பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்குச் சில ரெடிமேடான பதில்களை வைத்திருக்கும் இப்பொதுச் சமூகம், பெண் குழந்தைகளின் உடல்கள் மீது நடத்தப்படுகிற பாலியல் சுரண்டல் குறித்தான கேள்விகளுக்கு வாய் திறப்பதில்லை. உடைதான் காரணம், நேரம்தான் காரணம், ஒழுக்கம்தான் காரணம் என்ற சப்பைக்கட்டுகளை எளிதாகச் சொல்லிவிட முடியாது அல்லவா?
பெண்களையும் குழந்தைகளையும் தெய்வமாகக் கருதுகிற இந்தியாதான் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் முதல் இடத்தையும் குழந்தைகள் வாழப் பாதுகாப்பற்ற நாடுகளில் ஆறாவது இடத்திலும் உள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைக் குறித்துத் தற்போதுதான் மீடியங்களில் அதிகமாகப் பேசத் தொடங்கி இருக்கிறோம். அவற்றில் ஒரு மீடியம் சினிமா. சினிமா என்ற மீடியம் பேசினால் மட்டுமே ஒன்றைப் பெரிய அளவில் கவனிக்க ஆரம்பிக்கிறது பொதுச் சமூகம். பாலியல் வன்முறைகளைக் குறித்துப் பேசிய சில தமிழ்த் திரைப்படங்களில்
பெண் குழந்தைகளின் பெற்றோரைக் கதிகலங்க வைப்பதாகவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவையாகவுமே இருந்திருக்கின்றன.
ஆனால், சமீபத்திய திரைப்படங்களான பொன்மகள் வந்தாள் (2020), நெஞ்சுக்கு நீதி, கார்கி, தமிழ் வெப் சீரிஸான சுழல் ஒரே கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டவை. நெஞ்சுக்கு நீதி தவிர்த்து மற்ற படங்கள் பாதிக்கப்பட்டவர்களின் (Victim Perspective) பார்வையிலிருந்து சொல்லப்பட்டவை.
முகம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு (Sexual abuse) ஆளாக்கப்பட்டதைச் சொன்னால் பாதிக்கப்பட்டவரையே (Victim Blame) குற்றம் சொல்லும் சமூகத்தில் தனது உடல்மீது நடத்தப்பட்ட வன்முறையை நிரூபிக்கச் சான்றுகள் இல்லாமல் தன்னையே காரணகர்த்தாவாக்கி, அதை அப்படியே கடந்து சென்றவர்களின் மனநிலையைப் பிரதிபலித்திருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம்.
குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறும் குடும்ப உறுப்பினராலே பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தமிழ் சினிமா பேசவே பேசாத ஒன்று. 95% குழந்தைகள் உறவினர்களால், நன்கு தெரிந்த, பழகிய நபர்களாலேயே பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற உண்மையைப் படத்தின் இறுதியில் ஐஸ்வர்யா கூறும் வசனத்தில் சுட்டிக் காட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதி போராட்டத்தை மையப்படுத்திருக்கும். தலித் சிறுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பொதுச் சமூகத்தின் மனநிலையில் ஏன் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை என்ற கேள்வியை எழுப்பியிருக்கும். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரும் மீட்பராக ஓர் ஆண் நிறுத்தப்பட்டிருப்பார்.
கார்கி பேசிய கதைக்களம், பேசிய விதம் முற்றிலும் வேறுபட்டது. சிறு வயதில் டியூசன் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானபோது அவரிடமிருந்து தன்னை தற்காத்த அப்பா, தங்களுக்கு முழுமையான அன்பும் பாதுகாப்பும் நம்பிக்கையும் கொடுத்த அப்பா, வேலை பார்க்கும் இடத்தில் 9வயதுக் குழந்தையை வல்லுறவு செய்த வழக்கில் குற்றவாளியாக இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட குழந்தை நம் குழந்தையாக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியை வைத்திருக்கும் பொன்மகள் வந்தாள். பாதிப்புக்குள்ளாக்கிய நபர் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் நம் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வியைப் பொதுச் சமூகத்தை நோக்கி எழுப்புகிறது ‘கார்கி’. முழுக்க முழுக்கப் பெண்மைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்துப் பேசிய படங்களில் முதன்மை பெறுகிறது கார்கி.
நமக்கு அறிமுகமில்லாத, பரிச்சயம் இல்லாத நபரிடமிருந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களுக்குக் கோபத்தையோ வெறுப்பையோ அதிகாரத்தையோ பயன்படுத்தி தண்டனையைக்கூடக் கொடுத்துவிட முடிகிறது. ஆனால், நம்பிக்கையைப் பெற்ற, பாதுகாப்பைத் தரக்கூடிய குடும்ப உறுப்பினர்களாலேயோ நெருங்கிய உறவினர்களாலேயோ பாலியல் சீண்டலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகும் குழந்தைகளின் உளவியல் எத்தகைய அச்சுறுத்தலுக்கு, பாதுகாப்பின்மைக்கு ஆளாகும். அது அவர்களது வளர்ச்சியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதெல்லாம் அளவிட முடியாதது. அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு நிறைய இழக்க வேண்டி இருக்கிறது.
மூன்று படங்களும் என்னுள் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நிறைய சம்பவங்களை நினைவுபடுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. இப்படி நமக்கும் நடந்திருக்கே. ஏதோ அருகிலிருந்து பார்த்தது போலவே சொல்கிறார்களே என்ற நம்பகத்தன்மையும், காட்சிகள் நகரும்போது படபடப்பும் சேர்ந்துகொண்டது. குறிப்பாக கார்கி, தனது பால்ய காலத்தில் டியூசன் டீச்சரால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் காட்சி. மார்க்க கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக அஸ்ரத்தின் (மார்க்க கல்வியைப் படிப்பித்துக் கொடுப்பவர்) வீட்டுக்குத்தான் நானும் என் தங்கையும் செல்வோம். நாளடைவில் அவரது பாலியல் அத்துமீறலை வெளியே சொல்ல முடியாமல், அங்கிருந்து தப்பிக்க லீவு போடும்போதெல்லாம் அம்மா கட்டையால் அடித்து விரட்டுவார்கள். அப்பா இல்லாத பொண்ண ஓதி படிக்க வைக்கலை என்று யாரும் சொல்லிடக் கூடாது என்பது அவர்களின் பயம். வீட்டுக்கும் போக முடியாமல், படிக்கவும் போகப் பிடிக்காமல் ஊர் எல்லாம் சுற்றி நேரம் ஆனதும் வீட்டுக்குப் போவோம். எல்லா நாள்களிலும் இது சாத்தியம் இல்லை, இல்லையா? எப்படியோ ஒரு வகையில் அம்மாவுக்குத் தெரிய வருகையில் அவர் ஆத்திரத்தை அடக்க முடியாத அளவுக்கு என்னிடம் சொல்லிருந்தால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன் என்றார்.
சண்டைக்கு நின்ற அம்மா, தன்னுடைய தகப்பனால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகினார் என்று தெரிய வரும்போது வாயில் துணி பொத்தி அழ மட்டுமே முடிந்தது.

பாலியல் ரீதியாக அச்சுறுத்தியவர்களில் சிலர் என் கண்முன்னே, கல்யாணம், குடும்பம் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு தொடர்பிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நான் உளவியல் ரீதியான சிக்கலுக்குள்ளாகி தாழ்வு மனப்பான்மையில் உழன்றிருக்கிறேன். தனியாகச் செல்ல அச்சம், ஆண்களைப் பார்த்தாலே ஒருவித பயம். யாராவது கேள்வி கேட்டால் பயத்தில் இதயத் துடிப்பு அதிகமாகி, முரசு அறைவதுபோல் சத்தம் கேட்கும். வியர்க்க வியர்க்க கையைப் பிசைந்து கொண்டே இருப்பேன். கண்ணைப் பார்த்துப் பேச பயப்படுவேன். பேருந்தில் அருகில் இருப்பவரைக் கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள் என்று சொல்லவே வராது. இவற்றில் சில இன்னமும் என்னைத் தொடரத்தான் செய்கின்றன.
என்னுடைய விடுதி தோழிக்கு 3 தங்கைகள் உட்பட மொத்தம் நான்கு பேர். மூத்த மகளான தன்னிடம் அப்பா பாலியல் ரீதியாக எப்படி நடந்துகொண்டார் என்று அவள் சொன்னதைக் கேட்டு மிரண்டுவிட்டேன். அம்மாவுக்குத் தெரியவந்த பின் பெண் பிள்ளைகளை அவர் பக்கம் அனுப்ப அனுமதிப்பது இல்லை. ஆனாலும் அவர் அவர்களுடன்தான் வாழ்ந்து வருகிறார். அந்தக் குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பதட்டமானதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருக்கும். அப்பா வீட்டிலிருந்தால் ஊருக்கே செல்ல மட்டாள். இத்தகைய சிக்கல்களைக் குறித்து யாரும் விமர்சனங்களில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அத்தகைய கதாப்பாத்திரத்தைச் சுட்டிக் காட்டி யாரும் உரையாடலை நிகழ்த்தியதாகவும் தெரியவில்லை.
இவற்றை எல்லாம் தாண்டி சுழல் மீது வைக்கப்பட்ட மற்றொரு விமர்சனம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா தொழிற்சங்கத் தலைவர். தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்னையை அடையாளப்படுத்தத் தெரியாதவராகக் காட்சிப் படுத்தப்பட்டிருப்பார். சமூகப் பிரச்னைகள் தொடர்பாகக் களமாடுபவர்களின் குடும்பத்தில் இத்தகைய பிரச்னைகள் எழுவதில்லையா? அப்படியான கொள்கை கோட்பாட்டோடு இயங்கும் தலைவர் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் காண்பிக்கப்பட்டால் கதாப்பாத்திரச் சித்தரிப்பு குறித்து விமர்சிப்பது சரியாக இருக்கும். போராட்டத்தில் கலந்துகொள்பவர், தலைவரின் தம்பி என்பதற்காக எல்லாம் இத்தகைய சித்தரிப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பது சரியா என்று சுய பரிசோதனை செய்யவேண்டி இருக்கிறது. வீட்டில் பெரிது பெரிதாக மார்க்ஸ், லெனின் படத்தைக் காட்சிப்படுத்தி இருப்பதெல்லாம் அடிப்படையில்லாத இடைச்செறுகல்.
இந்தியக் குடும்ப அமைப்பு பாதுகாப்பானது, புனிதமானது என்கிற கட்டுக்கதைகளுக்குப் பின்னால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் உண்மைகள் பல. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் சமூகத்தை விடவும் சமூக அமைப்பின் சின்ன வடிவங்களான குடும்பங்களே உளவியல் ரீதியான, உடல்கள் மீதான வன்முறையை அதிக அளவில் நிகழ்த்தி வருகின்றன. மேல் சட்டை போட அடம்பிடிக்கும் ஐந்து வயது குழந்தைக்கு, அடித்து சட்டை போடுவதிலும், வீட்டு ஆண்கள் மூஞ்சி சுழிப்பதற்குள் தவழும் குழந்தைக்கு ஹக்கீம் போட்டு விடுவதிலும், பறந்து திரிந்து விளையாடும் பன்னிரண்டு வயது சிறுமிக்கு குட்டைப் பாவாடை போடுவதைத் தவிர்ப்பதிலும், ஸ்லீவ்லஸ் போட தடை போடுவதே பெண் குழந்தைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் கருதுகின்றன சராசரியான இந்தியக் குடும்ப மனங்கள்.
வரதட்சிணை கொடுமை, திருமண உறவில் பலாத்காரம், கட்டாயத் திருமணம், ஆணவப்படுகொலை, பெண் சிசுக்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் குறித்துப் பேசினால் குடும்பம் என்கிற புனிதமான கட்டமைப்பு உடைந்துவிடும் என்பதன் அச்சம்தான் இவற்றைக் குறித்துப் பேசாமல் அமைதி காக்க வைக்கிறது. கால்காசுக்கும் பிரயோஜனம் இல்லாத கலாச்சார மரபுகளால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது.
குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.
ஊடகங்களில் திரைவிமர்சனம் எழுதுபவர்கள் கதையின் தாக்கத்தைக் கடத்தாமல் சகட்டு மேனிக்கு உருட்டுவது. சுழல் வெப் சீரிஸில் ‘கோபிகா, எப்ஜே இடையிலான நெருக்கமான காட்சிகள் தவிர்த்திருக்க வேண்டுமாம்.’ கதையின் எந்தk காட்சியும் தொந்தரவு செய்யாததை இந்தக் காட்சிகள் செய்துவிட்டன போலும். இன்னொரு இதழின் ஆன்லைன் தளத்தில், ”பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பத்திற்கு அவசியமானதாம்.”
ஏன் ஊடகங்கள் இத்தகைய படங்களை ஒரு சார்பினருக்கான, விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படமாகத் தட்டையான பார்வையுடன் அணுகுகின்றன? சாதியைத் தூக்கிப் பிடிக்கிற, பெண்களின் அடிமைத்தனத்தைப் போதிக்கிற படங்களைக் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ப்ரமோட் செய்கின்றன. குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக எவை இருக்கப் போகின்றன என்பதைத் தீர்மானிப்பது யார்? இத்தகைய படங்களைக் குடும்பங்கள் கொண்டாடாமல் தவிர்ப்பதன் அரசியல் என்ன?
பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை சமீபகாலத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண் மேலாதிக்கச் சமூகம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் எதிரானது என்பதை அவை வலியுறுத்துகின்றன.
பெரும்பாலும் கவனம் பெறாத களத்தின் மீது கவனம் பெற வைக்கின்ற கதைகளை அனைவரும் கொண்டாடுவோம்.
படைப்பாளர்:

மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
Arumaii.pengaluku erpadum prichanaigalai paarapatcham paakama opena gutsoda sonathu paaratakuriyathu..
Athu tha thevayumkooda..
Vazhthukal..
கார்கி புதுமையான கதைகளம் பேசவேண்டிய விவாதிக்க வேண்டிய கதைகளம் அதை குறித்து எழுதியிருப்பது பாராட்டிற்குரியது. விமர்சன ரீயான இக்கட்டுரை அதிகம் பகிரபட வேண்டும்.
நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்