“வேலைக்குப் போக மாட்டேன்” என்று சொல்லும் அடுத்த தலைமுறைப் பொண்ணுகளா, என் கண்ணுகளா… போன வாரக் கட்டுரையின் தொடர்ச்சி இது.

பெண் வேலைக்குப் போக வேண்டும், குறிப்பாக கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அடுத்த தலைமுறைப் பெண்கள் கண்டிப்பாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். வேலையுடன்தான் கல்யாணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

முதலில் வேலையில்லாத பெண்களை எடுத்துக் கொள்வோம். சராசரி குடும்பத்தைச் சேர்ந்த பெண்,  அவள் வசதியில்லாத வீட்டுப் பெண்ணாகட்டும், வசதியான வீட்டுப் பெண்ணாகட்டும் கல்யாணம் செய்து கொண்டு போகும்போது என்ன எடுத்துப் போவாள் ? பிறந்த வீட்டில் கொடுக்கும் சீர்வரிசை – நகைகள், பாத்திரங்கள் இத்தியாதி – வகைகளும், தன்னுடைய துணிகள், தனக்கு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்கிறாள். பெரும்பாலானோர் (வேலையில்லாத கல்யாணவயதில் இருக்கும் இளம்பெண்கள்), தனக்கென்று பேங்க் அக்கவுண்ட்டை வைத்துக் கொள்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் தனது பேங்க் அக்கவுண்ட்டுடன், ஏடிஎம் கார்டுடன் அவர்கள் புகுந்த வீட்டுக்குச் செல்வதில்லை. கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வைத்திருக்கலாம். மற்றபடி, தன் சாப்பாட்டுக்கும், செலவுக்கும் முழுக்கமுழுக்க, தன் கணவனையும், புகுந்த வீட்டாரையும் நம்பித்தான் பெண்கள் போகிறார்கள். வரதட்சணையாக பெண் வீட்டார் தரும் பணத்திற்கும் அந்தப் பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதை புகுந்த வீட்டார் தான் வைத்திருப்பார்கள், செலவழிப்பார்கள். பெண்ணுக்காகத் தரும் நகைகளும் (அவள் அணிந்திருப்பதைத் தவிர) புகுந்த வீட்டினரின் கஸ்டடியில் தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட பிச்சைக்காரியாகத்தான் பெண்கள் புகுந்த வீட்டுக்குப் போகிறார்கள். இப்படிச் சொல்வது கடுமையான சொற்பிரயோகமாகத் தோன்றலாம். ஆனால், இதுதான் யதார்த்தம்.

தன்னிடம் பணம் இல்லாத நிலையில், பெண் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக, ஒரு சானிடரிநாப்கின் பாக்கெட் வாங்கக் கூட கணவன் கையையோ, மாமியார் மாமனார் கையையோ எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

தனக்கான நியாயமான ஆசைகளையும், சின்னச்சின்ன விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக அவர்களின் மனம்கோணாமல் “நல்ல முறையில்”  நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பெண்ணின் சுயமரியாதை கேள்விக்குறியாகிறது. பெண்ணின் எண்ணங்களும், அவளின் கணவன், புகுந்த வீட்டார் எண்ணங்களும் ஒத்ததாக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது, அப்படியிருந்தால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அப்படி அமைவது சிலருக்குத்தான்.

பெண் வளர்ந்த குடும்பப்பின்னணி வேறு, புகுந்த வீட்டாரின் பின்னணி வேறு. கருத்துவேறுபாடுகள் வருவது இயல்பு. கணவன் ஆதரவாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். கணவனும் தன் வீட்டார்பக்கம் பேசினால், பெண்ணின்பாடு திண்டாட்டம்தான். பிறந்தவீடும், “கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சில்ல, நீயாச்சு, உன் புருஷனாச்சு, அவன் குடும்பமாச்சு” என்றோ “அவங்க பேச்சைக் கேட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ” என்றோ நாகரிகமாக கைகழுவி விடும். இப்படிப்பட்ட சூழலில், அவள் தனக்கான செலவுகளுக்குகூட தனது சுயத்தை, ஆளுமையை, தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. செலவுகளுக்கே இப்படியென்றால், தனது விருப்பங்களையும், உரிமைகளையும், சுதந்திரத்தையும் பற்றிப் பேசுவதற்கு எங்கே இடம் இருக்கிறது ?

ஆணாதிக்கம் இங்கேதான் தன் சாதுரியத்தைக் காட்டுகிறது. பெண் கையில் பணம் இல்லாமல் இருந்தால்தான், அவள் தன் செலவுகளுக்கு கணவனையும், புகுந்த வீட்டையும் சார்ந்திருப்பாள். பெண்ணானவள், பணத்திற்கு அவர்களிடம் கையேந்தும் நிலையில், அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வதும் அவளுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.  ஆணாதிக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற, பெண்ணை இப்படி சார்ந்திருக்கும் நிலையிலேயே வைத்திருப்பது அவசியமாகிறது. பெண் தனது நியாயமான உரிமைகளைக் கேட்பதையும், சுயமரியாதையுடன் இருப்பதையும் ஆணாதிக்க பொதுப்புத்தி விரும்புவதில்லை. எனவே, பெண் வேலைக்குப் போகாமல் இருப்பதையே சமுதாயம் விரும்புகிறது.

“எங்க வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையும், அவங்க குடும்பமும் நல்லவங்களாத்தான் இருப்பாங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுக்கா” என்று நம்பும் செல்லங்களா… அப்படியே இருக்க வேண்டும், நீங்கள் மகிழ்ச்சியாக, சிறப்பாக வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஒருவேளை அப்படி அமையாவிட்டால் உங்கள் நிலை என்ன என்பதுதான் என் கவலை. இனி ஒரு விஸ்மையா கூட உருவாகக்கூடாது.

கணவனும், புகுந்த வீட்டினரும் உங்களை மரியாதையாக நடத்தாமல் போனாலோ, உங்களுக்கும் கணவனுக்கும் கருத்து வேறுபாடு வந்தாலோ, உங்கள் கணவனின் நடத்தை உங்களுக்கு பிடிக்காமல் போனாலோ… இப்படி பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்க்கை எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம். அந்தச் சூழலில், நீங்கள் தனித்து வாழ முடிவெடுத்தால் உங்களுக்கு துணையாக யார் இருப்பார்கள் ? உங்கள் பெற்றோர், முடிந்த வரை நீங்கள் கணவனுடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள்; சேர்த்து வைக்கத்தான் பார்ப்பார்கள்.  எனவே, உங்கள் முடிவுக்கு பிறந்த வீட்டின் ஆதரவு பெரிதாக இருக்காது. பெற்றோர் ஆதரவளிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம், எவ்வளவு காலத்திற்கு அவர்களின் பண உதவியுடன் உங்களால் வாழமுடியும் ? சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்றால், ஒரு கட்டத்தில் உங்கள் காலில்தான் நிற்க வேண்டியிருக்கும். அப்போது வேலை தேடுவதும், உங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பது எவ்வளவு தூரம் சாத்தியம்… எல்லாவற்றையும் எண்ணிப்பாருங்கள். பெண்ணுக்கு வேலை எவ்வளவு முக்கியம் என்று புரியும் டியர்ஸ்.

ஏற்கனவே நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அந்த வேலையுடன் கல்யாணம் செய்து கொண்டு போகும்போது, உங்களுக்கென்று பேங்க் அக்கவுண்ட் இருக்கும். அதில் பணம் வைத்திருப்பீர்கள். உங்கள் செலவுகளுக்கு நீங்கள் கணவனையோ, புகுந்த வீட்டையோ சார்ந்திருக்க வேண்டியிருக்காது. கல்யாண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தாலோ, தனித்து வாழும் முடிவு எடுத்தாலோ பொருளாதார தற்சார்பு கைகொடுக்கும்.

வேலைக்குப் போகும் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளும் போது, முன்னதாகவே சில முடிவுகளை கவனமாக எடுத்து விடுங்கள். எந்த காரணம் கொண்டும், உங்க பேங்க் அக்கவுண்டையோ, ஏடிஎம் கார்டையோ கணவனிடமோ, புகுந்த வீட்டினரிடமோ கொடுக்காதீர்கள். உங்கள் பண நிர்வாகத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் சொல்வதனால் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அன்பு, நம்பிக்கை, பாசம் என்பது வேறு பொருளாதார தற்சார்பு என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். வீட்டுச் செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ஆரம்பத்திலேயே கணவனிடம் தெளிவாகப் பேசிவிடுவது நல்லது. அதுபோலவே, வீட்டில் சமையல் மற்றும் பிற வேலைகளுக்கு உதவியாளரை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், குடும்ப வேலைகளை கணவனும் சமமாக பகிந்து கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை. அதுவரை, யதார்த்தத்தில் நமது சுமைகளை நாம்தான் புத்திசாலித்தனத்துடன் குறைத்துக் கொள்ளவேண்டும். உதவியாளருக்கு அளிக்கும் தொகை போக மீதியுள்ளதுதான் நமது ஊதியம் என்று மனதளவில் தெளிவாக்கிக் கொள்ளுங்கள், குடும்பத்தினருக்கும் புரிய வையுங்கள்.

மேலே சொல்லியவை பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் “ஏற்பாட்டு திருமணங்களு”க்கு மிகப்பொருந்தும். காதல் திருமணங்களைப் பொருத்தவரை, பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்றாலும், இதிலும் பெண்ணுக்கு வேலை என்பதை வலியுறுத்துவது மிக முக்கியம்.

வேலை என்பது தன்னம்பிக்கைக்கும், பொருளாதார சுயசார்புக்கும் மட்டுமல்ல. ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும், உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான். நாம் கல்வி கற்று, வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு, பல முன்னோடிப் பெண்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் வரலாற்று தடத்தில்தான் நாம் எளிதாக நடைபயில்கிறோம். இன்றும், வேலைக்குப் போகணுமா வேண்டாமா என்று பேசிக்கொண்டிருப்பது சரியா? எப்போது கொள்கை வகுப்பாளர்களாக மாறப்போகிறோம் ? அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் ஆனந்தமாக நடைபயில, பெண்ணுக்குத் தோழமையான சமுதாயத்தை எப்போது உருவாக்கப்போகிறோம் ? யோசிங்க தோழர்ஸ். நிறைய அன்பு !

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.