சுதந்திர இந்தியா, சுதந்திர இந்தியா என்று சொல்லும்போது என்னுள் எவ்வளவு ஆனந்தம்! நம் நாடு, என் தாய்நாடு சுதந்திரம் பெற்று விட்டது, வருடம் பல கடந்தும்விட்டது. எவ்வளவு பெரிய முன்னேற்றம், எவ்வளவு பெரிய சாதனைகள்! மூவண்ணக்கொடி விண்ணில் பறக்கும் போது, உலகில் சிறந்த நாடு என் நாடு என்று தோன்றும். கல்வியில், அறிவியலில், விளையாட்டில், தொழிலில் எத்தனை எத்தனை சாதனைகள், எத்தனை பெரிய முன்னேற்றங்கள்!

சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவின் போராட்டங்கள் பெரியது. போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் போல், போராடியே முன்னேற்றினோம் நம் தாய் திருநாட்டை. பல வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் நல்லரசு நாடாக மாறினோம்.

பெருமிதம்கொள்கிறோம் நாங்கள் இந்தியர் என்று. பெண் விடுதலை இங்கே இருக்கிறதா? பெண் விடுதலையில் நாம் பயணித்த தொலைவு? இன்னும் செல்ல வேண்டிய தொலைவு? இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில், பெண்கள் சுதந்திரமானவர்கள். நாட்டின் முதல் பெண்மணியாக மாறும் சக்தி படைத்தவர்கள். நித்திய சுதந்திரம் பெற்றவர்கள்.

பெண்களுக்குச் சுதந்திரம் யார் கொடுக்க வேண்டும், யார் கையில் உள்ளது, நாம் கை ஏந்தி நிற்பதற்கு? பெண்களே, நம் சுதந்திரம் நம் கையில் அல்லவா உள்ளது! சுதந்திரதேவியே போராடி தான் பெற்றாள் சுதந்திரத்தை. ஆனால், நாம் நம் சுதந்திரத்தை ஆண்களிடம் கொடுத்துவிட்டுப் போராடுகிறோம். திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் நம் சுதந்திரத்தை.

நாட்டின் உயர்பதவிகளில் எவ்வளவு பெண்கள் இருக்கின்றனர். எல்லாத் தொழிற்துறைகளிலும் உயர்ப்பதவிகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயர்க்கல்வி வரை எத்தனை பெண்கள் செல்கின்றார்கள்? திருமணம் என்றதும் படிப்பு, வேலை, கனவுகள் எல்லாம் பாதியில் நின்றுவிடுகின்றன, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறீர்கள்? உங்கள் சுதந்திரம் உங்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது.

வேலைக்குச் சென்று சாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து சாதனையாளர்களை உருவாக்கினாலும் சரி, இன்று பெண்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஓங்கும் கைகளைத் தடுக்கும் சக்தி பெண்களுக்கு வேண்டும். தன்னுடைய தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லும் தின்மை வேண்டும்.

பெண்கள் தன்னை சுயமரியாதையுள்ள பெண்ணாக வெளிப்படுத்த முயல வேண்டும். ஊடகங்கள் சித்தரிக்கும் பதுமையாக இல்லாமல், சாதிக்கும் பெண்ணாக மாற வேண்டும். ஊடகங்கள் பெண்களைக் கண்ணியமாகக் காட்டுவதற்கு இனியாவது முயற்சிக்க வேண்டும்.

பெண்களே உங்கள் சுதந்திரத்தை நீங்களே கையில் எடுங்கள். இன்று சமூகத்தில் நமது தேவை சுயமரியாதை. எந்த வீட்டில் ஒரு பெண் அவமதிக்கப்படுகின்றாளோ, அங்கு அவள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பெண்களே இந்தச் சுதந்திர விழாவை சுயமரியாதையுடன் கொண்டாடுங்கள்.

சுதந்திர நாட்டில் சில சாதனைப் பெண்கள் உள்ளனர் என்பதைவிட, அனைத்துப் பெண்களும் சாதனையாளர்களாக மாற வேண்டும். பெண்களைச் சமமாகப் பார்க்கும் பார்வை வேண்டும். வரும் நாள்கள் அனைத்துமே சுதந்திர நாளாக மாற வேண்டும்.

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.