ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

மார்ச் 23, 2021. அந்தப் பள்ளிக்குள் நுழையும்போது பேரமைதி குடிகொண்டிருந்தது. காலை பத்து மணிக்கு தரங்கம்பாடியின் வெய்யில் உங்களை மதிமயங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. நா வறண்டு, கால்கள் எங்கோ தள்ளிக்கொண்டு செல்ல, டி.இ.எல்.சி. பிஷப் ஜான்சன் நினைவுப் பள்ளி வளாக வெளிப்புற வாயிலை அடையும்போது அயர்ச்சியாகவே இருந்தது.

பள்ளியினுள் இருந்த சீகன்பால்குவின் பங்களா தற்போது லூத்தரன் மற்றும் ஹல்லே மிஷன்களால் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது. அதைக் காணவே அன்று அங்கே சென்றேன்.

சீகன்பால்கு, Wikipedia
சீகன்பால்கு, Wikipedia

கொரோனா இரண்டாவது அலை வீசி உயிர்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்த காலகட்டம் அது. சென்னையில் இருந்து வருகிறேன் என அருங்காட்சியக வாயிலில் சொன்னதும் எனக்குத் தனி ‘மரியாதை’. பதிவேட்டில் கையெழுத்து வாங்கிய அன்பர் முதல் அங்கிருந்த பொருள்களை விளக்கிய அன்பர் வரை அனைவரும் சமூகத் தொலைவை மிகச் சரியாக கடைபிடித்தனர்.

சீகன்பால்குவின் பொருள்கள், அங்கிருந்த பழைய வரைபடங்களை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே வந்தபோது, பள்ளி ஒன்றின் வரைபடம் கண்ணில் பட்டது. 1741ம் ஆண்டு தரங்கம்பாடியில் இயங்கிவந்த டேனிஷ் ஹல்லே மிஷன் பள்ளியின் வரைபடம் அது. ஆண், பெண் என இருபாலரும் படித்துவந்த பள்ளி அது என்ற தகவல் எனக்குப் புதிது.

PC: Halle Francke Foundations
1741ம் ஆண்டு தரங்கம்பாடி பள்ளி வரைபடம், PC: Halle Francke Foundations

1741ம் ஆண்டு இத்தனை பெரிய கட்டமைப்புடன் இருந்த ஹல்லே மிஷன் பள்ளியைத் தொடங்கியவர் பர்த்தலமேயு சீகன்பால்கு. சீகன்பால்கும் அவரது நண்பர் ஹென்றி புளூஸ்ட்ஷாவும் 1706ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி தரங்கம்பாடி வந்து இறங்கினர். டேனிஷ் ஹல்லே மிஷனுக்கும் அரச குடும்பத்தின் முகவர்களாக தரங்கம்பாடியை ஆண்டுவந்த டேனிஷ் கிழக்கிந்தியக் கும்பினியாருக்கும் இடையே எவ்வித நல்லுறவும் இல்லாத நிலையில் தரங்கம்பாடிக்குள் நுழையவே சீகன்பால்கு பெரும் முயற்சி எடுக்க நேர்ந்தது.

தரங்கம்பாடியில் ஹல்லே மிஷனுக்கு என வாங்கப்பட்ட இடத்தில் தனக்கென வீடு ஒன்றைக் கட்டியதுமே அதில் ஆண், பெண் என இரு பாலருக்கும் கல்வி புகட்டத் தொடங்கிவிட்டார் சீகன்பால்கு. பெண் கல்வி என்பது அப்போது தமிழ்நாட்டில் யாரும் கேள்விப்படாதது என்பதையும் அவர் பதிவு செய்கிறார்.

“இங்கு பெரும்பாலும் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இளம் சிறாருக்கு கல்வியறிவு தரப்படுகிறது. ஆனால் ஆயிரம் பேருக்குக் கல்வி தந்தால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தவறின்றி எழுதவும் வாசிக்கவும் செய்கின்றனர். பெண்களுக்கோ அந்த வாய்ப்பும் இல்லை. கோயில்களில் ஆடும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது”, எனப் பதிவு செய்கிறார். இந்தப் பெண்களும் கோயில்களில் பாடப்படும் பாட்டுகளை மனனம் செய்யவே சொல்லித்தரப்பட்டது எனச் சொல்கிறார் அவர்.

ஆண் குழந்தைகளுக்கு மணலில் எழுதப் பழக்கி கல்வி தரப்பட்டது. பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகளுக்கு கோயில்களிலோ, அவரவர் வீடுகளின் திண்ணையிலோ ‘குருகுல’ வழிக்கல்வி தரப்பட்டது. சமஸ்கிருதம் முக்கிய மொழியாகக் கற்பிக்கப்பட்டது. இஸ்லாமிய ஆண் பிள்ளைகள் மதரசாக்களிலோ அல்லது தத்தம் வீடுகளிலோ மதம் சார்ந்த கல்வி கற்றனர். இவர்களைத் தவிர வேறு யாரும் கல்வி குறித்த எந்த அறிமுகமும் இல்லாதிருந்தனர்.

தரங்கையில் புளூஸ்ட்ஷாவு போர்த்துகீசிய பள்ளி ஒன்றை தன் வீட்டில் நிறுவினார். அங்கு டேனிஷ் மொழியும் ஜெர்மன் மொழியும் கற்றுத்தரப்பட்டன. சீகன்பால்கோ தமிழ்ப் பள்ளி ஒன்றை தன் வீட்டில் நிறுவினார். 1716ம் ஆண்டு தரங்கம்பாடியில் ஐந்து பள்ளிகள் இயங்கிய தரவுகள் உள்ளன. அவற்றில் நம் கவனத்தை ஈர்ப்பது ‘மலபார் பெண்கள் பள்ளி’, ‘டேனிஷ் ஆண்கள் மற்றும் பெண்களின் இருபாலர் பள்ளி’. இந்த ஐந்து பள்ளிகளில் பயின்ற 104 மாணவர்களில் 40 பேருக்கு தங்கும் வசதியும் உணவும் கட்டணமின்றி மிஷனால் வழங்கப்பட்டன. குறிப்பாகத் தமிழ் மாணவர்களுக்கு உணவும் தங்குமிடமும் கட்டணமின்றி வழங்கப்பட்டன. இவர்களுக்கான கட்டணத்தை டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் செல்வந்தர்கள் மிஷன் பணிக்கென மனமுவந்து தந்தனர்.

குழந்தைகளுக்கு கல்வியறிவு இருந்தால் மட்டுமே கிறிஸ்தவ மதப்பரப்புரை செய்யமுடியும் என்பதே ஹல்லே மிஷன் பள்ளிகளை நடத்த மிக முக்கியக் காரணம்.

பள்ளிகளில் பெரும்பாலும் கிறிஸ்தவ நூல்கள் வாசிக்கவும் செபப் புத்தகங்கள், பாடல்கள் மனப்பாடம் செய்யவும் கற்றுத்தரப்பட்டன. ஆண் குழந்தைகள் பின்னாளில் மிஷன் பணிகளை எடுத்துச் செய்யும் உபதேசிமாராகவும், கேட்டகிஸ்டுகளாகவும் பயிற்றுவிக்கப்பட்டனர். பெண்களோ அந்த உபதேசிகளுக்கு நல்ல மனைவிகளாக, கிறிஸ்தவ மறையைப் பின்பற்றி ஒழுக்கமாக வாழும் குடும்பப் பெண்களாக வீட்டு வேலைகள் கற்றுத்தரப்பட்டு ‘பழக்கப்பட்டனர்’.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தனி கட்டிடங்கள் இயங்கின. தினமும் காலை 6 மணிக்கே குழந்தைகள் பள்ளியில் கூடி பைபிள் வாசிப்பு, ஜெபங்கள் மனப்பாடம் என படிப்பைத் தொடங்குவர். மதியம் 12 மணிமுதல் இரண்டு மணி வரை அவர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. அதற்குப் பின் ஆண்களுக்கு கணக்கு, மொழி ஆகியவை கற்றுத்தரப்பட்டன. தமிழ் அளவைகள், தமிழ் கணக்கே அவர்களுக்கு சொல்லித்தரப்பட்டது. பெண் குழந்தைகளுக்கோ தையல், பூத்தையல் போன்ற வேலைகள் கற்றுத்தரப்பட்டன. வாரம் ஒரு முறை ஊருக்கு வெளியே கிணற்றடியில் குளிக்க இரு பாலருக்கும் அனுமதி உண்டு.

1732ம் ஆண்டு இவ்வாறு கற்ற பெண்களில் ஒருவர் ‘டீகனஸ்’ (பெண் பாதிரி) ஆனார் என்ற தரவுகள் இருந்தாலும் அவர் குறித்த மேலதிக தகவல்கள் இல்லை. இது தமிழ்நாட்டிலும் ஐரோப்பாவிலும் பெரும் புயலைக்கிளப்பியது. பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே அனுமதி மறுத்த சமூகத்தில் ஒரு பெண் கல்வி கற்று உபதேசி ஆனது அதிர்ச்சியைத் தந்தது. ஐரோப்பியருக்கோ தமிழர்களுக்குக் கிடைத்த கல்வி அத்தனை உவப்பானதாக இல்லை. தமிழ் மண்ணில் கிறிஸ்தவத்தைப் பரப்ப இந்தப் பள்ளிகள் முயன்றன. அதற்கான கட்டமைப்பை செம்மையாக வளர்த்தெடுத்தன.

1732ம் ஆண்டு 219 தமிழ்க் குழந்தைகள் தரங்கம்பாடி பள்ளிகளில் பயின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு (73 பேர்) பெண்கள் என்பது உண்மையில் பெரும் ஆச்சரியம்! ஆசிரியர்களில் ஒரு தமிழ்ப் பெண்ணும் இருந்தார் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், திருமுழுக்கு பெறாதவர்களும் இப்பள்ளிகளில் பயின்றனர்.

1741ம் ஆண்டு பள்ளியின் வரைபடம், நன்றி: சீகன்பால்கு அருங்காட்சியகம், தரங்கை
1741ம் ஆண்டு பள்ளியின் வரைபடம், நன்றி: சீகன்பால்கு அருங்காட்சியகம், தரங்கை

1716ம் ஆண்டு சீகன்பால்கு கட்டிய பங்களா அமைந்த ‘அட்மிரல்ஸ்கேட்’ பகுதியில் 1730களில் புதிய பள்ளிக் கட்டிடத் தொகுப்பு கட்டப்பட்டது. 1730ல் தொடங்கிய கட்டுமானப்பணி 1741ம் ஆண்டு நிறைவடைந்தது. பள்ளிக் கட்டிடங்கள், ஆண் பெண் தங்கும் விடுதிகள், மிஷனரிகளுக்கான விடுதி என விரிவாகவே கட்டப்பட்டது. ஒரே கூரையின் கீழ் ஆசிரியரும் மாணாக்கரும் வசிக்கும் இந்திய ‘குருகுல’ அமைப்பை ஒட்டியே இவ்வாறு பள்ளி கட்டப்பட்டது.

சிலுவை வடிவப் பள்ளி மூன்று புறமும் பிற கட்டிடங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆண் பெண் விடுதிகள் பெரும் முற்றத்துடன் அமைந்தன. அனைவரும் ஒன்றுகூடும் பெரிய கூடமும் தொகுப்பின் நடுவே கட்டப்பட்டது. பத்திக் கூரையுடன் அமைந்த கூடங்களில் உணவு உண்பதற்கும் தையல் வேலை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பள்ளிகளில் பெரும்பான்மையாக இந்து மதத்தைக் கடைபிடித்த ஒடுக்கப்பட்ட சாதியினரே படித்தனர் எனவும் மிஷனரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களது பிள்ளைகளுக்கு உணவும் உடுத்த ஆடையும் கொடுத்து, கல்வியும் தந்ததால் கிறிஸ்தவத்துக்குள் எளிதாகக் கொண்டுவர முடிந்தது என மிஷனரிகள் கருதினர். ஆதிக்க சாதியினர் மதம் மாறினால் ஏற்பட்ட சமூக ஒதுக்கத்துக்கு அஞ்சினர். ஒடுக்கப்பட்டவர்களுக்கோ உணவும் உடையுமே பெரும் போராட்டமாக இருந்ததால், அவர்களுக்கு மதமாற்றம் பொருட்டாகத் தோன்றவில்லை.

தரங்கை மக்களின் நிலையை விளக்கும் ஓவியங்கள் (ஆண்டு 1729). 1. தலையில் நெல் கூடை சுமக்கும் தலித் பெண், மண் வெட்டும் தலித் ஆண் தொழிலாளி, 2. கட்டைச் செருப்பை அணிந்து பனை ஏடு சுமக்கும் தமிழ் கேட்டகிஸ்ட், போர்த்துகீசிய படை சிப்பாய்
தரங்கை மக்களின் நிலையை விளக்கும் ஓவியங்கள் (ஆண்டு 1729). 1. தலையில் நெல் கூடை சுமக்கும் தலித் பெண், மண் வெட்டும் தலித் ஆண் தொழிலாளி, 2. கட்டைச் செருப்பை அணிந்து பனை ஏடு சுமக்கும் தமிழ் கேட்டகிஸ்ட், போர்த்துகீசிய படை சிப்பாய்

ஆனால் கல்வி தந்த வாய்ப்புவசதிகளைப் பார்த்த ஆதிக்க சாதியினர் தங்கள் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்தனர். மற்ற சாதியினரோடு தங்கள் பிள்ளைகள் கலக்கக்கூடாது என நிபந்தனை விதித்தனர். மிஷனரிகளும் மென் போக்கைக் கடைபிடித்து வகுப்பறைகளைத் தனியாக்கி சாதிய அடிப்படையில் பிரித்தனர். ஆதிக்க சாதிக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அதே சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களே வேண்டும் என்றும் அம்மக்கள் வலியுறுத்தினர். நேரடி மதமாற்றத்தால் சிக்கல்களைச் சந்தித்த மிஷனரிகளும் இதற்கு ஒத்துப் போயினர்!

ஓவியத்தின் கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் தமிழ்ப் பள்ளி மாணவர், மாணவி. மாணவி மேலாடை இல்லாமல் நூற்கிறார். (ஓவியம் 1735ம் ஆண்டு) https://en.natmus.dk/historical-knowledge/historical-knowledge-the-world/asia/india/tranquebar/schools-missionaries-and-book-printing/publications-on-schools-missionaries-and-printing-press/early-schools-of-tranquebar/
ஓவியத்தின் கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் தமிழ்ப் பள்ளி மாணவர், மாணவி. மாணவி மேலாடை இல்லாமல் நூற்கிறார். (ஓவியம் 1735ம் ஆண்டு) https://en.natmus.dk/

பெண் குழந்தைகளுக்கு வாசிப்பு தவிர கயிறு திரித்தல், சாக்ஸ் பின்னுதல், பாய் முடைதல், நூற்பு உள்ளிட்டவை கற்றுத்தரப்பட்டன. நூற்பும் தையலும் தமிழ்ப் பெண்களால் இவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன. பெண்ணுக்குக் கல்வியறிவு தந்தபோதும் அவளுக்கு மேலாடை அணிவிக்க மிஷனரிகள் முயலவில்லை என்பதை வருத்தத்துடன் கவனிக்கிறேன். இதற்கு ஓர் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா வந்த பெண் மிஷனரிகள் ஜோவான்னா மற்றும் மார்த்தா ‘குப்பாயம்’ மூலம் தீர்வு கண்டனர். ஆண் மிஷனரிகள் இது குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யாதது ஏன் என்ற கேள்வி மேலோங்குகிறது.

ஓவியத்தில் பனை ஓலை ஏட்டில் எழுதிக்கொண்டிருக்கும் மாணவரைக் காணலாம். மிஷனரிகள் காகிதம், மை பயன்படுத்தி எழுதிவந்தாலும் மாணவர்களுக்கு விலையின் காரணமாக அது எட்டாக்கனியாகவே இருந்தது. ஓலைச்சுவடிகளில் அழகாக எழுதப் பழகியபின் மிஷனரிகளின் நம்பிக்கைக்கு உரிய மாணவர்களே காகிதத்தில் எழுதவோ வரையவோ அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் மாணவர்கள் எழுதிய ஓலைச் சுவடி, தரங்கம்பாடி பள்ளி. நன்றி: Halle Francke Collection
தமிழ் மாணவர்கள் எழுதிய ஓலைச் சுவடி, தரங்கம்பாடி பள்ளி. நன்றி: Halle Francke Collection
காகிதத்தில் வரையப்பட்டுள்ள கத்தரிக்காய் (தமிழ் மாணாக்கர் ஓவியம் எழுத்தாக இருக்கக்கூடும்), Letters from N Dal, M Bosse, F Pressier, Th Walter to G A Francke, dated 3 October, 1736
காகிதத்தில் வரையப்பட்டுள்ள கத்தரிக்காய் (தமிழ் மாணாக்கர் ஓவியம் எழுத்தாக இருக்கக்கூடும்), Letters from N Dal, M Bosse, F Pressier, Th Walter to G A Francke, dated 3 October, 1736

படிப்படியாக ஹல்லே மிஷன் இந்தியாவிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, 1836ம் ஆண்டு இறுதி மிஷனரியாக தரங்கையின் கேமரர் இறந்துபோனார். அப்போது 300 மாணாக்கர்கள் பள்ளிகளில் பயின்றுவந்ததாகவும் அவர்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதாகவும் பதிவுசெய்திருக்கிறார். அதன்பின் தரங்கம்பாடி பள்ளிகள் ஆங்கிலேயரின் எஸ்பிசிகேயின் கீழ் வந்தன. 1839ம் ஆண்டு லீப்சிக் மிஷன் பள்ளிகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதன்பின் பல ஆண்டுகாலம் ஆண் பெண் குழந்தைகளுக்கு கட்டணமில்லாக் கல்வி வழங்கியது. 1950களில் தமிழ் லூத்தரன் சர்ச் வசம் பள்ளிகள், ஆசிரியர் கல்லூரிகள் ஆகியவை வந்தன. இன்று தரங்கம்பாடியில் தெருவுக்குத் தெரு பள்ளி ஒன்று இயங்குகிறது. ஆனால் அரசுப் பள்ளி எதுவும் அங்கு இல்லை.

சீகன்பால்கு தொடங்கிய பள்ளி இன்றும் அதே இடத்தில் பிஷப் ஜான்சன் நினைவுப் பள்ளி என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. பழைய ஓட்டுக் கட்டிடங்களும் சாய்வு அடித்தளம் கொண்ட அறைகளும் பூட்டிக்கிடக்கின்றன.

பிஷப் ஜான்சன் பள்ளி வளாகம் இன்று
பிஷப் ஜான்சன் பள்ளி வளாகம் இன்று
ஆரோன் ஆலயம், பள்ளி வளாகம்
ஆரோன் ஆலயம், பள்ளி வளாகம்
சூலை 1741, ஆரோன் ஆலயம் திறக்கப்பட்ட மாதம். பள்ளியின் மிகத் தொன்மையான கட்டிடம் இது
சூலை 1741, ஆரோன் ஆலயம் திறக்கப்பட்ட மாதம். பள்ளியின் மிகத் தொன்மையான கட்டிடம் இது

ஜான்சன் பள்ளி வளாகத்தில் 1741ம் ஆண்டு கட்டப்பட்ட ஆரோன் ஆலயம் (வழிபாட்டு இடமாகலாம்) இடிந்து சிதிலமாகிக் கிடக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் இரு பாலினத்தோரும் படித்த பள்ளியின் எச்சம் என இதை மட்டுமே சொல்லலாம். ஆனால் அதை சீர்செய்ய லூத்தரன் மக்களோ, பொது மக்களோ, அரசோ முன்வரவில்லை. சொந்தப் பணத்தைக்கொண்டு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் பள்ளியை சீராக்கி சுத்தம் செய்துள்ளனர். ஆரோன் ஆலயத்தை அக்குடும்ப வழித்தோன்றல்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு முறை சீர் செய்திருக்கின்றனர். ஓட்டுக் கட்டிடங்களில் சில நான் சென்றபோது பூட்டிக்கிடந்ததால் உள்ளே சென்று அவற்றின் நிலையைக் கண்டறியமுடியவில்லை. அவற்றில் ஒன்றிரண்டு தொன்மையானவை என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

ஆரோன் ஆலயத்தின் இன்றைய நிலை பரிதாபகரமாக உள்ளது. இதை என் அறியப்படாத கிறிஸ்தவம் நூலிலும் பதிவு செய்திருக்கிறேன். இப்படியாக தமிழ்நாட்டின் முதல் பெண்கள் பள்ளி கேட்பாரின்றி தேடுவாரின்றி சிதிலமாகிக்கிடக்கிறது. லூத்தரன் சபை கைவிட்ட பள்ளியை ஒரு சில ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி மட்டுமே தூக்கிப் பிடித்திருக்கிறது. ஆசிரியர் தினத்தைக் கொண்டாடவேண்டும் எனில் அந்த ஆசிரியர்களைக் கொண்டாடவேண்டும். அவர்களின் நீண்டகால கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன்.

2017ம் ஆண்டு வைக்கப்பட்ட கோரிக்கை, நன்றி: பிஷப் ஜான்சன் நினைவுப்பள்ளி முகநூல் பக்கம்
2017ம் ஆண்டு வைக்கப்பட்ட கோரிக்கை, நன்றி: பிஷப் ஜான்சன் நினைவுப்பள்ளி முகநூல் பக்கம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் முதன்முதலில் கல்வியை அறிமுகம் செய்த இப்பள்ளியை வரலாற்று நினைவுச்சின்னமாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

***

கட்டுரையாளரின் மற்ற கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.