு சிறு பெட்டி செய்து தருவார்கள்.

இது மிட்டாய் பெட்டி. வழக்கொழிந்து போய் திரும்பவும் வந்துள்ள மிட்டாயைப் பொதிந்து கொடுக்கப் பயன்படும் பெட்டி.

கருப்பட்டி மொத்தமா சிப்பம் சிப்பமாக விற்பனை செய்வதற்கு இந்தப் பெட்டி பயன்படுகிறது.

குருத்தோலைப் பெட்டி

இந்தப் பெட்டி, நல்ல நிறத்தில் இயற்கையான அழகோடு இருக்கும். வீட்டில், குழந்தைகளுக்குப் பண்டம் போட்டுக் கொடுப்பதற்கு இதைப் பயன்படுத்தினர்.

கிண்ணிப் பெட்டி

இது வீடுகளில் பொருட்கள் வைக்க, தோசை இடியாப்பம் போன்றவற்றைச் சுட்டு வைக்கப் பயன்படுத்தினர்.

விளிம்பில்லாத கிண்ணிப் பெட்டி. சமீபத்தில் உறவினர் ஒருவர் செய்து தந்த பெட்டி இது. விளிம்பு இல்லாததால், ஒன்றன் மேல் ஒன்று எனப் பெட்டிகளை அடுக்கி உள்ளே வெங்காயம், தக்காளி, காய்கறி எனப் பொருட்களைச் சேமித்து வைக்கும் இடத்தில் இருந்து சமைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.

தட்டையாக இருப்பதால் இதன் பெயர் தட்டுப் பெட்டி.

அனைத்துப் பெட்டிகளுமே அரிசி வார வைக்க, குறிப்பாக வடைக்கு அரைக்குமுன் தண்ணீர் வடிய வைக்க நன்றாக இருக்கும்.

அஞ்சரைப்பெட்டி

குழம்புக்கு அரைப்பதற்குத் தேவையான பொருட்களை வைப்பதற்குப் பயன்படும் இந்த அஞ்சரைப்பெட்டிக்கு எங்கள் ஊரில் மொளவு (மிளகு) பெட்டி என்று பெயர். அஞ்சரைப்பெட்டி என்பது காரணப் பெயர். ஐந்து அறைகளைக் கொண்டிருப்பதால், ஐந்து அரைப் பெட்டி என்பது அஞ்சரைப்பெட்டி என மாறிவிட்டது.

இது பெரும்பாலும் அம்மி பக்கத்தில் இருக்கும். அப்படியே பொருட்களை எடுத்து அரைப்பார்கள். அரிசிப்பானை, தானியம் சேமிக்கும் பானைகளில் பணம் சேமிப்பது போல அஞ்சறைப் பெட்டியில் பணம் சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்போது இவை உலோகப் பெட்டியாக மாறி இருக்கின்றன.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.