‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்று போகிற போக்கில் எல்லாவற்றையும் பெண்கள் தலையில் சுமத்திவிட்டுச் செல்லவே உலகம் பார்க்கிறது. ஆனால், அதன் உண்மையான விளக்கம், நன்மைகள் அனைத்தும் ஆவது பெண்ணாலே, தீயவை அழிவதும் பெண்ணாலே என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பெண்களற்ற ஆண்கள் என்கிற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகாமியின் புத்தகம் போல் பெண்கள் இல்லாத வாழ்வை ஆண்கள் மட்டுமல்ல, அவர்கள் இல்லாத வெறுமையை யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக ஒரு பெண் ஏதோ ஒரு வடிவத்தில் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லார் வாழ்விலும் உடன் வருகிறாள். நம் பாதையை எளிதாக்கும் அந்தப் பெண்ணின் பாதை அத்தனை எளிதானதாகப் பல நேரத்திலும் இருப்பதில்லை. அவள் அவளாக இருப்பதாலே அவள் பிறர் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிக்கிறாள்.

அவள் வாழ்க்கையிலும் அவளுக்குத் துணை வரும் வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருக்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதைகளின் வலிகள் இவளுக்கு வழிகாட்டி இருக்கிறது, எளிதாக்கியிருக்கிறது.

அம்மா எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் ஆசிரியராக இருப்பதில் தொடங்கி பின் நல்ல தோழியாக மாறுபவர். நமக்கு நல்லதை மட்டுமே நினைக்கும் சிலரில் கண்டிப்பாக முதலிடம் பிடிப்பவர். அப்பாக்கள் நமக்கு ஹீரோ என்றால் அந்த அப்பாக்களே முழுதாக நம்பி இருக்கும், அறிவுரை கேட்கும், அவர்களுக்கு எந்தச் சூழலிலும் பக்கபலமாக இருக்கும் ஹீரோக்கள் அம்மாக்கள்தாம் . தன்னலம் பாராமல் கணவன், அவரின் குடும்பத்தினர், குழந்தைகள் என எல்லார் நலனையும் முதலில் பார்க்கும் ஒரு சுயநலமற்ற ஜீவன். அவள் அம்மாவும் அப்படித்தான்.

சிறு வயதில் தன் அம்மாவை இழந்து தந்தை, சகோதர சகோதரிகளுடன் வளர்ந்தவர் அவள் அம்மா. அந்த நாலு பேர் அவர் வாழ்க்கையை அப்படி ஒன்றும் எளிதாக இருக்க விடவில்லை. சொந்தம் என்கிற பெயரில் உடன் வந்து, ஏதாவது ஒரு விதத்தில் அவருக்குத் தொல்லைகள் தந்து, அந்தக் கஷ்டத்தைக் கண்டு ரசித்த இரக்கமற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தானடைந்த கஷ்டத்தை எந்த விதத்திலும் வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்று முடிந்தவரை தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் எல்லா உதவியும் செய்து அவர்கள் வாழ்க்கையை எளிதாக்கவே எப்போதும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

தன் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சிகள் எல்லாம் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று தனக்காகப் போராடாதவர் அவர்களுக்காகச் சமூகக் கோட்பாடுகளுடன் போராடுபவர். பிள்ளைகளின் வெற்றிகளை தன் வெற்றியாக எண்ணி மகிழ்வதும், தனக்கென ஓர் அடையாளம் வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுடைய அடையாளங்களை அவர்கள் உருவாக்கிக் கொள்ள உறுதுணையாக நிற்கும் அவள் அம்மா போன்ற பல அம்மாக்கள் உண்மையில் பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் எதிர்பாராமல் மாற்றம் கொண்டு வர போராடும் சாமானிய போராளிகள். அவர்களின் வழிகாட்டுதலோ துணையோ தேவையான நேரத்தில் ஆறுதலோ இல்லாமல் இன்று இவள் வாழ்க்கையின் பிரச்னைகளை எளிதில் கடந்து வந்திருக்க முடியாது. பிரச்னை வரும்போது அவள் அம்மா இதைவிட கடினமான சூழ்நிலைகளையும் கடந்து வந்திருக்கிறார் என்கிற எண்ணமே பல நேரத்தில் அவளை மீண்டும் உற்சாகமூட்டி போராடும் குணத்தைத் தந்திருக்கிறது.

பெண்கள் என்றால் தலைகுனிந்து நிலம் பார்த்து நடக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட காலகட்டத்தில், “உங்களை நீங்களே குறுக்கிக்கொள்ளவும் வளைந்து நிற்கவும் செய்யாமல் நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்து நடையுமாக பாரதி கண்ட புதுமைப் பெண்களாக நடப்பதுதான் என் மாணவிகளுக்கு அழகு” என்று முண்டாசுக் கவிஞனை அவளுக்கு அறிமுகப்படுத்தியவர் அவள் பள்ளி முதல்வர். அவர்களுக்குச் சொன்னைதைப் போல் தானும் நிமிர்ந்து நடையுடனும் தன்னம்பிக்கையுடன் பள்ளியில் வலம் வரும் அவர்தான் வெளிஉலகில் அவள் முதலில் ரசித்த மங்கை. பள்ளி என்றால் படிப்பதற்கு மட்டுமே என்று தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை மட்டுமே குறியாகக் கொண்டு இருக்கும் நேரத்தில், குழந்தைகளுக்கு விளையாட்டு, பொது அறிவு , கவிதை கட்டுரை என்று கற்பனை வளத்தை மேம்படுத்துவதற்கு விதவிதமான போட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, படிப்பைத் தாண்டி பல இருக்கின்றன என்று அவள் பள்ளியில் அறிமுகப்படுத்தியது அவர்தான். இதற்கு பள்ளி நிர்வாகத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தான் எடுத்த முடிவு சரி, அதனால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு உறுதியுடன் நடைமுறைப்படுத்த ஆவண செய்தவர். பின்னாளில்,

“நெஞ்ச நிமித்திட்டு நடக்கிறத பார்த்தியா, பொண்ணுன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்? குனிஞ்சு நடக்க வேண்டாம்?” என்று அவளைப் பார்த்து சொல்பவர்களின் வார்த்தைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் நிமிர்ந்து செல்லும் மனப்பான்மை வரக் காரணமான ஆசிரியர் அவர்.

ஆண் பிள்ளைகள்தாம் குடும்பத்திற்கு எல்லாம் செய்ய வேண்டும் என்று சமூகக் கட்டமைப்புகளைக் கடந்து பெண் பிள்ளைக்கும் இந்தக் கடமைகள் எல்லாம் இருக்கிறது என்று அவளுக்குக் காட்டிய தோழி. தன் குடும்பத்திற்காக உழைத்து, அவர்கள் தந்தை இறந்த பின்னும் அவரின் கடன்களை அடைக்கவும், குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ளவும், தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்கவும் என்று தன் வாழ்வை குறித்து யோசிக்காமல் 40 வயதை நெருங்கியும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர். ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எத்தனை விதமான கேள்விகள் உண்டோ அத்தனையும் கடந்து வந்திருப்பவர். அதற்காக அவர் குடும்பத்தினரே சொன்ன வார்த்தைகளையும் கண்டுகொள்ளாமல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருப்பவர்.

நமக்குத் தாங்க முடியாத எந்தப் பாரத்தையும் வாழ்க்கை தருவதில்லை என்று நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அதிகம் பாரங்கள் தாங்கவும் சோதிக்கப்படுவதாகவும் அவளுக்குத் தோன்றுவதுண்டு. எல்லாப் பிரச்னைகளையும் சிரிப்புடன் கடந்து செல்லும் அவளின் ஒரு தோழிக்கு புற்றுநோய் என்று கேள்விபட்டபோது அவள் உடைந்துவிட்டாள். ஆனால், அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருப்பவர். அனுதாபம் காட்ட வந்தவர்களைத் தவிர்த்து தனக்குத் தேவை இந்த நேரத்தில் அனுதாபங்கள் அல்ல, இந்தச் சவாலைச் சமாளிக்க உடன் இருக்கும் ஒரு நல்ல தோழி மட்டுமே என்பார்.

இவர்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்கிற வட்டத்துக்குள் தன்னைச் சிறையிடாமல் இருப்பது. சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று கடந்து வருவதுதான். தான் அறியாமலே பிறருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதில்லை, அவர்களின் பயணம் எளிதில்லை. ஆனால், அது அவள் போல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க உதவுகிறது.

இந்த நாலு பெண்களும் அவள் மனதளவில் மிகவும் நெருக்கமாவர்கள். அவர்களிடம் முக்கியமாக அவள் கற்றுக் கொண்டது ‘அந்த நாலு பேரைக்’ கண்டுகொள்ளாமல் தன் வேலையை மட்டும் செய்வது எப்படி என்பதைத்தான்.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.