படித்தவர்கள் நிறைந்த, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அருணா, இளம் வயதிலேயே தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருந்தார். கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆசஃப் அலியைச் சந்தித்தார்.

மதத்தையும் வயது வித்தியாசத்தையும் காரணம் காட்டி அருணா – ஆசஃப் அலியின் திருமணத்தைப் பெற்றோர் எதிர்த்தனர்.19 வயதில், தன்னைவிட 21 வயது மூத்தவரான ஆசஃப் அலியைத் திருமணம் செய்துகொண்டார் அருணா. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியவர், உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறை சென்றார். இவருக்குப் பிணை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது.

1931ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதும், அருணா விடுவிக்கப்படவில்லை. அருணாவின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த பெண்கள் போராட்டம் நடத்தினர்.

காந்தியும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அருணாவை வெளியே கொண்டுவந்தார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அருணா, கைதிகளை மோசமாக நடத்தியதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாகச் சிறையில் கைதிகளை நடத்தும் விதம் மேம்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

நேருவுடன் அருணா

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மக்கள் உரக்க முழங்கினர். அருணாவைப் பிடித்துக் கொடுத்தால், சன்மானம் வழங்குவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.

வெற்றிகரமாகத் தப்பிச் சென்ற அருணா, தலைமறைவு வாழ்க்கையில் ஆங்கிலேயே அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். ‘இன்குலாப்’ என்ற பத்திரிகையைக் கொண்டுவந்தார். வானொலியில் உரையாற்றினார். சோசலிச தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, எடதாதா நாராயணன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு அருணாவுக்குக் கிடைத்தது. அருணாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவரச் சொன்னார் காந்தி.

நாட்டு விடுதலைக்குப் பிறகு பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் அருணா கவனம் செலுத்தினார். 1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றார்.

விரைவிலேயே அந்தப் பொறுப்பைத் துறந்து, சமூக மாற்றத்துக்கான பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1964ஆம் ஆண்டு சர்வதேச லெனின் அமைதி விருதைப் பெற்றார். 1997ஆம் அருணா மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டது.