பெண் குழந்தைகள் கல்வி பெறுவது குறித்து உருவாகும் ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து இங்கே பேசி வருகிறோம். தற்போது தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்னை கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பு. அது கொலையா தற்கொலையா என்று விவாதம் நடந்து வருகிறது. காவல்துறை புலனாய்வு செய்து வருகிறது.

எத்தனை காரணங்கள் இருந்தாலும் ஒரு குழந்தை இறந்ததை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு மாணவி தானா இப்படி என்றால் இல்லை. அடுத்து ஒரே வாரத்தில் 12 ஆம் வகுப்பு திருவள்ளூர் மாணவியின் இறப்பு.

காலம்தோறும் இதுபோன்ற இறப்பு தொடர்ந்து நடந்துவருவது மிகவும் மோசமான சூழலாகவும் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறையாகவும் தான் பார்க்க முடிகிறது.

பொதுவாகவே பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளிடையே பல்வேறு காரணங்களால் இறப்பு ஏற்படுகிறது என்றாலும் பெண் குழந்தைகளது இறப்பு கவனிக்கத்தக்கது. அது தற்கொலையாகவும் கொலையாகவும் மாறுவதற்குப் பின்னால் உள்ள காரணிகள் என்னவோ பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியும் வன்முறைகளுமே.

தேர்வுகளுக்கான அழுத்தம் மிகப் பெரிய வன்முறை என்றால் அதைத் தாண்டிய பல வன்முறைகளும் நீளுகின்றன. நீட் தேர்வின் அச்சத்தால் நிகழ்ந்த அனிதாவின் மரணத்தை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறோம். அனிதாவைத் தொடர்ந்து ஐந்து வருடங்களில் பல குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது நிகழ்ந்தது. இன்னும் தொடர்கிறது. நீட் மரணங்கள் தனியாகவே பேசப்பட வேண்டியது.

குறிப்பாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளில் கல்லூரிகளில் ஆரம்பித்து அவர்களது வீடுகளில், சமூகத்தில் என எங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் தான் தற்காலத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது. அதை அனைவரும் அறிவோம். பெண் குழந்தைகள் யாரைத்தான் நம்புவது? பெண் குழந்தைகளை யாரை நம்பி விட்டுச் செல்வது?

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல், துன்புறுத்தல் சக மாணவர்களாலும் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்களாலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பெண் ஆசிரியர்கள் என்றால் வார்த்தைகளின் வழியே துன்புறுத்தல்களை நிகழ்த்துகின்றனர்.

இவற்றையெல்லாம் பெண் குழந்தைகளின் மீதான வன்முறையாகத் தானே பார்க்க வேண்டும்? 10% எண்ணிக்கையுள்ளவை தான் ஊடகங்களின் வழியாக வெளியே வருகின்றன. 90% வன்முறைகள் வெளியே தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மறக்கப்படுகின்றன.

சாட்டை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுப்பார் அறிவியல் பாட ஆசிரியர். அதனால் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்று பிறகு காப்பாற்றப்பட்டு, சாட்சி சொல்கிறார். கூடப் படிக்கும் மாணவர்கள் காதல் கடிதம் கொடுத்து வீட்டில் தெரிந்த உடனே பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுகிறார்கள். இங்கே வந்தால் ஆசிரியர்களால் பிரச்னை. எப்படித்தான் படிப்பது?

அந்தப் பெண் குழந்தையின் கதறலை ஒட்டு மொத்த சமூகத்தின் பெண் குழந்தைகளின் கதறலாகவே பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகள் வன்முறைகளுக்கு ஆட்படுகின்றனர். வீடும் பாதுகாப்பு தருவதில்லை, பள்ளிகளிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை. பள்ளிகளால் நடத்தப்படும் விடுதிகளும் பெண் குழந்தைகளைக் காவு வாங்குகின்றன. தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பல்வேறு காரணிகளால் பெண் குழந்தைகள் விவரிக்க முடியாத அளவிற்குப் பாதிக்கப்படுவதை வெறுமனே கடந்து போக முடிகிறதே நம்மால், இந்தச் சமூகத்தால். குற்ற உணர்வு எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்க்க முடிகிறது என்பதே ஒவ்வொரு வன்முறைக்கும் உருவாகும் தீர்வுக்கான முயற்சிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய நாள்கள் அந்தக் காலம் போல இல்லை, எல்லாமே மாறிவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் புதுப் புதுமுகங்களை இந்த நாடும் சமூகமும் பெற்றுவருகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், பெண் குழந்தைகளுக்கான பாதிப்பு என்பது சற்றும் குறையாமல் புதிய புதிய வடிவங்களில் நம்மை அச்சுறுத்தி வருகிறது. அரசும் அதற்குத் தக்கவாறு பாதுகாப்பு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் போடப்பட்டுள்ளன. பள்ளிகளில், வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான 24 மணி நேர சேவையாக இரு எண்கள் (1098 மற்றும் 14417) பாதுகாப்பு எண்களாக எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளும் குற்றங்களும் ஏன் நிற்கவில்லை? குறையவில்லை. பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை, ஆசிரியர் கைது என்ற செய்திகள் தொடர்ந்து சமீபக் காலத்தில் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஏனென்றால் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டங்களும் ஆணைகளும் தாள்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்யப்படும் அளவிற்கு, பெண் குழந்தைகளைச் சென்றடையவில்லை என்பதே யதார்த்தம்.

இரு வருடங்கள் முன்பு கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இணையவழிக் கல்வி கற்பித்தலால் தனியார் பள்ளியில் பெண் குழந்தைகளிடம் அத்துமீறிய ஆசிரியர் என்ன ஆனார்? அந்தப் பள்ளி இன்று இயங்காமலா இருக்கிறது?

அரசுப் பள்ளிகளில் மட்டும் இந்தப் பாலியல் சுரண்டல் நடக்காமலா இருக்கிறது? தனியார் பள்ளியின் விடுதியில் பாதுகாப்பு இல்லை என்று குரல் கொடுக்கிறோம். ஆனால், அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் ஒரு பெண் குழந்தை இறந்தது எப்படி என்றால் எங்கு தான் பெண் குழந்தைகளை சுதந்திரமாக, நிம்மதியாக வாழ விடுகிறது இந்தச் சமூகம்?

போக்சோ சட்டம் இருந்தும் பெண் குழந்தைகளுக்கு ஏன் பாதுகாப்பு கிடைப்பதில்லை? வெறும் சட்டங்களால் மாற்றங்களும் தீர்வுகளும் கிடைத்துவிடுமா?

மிக முக்கியமாக சமூகத்தில் உரையாடல் தேவை. பெண் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கற்றுத் தரப்பட வேண்டும். பெற்றோர் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துங்கள். பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பிவிட்டால் போதுமா? குழந்தைகள் தங்களுக்கான பிரச்னைகளை உங்களிடம் உரக்கச் சொல்லி வெளிப்படுத்தப் பழக்கப்படுத்துங்கள். பெற்றோருடனான நல்லுறவு மிக முக்கியம் என்பதை முதலில் பெற்றோர் உணர வேண்டும். அவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே சென்றால் வரும் பாதுகாப்பற்ற உணர்வைக் களைய நாங்கள் இருக்கிறோம் என்று தன்னம்பிக்கை தர வேண்டிய இடத்தில் முதலில் இருப்பவர் பெற்றோர் மட்டுமே.

அடுத்து, பள்ளிக்குள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தாம் . பாதுகாப்பு என்பது உடல், மனம் என இரண்டும் இணைந்த நலம் சார்ந்தது. பெற்றோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்யாத இடங்களிலும் ஆசிரியர்கள்தாம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும். இது ஆசிரியர் பணியின் அறமேயன்றி வேறில்லை.

அதற்கு வேறெந்த முயற்சியும் தேவையில்லை. வகுப்பறையில் முறையான உரையாடலை ஆரம்பித்தாலே போதும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை உருவாகும். பிறகு கண்டிப்பாகப் பெண் குழந்தைகளுக்கான வன்முறைகள் பள்ளிக்குள் நிகழ வாய்ப்பே இல்லை. அதை மீறி நிகழ்ந்தால் சட்டங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாரபட்சமற்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசின் மீதும் நம்பிக்கைப் பிறக்கும்.

வீடும் பள்ளியும்தாம் மிக முக்கியமான தளங்கள். பெண் குழந்தைகளைச் சக மனிதராக மதிப்பது பற்றி வீடுகளும் பள்ளிகளும் சமூகமும் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். போராடிப் போராடித்தான் ஒவ்வொரு பெண் குழந்தையும் தனக்கான இருப்பை இச்சமூகத்தில் உறுதி செய்து வாழ்ந்து வருகின்றனர் .

பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் சமூகம் தானே இது? வரதட்சணைப் பிரச்னையால் ஸ்டவ் வெடிக்க வைக்கும் அரக்கர்கள் நிறைந்த சமூகம் தானே நமது சமூகம்? குழந்தைகளையும் கூட்டுப் பாலியல் வன்புறவு செய்யும் மனித மிருகங்கள் வாழும் கொடிய சமூகம் தானே இது ?

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சமூகமும் அரசும் எத்தனை வளர்ந்தாலும் அர்த்தமில்லை. ஆகவே பெண் குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து பாதுகாக்க சமூகமும் அரசும் உறுதி ஏற்க வேண்டும் .

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.