நான் அப்போது கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும். புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது பலரால் கேலிக்கும் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் உரிய பழக்கமாகப் பார்க்கப்படுகிறது. பெண் என்பதால் எனக்கு அப்படியா என்று தெரியவில்லை.

பல நேரம், ‘என்னேரம் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கிறா? எதுக்கு இத்தனை புத்தகம்?’ என்று சில சமயம் திட்டு வாங்குவது உண்டு. என்னுடைய புத்தக சேகரிப்பு சில நேரம் வெறுப்பை ஏற்படுத்துவதும் உண்டு.

அதை விட்டுத் தள்ளுங்கள். நான் முதுகலை முதல் வருடம் படிக்கும்போது திருப்பூரில் உள்ள ஒரு நூலகத்திற்குச் செல்வேன். தமிழ் இலக்கியம் படிக்க புத்தகங்கள் எடுக்கவும் இந்தியக் குடிமைப் பணி தொடர்பாகப் படிக்கவும் செல்வேன். பொது மக்கள் படிக்கும் பகுதி இருக்கும். இரண்டு வருடங்களில் எத்தனையோ முறை சென்றுள்ளேன். ஆனால், பெண்களைப் பார்க்க முடியாது. ஒரு பதினைந்து ஆண்களாவது புத்தகம், செய்தித்தாள், இதழ்களைப் புரட்டிக் கொண்டிருப்பர். அவர்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நான் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். நூலகப் பணியாளரும் பெண் என்பதால் அடிக்கடி என் பாதுகாப்பிற்காகப் புத்தகங்கள் இருக்கும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே நான் அமர்ந்து படிக்கச் சொல்வார்.

‘ஏன் பெண்கள் அதிகம் நூலகம் வருவதில்லை?’ என்று எண்ணுவது உண்டு. பெண்களும் நூலகம் வருவார்கள். அவர்கள் எடுப்பது பெரும்பாலும் காதல், குடும்ப நாவல்களாக இருக்கும். செய்தித்தாள் வாசிப்பு, பொது அறிவு சம்பந்தப்பட்ட வாசிப்பு, நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்துகொள்வது என்பது நான் பார்த்த வரை மிகவும் குறைவுதான். படிப்பது மட்டும் முக்கியமல்ல. எதை வாசிக்கிறோம் என்பதும் முக்கியம். நிறைய பெண்கள் வாசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால், சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தாண்டி அவர்கள் எழுதுவது இல்லை.

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னோவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை 114 நோபல் பரிசுகள் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 14 பரிசுகளை மட்டும் பெண்கள் பெற்று இருக்கின்றனர். இந்த எண்களே வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.

இப்போது ஒலிப்புத்தகங்கள் வந்துவிட்டன. யூடியூப் மூலம் நிறைய தெரிந்துகொள்ளலாம். ஆனால், பெண்கள் புத்தகங்கள் படிப்பது, கைப்பேசி உபயோகத்தை ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவம் இன்னும் நிலவி வருகிறது.

பெண்களை விடுங்கள். இதுவரை எத்தனை பெண்கள் பத்திரிகைகள் முற்போக்காக எழுதி இருக்கின்றன? சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், குழந்தை நலம், உடைகள், குழந்தை வளர்ப்பு இதைத் தாண்டி பெரும்பாலான பெண்கள் பத்திரிகைகள் செல்வதே இல்லை. மேற்சொன்னவைதான் பெண்களுக்கான பத்திரிகையின் டெம்பிளேட்கள்.

படிக்காமலும் அதே செக்கைச் சுற்றினோம். படித்தும் அதே செக்கைச் சுற்றினோம். இதுதான் நடப்பு. MAY BE ITS TIME TO CHANGE THE CONTENT THAT MEN DESIGNED US TO READ.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.