நேராகப் பார்த்துப் பேச விருப்பம் இல்லாதவளாக, சாப்பிட்டுப் பல நாள்கள் ஆனவள் போலவும் உட்கார்ந்து இருந்தாள். வயதிற்கு உரிய உற்சாகம் அவளிடம் இல்லை. கண்கள் தூக்கம் இல்லாமல் இருப்பதாகக் காட்டியது.

“நான் சொல்வதைக் கேட்டு என்னைத் தவறாகக் கருத மாட்டீர்கள் தானே?”

“கண்டிப்பாக இல்லை” என்றேன்.

“நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என்னுடைய பள்ளித் தோழனை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகிறேன்.”

“சரி, அதனாலென்ன?”

“அவன் வேறு கல்லூரியில் படிக்கிறான். மூன்று மாதங்களுக்கு முன்பு அலைபேசியில் அழைத்து, இனிமேல், நாம் சந்தித்துக்கொள்ள வேண்டாம். எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான். அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டான். தொடர்புகொள்ள முடியவில்லை. இருவருக்கும் பொதுவான ஒரு தோழனைக் கேட்டபோது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வருவதாகத் தெரியவந்தது. ஏதோ நிராகரிக்கப்பட்டது போல் உணர்கிறேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவன் என்னைவிட்டுப் போனவுடன் வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது போல இருக்கிறது. நிறைய கனவுகளோடு காதலித்தேன். இப்படி நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.”

இந்தக் கதையை அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.

ஓர் இளவரசி உணவருந்துவதற்காக உற்சாகமாக மேஜையின் முன்னால் அமர்ந்தாள். அனைத்து விதமான உணவுகளும் அவள் மேஜையின் மேல் இருந்தன. அனைத்து சுவைகளும் அந்த மேஜையை நிரப்பி இருந்தன. எல்லா உணவுகளும் அவளுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டவை.

உட்கார்ந்ததும் ஓர் உணவை எடுத்துச் சுவைத்தாள். அவள் முகம் சிவந்தது. சுவைத்த வேகத்தில் கீழே துப்பிவிட்டாள். உண்மையில் இளவரசி பாயசம் என நினைத்து, பாகற்காயில் செய்யப்பட்ட கசப்பான உணவைச் சாப்பிட்டுவிட்டாள். “கசக்கிறது, கசக்கிறது” என அழுதாள். அருகில் நின்று கொண்டிருந்த உதவியாளர்களைத் திட்டித் தீர்த்தாள். நீங்கள் ஏன் ஒரே நிறத்தில் இனிப்பையும் கசப்பையும் செய்தீர்கள் என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டு, மேஜையின் மேல் உள்ள பிற பதார்த்தங்களைச் சுவைக்க மறுத்தாள்.

“நீயும் இந்த இளவரசி போல் தானா?” எனக் கேட்டேன்.

மெதுவாக இல்லை என்று தலை அசைத்தாள்.

“ஏன் உலகில் இவ்வளவு மனிதர்கள் இருக்க, ஒரே ஒருவர் வேண்டாம் எனச் சொன்னதற்காக இவ்வளவு மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்? இத்தருணத்தில் உனக்கு நிறைய தேர்வுகள் (choices) இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உனக்குத் தருகிறேன். நீ உறவை இப்போதே முடித்துக்கொள்ளலாம். இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அமைதியாக விலகிச் செல்லலாம். உறவுகளைக் கையாளத் தெரியவில்லை என்று ஒத்துக்கொண்டு கையாளக் கற்றுக்கொள்ளலாம். இது எல்லாவற்றையும் ஒத்தி வைத்துவிட்டு எங்காவது நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். ‘இனிமேல், நான் நல்ல உறவுகளை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்’ என உறுதிமொழி எடுக்கலாம். இந்த வலி வாழ்க்கையில் ஒரு பகுதி என உங்களைத் தேற்றிக்கொண்டு பிடித்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். அல்லது இப்படி அழுதுகொண்டே, நான் நிராகரிக்கப்பட்டு விட்டேன் எனச் சொல்லி, வேண்டாம் என விட்டுச் சென்ற ஒருவருக்காக நாள்களை வீணடித்துக்கொண்டிருக்கலாம். மகிழ்ச்சிக்கான சாத்தியங்களாக, மீண்டும் இதே நபர் தவறை உணர்ந்து திரும்பி வந்தாலும் வரலாம். மிகவும் புரிதல் உள்ள, அன்பை பொழிகின்ற வேறு நபர் வாழ்க்கையில் வரலாம்.”

ஏதோ உணர்ந்தவளாக, தெளிவு வந்து நம்பிக்கையுடன் சென்றாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு, பொருத்தமான, உற்ற துணையுடன் வாழ்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள். கண் முன்னே இருக்கும், இவ்வளவு சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் கவனிக்காமல், இதோ இந்தக் கல்லூரி மாணவி போலவும் அந்த இளவரசி போலவும் தான், பெரும்பான்மையான நேரம் நாம் நடந்துகொள்கிறோம்.

நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.

ஒவ்வொரு நொடியிலும் புதிய புதிய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகள், அந்தப் பாதைகளில், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய உங்களுக்கு முழு சுதந்திரமும் உரிமையும் உள்ளது.

நிறைய நேரம் வாழ்க்கை முட்டுச்சந்து போலவும் நீங்கள் முட்டுச்சந்தில் இருப்பது போலவும் வேறு வழியே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால், வாழ்க்கையில் ‘வாய்ப்புகளற்ற நிலை’ என்பது கிடையாது. நீங்கள் பார்க்கவில்லை; நீங்கள் தேடவில்லை என்று தான் அர்த்தம்.

மூடிய கதவின் முன்னே நின்றுகொண்டு, வாழ்க்கை போய்விட்ட மாதிரி அழுதுகொண்டிருப்போம். அந்த மூடிய கதவு ஓர் உறவாக இருக்கலாம், ஒரு வேலை வாய்ப்பாக இருக்கலாம். ஏதோ பணம் வரக்கூடிய ஒரு வழியாகக்கூட இருக்கலாம்.ஆனால், நம்மைச் சுற்றி, நாம் தட்டினால் திறப்பதற்காக, நமக்காகவே, ஆயிரக்கணக்கான கதவுகள், காத்துக்கொண்டிருக்கின்றன என்பதை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் உடல்நலம், செல்வாக்கு, செல்வம், நண்பர்கள், குடும்பம், வேலை, உறவுகள் போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன. சில நேரம் ஏதோ ஒன்று ஒரு வகையில் குறைந்துவிடுகிறது.

அது குறையும்போது, மிகுந்த மன அழுத்தத்தையும் தாங்க முடியாத சோகத்தையும் தருகிறது. ஏனென்றால் அந்த இழப்பை எதிர்பார்த்திருக்க மாட்டோம். மேலும் அந்த இழப்பு அந்தத் தருணத்தில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவே தோன்றும். மேலும் வலி மிகுந்ததாகவும் வாழ்க்கையே முடிந்துவிட்டது போலவும் தோன்றும். அந்த உணர்வுகள் உண்மைதான். ஆனால் ‘வாழ்க்கை முடிந்துவிட்டது; எல்லாம் அவ்வளவுதான்’ என்று சொல்லக்கூடிய அந்த எண்ணங்கள் பொய்.

எனவே அந்தப் பொய்யான எண்ணங்கள் மனதில் எழும்போது, வாழ்க்கையின் பிற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, அதை உருவாக்க ஆரம்பிக்கலாம். அதற்காக மகிழ்ச்சியாக இருக்கலாம். வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள் நன்றாக இருக்கின்றனவோ, அதற்காக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

எதிர்காலத்தை உருவாக்குவதில், முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் சொல்ல விரும்புவது உடல்நலம் மற்றும் மன நலம். இந்த இரண்டையும் மேம்படுத்துவதற்காக, சாத்தியங்களையும் வாய்ப்புகளையுமாவது பயன்படுத்துகிறோமா? நம்மிடம் குறைந்தபட்சம் நேரம் என்ற ஒன்றாவது இலவசமாக கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நொடியிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை, உங்களை உருவாக்குவதற்காக எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதே இங்கு முக்கியம்.

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் கடந்த காலத்தில் தேர்ந்தெடுத்த தேர்வுகளே! மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் எடுத்த தேர்வுகளே காரணம். ஏனென்றால், ஒவ்வொரு கல்லாக வைத்து வீட்டைக் கட்டுவது போல, நாமும் நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழியாக மட்டுமே, நம் வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம்.

‘வாய்ப்புகளின் தொகுப்பே வாழ்க்கை’ என்பதை நினைவில் கொண்டு, மகிழ்ச்சிக்கான, நல்ல எதிர்காலத்திற்கான, சரியான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வைக் கொண்டாடுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.