முன் கதைச் சுருக்கம்:

மதி தனது சொந்த ஊரிலிருந்து வந்து சென்னையில் வேலை செய்கிறாள். அவளின் உயரதிகாரி அஃதருக்கு அவளின் திறமை மீது நம்பிக்கை பிறக்கிறது. கூடவே அவள் மீது ஒரு நட்புணர்வு அஃக்தருக்குத் தோன்றுகிறது.

இனி மதி தொடர்வாள்.

சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது. வேலை நிரந்தரம் ஆகிவிட்டது. மனம் துள்ளலாக இருந்தது. சம்பள உயர்வு இம்மாதம் முதல். ஆர்வத்துடன் அம்மாத சம்பளத்திற்காகக் காத்திருந்தேன், வீட்டிற்குச் செல்ல வேண்டும். விரும்பிய உடை அது இது என்று வீட்டிற்கு ஒரு பெரிய பட்டியலே தயாராக இருந்தது.

அன்று திங்கள் காலை. அவ்வார இறுதியில் வீட்டிற்குச் செல்வதாகத் திட்டம். மனம் ஆரவாரமாக இருந்தது. ஒரு வாரம் எப்படிப் போகுமோவென ஏக்கம் வேறு. அதுதான் கழுகுக்கு வேர்க்குமென்பார்களே! வேர்த்துவிட்டது. அழைப்பு. வேறு யார்? அஃதரிடமிருந்தேதான்.

இந்த மனிதன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார் போலிருக்கிறது. உள்ளே விடுப்பை ரத்து செய்யச் சொல்லியவுடன் மனம் கதறியது. திங்கள், செவ்வாய் விடுப்பு எடுக்கலாமென்றால் கூடாது. அடுத்த சனிக்கிழமைதான் விடுப்பு. சென்ற முறை போலல்லாது இம்முறை மிகுந்த ஏமாற்றம். சென்ற வருடம் பிரிவுத் துயர். இவ்வருடம் பிரிவு அறுவடைநாள். அதை விட்டுக் கொடுக்க என்னால் சற்றும் இயலவில்லை. சரியான காரணம் என்று மூவருக்கு விடுமுறை உறுதியாயிற்று, எனக்கு முடிந்தவரை வேண்டும் என்று கேட்டாயிற்று. ‘சாரி மதி’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு, கலங்கியபடி பார்க்கையில், ‘நீ செல்லலாம்’ என்று அஃதரின் வாய் சொன்னது. உண்மையில் இம்முறை என்னால் இயலவில்லை, மீண்டும் ஒருமுறை தனியே சென்று கேட்டேன். அடுத்த வாரம் ஒரு நாள் கூடுதலாகவும் தரத் தயார் என்று அழுத்தமான பதில் வந்தது. அன்று ஏனோ அதன் பின் வேலையில் கவனம் பதிக்க இயலவில்லை. திலீபனிடம் உடல்நலம் சரியில்லையெனச் சொல்லி கிளம்பி வந்துவிட்டேன் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே.

என்னால் இல்லாமைகளை இயல்பாக ஏற்றுக்கொள்ள எப்பொழுதும் முடியும். ஆனால், கையில் இருந்து வாயில் வைக்கும் பொழுது தட்டிப் பறிக்கும் நிலைதான் தாங்க இயலவில்லை. பெரும்பாலும் உயர் நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்கு இது புரியாத ஒன்றுதான். நடுத்தர மக்களின் இக்காலச் சந்ததிக்கே புரிந்த ஒன்று. பொத்தி பொத்தி தம் ஆசைகளை விட்டுக் கொடுத்து, குழந்தைகளது ஆசைகளையும் விட்டுக் கொடுத்து இரண்டையும் மொத்தமாகக் குழந்தைகளைப் படிப்பிற்கே செலவழித்த பெற்றோர்களும் அவர்களின் அன்பரிந்து வழிபற்றிச் சென்ற பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த முதல் சம்பளக் கனவுக் கோட்டைகளும் அது தரும் ஆனந்தக் கண்ணீரும் சொந்தம். சுகமும் நெகிழ்வும் கலந்த விடிவு அது. அது எப்படி அவருக்குப் புரியும்? பேருந்து முழுக்க ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி என்னைக் கடந்து சென்ற அத்தனை கட்டிடங்களிடத்தும் வண்டிகளிடத்தும் இதையே பேசிக்கொண்டு இருந்தேன். கண்களில் வழிந்த நீரை யாரும் அறியா வண்ணம் துடைப்பதும் அழுவதுமாக அன்றைய பயணம். தொண்டை அடைத்தது. அன்றும் உறங்க நேரமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

வந்த நாட்களில் வழக்கம்போல் வேலையை அதன் போக்கில் செய்தாலும் மனம் தேங்கியிருந்தது. அஃதர் என் முகவாட்டம் அறிந்து விடுப்பு கொடுத்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனம் அல்பத்தனமாக ஏங்கவும் செய்தது. இல்லை அது நடக்கச் சிறிதும் வாய்ப்பே இல்லை. அஃதர் வேறு வேலையாகச் டெல்லி சென்றாயிற்று.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாற்றங்கள் இருக்குமென்று எண்ணினேன். ஆனால், அதிரடி மாற்றங்கள் நான் எதிர்பார்த்திராதது. நான் அஃதரின் நேரடி புது ப்ராஜெக்ட்டில் ஓர் உறுப்பினர். அது நீண்ட நாட்களாக அவர் இவர் என்று அனைவரும் எதிர்பார்த்த சவாலான ஒன்று. அதில் புதியவர்கள் இருப்பர் என்று ஒருவர்கூட எண்ணியிராத சமயம் நானும் தீக்சித்தும் தேர்வு செய்யப்பட்டு இருந்தோம். இம்முறை அக்தர் யாரிடமும் நிறை குறைகளைக் கூறவில்லை. மாறாக ஒவ்வொருவருக்கும் அவர் கொடுத்த பணி ஏதோ ஒன்றைச் சொல்லாமல் சொல்லியது. அனைத்திலும் புரியாத புதிர் திலீபனிடம் மேலும் இருவர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.

வந்த ஒரு வாரமும் அந்தப் புது ப்ராஜெக்ட் பற்றிய அறிமுகம். வேறு நிறுவனத்திலிருந்து அதை ஏற்கெனவே செய்தவர்கள், பயிற்சியாளர்கள் என ஒரு வாரம் அதுவே ஓடியது. மீண்டும் கல்லூரி சென்றது போல் ஒரு பிரம்மை. மனம் நடுநிலையாக இருந்தது. புது ப்ராஜெக்ட் என்பதனால் உற்சாகமும் ஆட்கொண்டது.

திடீரென வியாழன் அன்று அஃதர் என்னை அழைத்து, “மதி வரும் திங்கள், செவ்வாய் விடுப்புக் கேட்டு இருந்தாய் அல்லவா?” என்று கேட்டபோது நிச்சயம் ஒரு கணம் நெஞ்சைப் பிசைந்தது. அடி மனதில் ஒரு பயம். வரும் திங்கள்கூட விடுப்பு கிடையாதோ என.

ஆம் எனத் தலையசைத்ததில், “சரி, புதன்கிழமை ஒரு கூட்டம் உள்ளது. தவறாது வந்துவிடு” என்று கூறிச் சென்றுவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். உண்மையில் அதன் பிறகு நடந்ததை இன்றும் கனவு எனத் தோன்றும்.

(இந்த அஃதர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவனிடமே கேட்போம் அடுத்த வாரம்.)

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’