“வருண்…”

“வருண்…”

“ஆங், சொல்லு நிலா?”

“எத்தனை தடவை கூப்பிடுறது, டீ தாப்பா.”

இயந்திரம் போல் கோப்பையில் டீயை ஊற்றி அவளிடம் கொடுத்தான். ஸ்விட்ச் போட்டது போல் அரிசியை குக்கரில் வைத்துவிட்டு, இட்லி தட்டில் மாவை ஊற்றினான். ஃப்ரிட்ஜிலிருந்த மீனை எடுத்துக் குழம்பு வைத்தான்; பொரித்தான். முதல்நாளே ஆய்ந்து அரிந்து வைத்திருந்த கீரையை எடுத்துக் கடைந்தான். எல்லாருக்கும் லஞ்ச் பாக்ஸ், வேந்தன், வெண்பாவுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் கட்டி வைத்தான்.

ஆனால், மனதுக்குள் என்றுமில்லாமல் படபடப்பும் உற்சாகமும் குமிழிட்டபடி இருந்தது. என்ன டிரஸ் போடலாம் என்று வழக்கத்துக்கு மாறாக யோசித்தபடியே இருந்தான். ஒரு கண் முழுவதும் கடிகாரத்தின் மீது; மனமெல்லாம் அலுவலகத்தில் நுழையும் தருணத்தை எதிர்பார்த்து…

மனதில் வெகு காலத்துக்குப் பின்பு ஒரு பூ பூத்திருந்தது.

‘You are truly amazing.’ டெஸ்டிங் லீட் திலகா அனுப்பிய இந்தக் குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தான் வருண்.

வருண் செய்த பிரசண்டேஷனைப் பாராட்டித்தான் அனுப்பி இருந்தாள் என்றாலும் அதன் அடிநாதம், ‘எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது’ எனும் செய்திதான் என்பதில் சந்தேகமே இல்லை.

திலகா புதிதாகச் சேர்ந்திருந்த டெஸ்டிங் லீட். வருணைப் பார்த்ததுமே அவளுக்குப் பிடித்துவிட்டதாம். திருமணமாகா விட்டால் ப்ரபோஸ் செய்யலாம் என்றிருந்தாளாம். இதெல்லாம் அவள் வந்து கொஞ்ச நாட்களுக்குள் வருணுக்குக் காதில் விழுந்த சேதிகள். இதை எல்லாம் முதல் வேலையாக வந்து சொல்லிவிடுவார்கள்.

வருண் இதையெல்லாம் கேட்டு அலட்டிக்கொள்ளாமல்தான் இருந்தான். ஆனால், திலகா பேரழகி, வேலையில் திறமை மிக்கவள் மட்டுமல்ல, பேச்சிலும் சுபாவத்திலும் அனைவரையும் வசீகரத்துவிட்டாள். வருணையும்தான்.

அவளுடன் வேலை பார்ப்பதே பரவசமான அனுபவத்தைக் கொடுத்தது.

இன்று வருணின் பிரசெண்டேஷனைச் செய்யச் சொல்லித் தூண்டி, அதற்காக எல்லா உதவியும் செய்ததே திலகாதான். அனைவரின் பாராட்டும் கிடைத்தாலும், திலகா அனுப்பிய செய்தி…

வெகு காலத்துக்குப் பின்பு மனதை வருடுகிற மாதிரி சில சொற்கள். அவனைக் கண்டதும் மலர்ந்து விரியும் அவளது கண்கள். சில நேரம் வருண் வேலையில் மும்முரமாக இருக்கும்போது, தூரத்திலிருந்து விழுங்குவது போல் பார்வை.

“காதலா… காதலா… எண்ணவும் கூசுதே… ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே…” எஃப் எம்மில் ஒலித்த பாட்டு வருணைத் திடுக்கிடச் செய்தது. பதின்வயது திரும்பியது போல் இருந்தது.

இது தவறு என்று மனம் சொன்னாலும் அதன் காரணமாகவே இது வேண்டும் வேண்டும் என்று ஒரு குரலும் இடைவிடாமல் ஒலித்தது.

இயந்திரகதியான வாழ்வில் திடீரென்று புத்துணர்ச்சி பிறந்தது. எழுந்தோம், சமைத்தோம், குளித்தோம், கிளம்பினோம் என்று இல்லாமல், குளித்து முடித்தவுடன் உடைகளைத் தேர்வு செய்யவே பல நிமிடங்களைச் செலவு செய்தான்.

நிலாகூடக் காலையில் பின்னிருந்து அணைத்தபடி கேட்டாள். “என்னடா, ரொம்ப உற்சாகமா இருக்கே இப்பல்லாம்?”

வருணுக்கு லேசாகக் குற்றவுணர்ச்சி வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்ல நிலா” என்றவனுக்கு, போனைப் பார்த்திருப்பாளோ என்று குறுகுறுத்தது.

(சில வாரங்களுக்குப் பின்பு)

வருணின் நண்பன் டேனியலின் வீடு. அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தான் வருண். மனம் சஞ்சலத்தில் தவித்துக்கொண்டிருந்தது.

“சரி, சரி, அழாத வருண்…”

“இல்ல டேனியல். நான் தப்பு பண்ணிட்டேன். எல்லாத்தையும் நிலா கிட்ட சொல்லிடப் போறேன். இத்தனை வருசத்துல மனசு இப்படிக் கெட்டுப் போனதே இல்ல.”

“அசடு மாதிரி பண்ணாத. இப்ப என்ன நடந்துடுச்சு?”

“எப்படிச் சொல்வேன் டேனி… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. சே, நானா இப்படி?”

“ஐயோ அமைதியா பேசு. என் மாமனார் ஒரு காதை இங்கதான் வெச்சிருப்பார்.” குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டே சொன்னான் டேனியல்.

அழுகையும் பயமுமாகத்தான் திலகாவுடன் டின்னருக்குப் போனதையும் அங்கே அவள் மெல்ல அவனது காதோர முடியை ஒதுக்குவது போல் நெருங்கித் தன்னை முத்தமிட்டதையும் பகிர்ந்து முடித்தான் வருண்.

டேனியல் முறைத்தான். வருண் கூனிக் குறுகினான்.

“அறிவிருக்கா உனக்கு, தனியா அவகூடப் போயிருக்கே?” அதட்டினான் டேனியல்.

“ப்ளான் பண்ணி எல்லாம் போகல டேனி. வேலை முடிய லேட் ஆயிடுச்சு. ட்ராப் பண்றேன்னு சொன்னா. அது வழக்கம்தான். ரொம்பப் பசியா இருந்துச்சு ரெண்டு பேருக்கும். அதான் சாப்பிடப் போனோம். அங்கே ரெஸ்டாரண்ட்லதான்…”

“அவ உன்னை வேற ஏதாச்சும் பண்ணி இருந்தா? அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு இருக்கு. ஏன் இப்படிப் புத்தி போகுதுன்னு உன்னைத்தான் கேட்பாங்க.”

“சும்மா இரு டேனி. எனக்கே ரொம்ப கில்ட்டியா இருக்கு. யாருக்காவது தெரிஞ்சிடுச்சுன்னா?”

“அதெல்லாம் அவகூடப் போறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.”

“என்னடா நீகூட இப்படிச் சொல்ற? கஷ்டமா இருக்குன்னுதானே உன் கிட்ட வந்தேன். அவளை மறக்கவும் முடியல…”

“என்னது? அடி வாங்குவே. இங்க பாரு. இதை இதோட அப்படியே விட்டுடு. வாழ்க்கை முக்கியம். பொண்ணுங்க எப்படி வேணா இருப்பாங்க. நாமதான் மனசைப் பத்திரமாகப் பார்த்துக்கணும்…”

மேலும் சில அறிவுரைகளையும் சமாதானங்களையும் சொல்லி வருணை அமைதிப்படுத்தினான் டேனியல். வருண் தெளிவடைந்த மனதுடன் மணி ஏழடிக்கும் முன் வீட்டில் இருக்க வேண்டும் எனும் பொறுப்புடன் டேனியலின் மாமனார் தந்த டீயைக்கூட மறுத்துவிட்டுக் கிளம்பினான்.

“வீட்ல போய் எல்லாருக்கும் டீ போடணும் அங்கிள். ஏற்கெனவே லேட்டு.”

அதே நேரம், வீட்டில் அப்பா தந்த டீயை வாங்கிக் கொண்டே கேட்டாள் நிலா.

“வருண் இன்னும் வரலைப்பா?”

நிலாவின் அப்பா ஏதோ கடுகடுத்தார். அதைக் காதில் வாங்காமல் போனில் மூழ்கினாள்.

“Hey sweetie! என்னடா பண்ற? மிஸ் யூ டா மகேஷ்.”

“நாளைக்கு எப்ப மீட் பண்லாம்?” “I miss kissing you.”

போன்ற மெசேஜ்களைத் தன் தோழன்கள் பலருக்கும் வழக்கம்போல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கும் போது அவளுக்கு அந்த மெசெஜ் வந்தது.

“Nila darling, I need to meet you urgently. I am waiting for you at_____”

நிலா உற்சாகமாகச் சீட்டியடித்தாள்.

“அப்பா, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்…” என்றபடி ஒயிலாகப் பைக்கை எடுத்தாள் நிலா.

“இளமை திரும்புதே. புரியாத புதிராச்சே!”

நிலாவைச் சந்திக்க இப்போது படபடப்புடன் காத்திருப்பது சுனிலா, ராஜேஷா, சல்மானா என்பது அவளுக்கே வெளிச்சம்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.