ஒரு குடும்பத்தில் ஒரு கணவன், தன் மனைவியைத் தனக்குச் சமமாக நடத்தினால் என்ன ஆகும்?

எடுக்க வேண்டிய முடிவுகளை, அவளிடம் கலந்தாலோசித்து எடுத்தால் என்ன ஆகும்?

மனைவி சமைத்தது பிடிக்கவில்லை என்றால், நான் சமைத்துக் காட்டுகிறேன் பார் எனச் சொல்லி, அவளுக்குச் சமைக்கச் சொல்லிக் கொடுத்தால் என்ன ஆகும்?

நன்றாகத்தானே இருக்கும்! ஆனால், அப்படி நடப்பது இல்லையே,

ஏன்?

பழக்கமில்லை… பழகிக்கொள்ள அவர்களுக்குத் தேவையும் இல்லை.

கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் முடிவில், அந்த ஆணுக்கு, அவரின் மனைவியின் இடத்தை நிரப்ப, இன்னொரு பெண் வருவதாக இருக்கும்.

ஜய ஜய ஜய ஹே படத்திலும், ஒரு ஜெய பாரதி தெளிவுவந்து வெளியே வந்துவிட்டாள். ஆனால், இன்னொரு ஜெயபாரதி, அந்தக் கணவனிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்தானே? ஏனென்றால், அதில் அந்த ஆண் மாறியதாகக் காட்டவில்லையே.

இந்தக் கதையில் கணவன் கதாபாத்திரம், தன் அம்மா, தன் சகோதரியிடமும்கூட, அதே மூர்க்கத்தனம் காட்டுவதாகத்தான் இருந்தது.

ஆனால், குழந்தைகளைத் திட்டாமல், அடிக்காமல் வளர்க்கும் தந்தைகள்கூட, மனைவியை எளிதாக அடித்துவிடும் காரணம் என்னவாக இருக்க முடியும்?

மனைவி என்றாலே தன்னைவிடக் குறைந்தவள், தனக்கு உடமையான ஒரு பொருள் என்ற எண்ணத்தைத் தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்?

எனவே இந்த விஷயத்தில்…

1. ஆண்கள் மாற வேண்டும்.

2. பெண்கள் அனைவருமே, சுய சம்பாத்தியம், சுய மதிப்புடன் வாழ வேண்டும்.

இல்லையென்றால், ராஜேஷ் மாதிரி ஆண்களுக்கு ஒரு ஜெயபாரதி விட்டுச் சென்றால், அந்த இடத்தை நிரப்ப ஜெயபாரதிகள் கிடைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஒரு காட்சியில் ஜெயபாரதியின் மாமியார், ஜெயபாரதியின் அப்பாவிடம், “நீங்கள் உங்கள் மனைவியை அடித்ததில்லையா?” என்பார், அதற்கு அவர், “ஆமாம், நான் இதுவரை அடித்தது இல்லை” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்?

ஜெயபாரதி முதல் அடியிலேயே, வீட்டைவிட்டு வெளியே வந்திருந்தால் என்ன ஆகும்?

சரி, இந்த மாதிரியான படங்கள் என்ன சொல்ல வருகின்றன? பெண்களும் வன்முறையைக் கையாள வேண்டும் என்பதா?

ஏனென்றால், போராடுவது என முடிவெடுத்தால், ஒரு பெண் போராட்டக் களத்தையும் தேந்தெடுக்க முடியும்.

வீட்டுக்குள் இருந்து அடிக்கும், துன்புறுத்தும் கணவனுடன் போராடுவது அல்லது வெளியே வந்து, தான் ஆசைப்படுகிற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடுவது.

அப்படிப் பார்த்தால், தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத கணவனுடன் போராட ஜெயபாரதிக்கு, கராத்தே கற்றுக்கொண்டு அந்தப் போராட்டக் களத்தில் இருக்கத் தேவையில்லை. முதல் அடி வாங்கியவுடன், வெளியே வந்திருக்கலாம். அப்படி சுயமதிப்புடன் வாழ்வதை வழக்கமான ஒன்றாக, இயல்பானதாகக் காட்டலாம். 21 அடி தேவையில்லை.

கணவன் அடிப்பதை இயல்பானதாக, சாதாரணமான ஒன்றாகக் காட்ட வேண்டியதில்லை. தன்னைக் காத்துக்கொள்ளவோ அல்லது கணவனை திருத்தவோ கராத்தே கற்றிருக்கலாம். ஆனால், அஹிம்சையோ வன்முறையோ எந்த முறையாக இருந்தாலும், இன்னொருவரிடம் போராடும் இந்தப் போராட்டக் களம் தேவையில்லாத ஒன்று.

அதிலும் குறிப்பாக மனைவி கணவனைத் திருத்த வேண்டும் என்ற போராட்டக் களம் தேவையே இல்லாத ஆணிதான். ஏனென்றால், அவரவர்கள் வாழ்க்கையை வாழ உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது…

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.