பெண் விடுதலையை 100 விழுக்காடு அடைந்துவிடவில்லை என்றாலும், நாம் முன்னேறிக்கொண்டு இருப்பதாகவே கருதுகிறேன். இவ்வளவு முன்னேறியதற்கான முக்கியக் காரணங்களாக நான் நினைப்பது குடும்பம். ஏனென்றால் சமுதாயம் வாய்ப்புகளை அமைத்தாலும், குடும்ப அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற சமுதாயத்தில், குடும்ப உறுப்பினர்களின் உதவியின்றி, இவ்வளவு வளர்ச்சி நமக்குச் சாத்தியப்பட்டிருக்காது.

குடும்பத்தில், நமது பெற்றோரோ அல்லது மூத்த தலைமுறையினரோ, எடுத்த முன்னெடுப்புகளும் ஆதரவுகளும்தாம் நம் குடும்பங்களில் இருந்து அந்த முதல் பெண், கல்வி கற்க வீட்டை விட்டு வெளியே செல்ல பெரிதும் உதவி இருக்க வேண்டும்.

என் அம்மா, பாட்டி, சென்ற தலைமுறை அனுபவித்திராத, சில மகிழ்ச்சிக்குரிய விஷயங்களைப் பேசும், எழுதும், பயணம் செய்யும், எனக்குப் பிடித்தவற்றைச் செய்யும் சுதந்திரத்தை இந்தக் காலகட்டத்தில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

ஆனாலும், பெண் மீதான அடிமைத்தனமும் அடக்குமுறையும் சமுதாயக் கட்டுப்பாடுகளையும் பார்க்கும்போது என் கண்களுக்குப் புலப்படுவது ஒரு சாராரின் இயலாமையும் பாதுகாப்பற்ற உணர்வும்தான். ஒரு சாராரின் இயலாமையைச் சரிசெய்துகொள்ள, தங்களின் பாதுகாப்பற்ற உணர்வினை, சரிசெய்துகொள்ள அடுத்த சாராரின் மீது கட்டுப்பாடுகளை விதித்துவிடுவது அவ்வளவு எளிதாக இருக்கிறது.

வீட்டில் சமையலறை வேலைகள் திணிக்கப்பட்ட காரணம் தொடங்கி, குடும்பக் கட்டுப்பாடு பெண்கள்தாம் செய்ய வேண்டும் என்ற காரணம்வரை. ஒரு சாராரின் இயலாமையும் பாதுகாப்பற்ற உணர்வும்தாம் தெரிகிறது.

வனவிலங்குகளை வனவிலங்கு சரணாலயத்தில் அடைப்பதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அறிவுப்பூர்வமான உணர்வுகளால் நிரம்பிய இருபாலர், ஒரு சாரருக்கான கட்டுப்பாடுகளை வைப்பதால், தன்னுடைய எல்லையும் சுருங்கிப் போகிறது என்பதை உணராமலே, வாழ்ந்துவருகிறார்கள்.

நெருங்கிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பண்பான மனிதர்தான். அவர் தன் மனைவியை மிக நன்றாக கவனித்துக்கொள்வதாகவும், தான் சிறந்த கணவர் எனவும் மகிழ்ச்சியோடு சொன்னார். மகிழ்ச்சி. அடுத்து அவர் சொன்னதுதான் சிறிது நெருடலாக இருந்தது. அவர் சொன்னது இதுதான். “நான் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறேன். எனவே என்னைக் கவனிப்பதையும் என் வீட்டைக் கவனிப்பதையும் என் மனைவி செய்ய வேண்டும்”.

தன் மீதான அன்பும் தன் மீதான கவனிப்பும் தன் தலைமை இடமும் எந்த விதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் எல்லாவற்றையும் மீறி இவரைக் கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்ற பாதுகாப்பற்ற உணர்வும், தன் மனைவியின் இயக்கத்தின் மீது, எவ்வளவு எளிதாக ஒரு வரம்பை உண்டுபண்ணிவிட்டது!

ஏனென்றால் இங்கு, பொருளாதாரத் தேவைகள் இருபாலாருக்குமே உள்ளது. கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் இயங்கிக் கொண்டிருப்பதற்கான உந்துதலும் இருபாலரின் உடல் அளவிலும் மனத்தளவிலும் இருந்துகொண்டேதாம் இருக்கும். வாழ்க்கை முழுவதுமே இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அந்த ஆர்வத்தையும் உந்துதலையும் தன்னளவிலும் தன் வீட்டு அளவிலும் எனக் குறைப்பது சரியா? அது எந்த அளவில் மனநிறைவையும் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் தர முடியும்?

27 வயது நிரம்பிய, ஓர் இளம் பெண், தன் கணவர் சொன்ன கடினமான வார்த்தையைத் தாங்கிக்கொள்ள இயலாமல், ஆறுதல் தேடி என்னிடம் வந்திருந்தார். அதில், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள மனைவியை வற்புறுத்தி அந்தக் கணவன் சொன்ன விஷயம் இதுதான். “இங்கு ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எப்போதும் பெண்கள்தான் ‘குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை’ செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஆண் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, சிகிச்சைக்குப் பின் பெண்கள் கருவுற்றால் குழந்தையின் தந்தை யார் என்பதில் சிக்கல் வரும்.” இந்த விளக்கத்தைக் கேட்டு உண்மையில் மனைவி நொந்து போயிருந்தார்.

ஆனால், ஒவ்வொரு மனைவியும் ‘தன்னைவிடத் தன் கணவருக்குச் சிறந்த மனைவி கிடைக்க மாட்டாள்’ என்ற பாதுகாப்பான உணர்வுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஏனென்றால், மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் முழு அன்போடும்தாம் அந்த உறவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பாதுகாப்பு உணர்வு ஏன் பெரும்பான்மையான ஆண்களிடம் காணப்படவில்லை?

உண்மையைச் சொல்லப் போனால் பெண்களில் யாருக்கும் இங்கு முகநூலில் போலி கணக்குகளை உருவாக்க வேண்டிய தேவை இல்லை. இரண்டு, மூன்று அலைபேசி எண்களை மாற்றி மாற்றி வைத்திருக்கவும் அவசியப்படவில்லை. எனினும் பாதுகாப்பாக உணர்வதில் தயக்கமென்ன?

பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால் ஆண்களின் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் எந்த விதத்திலும் தடைபடாது. பெண்கள் முன்னேறுவதால் ஆண்களின் நல்வாழ்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

அவர்களுக்கும் நன்மையே. ஏனென்றால் தன்மீது தாங்களே சுமத்திக் கொண்டிருக்கும், சில கடமைகளான சகோதரிகளின் திருமணத்தை முன்னின்று நடத்துவது, குடும்பப் பொருளாதாரத்துக்கு முழுப் பொறுப்பு வகிப்பது போன்றவற்றிலிருந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள முடியும்.

இறுதியாகத் திருமணம் முடிந்தவுடன் என் சுதந்திரம் பறிபோய்விட்டது எனப் பொய் சொல்லி, புலம்பித்திரியும் ஆண்களிடம் சில கேள்விகள்.

  1. உங்கள் மனைவி கத்திமுனையில் மிரட்டியா உங்களைத் திருமணம் செய்துகொண்டார்?
  1. தினமும் உங்கள் மனைவி துப்பாக்கியால் மிரட்டியதால்தான் குடும்பமாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? அல்லது அப்படி மிரட்டினால் பணிந்து போகக்கூடிய ஆளா நீங்கள்?
  1. திருமண பந்தத்தில் நீங்களே உண்மையானவராகவும் நேர்மையானவராகவும் இருக்கிறீர்களா? அல்லது இந்தச் சமுதாயத்திற்காக உங்களை வருத்திக்கொண்டு நேர்மையானவராக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களா?
  1. உண்மையில் குடும்ப அமைப்பு பிடித்துதான், அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்களா? அல்லது தன் குழந்தைகளை மனைவி இல்லாமல் சமாளிக்க முடியாது என்ற இயலாமையின் காரணமாகத்தான் குடும்ப அமைப்பில் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்களா?
  1. நான் நல்ல கணவன், என்னைவிட்டுச் சென்றால் என் மனைவிக்குத்தான் இழப்பு எனப் பாதுகாப்பு உணர்வுடன் வாழ்கிறீர்களா? அல்லது நான் ஒரு நல்ல கணவராக, என் மனைவியை மரியாதையுடன் நன்றாக நடத்தவில்லை. எனவே, நான் எளிதில் மாற்றம் (replace) செய்யப்படக்கூடிய இடத்தில் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு இன்மை உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏனென்றால் இங்கு உண்மையாக, நேர்மையாக, திருமண வாழ்வில் ஈடுபாட்டுடன் வாழ்கிற ஆண்கள், பாதுகாப்பு உணர்வுடன், பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மையே என உணர்ந்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த முறை உங்கள் சுதந்திரம் பறிபோய் விட்டது எனப் பகடி செய்யும் போது ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு போலியான பிம்பத்தை அடுத்த தலைமுறையினரிடம் காட்டுகிறீர்கள். இது ஒருவர் இன்னொருவர் மீதான பாதுகாப்பின்மையை மட்டுமல்லாது, அந்த உறவின் மீதே உள்ள நம்பிக்கையையே அடுத்த தலைமுறையினரிடம் இல்லாமல் போகச் செய்கிறது. உங்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் இந்தப் போலியான வார்த்தைகள் எந்த வகையிலும் உதவி செய்யாது.

பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மை என ஆண்கள் உணரும்போது முழுமையான, பெண் சுதந்திரத்துக்கான சாத்தியம் உருவாகும். முதலில் குடும்பங்களில் ஆண்கள் மனத்தில் துவங்கினால், பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். ஏனென்றால், இங்கு குடும்பம் என்பதே நம் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு.

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.