சுதந்திர தினத்திற்கு ஒவ்வோர் ஆசிரியரும் நடனம், நாடகம், கவிதை, பாடல் என்று நிறைய நிகழ்ச்சிகளைத் தயார் செய்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு இரு நாள்களே இருந்தன. நிகழ்ச்சிகளை இறுதிப்படுத்திக்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.

தொகுப்புரை வழங்க இருக்கும் குழந்தைகளிடம் நிகழ்ச்சிகளின் பட்டியலை ஒவ்வோர் ஆசிரியரிடமும் கேட்டுத் தொகுக்கச் சொல்லி, யார் எதைத் தொகுக்கிறோம் என்று திட்டமிட்டுக்கொள்ளச் சொன்னார் சுதா.

“ஒரு நிகழ்ச்சிக்கு அறிமுக உரை வழங்க, அந்த நிகழ்ச்சியைப் பற்றி அந்தந்த ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அறிமுகம் செய்யுங்க. தேவைன்னா என்கிட்ட உதவி கேளுங்க” என்று ஆசிரியர் சுதா சொன்னார்.

“நானும் நிகழ்ச்சியோட பட்டியலை எடுக்கறேன். அதுக்கு என்ன பாடல் பின்னணில இசைக்கணும்ன்னு சிலம்பம் ஆசிரியர்கிட்ட ஆலோசனை கேட்டுக்கறேன் மிஸ்” என்று சிலம்பம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சந்திரவதனா சொல்ல, சுதாவுக்கு வியப்பாக இருந்தது.

இதுதான் குழந்தைகளின் கற்றல் என அகம் மகிழ்ந்தார்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சோர்வு தட்டாமல் இருக்க பேச்சு, பாடல், சிலம்பம் எனக் கலந்து வரிசைப்படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு நிகழ்ச்சியில் இருக்கும் குழந்தைகள் வேறொரு நிகழ்ச்சியில் இருப்பின், தயார் ஆக ஏதுவாகவும் பட்டியல் அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முதல் நாளே தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் நிகழ்ச்சிகளை வரிசையாக முன்னோட்டம் பார்த்து உறுதிப்படுத்தினர்.

நிகழ்ச்சி அன்று வரவேற்பது, நிகழ்சிக்கான தயாரிப்பு எனப் பல விஷயங்களுடன் அனைவரும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகளை வரிசையாக நடத்திக் கொண்டிருந்தனர். ஏதாவது சுணக்கம் ஏற்பட்டாலும் மாற்றத்திற்கு உட்படுத்தி சிறப்பாக நடத்தி முடித்தனர் பொறுப்பாளர்கள்.

மறுநாள் தலைமை ஆசிரியர், “நிகழ்ச்சிகளை நாம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகச் செய்தனர் நம் பிள்ளைகள். குழந்தைகளே பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

“ஆமா டீச்சர். சுதா சொன்ன பிறகு நான் மூளை குறித்தும் வளர் இளம்பருவத்தில் மூளை குறித்தும் படித்தேன். இதனாலதான் பொறுப்புகளைக் குழந்தைகள் தனித்து செய்யச் சொல்லி நமக்கு வழிகாட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றார் ராமு.

என்னது பொறுப்பு கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்த ஆசிரியர், இன்று அதற்காகத் தகவல்களைத் தேடிப் படித்துவிட்டு அறிவியலின் துணைகொண்டு பேசுவது குறித்து சுதாவுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பேராசான் காரல் மார்க்ஸின் வரிகள் நினைவுக்கு வந்தது.

“ஒருவரின் மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயது வரை ஆகிறது. அதிலும் மூளையின் பகுதியான மெடுல்லா ஆப்லங்கேட்டா மற்றும் பெருமூளை முதிர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது. அதாவது புரியும்படி சொல்லணும்னா மெடுல்லா ஆப்லங்கேட்டா பகுதி மூளையின் கீழ் அமைந்துள்ளது. அது உணர்ச்சிகளான கோபம், மகிழ்ச்சி, சோகம், துணிந்து செயல்படுவது போன்ற பலவிதமான செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதியின் செயல்பாடுகளை பெருமூளையின் செயல்படுகளான பகுத்தறிதல், சீர்தூக்கிப் பார்த்தல் போன்ற பல செயல்பாடுகளால் நெறிப்படுத்துகிறது. ஆனால், 25 வயதுக்கு முன்புவரை மெடுல்லா வளர்ந்த அளவுக்குப் பெருமூளை வளர்ந்திருப்பதில்லை. அதனாலேயே இந்த வயதில் மெடுல்லாவின் ஆதிக்கமாக உணர்ச்சி பிழம்பாகவும் துணிந்து செயல்படுதல் போன்றவை எல்லாம் அதிகமாக இருக்கிறது” என்று தொடர்ந்தார் ராமு.

“மிக்க மகிழ்ச்சி சார். நானும் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் நீங்க இன்னும் அதிகமாகப் படிச்சிட்டு தெளிவா விளக்கிட்டீங்க” என்றார் சுதா.

“சார், நீங்க சொல்றது எனக்கு ரொம்ப புது விஷயமா இருந்தது. அப்போ மூளை இன்னும் வளராத குழந்தைகளிடம் இது வரல, அது பிரச்சனைன்னு நாம மல்லுகட்டிக்கிட்டு இருக்கோமா? அடக்கொடுமையே! நானும் குழந்தைகள் சார்ந்து நிறைய தெரிஞ்சுக்கப் போறேன். ஆனா, எனக்கொரு சந்தேகம் சார். மூளை இந்த வயசுல எப்படி இருக்குன்னு சொல்லிட்டீங்க. இந்த மெடுல்லாவை நெறிப்படுத்த பெருமூளை வளர நாம் என்னென்ன செயல்பாடுகள் குழந்தைகளுக்குக் கொடுக்கணும்? இல்ல தானா வளர்ந்து சரியாயிடுமா? இதைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்க சார்” என்று உரையாடலை முக்கியமான இடத்துக்கு நகர்த்தினார் கலியமூர்த்தி.

“அருமையா அனைவருக்கும் தேவையானதைக் கேட்டிருக்கீங்க. மெடுல்லாவின் உணர்ச்சிபிழம்பான செயல்பாடுகளைப் பெருமூளை வளர்ந்து அதன் செயல்பாடுகளான Logical, Rational Thinking போன்றவை மூலம் நெறிப்படுத்த முடியும். அதற்கு நாம குழந்தையிலிருந்தே தனித்து முடிவெடுக்க, செயல்பட வாய்ப்பு வழங்கணும். அதுவும் வளரிளம் பருவத்துல அவங்களாகவே தனித்து செயல்பட்டு முடிவெடுக்க விரும்புவாங்க. அப்போ பெருமூளை சிறப்பாக வளரும். அத்தகைய குழந்தைகளும் சிறந்த ஆளுமையா வளருவாங்க. தனித்த அடையாளத்தோட அவர்களும் சாதிப்பாங்க. சமூகத்துக்கான பங்களிப்பையும் செலுத்துவாங்க” என்றார் ராமு.

“அப்போ அவர்களை அப்படியே தனியே விட்றணும்னு சொல்றீங்களா? அதெப்படி சார் சரியா இருக்கும்?” என்றார் தலைமை ஆசிரியர்.

“சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்” என்றார் ராமு.

“சந்திரவதனா வகுப்புல அமைதியாத்தான் இருப்பா, எதாவது படிக்கச் சொன்னா அமைதியாவே இருப்பா. சிலம்பம் நிகழ்ச்சியை அற்புதமா ஒருங்கிணைச்சிருந்தா. தைரியமா குழுக்களை வழிநடத்தறதைப் பார்க்கும்போது எனக்கே வியப்பா இருந்தது. இப்போ வகுப்புலயும் முன்னின்று பேசறா, படிக்கறா. அவளைப் படிக்கலன்னு குறை சொல்லிக்கிட்டிருந்த அவங்க அம்மா நம்மைப் பாராட்டினாங்க. அது மாதிரியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கின குழந்தைகளுக்கும் பெரிய நம்பிக்கை வந்ததை உணர முடிந்தது. நாம் அனைவரும் வளரிளம் குழந்தைகள் குறித்து நிறைய வாசிப்போம். அவர்களைப் புரிந்துகொள்வோம். என்ன நான் சொல்றது சரிதானே? உங்ககிட்ட நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஆசிரியர்களோட பணிபுரிவது பெருமகிழ்ச்சியும் பெருமையும்கூட” என்றார் தலைமை ஆசிரியர்.

“மகிழ்ச்சி. நாங்களும் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வாசிக்கிறோம். கல்வியும் அவர்களுக்கேற்ற மாதிரி அமைந்தா குழந்தைகள் சிறந்து விளங்குவாங்க. நம் சமூகமும் கல்வியில் வளர்ந்து முன்னோக்கி வீறுநடை போடும்ங்கிறத மறுக்க முடியாது. மாற்றம் வர அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்” என்றார் சுதா ஆசிரியர்.

அருமையான இன்றியமையாத உரையாடலாக இருந்தது என தலைமை ஆசிரியர் மேலும் பல பள்ளிச் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்துவிட்டு, கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.

(தொடரும்)


படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.