உலகம் தோன்றிய நாள் முதல் மனிதன்‌ சைகைதான் செய்து வந்தான். அது மிகவும் கடினமாக இருந்தது. மெல்ல மெல்ல ஒலிகளை எழுப்பத் தொடங்கினான். அந்த ஒலிகளைச்  சீராக்கினான். மொழி பிறந்தது. மனதுக்குள் ஒன்றைப் பற்றி சிந்திப்பதும் மொழிதான். பேச்சு, எண்ணம், எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்வது இவை எல்லாமே மொழிதான்.

 உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றாக இருந்த மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட ஒலிக்கோவையை உருவாக்கிக்கொண்டார்கள். அவையே மொழிகள் எனப்பட்டன. மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்துகின்றனர். விலங்குகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அந்தப் பண்புதான் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக இருக்கும் மேக்கி டாலர் மேன் கூறியுள்ளார்.          

உரையாடும் இந்தத் திறமைதான் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான நிலை. மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் மொழிக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் பரவலாக கிட்டத்தட்ட 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. உலகத்தின் மிகப் பழமையான மொழியென்று தமிழ், சமஸ்கிருதம், பழங்கால எகிப்து மொழி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால், இவையெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்தவை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றவும், மனிதன் தோன்றவும், பரிணாம வளர்ச்சி ஏற்படவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது.  ஆகவே  கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது அதற்கும் முன்னால் தான் மொழி உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், டாலர்மேன் போன்றவர்களின் கருத்து என்னவெனில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மொழி உருவாகியிருக்கலாம் என்பது தான்.      

நமது மூதாதையர்களின் புதைபடிவ எச்சங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் பேசத் தொடங்கிய காலத்தைக் குத்துமதிப்பாக அனுமானிக்க முடிந்தது. ஒலிகளை உருவாக்க நிறையக் கட்டுப்பாடுகளுடன் சுவாசிக்க வேண்டியிருந்தது. அதற்காக மென்மையான தசைகளைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.  அதாவது பேசுவதற்கு முக்கியத் தேவை உதரவிதானம். அந்த உதரவிதானத்தில் இருந்த நரம்புகளின் எண்ணிக்கை விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. பரிணாம வளர்ச்சியில் நமக்கு முந்தைய தலைமுறையான நியாண்டர்தால் மனிதர்கள் 6,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். அவர்களது உதரவிதானம் விரிந்திருந்தது. ஆனால், நான்கு கால்களில் தவழ்ந்துகொண்டிருந்த மனிதன் இரண்டு கால்களை மட்டுமே உபயோகித்து நடக்கத் தொடங்கிய ஹோமோ எரக்டஸ் இனத்தில் இந்த விரிவு இல்லை.       

FOXP2 என்ற ஒரு மரபணு எல்லா விலங்குகளுக்கும் பொதுவானது என்று கூறுகிறார் பேராசிரியர் போலே. அது மனிதர்களிடம் பிரிந்துகொண்டிருக்கும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதனால்தான் மனிதர்களால் பேச முடிகிறது. விலங்குகளால் இயலவில்லை.       

மனித மூளை என்பது இயற்கையின் அற்புதமான, மகத்தான படைப்பு. எல்லாவற்றையும் பிரதியெடுக்கும் மனிதன் படியெடுக்க இயலாத ஒன்று உள்ளதெனில் அது மனிதனின் மூளைதான். மூளை என்பது ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் அஷ்டாவதானியோ தசாவதானியோ அல்லது சதாவதானியோ கிடையாது. அதன் ஒவ்வொரு பகுதியும் இசைக்கும் மொழிக்கும் ஓர் உருவத்தைப் பார்த்து அறிந்துகொள்வதற்கும் எனக் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான கட்டுப்பாட்டு மையங்களாகத் தனித்தனியாகச் செயலாற்றுகிறது. மொழியின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கு முன்னதாக 1861இல் பால் புரோக்கா (Paul Broca) என்னும் பிரெஞ்சு நரம்பு அறுவை சிகிச்சையாளர், மொழியைப் புரிந்துகொள்ள முடிந்த ஆனால், தொடர்ச்சியாக ஒரு வாக்கியத்தைப் பேசவோ எழுதவோ செய்யும் திறனை இழந்த ஒரு நோயாளியின் மூளையை அவரின் இறப்பிற்குப் பிறகு ஆய்வு செய்தபோது, நோயாளியின் மூளையின் இடது அரைக்கோளத்தின் முன்பகுதியில் ஓரிடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். மூளையின் இந்தப் பகுதி பேச்சு/மொழி இவற்றின் கட்டுப்பாட்டு மையமாக இருக்கக்கூடும் என்று ஊகித்தார். மேலும் அதே பேச்சுக் குறைபாடுள்ள எட்டு நோயாளிகளின் மூளையைச் சோதித்தபோது அனைவருக்கும் மூளையின் அதே இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தார். மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதியே ‘மொழியின் மையம்’ என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தப் பகுதி பின்னர் ‘புரோக்காவின் பகுதி’ என்று பெயரிடப்பட்டது. ஒரு வகையில் மனிதனின் செயல்பாட்டுக்கும் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் இருக்கும் நேரடித் தொடர்பை முதன் முதலில் நிரூபித்ததும் இந்தக் கண்டுபிடிப்பே! புரோக்காவிற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து கார்ல் வெர்னிக் (Carl Wernicke) என்னும் ஜெர்மன் நரம்பியலாளர், பேசமுடிந்த ஆனால், தொடர்பற்ற பொருள் கொள்ள முடியாத பேச்சைக் கொண்ட நோயாளிகளின் மூளையைச் சோதனை செய்தபோது அதே இடது அரைக்கோளத்தில் பின்பகுதியில் இருக்கும் பாதிப்பைக் கண்டறிந்தார். மூளையின் இப்பகுதி ‘வெர்னிக்கின் பகுதி’ என்றழைக்கப்படுகிறது.       

தனித்தனியாகத் திரிந்த மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குழுவாக இணையத் தொடங்கினர். அப்போது அவர்கள் வேட்டையாடவும் உணவு தேடவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழத் தொடங்கினர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆதியில் உலகமே அடர்வனமாகத்தானே இருந்தது! விலங்குகள், பறவைகள் எழுப்பிய ஒலிக்குறிப்புகளை மனிதன் உன்னித்துக் கேட்கத் தொடங்கினான். அதேபோல் தானும் ஓசையெழுப்ப முயற்சித்தான். ஒரே குழுவாக வசித்தவர்கள் தங்களுக்குள் ஒரு ஒலிக்கோவையை உருவாக்கிக்கொண்டார்கள். அதுவே மொழி எனப்பட்டது. பின்னர் பரிணாம வளர்ச்சியின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் கண்டறியப்பட்டன. வாக்கியங்கள் உண்டாயின.         

பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும். ஒரு மொழி அழியும் போது ஓர் இனத்தின் அடையாளம் மறைந்து போகும்.          

அதேபோல ஒரு மொழி வாழ்வதென்பது தொடர்ந்து அது பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இயங்கிக்கொண்டே இருந்தால்தான் சாத்தியம். மொழியின் எல்லா வார்த்தைகளும் புழக்கத்தில் இருந்து கொண்டேயிருந்தால்தான் அது சாத்தியம். இல்லாவிடில் வழக்கொழிந்து போய்விடும்.          

பலவிதமான கலாச்சாரங்களும் பழக்க வழக்கங்களும் நிறைந்த நம் நாட்டில் ஒரு மொழிக் கொள்கை ஒத்து வராது. ஒரு மொழி என்பது வெறுமனே பேசுவது மட்டுமல்ல. அந்த மொழி பேசுபவர்களின் வாழ்வியல் முறைகளை உலகிற்கு எடுத்துக் கூறும் வழி. இதில் எது சிறந்தது என்ற வாதம் முக்கியமல்ல. எல்லாமே சிறந்தவை. என்னுடையது உன்னுடையது என்ற சண்டை சச்சரவுகள் தேவையில்லை. அததே போல் ஒரு மொழியைத் திணித்து, இன்னொரு மொழியை அழிக்க நினைக்கக் கூடாது. வரலாற்று அடையாளங்களை மொழி மூலம் நசுக்கக் கூடாது. ஆர்வம் இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியைக் கற்பதன் மூலம் ஒரு புது வாழ்வியல் முறையை அறிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.