“மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள். இங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி முழுவதும் காட்டுக் கருவேல மரங்களைப் பார்க்கலாம், காகம் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடுமுரடான ஆம்பளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும்.

இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள், நஞ்சைகள் புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரத்தில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம். மூன்று மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்க வேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்கு மேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.

‘வண்டித் தண்ணீர், சைக்கிள் தண்ணீர் அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.’

கந்தர்வனின் ‘தண்ணீர்’ சிறுகதையில் வரும் வரிகள் இவை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான, மிக அவசியமான வளமான தண்ணீரைச் சேகரித்து வருவது பெண்களின் வேலையாகவே காலம் காலமாக இருந்துவருகிறது. கொளுத்தும் வெயிலில் ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் நடந்துசென்று தண்ணீர் சேகரிக்கும் பெண்கள் பாடும் ‘பானிஹாரி’ என்ற ஒருவகைப் பாடல்கள், அந்தப் பிரதேசத்தின் நாட்டார் இலக்கியமாகவே கருதப்படும் அளவுக்கு அது அந்த நிலப்பரப்பின் வாழ்வியலில் கலந்துவிட்டது. உலக அளவில் ஓர் ஆண்டுக்கு நீர் சேகரிப்பதில் மட்டுமே 22 கோடி மணிநேரங்களைப் பெண்கள் செலவிடுகிறார்கள் என்கிறது ஐ.நா. அறிக்கை. உலக அளவில் பத்துக்கு எட்டுக் குடும்பங்களில், தண்ணீர் சேகரிப்பது பெண்களின் பொறுப்பாகவே இருக்கிறது. ஒரு பெண் சராசரியாகத் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே ஒரு நாளில் 54 நிமிடங்களைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட தரவுகள் சராசரிகள் மட்டுமே. இது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 52% கிராமப்புற வீடுகளில் நீர்க்குழாய்கள் இல்லை என்பதால், இந்தியப் பெண்கள் தண்ணீருக்காகச் செலவழிக்கும் நேரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. நீர் குறைவாக உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிக்க மட்டுமே இந்தியப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 5 முதல் 6 பயணங்களை மேற்கொள்கிறார்கள். கிராமப்புறங்களில் நீர் கிடைக்கும் இடங்கள் 6 முதல் 10 கிலோமீட்டர் தூரம் வரைகூட இருக்கலாம். ஒவ்வொரு முறையும் குறைந்தது 15 லிட்டர் தண்ணீரைத் தூக்கி வரவேண்டியிருக்கிறது. குறைந்தது 30 நிமிடங்களாவது நடந்தால்தான் நீர் இருக்கும் இடத்தை எட்ட முடிகிறது.

ரமணா திரைப்படக் காட்சியைப் போல நிறைய புள்ளிவிவரங்களைப் பார்த்தாகிவிட்டது. மில்லியன், லட்சம், நூறு என்றெல்லாம் எண்கள் தலைசுற்ற வைக்கின்றன இல்லையா? சரி, இதை இன்னும் கொஞ்சம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவில் 68.5 கோடிப் பெண்கள், இவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 10 கிலோமீட்டர் வரை நீர் சேகரிப்பதற்காக நடக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கணக்கு போட்டால் மொத்தம் 4110 கோடி கிலோமீட்டர் வருகிறது. இது பூமியைச் சுமார் பத்து லட்சம் முறை சுற்றி வருவதற்குச் சமம்! அதுவும் கால்நடையாக! இது இந்தியா என்ற ஒரு நாட்டில் இருக்கும் பெண்களின் ஒரு நாள் கணக்கு மட்டுமே!

குழந்தை வளர்ப்பு, சமையல், வீட்டு வேலைகள் ஆகியவை காரணமாக, அவற்றுக்குத் தேவையான நீரைச் சேகரிப்பது பெண்களின் வேலையாக மாறியிருக்கும் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், 2023ஆம் ஆண்டிலும் இந்த நிலை தொடர்வது ஏன் என்பது முக்கியமான கேள்வி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஒரு வழக்கம், பெண்கள் மீதான இந்தப் பணிச்சுமையின் உச்சகட்டம் எனலாம். அதுதான் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே பெண்களை மணந்துகொள்வது! இது தனி ஆணாக இருந்துகொண்டு சமைக்க முடியவில்லை என்பதற்காகத் திருமணம் செய்துகொள்வது போன்ற வழக்கமல்ல. ஏற்கெனவே திருமணமாகியிருந்தும், தண்ணீர் சேகரிக்க ஆள் போதவில்லை என்பதற்காக மட்டுமே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இது! சில சமயங்களில் இரண்டாவது மனைவியும் நீர் சேகரிக்கப் போதாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஆண்களும் இருக்கிறார்கள்.

திருமணமாகி கணவனை இழந்த பெண்களையும் தனியாகக் குழந்தையை வளர்க்க முடியாமல் போராடும் பெண்களையும் கிராமப்புற சமூகங்கள் எளிதில் ஏற்பதில்லை. இந்தச் சூழலில், இழந்த சமூக மரியாதையைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு வழியாக, இதுபோன்ற திருமணங்களை இந்தப் பெண்கள் ஏற்கிறார்கள் என்று எழுதுகிறார் டேனிஷ் சித்திக். குழந்தை பெற இயலாத பெண்கள், மிகவும் வறுமையில் வாடும் பெண்கள் ஆகியவர்களும் இந்த முறைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவர்கள் தண்ணீர் மனைவிகள் அல்லது நீர் மனைவிகள் (Water Wives) என்று அழைக்கப்படுகிறார்கள்.

வறுமையில் கிடக்கும் பெண்களுக்கு இந்தத் திருமணங்கள் வாழ்வு தரும் என்ற ஒரு சப்பைக்கட்டு காரணத்தோடு மகாராஷ்டிராவின் கிராமப் பஞ்சாயத்துகளே தண்ணீர் மனைவி முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால், முதல் மனைவியாக வரும் பெண், கணவனின் சொந்த சாதியைச் சேர்ந்த, திருமணமாகாத பெண்ணாக இருக்க வேண்டும் என்றும், தண்ணீர் மனைவி ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் போனால் போகிறது என்று தாராள மனத்துடன் கிராமத் தலைவர்கள் உத்தரவிட்டிருக்கின்றனர்! தண்ணீர் சேகரிப்பு என்ற இடுப்பொடியும் வேலையைச் செய்து மாளவில்லை என்பதால், முதல் மனைவியே தண்ணீர் மனைவிகளைத் திருமணம் செய்யச் சொல்லிக் கணவனை வலியுறுத்திய கதைகளும் உண்டு!

திருமணமான பிறகு இந்தத் தண்ணீர் மனைவிகள் தனியே தங்கவைக்கப்படுகிறார்கள், ஒரு மனைவிக்கு உண்டான தார்மீக/சட்டரீதியான உரிமைகள் எதுவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. தண்ணீரை எடுத்துவருவது மட்டுமே இவர்களது வேலை. பண்டிகைகள், விழாக்காலங்களில் கணவனோடும் குடும்பத்தினரோடும் பங்கெடுக்கும் உரிமைகூட இவர்களுக்கு இருப்பதில்லை. ஊருக்குள் போதுமான நீர் கிடைக்க வழிவகை செய்வது, குடிநீர்த் தொட்டிகள் மற்றும் குழாய்கள் நிறுவுவதைவிடத் தண்ணீர் மனைவிகள் வழக்கத்தை அமல்படுத்துவதும் ஊக்குவிப்பதும் எளிதானது என்பதாலேயே கிராமத் தலைவர்கள் இதில் ஈடுபடுகின்றனர் என்று எழுதுகிறார் பாஹுல் கௌர்.

மகாராஷ்டிராவில் நிலவும் உச்சகட்ட சுரண்டல் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை என்றாலும் தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு பெண்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தப் பெண்கள் நீருக்காக நீண்ட தூரம் வெயிலில் நடக்க வேண்டியிருக்கிறது. காலையிலேயே எழுந்து வெளியில் சென்று கனமான குடங்களில் பெண்கள் நீரைச் சுமந்து வரவேண்டியிருக்கிறது. இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற கிராமங்களில் வாழும் பெண்கள் ஏற்கெனவே ரத்தசோகை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் கூடுதல் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். செல்லும் வழியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். இதிலேயே பெண்கள் நேரம் செலவழிப்பதால் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் அவர்களது பங்களிப்பு குறைகிறது, இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.

ஒரு வயதுக்குப் பின்னர் பெண் குழந்தைகளும் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதால் அவர்களது படிப்பும் பாதிக்கப்படுகிறது. இது சும்மா ஓர் அனுமானத்தில் எழுதப்பட்டதல்ல. உண்மையிலேயே நீர்த்தட்டுப்பாடு உள்ள இடங்களில் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் 15 நிமிடத் தொலைவில் நீர் ஆதாரங்கள் இருந்தால், பெண் குழந்தைகளுக்கு நீர் சேகரிக்கும் பொறுப்பு இருப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில், அந்த ஊர்ப் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளின் வருகை 12% அதிகரிக்கிறது என்கிறது தான்சானியாவில் நடந்த ஓர் ஆராய்ச்சி!

இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் தண்ணீர் என்பது ஒரு தினசரி அன்றாடத் தேவையாக இருப்பதால் வேறு வழியின்றிப் பெண்கள் அந்தச் சுமையை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட கந்தர்வனின் கதையில்கூட, மையக் கதாபாத்திரமாக வரும் பெண், பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வீட்டிலிருப்போர் தேடும் அளவுக்குத் தாமதமானாலும் ஒரு சொட்டு மீதமின்றித் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார். இவ்வளவு சிரமப்பட வேண்டுமா என்று அப்பா கேட்டதும், “நாளைக்கு வரை குடிக்க எங்கே போறது?” என்கிறாள்.

இந்தச் சமூக அவலத்தை அதீதமாக ரொமாண்டிசைஸ் செய்து பெண்களை நீர் தேவதைகளாகப் புகழும் போக்கும் ஒருபுறம் தொடர்கிறது. பல கிலோமீட்டர் வெயிலில் நடந்து ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் நீர் எடுக்கப் போகும் பெண்கள் பாடும் பாடலை, ‘நீர் எடுக்கப் போகும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்படி பாடுகிற பாடல்கள்’ என்று வர்ணிக்கிறார் ஓர் ஆராய்ச்சியாளர்! ராஜஸ்தானின் பெண்கள் எந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சியாளருக்கே வெளிச்சம்.

நீர்க்காதை இன்னும் முடியவில்லை. நீர் ஆதாரங்களுக்கும் பெண்களுக்குமான உறவு, அவற்றின் மேலாண்மையில் அவர்களின் பங்களிப்பு, இதில் இருக்கும் பாலின அரசியல் போன்ற பல அம்சங்கள் இன்னும் மீதமிருக்கின்றன. பேசுவோம்…

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!