“இப்போலாம் யாருங்க ஆண், பெண் வித்தியாசம் பாக்குறாங்க? பெண் பிள்ளைகள்தான் அதிகமா மாநில, மாவட்ட அளவுல முதல் மதிப்பெண் வாங்கறாங்க” என்று சொல்லும் பலரைத் தினமும் கடந்து வருகிறோம். முதல் மதிப்பெண் வாங்கிய பெண்களெல்லாம் சில பல வருடங்களில் என்ன ஆகிறார்கள்? பேட்டியில் சொன்னபடி அவர்கள் கனவுகளை, லட்சியங்களை எட்டி இருக்கிறார்களா? சொல்லப்போனால் லட்சியங்கள் கொள்வதற்கும் கனவு காண்பதற்குமே பல பெண்கள் தயாராவதில்லை. “பெருங்கனவுகள் நமக்கானவை இல்லை, அளவாக இருந்தால் போதும்” என்கிற தன்னையே குறுக்கிக்கொள்ளும் எண்ணத்தைத் தெரிந்தோ தெரியாமலோ நம் பெண் பிள்ளைகள் மனத்தில் நாம் விதைத்து விடுகிறோம்.

ஆண்கள் அளவிற்கு லட்சியம் கொள்ளாமலும், கொண்ட லட்சியங்களை அடையாமலும் பெண்கள் நின்று போக என்னவெல்லாம் காரணம் ஆகிறது? எதையெல்லாம் காரணம் காட்டி பெண்களின் லட்சியங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒடுக்கப்படுகின்றன? உங்களை அறியாமல் நீங்களும் இதில் எதையும் செய்கிறீர்களா? ஒரு சுய மதிப்பீடு செய்வோம் வாருங்கள்!

என்னென்ன சொல்றாங்க பாருங்க!

பள்ளி, கல்லூரி:

பெண் குழந்தையையும் ஆண் குழந்தையையும் ஒரே பள்ளியில், ஒரே கல்லூரியில் படிக்க வைக்கத் தயங்கும் பெற்றவர்கள் இன்னும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்கும் கொஞ்ச பணத்தில் ஆணை நல்ல பள்ளியில் படிக்க வைத்தால் நாளை சம்பாதித்து நமக்குச் சோறு போடுவான், பெண் சம்பாதிக்கப் போவதில்லை, சம்பாதித்தாலும் யாருக்கோதானே கொடுக்கப்போகிறாள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. கல்லூரிக்கு வரும்போது, இருக்கிற பணத்தை எல்லாம் படிப்புக்குச் செலவு செய்துவிட்டால், திருமணத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி நிலவுகிறது. பெண் குழந்தையை வேறு வீட்டுக்குப் போகிறவளாகவே பார்ப்பதும், வளர்ப்பதும் , அவள் சம்பாத்தியத்தைத் திருமணம் ஆகிறவரை தந்தையுடையதாகவும் திருமணத்திற்குப் பின் கணவருடையதாகவும் பார்க்கிற போக்கும் மாற வேண்டும்.

எந்தத் துறை படிப்பு / வேலை?

நான் அப்படி எல்லாம் பாகுபாடு பார்த்துப் பிள்ளை வளர்க்கவில்லை என்று சொல்பவர்களும், ஒரே பள்ளியில் படிக்கும் மகனையும் மகளையும் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து படிக்க, சமமாக ஊக்குவிப்பதில்லை. இந்தத் துறைகள் பெண்களுக்கு உகந்தது என்று முடிவு செய்து அதை நோக்கியே பெண்களைச் செலுத்துகின்றனர். அந்த முடிவு எந்த அடிப்படைகளில் எடுக்கப்படுகிறது?

சீக்கிரமாகப் படிப்பை முடித்தோமா, திருமணம் செய்தோமா என்று இருக்கும்படி இருக்க வேண்டும். உயர்கல்வி எனத் தொடர்ந்து படிக்கும்படி இருக்கக் கூடாது. திருமணம் தாமதம் ஆகக் கூடாது, தனது கடமையை முடிக்க வேண்டும்! பெண்ணைப் படிக்க வைத்து, தன் சொந்த காலில் நிற்க வைப்பது கடமையாகப் பார்க்கப்படுவதில்லை. திருமணமும் பிள்ளைப்பேறும்தான் முடிக்க வேண்டிய கடமைகள்!

வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குப் படிப்பதற்கோ வேலைக்கோ போக வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த பல படித்த குடும்பங்கள்கூடப் பெண் பிள்ளையை நாட்டின் பெரும் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் வெளிமாநிலம் என்ற காரணத்திற்காக அங்கே அனுப்பாமல் உள்ளூர், உள் மாநிலத்திலேயே படிக்க வைத்திருக்கிறார்கள். படித்து முடித்து நல்ல வேலை கிடைத்தும் பெற்றோர்களால் வேலைக்குப் போகாமல், இன்று அதில் பாதி சம்பளத்திற்குக் கஷ்டப்படும் தோழிகள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். இவை எல்லாம் பாதுகாப்புக்கு என்று சொல்லப்பட்டாலும் பெண் காதல் வயப்பட்டு வேறு சாதியில் / மதத்தில் திருமணம் செய்துவிடுவாள் என்ற பயம் பெரிய காரணியாக இருக்கிறது. உலக அறிவைப் பெற்ற பெண் கேள்வி கேட்க தொடங்குகிறாள், அது பெற்றோரையும் சமூகத்தையும் பயமுறுத்துகிறது. அவர்கள் சொல் வெளி பேச்சைக் கண்மூடிதனமாகப் பின்பற்ற மாட்டாள் என்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

காலையில் போய், மாலையில் வந்து வருங்காலத்தில் வீட்டை, குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவாக இருக்கிற வேலைக்கானதாக இருக்க வேண்டும். உடல் உழைப்பையோ நீண்ட நேர / இரவு நேரப் பணியையோ கோருகின்ற வேலையாக இருக்கக் கூடாது. மருத்துவத்தில் இளங்கலை படித்துக்கூட முதுகலையில் பெண்களுக்கேற்ற படிப்புகள் என்று சிலவற்றைத் தேர்ந்தெடுக்க கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். அறுவை சிகிச்சை போன்ற கடினமான பிரிவுகள் பெண்களுக்கானதில்லை என்ற எண்ணம் நிலவுகிறது.

பல பெண்கள் உடன்படிக்கிற, பாதுகாப்புக்குக் கொஞ்சமும் பயமில்லாத துறையாக இருக்க வேண்டும். எளிதாக மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். உயர்கல்வி படித்துவிட்டால் அதற்கேற்ற மாப்பிள்ளை தேடுவது கடினம் என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதிகம் படிக்க பெண்களைக்கூடத் தயார் செய்து விடுகிறோம், அதிகம் படித்த தன்னைவிட அதிகம் சம்பாதிக்கிற, அதிகம் சாதிக்கிற பெண்ணை காதலிக்கிற, திருமணம் செய்துகொள்ளும் ஆணை நாம் இன்னும் வளர்ப்பதில்லை.

இவற்றை எல்லாம் கடந்து, பல மடங்கு அதிகம் உழைத்தாலும் ஓர் ஆண் அடையும் இடத்தை ஒரு பெண் அடைந்தாலும் தொடர்ந்து திருமணம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றால் சோர்வடைகிறாள். திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

கால ஓட்டத்தில், சமூகம் அவர்களுக்கு வரையறுத்திருக்கும் வலைகளுக்குள் சிக்கிப் பெண்கள் அடுத்தடுத்த படி நிலை நோக்கி முன்னேற முடியாமல் தேங்கிப் போகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், “அதிகம் படித்த, அதிகம் சம்பாதிக்கிற பெண் திமிர் பிடித்தவளாக இருப்பாள், அவளுக்கென கருத்துகள் இருக்கும், நீயா நானா என்கிற போட்டி நிலவும், அதனால் கணவனுடன் அணுக்கமாக இல்லறம் நடத்த முடியாது, விவாகரத்துகள் நடக்கும்” என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதற்கு உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது பெண்களா? ஒத்த அறிவுடைய இணை இருக்க முடியும், அவளுக்குத் தன்னைவிடப் பல விஷயங்கள் அதிகமாகத் தெரிந்திருக்கலாம் என்பதை ஏற்கும்படி ஆண்கள் அல்லவா மாற வேண்டும்?

இனிமேலாவது நாம் சிலவற்றைச் செய்வோம். நமக்குத் தெரிந்த பெண்களை பெருங்கனவுகள் காண ஊக்குவிப்போம், தன்னைத் தானே ஒடுக்கிக்கொள்ளும் எண்ணங்களை வேரறுப்போம், நமக்கு அது போன்ற எண்ணங்கள் வந்தாலும், “ஓர் ஆணாக இருந்தால் இதை நான் இப்படி யோசித்திருப்பேனா?” என்று சுய கேள்வி கேட்டுக்கொள்வோம். நம்மால் இயன்றவரை பெண்களின் பெருங்கனவுகள் நிறைவேற ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்! அவர்களின் தடைகளை நாம் செய்யும் சிறு உதவிகள் தகர்க்கலாம்! சேர்ந்து லட்சியங்களை அடைவோம்.

(தொடரும்)

படைப்பு:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.