யாரது?

முன் கதைச் சுருக்கம்:

மதி அஃதர் கொடுத்த குறிப்பினைப் படிக்காது கோபமுற அஃதர் மதியை அழைத்து விளக்கினான். மதி ஒரு சிரிப்புடன் அஃதரின் அலுவலக அறையிலிருந்து வெளிவந்தாள். அதன் பிறகான மதியின் எண்ணவோட்டம் இனி…

‘ஐயோ, இப்படிச் செய்துவிட்டேனே… ஒருமுறை பார்த்திருக்கலாம்தான். அட, முதல் பக்கத்தையும் 167வது பக்கத்தையும் பார்க்கவும் என்றல்லவா எழுதி இருந்தார்? இரண்டாவது வெளியீட்டில் இப்பிழை சரிசெய்யப்பட்டு விட்டதே. இதற்குத்தான் உள்ளடக்கத்தை வாசிக்க வேண்டுமென்பது. ஆர்வக்கோளாறில் எடுத்தவுடன் வரைவிற்குச் சென்றதில் வந்த வினை.

அதிருக்கட்டும், அவர் என்னை என்ன நினைத்திருப்பார் என்று எண்ணியதில் அவமானம் பிடுங்கித் தின்றது. அழுததை வேறு கவனித்திருக்கிறார். நான் சரியாகப் பார்க்காததை நானே வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டேன். ஐயகோ, இனி அவசரக்காரியென்று சவாலான வேலைகள் தராமல் போய்விடுவாரோ?

முகத்தில் வியர்த்துக் கொட்டியது. எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? எல்லாம் வெங்கட்டினால் வந்தது. அவர் மட்டும் இன்று விடுப்பில்லாமல் இருந்திருந்தால் நான் சென்று அஃதரைப் பார்த்திருப்பேனா? சம்பந்தமே இல்லாது வெங்கட்டை வேறு மனதில் கரித்துக்கொண்டே அந்நாளைக் கடத்தினேன்.

நாட்கள் சென்றன. ஏறத்தாழ ஒருமாத காலத்தில் எல்லாம் பழகிப் போனது. அலுவலகம், விடுதி, அலுவலக நண்பர்கள், விடுதித் தோழியர் என எல்லாம் வழக்கமானது. எனக்கென வேலை ஒதுக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும் என்னை விட்டிருக்கப் பழகிக்கொண்டனர். அவர்களைவிட்டு இருக்க நான் மிகவும் சிரமப்பட்டு பழகிக்கொண்டிருக்கிறேன்.

சரியாக இரண்டாவது மாதத்தில் ஒருநாள் விடுப்புடன் வீட்டிற்குச் செல்லலாம் என்று திட்டம். திலீபன் சிடுசிடுத்தார். அவர் ஒப்புக்கொண்டு அனுமதி வழங்கிய இரண்டாம் நாளில் அஃதரிடமிருந்து அழைப்பு எனக்கு. இப்பொழுது எதற்காக? வேலையில் ஏதேனும் பிழையா? இருக்காதே, திலீபன் வேறு இருக்கையில் இருக்கிறாரே! அவரைத் தாண்டி என்னை அழைக்க மாட்டாரே. பின்னர்? சிந்தித்தவாறே திலீபனிடம் கூறிவிட்டு உள்ளே சென்றேன். என்னைப்போல் இன்னும் சிலரும் உள்ளே.

எடுத்தவுடன் என்னைத்தான் கேட்டார்.

“மதி வரும் திங்கள் விடுப்பு கேட்டிருந்தாயா?”

“ஆம் அஃதர்.”

“காரணம்?”

கண்டிப்பான இக்குரலுக்குப் பொய் கைவசம் வேறு வரவில்லை.

அட, நான் இக்கேள்வியை எதிர்பார்க்கவே இல்லையே. ஏதாவது அண்ணன் திருமணம் என்று பொய் சொல்லலாமா? ஐயோ முகூர்த்த நாள் இல்லாவிட்டால் மாட்டிக்கொள்வேனே! 30 வினாடிகள் இதெல்லாம் மனதில் ஓடியதே தவிர, ஒரு பொய் வரவே இல்லை.

மதி உன்னைத்தான் கேட்டேன், மீண்டும் அதே குரல்.

“வீட்டிற்கு இங்கு வந்தது முதல் போகவே இல்லை. அதனால்தான்” என்று உண்மையையே அஃதர் முன் இயம்பிவிட்டேன். ஒரு தலையசைப்புகூட இல்லை.

அடுத்ததாக தாரணியிடம் அதே கேள்வி.

இப்படி எங்கள் அனைவரிடமும் கேட்ட பின்பு தாரணிக்கும் சிவாவுக்கும் மட்டுமே விடுப்பு அளிப்பதாகவும் அன்று நடக்கவிருக்கும் முக்கியமான கூட்டத்தில் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் விடுப்பு தர இயலாததற்கு மன்னிப்பும் பிறிதொருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறும் கூறி அனுப்பிவிட்டார்.

எதுவும் பேச முடியவில்லை. திலீபனிற்கு நிச்சயம் இதற்காகத்தான் என்று தெரிந்திருக்கும். அதனால்தான் என்றுமில்லாமல் இன்று எதற்கு என்று கேட்காமல் அஃதரைப் பார்க்க கேள்வி கேட்காது தலையசைத்தார் போலும். சம்பந்தமே இல்லாது திலீபனைத் திட்டியதுடன் அஃதரையும் சேர்த்து மனதுக்குள் திட்டியபடியே வெளியில் வந்துவிட்டேன். ஒரே அழுகை. அம்மா தானே வருவதாகச் சொன்னார். நானே வருகிறேன் அதற்கடுத்த வாரம் எனக் கூறி வைத்ததுவிட்டேன். மனதில் பாரம் ஏறிக்கொண்டது.

அட, முக்கியமான கூட்டத்திற்கு நீ இருக்க வேண்டுமென்று விடுப்பை ரத்து செய்தால், நீ என் இப்படி கோபம் கொள்கிறாய்? உன் இருப்பிற்கான அங்கீகாரம்தானே இது? ஏதோ ஒரு புது எண்ணம் அறிவைத் தட்ட உடனே உற்சாகம் தொற்றிக்கொண்டது. வேலையில் கவனம் செலுத்தினேன்.

ஆனால், அன்றுபோல் இன்றும் என்னை யாரோ பார்ப்பது மாதிரி தோன்றியது. யாரது? திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. மீண்டும் வேலையைப் பார்க்கலானேன்.

உண்மையில் நான் விடுப்பில் செல்லாதது எவ்வளவு நல்லதாகப் போயிற்று? எத்தனை முக்கியமான கூட்டம் அது? என்ன ஒரு நிர்வாகத் திறன்? அதிலும் அந்தக் குரல்தான் எத்தனை பாவங்களை வெளிப்படுத்தியது! கோபம், கண்டிப்பு, அனுசரணை, சினேகம் என முகத்திற்குத் தகுந்தாற்போல் குரலுமல்லவா அத்தனை முடிவுகளுக்கும் வீரியம் சேர்த்தது! என்னவோ ஏதோ என்று இல்லாமல் வந்தது முதல் இந்தத் துறையின் எல்லாப் பிரிவுகளையும் மேலதிகாரிகளையும் அவர்களுக்குக் கீழ் உள்ளவர்களையும் ஏன் புதியதாக வந்த எங்கள் எழுவரையும் அல்லவா கவனித்திருக்கிறார்?

நிறைய மாற்றங்கள் குழுவிற்குள்.

(மதிக்குத் தெரியாது, நமக்குத்தான் தெரியுமே பார்த்தது யாரென்று? சரி, அப்படி என்னதான் மாற்றமோ? பொறுத்திருப்போம் நடந்தது இன்னதென்று அவர்களே சொல்லும் வரை)

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’