அறிவியலின் தேவை இருப்பதால் தொழில்நுட்பங்கள் பெருகுகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் பெருகுவதால் அறிவியலும் வளர்கிறது. மருத்துவத்தில் அறிவியலின் பங்களிப்பு அதிகம். அவ்வகையில் சமீபகாலங்களில் பிரசித்திபெற்ற ஒரு அறிவியல் மருத்துவ வளர்ச்சிதான் “வாடகைத்தாய்” ஆகும். ஆங்கிலத்தில் இதை SURROGACY என அழைப்பர்.

கர்ப்பப்பை

ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்பப்பை இருக்கும். “பை” என்று சொல்லும்போதே அதனுள் ஒரு வெற்றிடம் இருக்கு என்பதே பொருள். கர்ப்பப்பையிலும் அப்படி ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம்தான் கரு வளரும் இடம். ஆணின் விந்தணு கர்ப்பப்பை வழியேதான் கருக்குழாயை அடைந்து கருக்குழாயில் கருமுட்டையுடன் இணைந்து “கரு” உருவாகிறது. கருக்குழாயில் உருவான கரு அங்கேயே வளர முடியாது. அதனால் கரு வளர ஓர் இடம்வேண்டும். அப்படி கரு வளர ஒரு இடத்தைத் தருவதே கர்ப்பப்பை ஆகும். நாற்பது வாரங்கள் அந்த அறையில் கரு படிப்படியாக வளர்ந்து, நாற்பது முதல் நாற்பத்தி இரண்டு வாரங்களுக்குள் குழந்தையாக வெளிவருகிறது.

வாடகைத்தாய்

கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்து அதனால் கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய். விந்தணுவும் கருமுட்டையும் கணவன் மனைவியிடம் இருந்து எடுத்து கரு உருவாக்கப்பட்டு, அந்தக் கரு வேறொரு கர்ப்பப்பையில் நாற்பது வாரங்கள் வளரும்.

உயிரியல் தொடர்புடைய வாடகைத்தாய் மற்றும் உயிரியல் தொடர்பற்ற வாடகைத்தாய் என வாடகைத்தாயில் இரு வகையினர் உள்ளனர். உயிரியல் தொடர்பு வாடகைத்தாய் எனில் சட்டப்பூர்வமான தந்தையின் விந்தணுவும் வாடகைத்தாயின் கருமுட்டையும் இணைகின்றன. உயிரியல் தொடர்பற்ற வாடகைத்தாய் எனில் சட்டப்பூர்வமான தந்தையின் விந்தணுவும், சட்டப்பூர்வமான தாயின் கருமுட்டையும் இணைகின்றன. உயிரியல் தொடர்பற்ற வாடகைத்தாய் கருத்தரிப்பு முறையில் வாடகைத்தாய்க்கும் குழந்தைக்கும் சட்டப்பூர்வமான எந்தத் தொடர்பும் இல்லை.

சட்டமும் வாடகைத்தாயும்

15/7/2022 அன்று SURROGACY REGULATION ACT என்று சொல்லக்கூடிய வாடகைத்தாய் நெறிப்படுத்தும் சட்டமானது இந்திய நாட்டின் மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அது சட்டமாக்கப்படவேண்டும் என்று முன்மொழியப்பட்டது. அதன்பின் அது சட்டமாக ஒப்புதல் பெற்று, 2022 ஜனவரியில் அமலுக்கு வந்தது.

இந்த வாடகைத்தாய் நெறிப்படுத்தும் சட்டத்தின்படி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண், 25 வயதுக்குமேல் 50 வயதுக்குள் இருக்கவேண்டும். ஆண் 26 வயதுக்கு மேலும் 55 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். இவர்கள் இருவரும் இந்தியத் திருமணச்  சட்டப்படி திருமணம் முடித்தவராக இருத்தல் வேண்டும். அத்திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

வாடகைத்தாய் மூலம் குழந்தைபெற தேவையான தகுதிகள்

1. திருமணம் முடித்து  ஐந்து ஆண்டுகள் கணவன் மனைவி உடலுறவு கொண்டும் குழந்தை இல்லாதவர்களாக இருத்தல் வேண்டும்.

2. குழந்தை இருந்தும் அது உள அல்லது உடல் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்தால், அதற்கான சான்றுகளைக் காட்டி வாடகைத்தாய் மூலம் குழந்தைபெறத் தகுதி உடையவர் ஆகலாம்.

3. வாடகைத்தாய்க்கு 16 மாதங்களுக்கு (கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும்காலம்) பணம் கொடுக்கவேண்டும். அதை முன்கூட்டியே மருத்துவக் காப்பீடாகக் கொடுக்க வேண்டும்.

4. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியினர்  மாவட்ட மருத்துவ அதிகாரியின் கீழ் இயங்கும் மருத்துவக்குழுவில் உடல் பரிசோதனை செய்து  சான்று பெற்று இருக்கவேண்டும். வாடகைத்தாயாக விருப்பம் தெரிவிக்கும் பெண்ணும் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச்சான்று பெற்று இருக்கவேண்டும்.

5. மருத்துவ சான்றுகளை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சட்டப்பூர்வமான அனுமதியை நீதிமன்றத்தில் பெறவேண்டும்.

Photo by Jill Sauve on Unsplash

சாதகங்கள்

  1. சட்டப்பூர்வமானது. 
  2. குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக உள்ளது.
  3. கருவை சுமக்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.
  4. பாதுகாப்பானது.

பாதகங்கள்

  1. சட்டப்படி வறுமையின் பொருட்டு யாரும் வாடகைத் தாயாகக்கூடாது. ஆனால் சட்டம் மீறப்படுவதற்கு வறுமை காரணமாக இருக்கக்கூடும்.
  2. ஒருவர் ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும்.
  3. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும்.
  4. பெரும்பாலும் சோதனைக்குழாய் கருவாக உருவாகி வருவதால், பெண் கருக்கொலைகள் நிகழ வாய்ப்புண்டு. அறிவியல் வளர்ச்சியில் பெண் கருவை மட்டுமோ அல்லது ஆண் கருவை மட்டுமோ உருவாக்க இயலாது; ஆனால் அறிவியல் வளர்ச்சியில் பாலினத்தேர்வு செய்ய இயலும்,கருவின் தொடக்கத்திலேயே ஆண்கருவை வளரவிட்டு பெண்கருவை சிதைக்க இயலும்! இது பெண்கருக்கொலைக்கு வழிவகுத்து, சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

படைப்பு:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.