2.

விசாவில் இப்படியும் ஒரு வில்லங்கம் இருக்கலாம் என்பது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. நாங்கள் எல்லாரும் ஆன்லைனில் விசா எடுத்தோம். ஆனந்தி மட்டும் சாத்தூரில் ஒரு டிராவல் ஏஜென்ஸியில் கொடுத்து எடுத்திருந்தார். ‘சாத்தூர் வைப்பாற்றிலிருந்து வியட்நாமுக்குக் கப்பல் விட்டிருப்பதாக நினைச்சிட்டாரோ?’ அந்த மனுசன். அவரிடமே ஏதாவது மாற்றுவழி கேட்கலாம் என நினைத்து ஆனந்தி தொடர்ந்து முயற்சி செய்ய, அர்த்தராத்திரியில் நித்திரைபகவானின் பிடிக்குள் இருந்த மகராசனை எங்களின் சாதாரண போன்கால் சத்தம் எட்டவேயில்லை. அந்த முயற்சியை அவசரமாகக் கைவிட்டு, அந்த (ஏர் ஏஷியா) ஏர்லைன்ஸ் அலுவலருடன் சர்வதேச (!) பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம்.

“சார், இப்போ இந்த விசாவை ஏர்போர்ட் விசாவாக மாற்ற முடியுமா?”

“முடியாது.”

“விசா இல்லாவிட்டால்தானே பிரச்னை, எங்களிடம் வியட்நாம் நாட்டுக்கு ஏதோ ஒரு விசா இருக்கிறதுதானே, எங்களை அனுப்பி விடுங்களேன்.”

“இதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை, அப்படியே நான் அனுப்பினாலும் வியட்நாம் ஏர்போர்ட் இமிக்ரேஷனில் உங்களை அனுமதிக்காமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.”

“புதிதாக விசா அப்ளை செய்யலாமா?”

“செய்யலாம், ஆனால் விசா கிடைக்க இரண்டு நாட்களாகும்.”

“அதுவரை மலேசிய ஏர்போர்ட்டில் தங்கும் அறை இருக்கிறதா?”

“இல்லை, இங்கு தங்க முடியாது.”

“தட்கல் விசா அல்லது ஆன் அரைவல் விசா கிடைக்குமா?”

“வியட்நாமுக்கு ஆன் அரைவல் விசா வசதி இல்லை, தட்கல் விசா பற்றி எனக்குத் தெரியவில்லை.”

“இந்த விஷயத்தைத் திருச்சி ஏர்போர்ட்டில் செக் செய்ய மாட்டார்களா? அங்கு மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?”

“முறைப்படி அங்கு செக் செய்து, உங்களை அங்குதான் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உங்கள் இந்திய அதிகாரிகள் அப்படி வேலை செய்கிறார்கள்.” அவரது குரலில் இதுவரை இருந்த ரோபோத்தனம் மாறி நக்கல் பீறிட்டது.

“சரி அக்கா, நீங்கள் கிளம்புங்கள், நாங்கள் மலேசியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியா திரும்புகிறோம்” என சுப்பிரமணியசாமி போல ஆனந்தி தடாலடியாக ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்து எங்களை திடுக்கிட வைத்தார்.

“உங்களிடம் மலேசிய விசா இல்லாததால் நீங்கள் மலேசியாவிற்குள் நுழைய முடியாது, மலேசியா விசாவும் உடனே எடுக்க முடியாது.”

கோபமும் ஆற்றாமையும் பெருக்கெடுத்தாலும் இப்போதைக்குத் தமிழ் பேசும் ஒரே ஆபத்பாந்தவன் அவர்தான் என்பதால் அவரை முறைத்துக்கொள்ளாமல் தாஜா பண்ண முயற்சித்தோம்.

“சார், மலேசியன் ஏர்போர்ட்ல தமிழ் கேட்கறதே சந்தோஷமா இருக்கு, நீங்க எவ்வளவு அழகா தமிழ் பேசறீங்க? மலாய் மொழியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதனால் நாங்க உங்ககிட்டதான் கேட்க முடியும், தமிழருக்குத் தமிழர்தானே உதவி செய்ய முடியும்? யாரிடமாவது பேசுங்களேன்” என நீண்ட உரையாடலுடன் அவரது இமோஷனலை டச் பண்ண முயற்சி செய்தேன்.

“விமானத்திற்கான கடைசி அழைப்பு வந்துவிட்டது. மற்றவர்கள் விமானத்திற்குள் செல்கிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் இவர்களுடன் இருக்கப் போகிறீர்களா?” என்றார் அந்த அலுவலர் இரக்கமேயில்லாமல். சற்றுமுன்புவரை கேலியும் கிண்டலுமாகப் போவோர் வருவோரையெல்லாம் கலாய்த்துக்கொண்டிருந்த அனைவரின் முகமும் சுண்டிப்போயிருந்தது. இது ஒரு கவனக்குறைவால் வந்த பிழை. எந்தத் தவறுக்கும் ஒரு வழி இருக்கும்தானே? ஆனால், அதைக் கண்டடைய நேரம்தான் எங்களுக்கு இல்லை. அதற்குள் விமானப்பணிப் பெண்கள் வந்து, “ரமாதேவி, சரிதா, லட்சுமி, ஆனந்தி, மல்லிகா… எனி பேசஞ்சர்ஸ் ஆர் ஹியர்” எனக் குரல் கொடுத்தார். விமானத்திற்குள்ளும் போகாமல், வெளியே நிற்கவும் முடியாமல், மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தோம்.

வியட்நாமில் தனியாகக் காத்திருக்கும் மகனும் மகளும் வேறு நினைவுக்கு வந்தார்கள். வெளிநாட்டுக்கு க்ரூப் டூர் கிளம்பியதே தவறோ? எப்படிப் பிரச்னையைச் சரி செய்யப் போகிறார்கள்? ஆனந்திக்கு இதுதான் முதல் வெளிநாட்டுப் பயணம். மல்லிகா அக்கா இரண்டுமுறை மகனைப் பார்க்க அமெரிக்கா சென்று வந்தாலும் தனியாகச் சமாளிக்கும் அளவு ஏர்போர்ட் அனுபவமில்லை. (தவறாக கணித்துவிட்டேன் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன்). அப்படியே விட்டுச் சென்றாலும், எப்படி மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்வது என்பதும் கவலையாக இருந்தது. சேர்ந்துதானே இருக்கப் போகிறோம் என இன்டர்நேஷனல் ரோமிங் வசதி செய்யாமல் கிளம்பிவிட்ட முட்டாள்தனத்தை எண்ணி நொந்துகொண்டேன். இனி வியட்நாம் ஏர்போர்ட் அல்லது அறைக்குச் சென்றபின் கிடைக்கும் வைஃபையில்தான் தொடர்பு கொள்ள முடியும்.

“உயர் அதிகாரிகள் யாரையாவது பார்க்க முடியுமா?”

ஆனந்தி தைரியமாக, “அக்கா, நீங்க வெயிட் பண்ணுவதால் உங்க எல்லார் டிக்கெட்டும் வேஸ்ட் ஆக வேண்டாம், நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றார். திடீரென ஒரு யோசனை வந்தது. “ஆனந்தி, உயர் அதிகாரிகளைப் பார்த்து பேசிப் பார். எப்படியும் ஒரு வழி இருக்கும், ஒன்றும் முடிய வில்லையென்றால், வேறு டிக்கெட் எடுத்து கம்போடியா சென்று விடு, நாங்களும் பேருந்து டிக்கட்டை மாற்றிக்கொண்டு அங்கு வந்துவிடுகிறோம், உன் முடிவு என்ன என்பதை மெசேஜ் பண்ணிவிடு” எனத் தோன்றிய யோசனையைக் கூறிவிட்டு, அவர்கள் இருவரை மட்டும் விட்டுவிட்டுக் கலக்கத்துடன் விமானத்திற்குள் நுழைந்தோம். திருச்சி ஏர்போர்ட்டில் இருந்த உற்சாகம் அனைவருக்கும் மொத்தமாக வடிந்திருந்தது. இனிவரும் நாட்களை நினைத்தால் மலைப்பாக இருந்தது.

விமானத்திற்குள் கடைசி ஆட்களாக நுழைந்து, இடத்தைத் தேடி உட்கார்ந்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை. ஜன்னல் வழியாக ஓடுதளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘ஆனந்தி பாவம், என்ன செய்வார்?’ என்பதே ஓடிக்கொண்டிருந்தது. பரவாயில்லை, தனி ஆளாக மாட்டாமல், துணைக்குத் துணையாக இரண்டுபேர் இருக்கிறார்கள் என ஒரு பக்கம் சமாதானமாகவும் இருந்தது. விமானம் புறப்பட வேண்டிய நேரத்தைக் கடந்து 25 நிமிடங்களாகியும் புறப்படாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது. காரணம் தெரியவில்லை.

“அக்கா…” என்கிற உற்சாகமான பழகிய குரல் கேட்டு சட்டென நிமிர்ந்தால், முகம் நிறைய புன்னகையுடன் ஆனந்தியும் மல்லிகா அக்காவும்!

குழுவிலிருந்த அத்தனை பேரும் அனிச்சையாகக் கத்திய கத்தலில் மற்ற பயணிகள் முகம் சுருங்கினர்.

பணிப் பெண்கள் எங்களைப் பேசவிடாமல் அவர்கள் இருவரையும் இருக்கைக்குத் தள்ளி கொண்டு சென்று விட்டதால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் விமானம் கிளம்பிவிட்டது. என்ன நடந்திருக்கும் என்கிற ஆவல் அதிகரித்தாலும், வந்து விட்டார்களே என்கிற பெரும் நிம்மதியுடன் நித்திரைக்குள் நுழைந்தேன். ஹோ சி மின் Tan Son Nhat சர்வதேச விமான நிலையம். விமானத்தை விட்டு வெளியே வந்தவுடன் சர்ப்ரைஸ் தாங்க முடியாமல், ஆனந்தியைச் சுற்றி வளைத்தோம். நாங்கள் விமானத்திற்குள் நுழைந்தவுடன், அந்த மலேசிய ஊழியர் ஏர்லைன்ஸின் உயர் அதிகாரிகளிடம் இவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். அவரிடம் ஆனந்தி, அவருக்கே தெரியாமல் விசாவில் நடந்த பிழையை எடுத்துக் கூறியிருக்கிறார். மல்லிகா அக்கா அவரிடம் உருக்கமாக வாதாடியதில் இம்ப்ரஸ் ஆன அவர் ஏர்போர்ட் அதிகாரியிடம் பேச, அவர் ஹோசிமின் விமான நிலைய அதிகாரிகளை போனில் தொடர்புகொண்டு விஷயத்தை நேர் செய்திருக்கிறார். இவர்களுக்காகத்தான் விமானம் 25 நிமிடங்கள் காத்துக்கொண்டிருந்திருக்கிறது. சாத்தூரில் தனி ஆளாக ஒரு பள்ளியை நிர்வகித்துக்கொண்டிருக்கும் மல்லிகா அக்கா எந்த இடத்திலும் தன்னம்பிக்கையுடன் வாதாடி வேண்டியதைப் பெற்றுவிடுவார். ‘நமது கருத்தைத் தெரிவிக்க, ஆங்கில இலக்கிய, இலக்கணத்தைக் கரைத்து குடித்திருக்கத் தேவையில்லை, மொழி என்பது தொடர்புக்காக மட்டுமே’ என்பதை எப்போதும் நிரூபிப்பவர்.

ஒருமுறை மருமகளின் டெலிவரிக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவுக்குத் தனியாகச் சென்ற போது, சின்ன வெங்காயம் எடுத்துச் சென்றிருக்கிறார். செக்கிங்கில் பார்த்து விட்டார்கள். அமெரிக்காவுக்குள் பழங்களாக, விதைகளாக, தானியங்களாக எந்த ரூபத்திலும் விதைகளைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இரண்டு கிலோ சின்ன வெங்காயத்தை அவர்கள் வாங்கிக் குப்பையில் வீச முயற்சிக்க, இவர் பாய்ந்து சென்று அதைப் பிடித்துக்கொண்டு, அவர்களிடம், தனக்குத் தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தைகளை அபிநயங்களுடன் கூறி, அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன், வெங்காயத்தை வெளியே கொண்டு சென்றுவிட்டார்! நான் அமெரிக்கா சென்ற போது பசிக்காக வைத்திருந்த இரண்டு கிலோ ஆப்பிளை செக்யூரிட்டி செக்கிங்கில் குப்பைத் தொட்டியில் வீசியபோது மொழி தெரிந்தும் வாய்மூடி மௌனியாக பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“நமக்கு காரியம்தான் ரமா முக்கியம், தெரிஞ்ச இங்கிலீஷ்ல பேசிப் புரிய வைக்கணும், அவ்வளவு தானே? அவங்களும் மனுசங்க தானே புரிஞ்சிப்பாங்க, இல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பாங்க” என்று அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கூறிவிட்டு வாசலை நோக்கி நடைபோட்டார். அறுபது வயதைக் கடந்திருந்தாலும் எப்போதும் சுறுசுறுப்பு, எதிலும் ஆர்வம், பயணங்களில் துடிப்பு, யாரையும் குறை சொல்லாத நேர்மறையான சிந்தனை என எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் மல்லிகா அக்கா. இந்தச் சின்னத் தடங்கலுக்குப்பின் எங்களது சந்தோஷம் இரட்டிப்பாகியிருந்தது.

ஹோ சி மின் Tan Son Nhat சர்வதேச விமான நிலையம் எங்களை புன்னகையுடன் வரவேற்றது. இமிக்ரேஷன் அதிகாரிகள் சிரித்த முகத்துடன் பாஸ்போர்ட்டைப் பணிவுடன் வாங்கி, கேள்வி கேட்டு, சிரித்துக்கொண்டே சீல் வைத்துக் கொடுத்தார்கள். ‘எங்கே நம்ம நாட்டில டேரா போட்டுடுவாங்களோ’ என்ற சந்தேகத்துடன் ஏளனப் பார்வையால் இமிக்ரேஷனில் நம்மை அவமதிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போல் இல்லாமல், புன்னகை தேசமாக முதல் அனுபவத்திலேயே எங்களை ஈர்த்துவிட்டது வியட்நாம்.

ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களுக்கும் செல்லுமிடமெங்கிலும் புன்னகை முகங்களைத் தரிசிக்க முடிந்தது. வியட்நாமில் இருந்தவரை ஒரு கோபமான முகத்தையோ ஏன் சோகமான முகத்தையோகூட எங்களால் பார்க்கவே முடியவில்லை. மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்கள் உடல் மொழியே பணிவாக இருக்கிறது. நம்மை நேருக்கு நேர் சந்திக்கும்போது தலை குனித்து புன்னகையுடன் வணக்கம் சொல்கிறார்கள்.

அடுத்ததாக கைவசமிருந்த அமெரிக்க டாலரை ஏர்போர்ட்டிலேயே வியட்நாமிய டாங்கிக்கு மாற்றிவிடலாம் என நினைத்து, மணி எக்சேஞ்ச் நோக்கிச் சென்றோம். ‘வியட்நாம் ஒரு டூரிஸ்ட் தேசம் என்பதால், தெருவுக்கு நாலு அல்ல பத்து மணி எக்சேஞ்ச் கடைகள் இருக்கும், ஆனால் கள்ள நோட்டுகள் ஆறாக ஓடும்’ என யூ ட்யூபர்கள் அள்ளித்தெளித்திருந்த தகவலால் பயந்துபோய் நான்கு நாட்களுக்குத் தேவையான மொத்த பணத்தையும் ஏர்போர்ட்டிலேயெ மாற்றி விடலாம் என முடிவு செய்தோம். ஓர் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக, 23,643 வியட்நாமிய டாங்கிகள். ஆளுக்கு 200 டாலரை மாற்றலாம் என நாங்கள் இரண்டு நோட்டைக் கொடுக்க, கவுண்டரில் இருந்த அந்த இளைஞன் அழகாகச் சிரித்துக்கொண்டே, ஒவ்வொருவருக்கும் 47 லட்சத்து 28 ஆயிரத்து 600 டாங்கிகள் என அள்ளிக்கொடுத்தான். 500, 1000, 2000, 5000, 10000, 20,000, 50000, 100000, 200000, 500000 என விதவிதமான கரன்சிகள். தலை சுற்றியது. இரண்டு லட்சம், ஐந்து லட்சத்திலெல்லாம் கை கொள்ளாமல் நோட்டுகள். ‘காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது’ என்று மனசுக்குள் கமலஹாசன் குரல் கேட்டது. வாய்விட்டுச் சத்தமாக எண்ணி, கால்குலேட்டர் பயன்படுத்தி எண்ணி, டினாமினேஷன் போட்டு எண்ணி எனப் பலகட்ட சரிபார்த்தலுக்குப் பின் திருப்தியானோம்.

“நாட்டுக்குள் நுழைந்த உடன் வியட்நாம் நம்மை லட்சாதிபதியாக்கி விட்டது, இன்னும் ரெண்டு நோட்டு மாற்றினால் நானும் கோடீஸ்வரி” என ராதிகா போல கை சுழற்றிச் சிரித்துக்கொண்டே ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தோம், வியட்நாமின் விலைவாசி தெரியாமல்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.