ஆணும் பெண்ணும் எண்ணிக்கையளவில் ஏறக்குறைய சரிசமமாக இருந்தாலும், பெண் கல்வி, பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது சமீபகாலமாகதான் பரவலாகி வருகிறது. பெண்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்க ஆரம்பித்திருந்தாலும், பலருக்கும் உயர்கல்வி, பட்டப்படிப்பு அதன் பின் வேலை என்பது எட்டாத கனிதான். பெண்ணின் திருமணம், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவர்களின் படிப்பு வேலை தடைபடுவது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம் தாய்மை, தியாகம், பொறுப்பு, கடமை எனப் பலப் பெயர்களில் ஊதியமில்லாத வேலைகளைப் பெண்கள் குடும்பத்துக்காகச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இழப்பது என்ன என்பது அவர்களுக்குப் புரியாமல் இருப்பது இன்னும் கொடுமை. குழந்தைகள் வளர்ப்பது ஆகட்டும், குடும்பத்தைக் கவனித்து கொள்வது ஆகட்டும், அனைவரின் கடமைதானே? அத்தனையும் பெண்கள் மீது திணிக்கப்படுவது எதனால்? சில காலம் முன்பு வரை வீட்டில் சும்மாதானே இருக்கிறாய், வீட்டு வேலையெல்லாம் செய் எனப் பெண்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். தற்போது வேலைக்குச் சென்று ஆணுக்கு நிகராக, இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விடவே கூடுதலாகப் பொருள் ஈட்டத் தொடங்கினாலும், வீட்டு வேலைகளின் சுமைகள் மட்டும் பெண்களுக்குக் குறைந்தபாடில்லை.

ஆண்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்கள் என்றாலுமே, குடும்பத்தில் வயதானவர்களைக் கவனித்துக் கொள்ளவோ, அல்லது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவோ முதலில் பலியிடப்படுவது பெண்ணின் வேலையாகத்தான் இருக்கும். காரணம் ஆண்தான் வெளியே சென்று பொருளீட்ட வேண்டும். பெண் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காலம்காலமாகக் கடைபிடிக்கப்படும் நியதி.

பெண்களில் சிலர் திருமணத்திற்காக வேலையை விடுவதாக முடிவெடுப்பது என்பது பெரும்பாலும் அவர்களின் சுய தேர்வாக இருப்பதில்லை. அதேபோலதான் திருமணத்திற்குப் பின் குழந்தைக்காக வேலையை விடுவது என்பதும் பெரும்பாலும் சுய தேர்வாக இருக்காது.

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

இந்த உழைப்புச் சுரண்டல் பற்றிப் பேசப்படுவதே இல்லை. வீட்டில் செய்யும் அவர்களின் வேலை அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. இதுதான் தங்களின் வாழ்க்கை என்று பெண்களும் ஏற்கப் பழகிவிட்டார்கள், அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

உடல் நிலை காரணமாகவோ, தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள் தவிர, என் வீட்டுக்காரர் என்னை வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாம் எனக் கூறிவிட்டார் என்று கூறும் பெண்கள் இரண்டு வகையினர்தான். ஒன்று சோம்பேறித்தனம், தன்னைச் சுரண்டும் ஆணைப் போல, அவனைச் சுரண்டி வாழப் பழகிவிட்டாள். பிறிதொன்று இயலாமை.

ஓர் ஆண் சமைப்பது, குழந்தையைக் கவனித்துக்கொள்வது, ஒழுக்கமாக இருப்பது , மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவுவது அனைத்தும் இன்றளவும் பெருமைக்குரிய விஷயங்கள், நல்ல குணமானவர் என்று சமூகத்தின் போற்றுதலுக்குரிய பண்புகள். ஆனால், இவை அனைத்தும் பெண்ணுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது. வீட்டில் மனைவிக்கு உதவும் ஆண் அல்லது சமைக்கும் ஆண் கோபித்துக்கொண்டு சமைக்காமலோ வீட்டு வேலையில் உதவாமலோ இருக்கலாம். ஆனால், பெண்கள் கோபித்துக்கொண்டு அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் கோபித்துக்கொண்டு சமையல் செய்யாமல் இருந்தால், வீட்டில் உள்ளவர்களைப் பட்டினி போட்டு கொடுமைக்காரி ஆகிவிடுவாள். ஆண் சம்பாதிக்காமலே இருந்தாலும் நற்பண்புகள் இருந்தால் கொடுமைக்கார ஆண் ஆக மாட்டான்.

இன்னொன்று பெண் என்ன படித்திருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் பொருளாதார சுதந்திரத்தின் சுவையை அவள் ருசிக்க குடும்பமோ சமூகமோ அனுமதிப்பதில்லை. பெண்ணின் திருமணத்துக்காகப் பெற்றோர் சம்பாதித்து சேர்த்து வைத்தது போக, பெண்கள் தங்களது வருமானத்தையும் திருமணத்துக்காகச் சேர்த்து வைக்கிறார்கள் அல்லது குடும்பத்தாரால் அவளது வருமானம் குடும்பத் தேவைகளுக்கு என்று கட்டாயமாகத் தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். இல்லை எமோஷனல் ப்ளாக்மெயில் மூலமாக அவளைக் குற்ற உணர்வுக்குள் தள்ளிவிடுவார்கள். ஆண்களுமே குடும்பத்தின் இந்த எமொஷனல் ப்ளாக்மெயிலில் சிக்கிக்கொள்ளும் பலியாடுகள் தாம். பெரும்பான்மையான நம் குடும்ப அமைப்பின் லட்சணம் அப்படியாகத்தான் இருந்து வருகிறது.

இந்தியச் சமூக அமைப்பில்தான் சுரண்டல் என்பது பாசம், தியாகம் என்கிற முகமூடிகள் தரித்து வெளிப்படுகிறது. நம் நாட்டில் குடும்பம் என்கிற அமைப்புதான் சுரண்டலின் ஆரம்பமே. ஓர் ஆண் சம்பாதித்து அனைவரையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுவதன் பின்னால் இருப்பது, பெண் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிற வறட்டு கெளரவம். இந்த வறட்டு கெளரவத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வேலைக்குச் செல்லும் பெண் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பாள், யார் பேச்சும் கேட்க மாட்டாள் என்கிற அபத்தமான நம்பிக்கை. தன்னிச்சையான முடிவுகள் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அவள் விருப்பப்படும் ஆணை அவள் காதலிப்பாள். மணந்து கொள்வாள். தனது தேவைகளுக்கு பிறரைச் சார்ந்து இருக்க மாட்டாள்.

ஆணோ பெண்ணோ குடும்பத்தில் ஒருவரை இன்னொருவர் சார்ந்துதான் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குடும்பம் என்கிற அமைப்பிற்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் எனச் சார்ந்து இருப்பதைத் திணித்து வைத்து, இன்று அது பலரை மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவரை இன்னொருவர் சார்ந்து இருப்பது வேறு, ஒருவருக்கு இன்னொருவர் உதவியாக அன்பால் பிணைந்து இருப்பது வேறு. இது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு புரியாததால்தான் பல குடும்பங்கள் உடைந்து கொண்டு இருக்கின்றன.

சில காலம் முன்பு வரை கூட்டுக் குடும்ப வாழ்வில் ஒருவர் சம்பாதிக்க, பலர் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது நமது சமூக அமைப்பில் எந்தக் குற்ற உணர்வும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்றும் அதில் பெரிய மாற்றமில்லாமல்தான் தொடருகிறது. தம்பி, தங்கைகளின் திருமணத்தை முன்னின்று நடத்தும் அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் எல்லாம் இன்னும் மறைந்துவிடவில்லை. பல குடும்பங்களில் யாரோ ஒருவரின் வாழ்க்கை சம்பாத்தியம் துளிக்கூட குற்ற உணர்வின்றி சுரண்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆண், பெண் பேதமில்லாமல் இந்தச் சுரண்டல் குடும்பத்தாரால் தொடருகிறது. இதற்கு நம் சமூகம் வைத்திருக்கும் பெயர் குடும்பப் பொறுப்பு. பொறுப்பானவர் பட்டத்துக்காகத் தங்கள் இளமையை, வாழ்க்கையைப் பலி கொடுப்பவர்கள் இன்னும் மறைந்து போகவில்லை.

பொருளீட்டுவதன் சுவையையும் அதைத் தனது தேவைகளுக்குச் செலவு செய்யும் சந்தோஷத்தையும் பெண்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டால், சமூகத்தில் இன்னும் நிறைய பத்தாம்பசலித்தனங்கள் உடைபடும். பெண்கள் சேலைகளாக வாங்குவார்கள், நகைகளாக வாங்குவார்கள் வேறு என்ன தெரியும் என்று பட்டிமன்றங்களிலும் பொதுபுத்தியிலும் நிலைத்துவிட்ட மொன்னைத்தனமான கருத்தை அதிமேதாவித்தனமாகப் பேசும் பலருக்கும், அதன்பின் தனக்கென தனது வருமானத்தில் தனக்குப் பிடித்ததை வாங்க அவள் பல காலம் தனக்குள்ளாக அடைப்பட்டுக் கிடந்தது பற்றிய புரிதல் இல்லை.

நகை நமது இந்திய அமைப்பில் சேமிப்பாகப் பார்க்கப்படுவதுதான் அதன் மீதான பெண்ணின் மோகத்திற்கு காரணம். நகை என்பது பெண்களைப் பொருத்தவரை அழகு, ஆடம்பரம் என்பதைத் தாண்டி அவள் எதிர்காலத்துக்கான உத்திரவாத சேமிப்பு என அவளையும் அறியாமல் அவள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. அவளுக்கென ஒரு வருமானம் அவள் வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும், தன்னால் பொருள் ஈட்ட முடியும் என்னும் நிலை வரும்போது நகை குறித்துப் பெண்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இன்று பங்குச்சந்தை, சிறுதொழில், நிதி நிர்வாகம் எனப் பலவற்றிலும் பெண்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெண் விடுதலை என்பது தன் தேவைகளுக்கு யாரையும் சாராமல், தானே பொருள் ஈட்டி செலவு செய்ய ஆரம்பிக்கும் போதுதான் தொடங்கும். இப்போது பெண்கள் படித்து வேலைக்குச் சென்றாலும், பெரும்பாலோர் நெல் மணிக்குச் சீட்டுகளை எடுத்துத் தரும் கூண்டுக் கிளிகள் போலதான், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த வயதிலும் யாரையும் அடிப்படை தேவைகளுக்குச் சாராத ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள, பெண்களுக்கு வேலையும் அதன் மூலம் வரும் வருமானமும் மிக மிக அவசியம். இந்தச் சுதந்திரம் சம்மந்தப்பட்ட பெண்ணை மட்டுமல்லாது அவளைச் சார்ந்தோருக்குமான சுதந்திரமும்தான்.

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.