‘ஹோம்ஸ்’ என்பது துப்பறியும் புத்தகங்களில், திரைப்படங்களில் ஒரு தனி இடம்பிடித்த பெயர். நெட்ஃபிளிக்ஸில் ‘எனோலோ ஹோம்ஸ்’ திரைப்படத்தின் டிரைலரைப் பார்க்க நேர்ந்தது. ஹோம்ஸ் என்ற பெயருக்காக டவுன்லோட் செய்தேன். எனோலோ ஹோம்ஸ் துப்பறியும் புலி ஷெர்லாக் ஹோம்ஸின் இளைய தங்கை. திடீரென்று எனோலோவின் அன்னை அவளது பதினாறாவது வயதில் காணாமல் போய்விடுகிறார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து உயர்தட்டு பெண்களுக்கு, பதினெட்டு வயது நிரம்பியவுடன் மிக முக்கியப் பணி சிறந்த கணவனை அடைவது. சிறு வயதில் இருந்தே எப்படிச் சிறந்த மனைவியாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்து வளர்க்கப்படுவார்கள். இதற்காக பினிஷிங்க் பள்ளிகளும் இயங்கிக்கொண்டிருந்தன.

எனோலோவின் தந்தை அவள் பிறந்து சிறிது நாட்களில் இறந்துவிட, அவளது சகோதரர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

கிராமப்புறத்தில் மாளிகையில் எனோலோவிற்கு இருக்கும் ஒரே துணை அவளது அன்னை. மற்றப் பெண்களின் அன்னையைப் போல் பதினெட்டு வயதில் ‘சீசன்’ எனப்படும் திருமணத் தேடலுக்குத் தேவையான நடனம், இசை, ஆடை வேலைப்பாடுகள், பேசும் முறை ஆகியவற்றிற்காக அவளைத் தயார்படுத்தவில்லை.

முற்றிலும் மாறாக விளையாட்டு, அறிவியல், தற்காப்புப் பயிற்சி, சைபர் என்னும் வார்த்தைப் புதிர்களைக் கண்டறிதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறார். பல்வேறு புத்தகங்களையும் படிக்க வைக்கிறார். இதுவரை அவளும் அன்னையும் மட்டும் இருந்த உலகில் திடீரென்று அன்னை காணாமல் போய்விட, அவளது சகோதரர்கள் அங்கு வருகிறார்கள். மூத்த அண்ணனின் பொறுப்பில் எனோலோ விடப்பட, இளைய அண்ணனின் ஷெர்லாக் கையில் அவர்களின் அன்னையைத் தேடும் பொறுப்பு விடப்படுகிறது.

எனோலாவின் தோற்றத்தையும் நடத்தையும் பார்த்த அவளது மூத்த அண்ணன், அவளைப் பெண்கள் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். எனோலாவை விட்டு நீங்கும்போது அவளது அன்னை ஒரு புத்தகத்தைப் பரிசளித்துச் சென்றார். அதில் இருக்கும் மறைமுகச் செய்தியைக் கண்டுபிடித்த எனோலா பள்ளியில் சேருவதற்கு முந்தையை நாள் இரவு ஆண் வேடமிட்டு அவளது தடயத்தை மறைத்து, வீட்டைவிட்டு ஓடிச் செல்கிறாள்.

அவளுடைய திட்டத்தில் முதல் குறுக்கீடு மார்க்கஸ் ஆஃப் பேசில்பரி என்ற இளைஞனின் உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்தது. அன்னையைத் தேடிச் சென்றவள் அவரைக் கண்டுபிடித்தாளா, மார்க்கசின் உயிரைக் காப்பாற்றி, அதனால் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. இப்போது அதனுடைய இரண்டாம் பாகமும் வெளியாகி இருக்கிறது.

துப்பறியும் கோணத்தில் படம் மிகவும் சுவாரசியமாக நகர்ந்தது. ஆனால், இன்னொரு கோணமும் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது.

எனோலாவின் அன்னை அவளிடம் கூறி இருப்பார். ‘எனோலா, உனக்கு வாழ்க்கையில் இரண்டு வழி இருக்கு. ஒன்று மற்றவர்கள் உருவாக்கியதில் செல்வது. மற்றொன்று நீயாக ஒரு வழியை உருவாக்குவது.’ பெண்கள் இன்று வரை தங்களுக்குத் தேவையான முடிவு எடுக்கும்போது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் நெற்றிக் கண்களால் தாக்கப்படுகின்றனர்.

எனோலா அன்னையின் தோழி எனோலாவைத் தேடிவரும் ஷெர்லாக்கிடம் இப்படிக் கூறுவார்: “உனக்கு உலகம் மாறத் தேவை இல்லை. ஏனென்றால் உனக்கு உலகம் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.” இப்படி அர்த்தமும் ஆழமும் நிறைந்த வசனங்கள் கதையில் அப்படியே பொருந்திப் போகும். எனோலா ஹோம்ஸ் இன்றைய பல பெண்களின் பிரதிபிம்பம். இன்னும் பல பெண்களின் வாழ்வு சிலந்திவலை போன்ற சமூக விதிமுறைகளிலும் குடும்ப கௌரவத்தின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் சென்ற நூற்றாண்டாகட்டும், இந்த நூற்றாண்டாகட்டும், இது தனக்கு என்று விதிக்கப்பட்ட வாழ்க்கை பிடிக்காமல் தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொண்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் சாதனையாளர்கள். மேரி கியூரி, நைட்டிங்க்கேல், டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியில் இருந்து இப்படிப் பல உதாரணங்களைக் கூறிக்கொண்டே செல்லலாம். இந்தத் திரைப்படம் பெண்களுக்கான சம உரிமை பற்றி பேசப்படுகிறது. ஆண்களுக்கான உலகத்தில் தன்னை ஒரு துப்பறிவாளராக நிலைநாட்ட எனோலா போராடுகிறார். அதே நேரம் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. ஷெர்லாக் ஹோம்ஸிற்குச் சிறிதும் சளைத்தவள் இல்லை என்று எனோலா நிரூபிக்கிறாள். அறிவிற்கு ஆண், பெண் பேதம் இல்லை. அதே போன்று தடைகள் உடல்களுக்குத்தான், மனத்துக்கு இல்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.