”வாங்க வாங்க மருமகளே… வா வருண்!” வாய் நிறைய வரவேற்றார்கள் வருணின் அப்பாவும் அம்மாவும். மருமகளைப் பார்த்த மாத்திரத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு தூக்கிக் கட்டி இருந்த லுங்கியைப் பணிவுடன் கீழே எடுத்து விட்ட நிலாவின் மாமனார், வருணைக் கட்டி அணைத்துக் கொண்டு “நல்லா இருக்கியாப்பா? மருமக உன்னை நல்லா வெச்சிருக்காங்களா?” என நா தழுதழுத்தார்.

“எனக்கென்ன குறை? அத்தையும் மாமாவும் என்னைச் சொந்த புள்ள மாதிரி பார்த்துக்குறாங்க, நிலா என் மேல உயிரையே வெச்சிருக்கா. நான் எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்குறா” என்று பெருமிதம் பொங்க கிறீச்சிட்டான் வருண்.

சரி சரி, அப்பாவும் பையனும் அப்புறம் கொஞ்சலாம். போய் மருமகளுக்குக் காப்பி கொண்டு வாங்க! உள்ள வாங்க மருமகளே.” சிரித்தபடியே நிலாவை உள்ளே அழைத்துச் சென்றார் வருணின் அம்மா. மாமியாரும் மருமகளும் அரசியல், சினிமா, இலக்கியம் என்று அரட்டையைத் தொடங்கினர்.

வருணின் தம்பி அருணுக்குத் திருமணம். அதற்காகத்தான் ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு வந்திருக்கிறார்கள். தம்பி திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பே வர வேண்டுமென்று வருண் விரும்பினாலும் நிலாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை.

நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.

“என்னடா இப்படி வளர்ந்துட்டே? என்னைக் கட்டிக்கிறீயா?” என்று குறும்பாகக் கண்ணடித்தாள் நிலா.

“கையை விடுங்க அண்ணி” என்று பையன் நெளியவும் மேலும் சில இரட்டை அர்த்த ஜோக்குகளை அடித்துவிட்டு, அவனை முகம் சிவக்கச் செய்த பின்னரே விடுவித்தாள் நிலா. மாமியார் வாய்விட்டுச் ரசித்துச் சிரித்தார்.

தங்கள் பைகளைக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு, நிலாவுக்கு நைட்டியை எடுத்து வந்து மாற்றிக் கொள்ளச் சொன்னான் வருண். பிறகு, “அப்பா, நிலாவுக்கு டீல கட்டாயம் இஞ்சி வேணும்… சர்க்கரை கம்மியா போடுங்க…” என்று கத்திக் கொண்டே சமையலறைக்குள் ஓடினான்.

பம்பரமாகச் சுழன்று வருண் தன் மனைவியைக் கவனிப்பதைப் பெருமிதத்துடன் பார்த்தார் வருணின் அம்மா சூரவல்லி. எவ்வளவு செல்லமாக வளர்ந்த பையன்! திருமணமானதும் தன்னால் பொறுப்பு வந்துவிடுகிறது. அருணுக்கும் இப்படி நல்ல வாழ்வாக அமைந்து விட்டால் போதும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்.

மூத்த மருமகளுக்கு எந்த மனக்குறையும் வந்து விடக் கூடாது என்று திருமண ஏற்பாடுகள் எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்தனர் வருணின் பெற்றோர். நிலாவும் உறவினருடன் அளவளாவுதல், ஷாப்பிங் என்று அவர்கள் மரியாதையோடு அழைத்த நிகழ்வுகளில் எல்லாம் உற்சாகத்துடன் கலந்து கொண்டாள். மருமகளே மருமகளே” என்று வாய் நிறைய அழைத்துக் கொண்டு அவளது ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்து, உபசரித்துக் கொண்டு இருந்தார் வருணின் அம்மா.

வருணுக்குப் பெருமையாக இருந்தது. அவனது நண்பர்கள்கூட, “நீ கொடுத்து வெச்சவண்டா. என் பொண்டாட்டி எல்லாம் எங்க வீட்டுக்கு வந்தா இவ்ளோ ஜோவியலா இருக்க மாட்டாங்க” என்று பாராட்டினர்.

திருமணத்தன்று காலையில் வந்திறங்கினர் நிலாவின் பெற்றோர். பெண்ணைப் பெற்றவர்கள் என்ற திமிர் முகத்தில் அப்பட்டமாக இருந்தது.

வருணின் பெற்றோர் விழுந்து விழுந்து கவனித்த போதும் ஏதோ குறை பட்டவர்களாகவே நடந்துகொண்டார்கள்.

திருமணம் முடிந்ததும் ஊருக்குக் கிளம்பலாம் என்று நிலாவின் காதைக் கடித்தனர். ஊரிலிருந்து அவர்களது மகன், நிலாவின் தம்பியும் மருமகளும் வரப் போகிறார்களாம்.

நிலாவுக்கு லேசாக ஏமாற்றம்தான். ஆனால், பெற்றோர் சொல்லைத் தட்டுவதற்கில்லை. மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி அதையே வருணிடம் சொல்ல, வருணுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

திருமணமான கையோடு தம்பி அருணைச் சின்ன மருமகள் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகிறாள். திரும்பி வர ஓராண்டாவது ஆகும். ஓரிரு நாட்கள் பிறந்த வீட்டில் தம்பியுடன் மகிழ்ச்சியோடு செலவிடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் இந்தத் திடீர் முடிவு மாற்றம் பேரிடியாக வந்திறங்கியது.

“என்ன நிலா, இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத் தானே கிளம்பறதா இருந்தோம்? குட்டியா ட்ரிப்கூடப் போறதா இருந்தோமே. இப்ப என்ன?”

அப்பா, அம்மாவின் வற்புறுத்தலால் ஏற்கெனவே எரிச்சலாகி இருந்த நிலாவுக்கு வருணின் கையாலாகத கண்ணீர் இன்னும் எரிச்சலைக் கொடுத்தது.

“என்ன ஓவரா வாய் நீளுது? எங்கப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு சொல்றேன்ல? தனியா எவ்ளோ நாள் அங்கே எல்லா வேலையையும் செஞ்சு சமாளிப்பாங்க? சாயந்திரம் ஏழு மணிக்கு ட்ரெயின். போய் எல்லாத்தையும் எடுத்து வை போ!”

“……..”

நிலா போட்ட சத்தத்தில் அங்கே திடீரென அமைதி நிலவியது.

விசேஷத்துக்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் தர்மசங்கடத்துடன் இவர்களை நோக்க, வருண் அழுகையை அடக்கிக் கொண்டு பேசாமல் போய்த் துணிமணிகளை எடுத்து வைக்கத் தொடங்கினான். சற்று நேரத்தில் ஒரு மாதிரி கண் எரிந்தது. உடலை அடித்துப் போட்ட மாதிரி வலி வந்தது. காய்ச்சல் அனலாகக் கொதிக்கத் தொடங்கியது. நிலாவிடம் சொன்னால் கோபிப்பாள் என்று ஒரு பாரசெடமாலைப் போட்டுக் கொண்டான். காய்ச்சலுடனே விருந்தினர்களை ஓடியாடிக் கவனித்தான். அப்பாவுக்கு உதவிகளைச் செய்தான். மாலை வரை சரியாகவே இல்லை.

“என்ன ரெடியா? ஆட்டோவை வரச் சொல்லவா?” என்று எதுவுமே நடக்காதது போல் சிரித்தபடியே வந்தாள் நிலா. கோபத்தில் கத்திய நிலாவைச் சமாதானப்படுத்த வருணின் ஒன்றுவிட்ட தங்கைகள் பிற்பகலில் பியர் பார்ட்டி வைத்திருந்தார்கள். அதனால் ரொம்பவே கூலாகி இருந்தாள்.

“ம்… என்னான்னு தெரியல. மதியத்துலேருந்து காய்ச்சல் விடவே இல்ல நிலா.”

வருணின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் நிலா.

ஆமாம் டெம்பரேச்சர் இருக்கு. மாத்திரை போட்டியா?”

“ம்ம்ம்… கேட்கல. பரவால்ல சாதாரண ஜுரம்தான், சரியாயிடும்.”

நிலாவுக்குப் பாவமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் காதல் கணவன் அல்லவா? ஆனால், ஊருக்குக் கிளம்ப வேண்டுமே. மெதுவாகப் போய் அப்பா, அம்மாவிடம் விவரத்தைச் சொன்னாள்.

நிலாவின் அப்பா எரிச்சலுடன் வந்து வருணைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு என்னமோ பொறி தட்டியது. நிலாவைத் தனியே அழைத்து, “ஊரெல்லாம் இப்ப டெங்கு காய்ச்சல். உன் தம்பியும் மருமகளும் வேற நாளைக்கு வீட்டுக்கு வராங்க. உன் புருசன் இங்கேயே இருந்து உடம்பு நல்லான அப்புறம் வரட்டும். அங்கே வந்தா அவனுக்கு வேற யாரு பணிவிடை செய்றது? என்னால முடியாது.”

சரி, நானும் கூட இருந்துட்டு அப்புறமா வரவாப்பா?”

நிலா அப்பாவின் முகம் மாறியது. “உன் தம்பி எப்பவோ வரான் ஊருக்கு. அக்காவைப் பாக்கணும்னு ஆசையா இருக்காதா? உனக்குப் புருசன்தான் முக்கியம்னா இங்கேயே இரும்மா…”

அவ்வளவுதான், நிலா மனம் மாறிவிட்டாள்.

“வருண் டார்லிங், இவ்ளோ காய்ச்சலோட நீ இப்ப வர வேண்டாம். இங்கேயே இருந்து சரியானப்புறம் வா, என்ன?”

நீ கிளம்புறியா நிலா?” ஏக்கத்துடன் கேட்டான் வருண்.

நிலாவுக்குச் சங்கடமாக இருந்தது. நான் இருந்து உனக்கு என்ன செய்யப் போறேன்? எனக்குச் சுடுதண்ணிகூட வெக்கத் தெரியாது. என்னை வேற கவனிக்கணும்னு உனக்குதான் சிரமம். நீ நல்லா அம்மா, அப்பாகூட இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு வா என்ன?” – லேசாக வருணின் நெற்றியில் முத்தமிட்டு விட்டுப் பெற்றோருடன் வெளியேறினாள் நிலா.

அவள் முத்தமிட்ட இடம் காய்ச்சலைவிட அதிகம் கொதித்தது. மூடிய கண்களினின்று கண்ணீர் வழிவதைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தான் வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.