“ஆசை தீரப் பேச வேண்டும் வரவா வரவா… நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா” என்கிற எண்பதுகளில் வெளிவந்த ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தில் வரும் ‘கண்ணனே நீ வர காத்திருந்தேன்’ பாடலைக் கேட்கும் போதும், கவிஞனான அவள் நண்பன் எழுதிய ‘அந்த நாலு பேர்’ கவிதையை வாசித்த போதும் அவளுக்கு முதலில் தோன்றியது புன்னகையே.

அந்த நாலு பேர் என்பது நிஜமான மனிதர்கள் அல்லாமல் இந்தச் சமூகம் தன் செயல்களுக்கு என்ன சொல்லும் என்று தனக்குத்தானே வளர்த்துக்கொண்ட கட்டுப்பாடுகளின் பிம்பம் தானோ என்று பல நேரம் அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், அது அப்படி அல்ல என்பதற்கு இவையும் சான்றுகள்.

உண்மையில் அந்த நாலு பேர் யார்? எப்படி அவர்களின் இருப்பு எல்லார் வாழ்விலும் உணர முடிகிறது?

அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?

அவர்களின் கருத்துகளுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

யார் என்ன சொன்னால் என்ன என்று வாழ்ந்துவிட்டுப் போகும் மனிதர்கள் அவர்களைப் பற்றிக் கண்டுகொள்வதில்லையா ?

இல்லை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல கற்றுக் கொண்டார்களா என்று அவளுக்குப் பல கேள்விகள் எழுந்ததுண்டு.

அந்த நாலு பேரைக் கண்டுகொள்ளாமல் நம் வாழ்வை கடந்து செல்வது நம்மால் முடியும் . ஆனால், அப்படிக் கடந்து செல்பவர்களைப் பார்த்துவிட்டு, அந்த நாலு பேரால் சும்மா இருக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனால், அவர்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. நம்மால் முடியாது என்று சொல்பவர்கள் முன் செய்து காட்டுவதுதானே சுவாரஸ்யம்! நாம் விழுவோம் என்று எதிர்பார்ப்பவர்கள் முன் வாழ்ந்துகாட்டுவதுதானே வெற்றி!

அந்த நாலு பேர் இல்லாத சமூகம் இல்லை. ஏனெனில் அந்த நாலு பேர் யாரோவும் அல்ல. நாம்கூட யாரோ ஒருவர் வாழ்வில் அந்த நாலு பேரில் ஒருவராக இருக்கலாம். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவும் நால்வரில் ஒருவராக இருப்போம். வலிகள் நிறைந்த ஒருவருக்கு அன்பும் ஆறுதலும் செலுத்தும் நால்வரில் ஒருவராக இருப்போம். ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் நால்வரில் ஒருவராக இருப்போம். நான்கு விதமாகச் சொல்லும் அந்த நாலு பேரில் நல்ல விதமாகச் சொல்லும் ஒருவராக நாம் இருக்க முயற்சிப்போம்.

இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வந்த அனைவருக்கும் நன்றி . இதில் உள்ள நிறைகுறைகளை எடுத்து கூறி என் எழுத்தை மேம்படுத்த உதவிய ஹெர் ஸ்டோரிஸ் குழுவுக்கு நன்றி. வாராவாரம் என் கட்டுரைகளைப் பிரசுரித்து என்னை எழுத ஊக்கப்படுத்திய இந்தத் தளத்துக்கு என் மனமார்ந்த நன்றி. இதுவரை என் வாழ்வில் நான் கடந்து வந்த அந்த முகம் தெரியாத நாலு பேரைக் குறித்து இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் . சிலர் ஆண்கள் குறித்து, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் குறித்து ஏன் இதில் எழுதவில்லை என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணாக நான் கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைத் தொகுப்பாக எழுதும் என் முதல் முயற்சியே இந்தத் தொடர். நிச்சயம் அதையும் ஒருநாள் எழுதுவேன் என்கிற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

(நிறைந்தது)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.