‘மொழி பண்பாட்டின் திறவுகோல்’ என்பதை என்னைப் போன்ற மானுடவியல் மாணவர்கள் அதிகமாகக் கேள்விப்படுவோம். இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வார்கள். மற்ற சமூகக் கூறுகள் போலவே பண்பாடும் ஒற்றைப் பண்பாட்டுத் தோன்றல் முதல் பன்முக பண்பாட்டுத் தன்மை வரை பரிணமித்துள்ளது. எனவே, மானுடவியல் கண்ணோட்டத்தில் ஒரு பன்முகப் பண்பாட்டு சமூகத்தின் அவசியத்தைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பண்பாட்டிற்கும் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து அறிய முற்பட்டு எழுதியுள்ளேன்.

சமூகத்தில் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களுடனும் தொடர்புடைய ஒன்று மொழி. சொல்லப் போனால், ஒவ்வோர் இனக்குழுவின் மொழியும் பண்பாடும் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவை. மேலும் ஒன்றை அறியாமல் மற்றொன்றைக் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு பண்பாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் வேண்டி அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொள்ளவது மிக அவசியமாகிறது. உலகின் பல பழங்குடி இனக்குழுக்களின் பெயர்களும் அவர்களின் மொழி பெயரும் ஒன்றாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்துவரும் ‘படுகா’ இன மக்களின் இனப்பெயரும் அவர்கள் பேசும் மொழியின் பெயரும் ஒன்றுதான். இதே போல், பழங்குடி இனக்குழுக்கள் மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகள் மொழி அடிப்படையில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என்ற முழக்கம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற மொழி அடிப்படையில் உருவான நாடுகளில் இயல்பாகக் கேட்க முடியும். ஆனால், ஒன்றிற்கும் மேற்பட்ட பண்பாட்டுப் பின்னணி கொண்ட பல தரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் இது போன்ற முழக்கம் பல சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக, ஆதிக்கப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் மற்ற பண்பாட்டைச் சேர்ந்த மக்களைத் தாழ்த்தி ஒடுக்குமுறை செய்வார்கள். இது போன்ற ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கும். இதற்கு மிக சரியான உதாரணம் கனடா. கனேடிய பன்முகப் பண்பாட்டுக் கொள்கை 1988 இல் சட்டமாக மாறியது. பன்முக பண்பாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொண்ட உலகின் முதல் நாடு இது. இந்தச் சட்டம் அனைத்துப் பண்பாடுகளும் உள்ளார்ந்த மதிப்பைக் கொண்டுவருகிறது என்பதை ஒப்புக்கொள்வதோடு, பலதரப்பட்ட மற்றும் பன்முகப் பண்பாட்டுத் தன்மை உடைய சமூகத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ள ஒன்றாகக் கனடிய அரசாங்கத்தைத் திடப்படுத்துகிறது.

இந்தச் சட்டம் மூலம் நடக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்று Canadian Multiculturalism Day என்று கனடிய மக்களின் பன்முகப் பண்பாட்டுத் தன்மையை வருடந்தோறும் ஜூன் 27 அன்று கொண்டாடுவது. இந்நாளில், அனைவரும் தங்கள் பண்பாட்டு உடையை எந்தத் தாழ்வுமனப்பான்மையும் இல்லாமல் தங்கள் பள்ளி, கல்லூரி, வேலை இடம் போன்ற பொது இடங்களில் அணிந்து, தங்கள் நாட்டின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவார்கள். இதன் மூலம் தங்கள் பண்பாடு எப்படி மற்ற பண்பாட்டவரால் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்கிறார்களோ அதே போல் மற்ற பண்பாடுகளையும் நாம் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, அனைத்து தரப்பட்ட மக்களின் பண்பாட்டையும் சமமாகப் பார்க்கும் தன்மையை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டமாகத் தெரியலாம். அது உண்மையும் கூட. ஆனால், இதற்குப் பின் கூடுதலாகப் பல காரணங்கள் அடங்கிய ஒரு வரலாறு உள்ளது. கனடா இன்னும் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் உள்ள நாடு. கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற இரு பெரும் நாடுகள் உருவாவதற்கு முன் கிட்டதட்ட வட அமெரிக்கா கண்டம் முழுவதும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், பிரிட்டிஷ் முடியாட்சி மற்றும் பாராளுமன்றத்தால் காலனித்துவ பிரதிநிதித்துவம் இல்லாமல் விதிக்கப்படும் வரிகளுக்கு எதிராக அமெரிக்க மக்களிடையே பெரும் புரட்சி தொடங்கியது. இந்த அமெரிக்கப் புரட்சியின் விளைவாகப் பல வருட போருக்குப் பின் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுகந்திரம் பெற்று, அமெரிக்க ஐக்கிய நாடு உருவானது.

இந்தத் தோல்விக்குப் பின் கிடைத்த படிப்பினைகளில் இருந்து பிரிட்டிஷ் அரசு தன்னுடைய மற்ற காலனிகள் ஏதும் புரட்சி செய்யாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்யத் தொடங்கியது. இதன் விளைவாக 1867 முடியாட்சியின் கீழ் இருக்கும் ஒரு தேர்தல் அரசாங்க அமைப்பு உடைய (Responsible government) நாடாக கனடாவைக் கட்டமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 155 வயதே ஆன கனடா ஒரு வந்தேறிகளின் நாடு. இத்தனை ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளில் இருந்து பல பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர். ஆரம்ப காலத்தில் வெள்ளை ஐரோப்பிய குடியேறிகள் மற்ற பண்பாட்டவரை ஒடுக்கினர். இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால் அமெரிக்கப் புரட்சி போல் பல்வேறு சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் கனேடிய பன்முக பண்பாட்டுச் சட்டத்தை கனடா அரசு கொண்டுவந்தது. இது போன்ற பல சட்டங்கள் மூலம் எல்லாத் தரப்பட்ட மக்களும் சுய மரியாதையோடு வாழ வழிவகுக்கிறது அந்நாட்டு அரசு. எனவே, ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைவிட கனடாவில் இனவெறி போன்ற வெறுப்பு பிரச்சாரம் குறைவாக இருக்கும்.

கனடாவைப் போல் இந்தியாவும் பன்முகப் பண்பாட்டுத் தன்மையுடைய நாடு. தனியாகப் பன்முகப் பண்பாட்டுச் சட்டம் என்று ஒரு சட்டம் இல்லை என்றாலும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரநிதித்துவம் வழங்கும் வகையில் பல்வேறு சமுகநலன் சட்டங்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் சாசனமே பன்முகப் பண்பாட்டுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படியானால், கனடாவைவிட இந்தியாவில் இனவாதப் போக்கு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வருந்தத்தக்க வகையில் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியாவில் இனவாதமும் சாதியவாதமும் ஆழமாக வேர் ஊன்றி உள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள்தாம் இப்படிச் சாதிய மனநிலையில் இருக்கிறார்கள் என்றிருந்தால் வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னும்கூடச் சாதியைத் தவறாமல் தங்கள் கூடவே எடுத்துச் செல்கிறார்கள் இந்தியர்கள்.

அதிலும் குறிப்பாக, சாதிய கட்டமைப்பு கெட்டிபட்டுப் போயிருக்கும் வட இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் இந்தியர்கள் மத்தியில் சாதியத்தை மிக வெளிப்படையாகக் காணமுடியும்.

கடந்த எட்டு வருடகாலமாக கனடாவில் வசித்து வரும் எனக்கும் இங்கு வசிக்கும் சக இந்தியர்களால் பல முறை சாதியப் பாகுபாடு நடந்துள்ளது. அதில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு என் வேலை இடத்தில் நிகழ்ந்தது. கல்லூரியில் பயிலும் காலத்தில் பகுதி நேர ஊழியராக ஒரு சில்லறை விற்பனை கடையில் பணியாற்றினேன். அப்போது எனக்குக் கீழ் பணியாற்றிய ஓர் ஐம்பது வயது மதிக்கத் தக்க குஜராத்தி ஊழியர், நான் கணினியில் லாகின் செய்யும்போது என் லாகின் ஐடியில் உள்ள கடைசிப் பெயரைக் கவனித்து, “இது என்ன புது surname மாக இருக்கிறது” என்று கேட்டார். அவர் என் surname சாதி பெயர் என்று நினைத்துக்கொண்டு அவ்வாறு கேட்கிறார் என்று புரிந்துகொண்டேன். அப்போது நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் என்றும் அங்கு surnameஇல் தந்தையின் பெயர் இருப்பது தான் வழக்கம் என்றும் கூறினேன். இதைக் கேட்டவரின் முகம் என் சாதியையும் வர்ணத்தையும் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தில் சுருங்கிப் போய்விட்டது. இதைவிட மோசமாகச் சாதியை வெளிப்படையாகவே கேட்டு நான் சொல்ல மறுத்த பின் என்னை வெளிப்படையாகவே ஒதுக்கியவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், இப்படியான வெளிப்படையான சாதியப் பாகுபாட்டை இங்கு குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நான் கண்டதில்லை. அதே போல், மற்ற மாநிலத்தவரோடு ஒப்பிடும்போது தமிழர்கள் இங்கு இனவாதப் போக்குடன் செயல்படுவது என்பது மிக மிகக் குறைவு. இந்தியாவிலும் இதே போன்ற ஒரு நிலைதான் இருக்கிறது.

தமிழ் மக்கள் தன்னுடைய அடையாளத்தையும் பண்பாட்டையும் எவ்வளவு தூரம் காப்பாற்றிக்கொள்கிறார்களோ அதே அளவிற்கு மற்ற மக்களின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் வரவேற்கும் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். மற்ற பண்பாட்டைச் சேர்ந்தவர்களைத் தமிழ்மக்கள் எந்த விதமான தொந்தரவும் செய்வதில்லை என்று மானுடவியல் ஆய்வாளர் எம். டி. முத்துக்குமாரசாமி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்பவர்களின் அனுபவங்களை உதாரணமாகக் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வடமேற்கு மாநிலங்களுக்குச் சென்று வாழ்பவர்களுக்கு நல்ல மரியாதையான வரவேற்பு வழங்கப்படுவதில்லை என்றும், தென் இந்தியாவில், அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்களுக்கு நல்ல மரியாதையான வரவேற்பும் தொந்தரவற்ற வாழ்க்கையும் எளிதில் அமைவதாகவும் அவர் கூறினார். அவரது பார்வையை வைத்துப் பார்க்கும்போது வட இந்தியாவைவிட தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் இனவாதப் போக்கு மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

கனடாவின் பன்முகப் பண்பாட்டுத் தன்மையை அங்கீகரிக்கக் காரணமாகப் பல்வேறு அரசியல் சூழல்கள் இருந்தன. அது போலவே தமிழ்நாட்டின் பன்முகத் தன்மைக்கும் குறைவான இன மற்றும் சாதியப் பாகுபாட்டுக்கும் அங்கு நிலவிய கடந்த 100 ஆண்டு கால அரசியல் சூழல் மிக முக்கியக் காரணமாகும். நீதிக் கட்சி தொடங்கி திராவிட இயக்கம் வரை தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மக்களைச் சமூக நீதி அரசியலுக்குப் பழக்கி இருக்கிறது. குறிப்பாக, சுயமரியாதை இயக்கத்தின் மாபெரும் வெற்றியாகக் கருதப்படும் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் சேர்க்கும் பழக்கத்தைத் தமிழ் நாட்டில் ஒழித்ததை மக்கள் எந்த அளவுக்கு அரசியல் படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு. இதன் தொடர்ச்சியாக நடந்த சுயமரியாதை பிரசாரங்கள் மூலம் பிறரிடம் சாதி கேட்பது மற்றும் சாதி பார்த்துப் பழகுவது போன்ற பாகுபாடுகளைக் கடைபிடிப்பது மிக மோசமான செயல் என்று மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்காகத் தமிழ்நாட்டில் இனவாதமோ சாதியவாதமோ அறவே கிடையாது என்று சொல்ல முடியாது. இன்னமும் ஊர், தெரு, குலதெய்வம் போன்றவற்றை வைத்து சாதியைக் கண்டுபிடிக்கும் ‘சிஐடி’கள் ஊர் தோறும் பரவலாக இருக்கிறார்கள்.

காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.

இதே நிலை இனவாதத்திற்கும் பொருந்தும். இனம், மொழி, சாதி, வர்ணம் போன்ற விஷயங்களை வைத்துப் பிறரை எடைபோடுவது தவறான செயல் என்று மக்கள் மத்தியில் தொடர் பிரசாரம் செய்வதன் மூலம் மனதளவில்கூட மற்றவரைத் தாழ்த்திப் பார்க்கும் எண்ணம் எழாத வண்ணம் நம் சமூகம் வளர வேண்டும். இந்த நிலையை அடைவதற்கான முக்கியமான சில கருவிகளுள் ஒன்று பன்முகப் பண்பாட்டுத் தன்மையை ஊக்குவிப்பது. எனவே, சமத்துவத்தைப் போதிப்போம்.

(தொடரும்)


படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ