`பெண்கள் தாயாக வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது அடிப்படை உரிமை. கருத்தடையும் கருக்கலைப்பு உரிமையும் பெண் சுதந்திரத்தின் மையப்புள்ளி.’ இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் `த கார்டியனுக்கு’ அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார் பிரெஞ்சு பெண்ணிய எழுத்தாளர் ஆனி எர்னோ. இலக்கியத்திற்காக இவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு தனிச்சிறப்பு வாய்ந்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தனது சொந்த அனுபவங்களை, சமுதாயத்தில் தான் எதிர்கொண்ட பாலின, வர்க்க, இனப் பாகுபாடுகளை வெளிப்படையாக எடுத்துரைக்கும் நினைவுகூரலாகத் தனது புதினங்களை எழுதினார். அவரின் துணிவுக்கும் தனது உணர்வுகளை உள்ளவாறே வெளிப்படுத்திய நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்றுதான் இந்த நோபல் பரிசு. இந்தப் பரிசைப் பெற்ற முதல் பிரெஞ்சு பெண்மணி இவர்.

ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. அவர் சார்ந்திருக்கும் வர்க்கமும் இனமும் சமுதாயமும் அரசாங்கங்களும் எடுக்கும் முடிவுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் அழுத்தங்கள், பொது வாழ்வியல்முறை ஆகிய அனைத்தும் தனிநபர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, தனிநபர் தனது சொந்த அனுபவத்தைப் பேசினாலும், அந்தச் சமுதாயத்தின், வரலாற்றின் பிரதிநிதியாகத்தான் பேசுகிறார். பெண்ணுக்கு இது அதிகமாகப் பொருந்தும். உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் ஒரு பெண் பேசும் போதும் எழுதும் போதும் தான் சார்ந்திருக்கும் வர்க்கம், இனம், மதம், நாடு, அதன் அரசியல் எல்லாம் தன்மீது திணிக்கும் நிர்ப்பந்தங்களை வெளிப்படுத்துகிறார். ஆனி எர்னோவும் தனது எழுத்து வாயிலாக இதைச் செய்தார். அவரின் சொந்த அனுபவங்கள் ஊடாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரெஞ்சு நாட்டை, அதன் சமுதாய வாழ்வியலை, உழைக்கும் வர்க்கப் பெற்றோரின் மகளாகத்தான் எதிர்கொண்ட பாகுபாடுகளை, கருக்கலைப்பு சட்டவிரோதமாக இருந்த காலகட்டத்தில் தனது கருக்கலைப்பு அனுபவத்தை, ரஷ்யருடனான தனது காதலை, தந்தை, தாய், தனது புற்றுநோய் என்று அனைத்தையும் தனது எழுத்தில் வீரியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வயதான தனது தாயைப் பற்றி A Woman’s Story, தந்தையைப் பற்றி A Man’s Place, தனது காதலருடனான உறவு பற்றி Simple Passion உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தன்னையே `அவள்’ என்று குறிப்பிட்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம் தொடங்கி 2000களின் துவக்கம் வரையிலான பிரெஞ்சு சமுதாயத்தில், பெண்ணாகத் தனது பரிணாம வளர்ச்சி குறித்து அவர் எழுதியுள்ள The Years நூலை அவரது முக்கியப் படைப்பாக பிரெஞ்சு விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். தனது நூல்களுக்காக உலகளாவிய பல விருதுகளைப் பெற்றுள்ள ஆனி, தனது கடைசி மூச்சு உள்ள வரை சமத்துவத்திற்காகப் போராடுவேன் என்று நோபல் பரிசு கிடைத்த பிறகு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே இலக்கியத்திற்காக வழங்கப்படும் நோபல் பரிசில் பெண் எழுத்தாளர்களிடம் காட்டப்படும் பாரபட்சம் பற்றியும் குறிப்பிட வேண்டும். 1901இல் நிறுவப்பட்டதிலிருந்து, கடந்த 121 ஆண்டுகளில் ஆனியையும் சேர்த்து இதுவரை 17 பெண் படைப்பாளர்கள் மட்டுமே நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். பெண் எழுத்தை அங்கீகரிப்பதில் ஸ்வீடிஷ் அகாடமி காட்டும் பாரபட்சத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மேலும், ஆங்கிலம் மட்டும் அல்லாமல், உலகின் பல பகுதிகளில் பல்வேறு மொழிகளில் பெண்கள் எழுதும் நூல்களுக்கு அங்கீகாரமும் உரிய இடமும் அளிக்கும் போதுதான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

1963ஆம் ஆண்டு ஆனி எர்னோவுக்கு 23 வயது. எதிர்பாராமல் ஆனி கருவுற்றார். அவர் மீது அக்கறை காட்டாத காதலனின் அலட்சியத்தாலும் பட்டப்படிப்பைத் தொடர வேண்டிய தேவை கருதியும் கருவைக் கலைக்க முடிவெடுத்தார். அப்போது பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த வழிமுறைகளைச் செய்து பார்த்தும் இயலாமல், சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்பவரிடம் சென்று, முடிவில் ஒரு மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார். உடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அவர் மனதையும் பெரிதும் பாதித்தன. சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்த அனுபவத்தை `ஹேப்பனிங்’ (Happening) என்ற நாவலாக விரிவாக எழுதினார். தான் பட்ட வேதனை, எதிர்கொண்ட சவால்கள், அவமானம், தனக்கு ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தையும் அதில் விவரித்துள்ளார்.

ஆனி எர்னோ

கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் சமுதாயத்தில் பெண்களின் நிலை முன்னேற்றமடைந்துள்ளது என்று பலரும் வாதிடும் தற்போதைய காலகட்டத்திலும், தான் தாயாக வேண்டுமா வேண்டாமா என்ற தேர்வு பெரும்பாலான பெண்கள் கையில் இல்லை. கருத்தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவதையும் கருக்கலைப்பு செய்வதையும் அவள் தீர்மானிப்பதில்லை. இதைத்தான் நோபல் பரிசு அறிவிப்பிற்குப் பிறகான தனது பேட்டியில் ஆனி எர்னோ குறிப்பிடுகிறார். முன்னேற்றமடைந்த, சுதந்திர சமுதாயமாக நாம் கருதும் பிரான்ஸ் நாட்டிலேயே இந்த நிலை என்றால், மற்ற நாடுகளையும் இந்தியாவையும் பற்றிக் கேட்கவே வேண்டாம். பெண்ணின் இனவிருத்தி உரிமைகள் (reproductive rights) தான் அவள் சுதந்திரத்தின் அடிநாதம். அதைப் பற்றி தொடந்து குரல் கொடுப்பதும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குப் புரிதலை ஏற்படுத்துவதும் மிக முக்கியம்.

ஆனியைப் பற்றி அறிந்துகொண்டபோது, இன்னொரு முக்கிய விஷயமாக எனக்குப்பட்டது, அதிக அளவில் பெண்கள் தமது அனுபவங்களை எழுதத் துணிய வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரின் சொந்த அனுபவமும் தனித்துவமானது. அதைப் பேசும்போதுதான் பெண்ணின் உடல், உரிமை மீதான ஒடுக்குமுறையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, விவாதித்து, தீர்வை நோக்கி நகர முடியும். `இதென்ன அவ்வளவு முக்கியமா? எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் சாதாரண விஷயம்தானே? இதை எப்படி எழுதுவது?’ என்ற தயக்கம் நம் எல்லாருக்கும் இருக்கும். இதே தயக்கம் ஆனிக்கும் இருந்திருக்கிறது. `எந்த அனுபவமாக இருந்தாலும் எத்தகைய தன்மையாக இருப்பினும் அதைப் பதிவு செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது, அதை வாழ்வியலோடு ஆவணப்படுத்த வேண்டும்’ என்கிறார் ஆனி. அதை நேர்த்தியுடன், நேர்மையாக எழுதி வந்ததால் இன்று நோபல் பரிசு பெற்றிருக்கிறார். நாமும் எழுதலாமே தோழியரே! அது சின்னக் கட்டுரையாக இருக்கலாம், முக நூல் பதிவாகக்கூட இருக்கலாம். நம் அனுபவங்களை, கருத்துகளை, உணர்வுகளை ஆவணப்படுத்தத் தொடங்குவோம். நமக்கான குரல் முதலில் நம்மிடமிருந்துதான் எழ வேண்டும்.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!