விடுதலை நாள் என்றதும் இளம் வயதில் சட்டென்று நினைவில் வருவது கொடியேற்றமும் ஆரஞ்சு மிட்டாயும் தாம். அது என்னவோ விடுதலை நாள் ஆரஞ்சு மிட்டாயின் சுவைக்கு நிகரே இல்லை!

எங்கள் ஊரில் மூன்று பள்ளிகளுக்குத் தாளாளராகப் பங்குத்தந்தை இருந்தார். அதனால் மூன்று பள்ளிகளும் இணைந்து கோயிலில் தான் கொடியேற்றமும் அதைத் தொடர்ந்த அணிவகுப்பும் நடக்கும். அதைப் பார்க்க ஊரே கூடியிருக்கும்.

கொடியேற்றத்திற்கு முன் கோயிலில் திருப்பலி நடக்கும். அதில் பாடப்படும் பாடல்:

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

இந்திய அன்னையின் எழிலுறு உடையாம்
வங்கமும் அரபியும் வாழ்த்துங்கள்!
இந்திய அன்னையின் எழிலடி வருடும்
இந்தியக் கடலே வாழ்த்தாயோ!

குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும்
பாலையும் இறைவனை வாழ்த்துங்கள்!
அறிதமிழ் நிலமெலாம் நெறியோடு வாழ்ந்திடும்
அன்பர்காள் அனைவரும் வாழ்த்துங்கள்!

திருப்பலி முடிந்ததும் கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றிய உடன், பள்ளி தாளாளர் உரை என ஒன்று நடத்துவார். ‘அடிமை இந்தியாவில் பிறந்த எங்களைவிட நீங்கள் எல்லாரும் பேறு பெற்றவர்கள்’ என்றுதான் உரை தொடங்கும். தாளாளர்கள் மாறினாலும் இந்த வாசகம் மட்டும் மாறியதே இல்லை! இவ்வாறு தொடங்கும் உரை காந்தி, நேரு, நேதாஜி என விரிந்துகொண்டே போகும்.

சீருடையாக நடுநிலைப் பள்ளிகள் இரண்டிற்கும் நீலமும் வெள்ளையும்; உயர்நிலைப் பள்ளிக்கு பச்சையும் வெள்ளையும் என இருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த மூவண்ணத்தில், அரை வட்டமாக நின்று செய்யும் அணிவகுப்பு பார்ப்பதற்கே கண்கொள்ளாத காட்சியாக இருக்கும்.

அதன் பின் கிடைக்கும் ஆரஞ்சு மிட்டாயை வாங்கிக்கொண்டு, கோயில் முன்னால்/ மலையில்/ நண்பர்கள் வீடு என எங்காவது கூடி விளையாடுவோம். அன்று முழுவதுமே விளையாட்டுதான். நாங்கள் இந்த இடங்களில் எங்கு இருக்கிறோம் என எங்கள் பெற்றோருக்கே தெரியாது. எங்கோ பத்திரமாக இருக்கிறார்கள் என நம்பி நிம்மதியாக வாழ்ந்தார்கள். இன்று?

பெண் விடுதலையில் நாம் பயணித்த தொலைவில் இவ்வாறு தொலைத்தவைச் சில இருந்தாலும், பல தளங்களிலும் முன்னேற்றம் கண்டுகொண்டேதான் இருக்கிறோம் என்பதே உண்மை.

முன்பெல்லாம் ‘வெள்ளைச் சேலைக் கட்டியவர்கள்’, ‘நீலச் சேலைக் கட்டியவர்கள்’ எனப் பலரை ஊருக்குள் பார்க்கலாம். இப்போதோ அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.

தொழில் முனைவோர் பெருகியுள்ளனர். அரசியல், கல்வி, பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் என அனைத்திலும் கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளோம். போதாமை இருக்கலாம். ஆனாலும் வளர்ச்சி அடைந்துள்ளோம். மேலும் மேலும் வளர்வோம் என்ற நம்பிக்கையுடன் விடுதலை நாளைக் கொண்டாடுவோம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.