எழுத்தாளர்களில் பெண்கள் உண்டு. ஆனால், எழுதுகிற பெண்கள் எல்லாரும் எழுத்தாளர்கள் இல்லை.’

அப்படி எழுத்தாளராக அங்கீகரிக்கப்படாத நான் முதல் முதலாக அபுனைவு எழுத வந்திருக்கிறேன். ஆம். அபுனைவுதான். ஆனால், இது பல புனைவுகளின் கதை. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புனைவு உலகத்தில் வாழும் என்னுடைய கதையும்கூட. என் பெயர் மோனிஷா. இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்ட போதிலும் இன்னும் நான் யார் என்கிற எனது அடையாளத்தை இந்த எழுத்துலகில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

எழுத்தாளர் என்கிற அங்கீகாரம் இல்லாவிட்டாலும் என் எழுத்துக்கு ஓர் அடையாளம் உண்டு. அதுதான் குடும்ப நாவல். அதாவது குடும்ப நாவல் என்கிற கூட்டிற்குள் வாழும் பல நூறு பெண்களில் நானும் ஒருத்தியாகப் பேச வந்துள்ளேன்.

குடும்ப நாவல் பற்றி எல்லாம் பேசறதுக்கு என்னங்க இருக்கு? அது பொழுதுபோக்கு? பல பெண்கள் பொழுது போகாமல் எழுதுறது?

குடும்ப நாவல் பொழுதுபோக்கு எழுத்து வகை என்பது உண்மைதான். ஆனால், பொழுது போகாமல் பெண்கள் எழுத வந்தார்கள் என்பது உண்மை அல்ல. சுருங்கிப் போன அவர்கள் உலகத்தில் தங்கள் உணர்வுகளின் வடிகாலாகவே வெகுஜன எழுத்தையும் வாசிப்பையும் அவர்கள் உள்வாங்கினார்கள். தங்கள் உணர்வுகளைப் பேசும் கதைகளை அவர்கள் தொடர்ந்து வாசித்தார்கள்.

பொழுதுபோக்குகளில் தொலைக்காட்சியும் செல்பேசியும் பெரும்பான்மையான கூட்டத்தை முடக்கிப் போட்டிருந்த போதும், அதில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வாசிப்பை தங்கள் பொழுதுபோக்காகத் தேர்ந்தெடுத்தார்கள் எனலாம்.

அப்படி வாசிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கான ஆரம்ப களம் என்பது நாவல்கள். அதிலும் பதின்ம குழந்தைகளை வாசிப்பில் கட்டிப் போட்டு வைத்திருக்கும் திறமை வெகுஜன எழுத்திற்கு உண்டு.

அறிவு, உணர்வு, சமூகம் என்று இதில் எல்லாமும் கலந்திருக்கும். எதார்த்த வாழ்க்கைச் சம்பவங்களைக் கற்பனையுடன் கலந்துகட்டி சுவாரசியமாகப் புனைந்து எழுதுதல், எட்டிப்பிடிக்க முடியாத கற்பனைகளான எதிர்காலத்தைக் கணிக்கும் அறிவியல் நாவல்கள், கடந்த காலத்தைக் காட்டும் வரலாற்று நாவல்கள், இவை அல்லாது துப்பறியும் நாவல், காதல், அமானுஷ்யம் எனப் புனைவுகளில் நிறைய வகை உண்டு. 

வாசிப்பவர்களை அவ்வுலகத்திற்கே இழுத்துச் செல்லும் திறமையும் புனைவெழுத்திற்கு உண்டு. அதுவும் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ வெளியாகும் இதழ்களில் தொடராகப் பதிவிடப்படும் கதைகளைக்   காத்திருந்து படிப்பது ஓர் அலாதியான சுகம்தான்.

அவ்வாறு காத்திருந்து ரசித்து வாசித்தவர்கள் ஒரு ரகம்  என்றால், பாக்கெட் நாவல்கள், கண்மணி, ராணி முத்து போன்ற இதழ்களில் கைக்கு அடக்கமாக வெளிவந்த குறுநாவல்களை ஒரேயடியாக வாசித்து முடிப்பதெல்லாம் வேறு மாதிரியான த்ரில். இந்த இரண்டு வகையறாக்களும் தமிழில் புனைவெழுத்தை அதிவேகமாகப்               பிரபலமாக்கின. ஊக்குவித்தன.

‘அக்கா, நீ படிச்சிட்டுக் கொடுக்குறீயா நான் படிக்கணும்’ என்று கைக்குக் கை மாறி சுலபமாக மக்களைச் சென்றடைந்தன. அவர்கள் மனங்களையும்தான்.

அதுவும் பெண்களுக்கு அடிப்படைக் கல்வியே மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வாசிப்பு ஆண்களுக்கும் அதேநேரம் பொருளாதார நிலையிலிருந்த குடும்பத்துப் பெண்களுக்கும் மட்டுமே சொந்தமாக இருந்தது.

ஆனால், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டுப் பெண்களும் தங்கள் கல்வி நிலையை உயர்த்திக் கொண்டபோது பெண்ணெழுத்தும் பெண் வாசிப்பும் அடுத்த நிலையை எட்டின. அவர்களுள் பெண்களை அதிகமாக வெகுஜன எழுத்தின் பக்கமும் வாசிப்பின் பக்கமும் ஈர்த்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி, வாஸந்தி போன்றோர்.

இவர்களுடன் சமகாலத்தில் எழுதியவர்தான் ரமணிசந்திரன். இவர் குடும்ப நாவலில் குறிப்பிடத்தக்கவர். ரமணி அம்மாவைப் பற்றிப் பேசாமல் குடும்ப நாவலைப் பற்றி பேசவே முடியாது. இவரைப் பின்தொடர்ந்து எழுத வந்த பெண்கள் ஏராளம். அந்தப் பெண்கள் பின்பற்றி வந்தது ரமணி அம்மாவை மட்டும் அல்ல. அவர் எழுத்தின் ஃபார்முலாவையும்தான். அது என்ன ஃபார்முலா?

அது குறித்து நாம் இந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாகப் பேசுவோம்.

வெகுஜன பெண் எழுத்துகள் குடும்ப நாவலாக மாற்றப்பட்டது ராணி முத்து போன்ற குடும்ப பத்திரிகைகளின் உபயத்தால்தான். பின்பு அதுவே ரமணி அம்மாவின் எழுத்துகளைத் தொடர்ந்து எழுத வந்த பல பெண் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த அடையாளமாக மாறியது.   

அதுவும் கால் நூற்றாண்டுக்கு முன்பு வரைகூட கல்வி மறுக்கப்பட்ட ஓர் இனம் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் கணக்கிலடங்கா எழுத்துகளை எழுதித் தள்ளி இருக்கிறது. இனி புத்தக வாசிப்பு இருக்குமா, இருக்காதா, புத்தகங்களே இருக்குமா, இருக்காதா என்று எழுத்துலகமும் பதிப்புலகமும் பயந்துகொண்டிருக்கும் போது கற்பனைக்குள் அடங்காத ஒரு மிகப் பெரிய வாசிப்பு பட்டாளத்தை இணையத்தில் உருவாக்கி வைத்திருக்கிறது.

ப்ளாகுகள், ஃபோரம்கள், ஸைட்கள், அமேசான் கிண்டில், பிரதிலிபி, வாட்பேட், பிஞ்ச் என்று ஏராளமான எழுத்து மற்றும் வாசிப்புக்கான ஆப்களில் அதிக அளவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள். அவர்களின் எண்ணிக்கையை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கை மண் அளவைக் கொடுத்து அதில் எவ்வளவு மண்துகள்கள் இருக்கிறது என்று கணக்கிடச் சொல்வது போல.

இணையவழி நூல்கள் அல்லாது அவர்களுள் புத்தகமாகப் பதிப்பித்த பெண்கள் மட்டும் தோராயமாக இருநூறுக்கும் மேற்பட்டவர்கள். அதிலும் 2024 புத்தகக் காட்சியில் குடும்ப நாவல் வரிசையில் இணையத்தில் எழுதிக் கொண்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் நாவல்கள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

எழுதுபவர்கள் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் இதனைப் படிப்பவர்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள். நூற்றில் பத்து சதவீதம் ஆண் வாசகர்கள் இருந்தாலும் இதுபோன்ற இணைய எழுத்தையும் வாசிப்பையும் இன்றளவில் ஆண்டு கொண்டிருப்பது பெண்கள்தாம். அது ஒரு தனி உலகம்.

அவ்வப்போது இலக்கியவாதிகளால் கல்லெறியப்படும் உலகம். இவர்களுக்கு இலக்கிய அடையாளங்கள் தேவையில்லை. கேட்டாலும் அவர்கள் தரபோவதில்லை.

சிட்டிசன் படத்தில் ஒரு வசனம். ‘என்ன நாயர்! அரசாங்க பதிவேட்டுல இருந்து ஒரு கிராமமே தொலைஞ்சு போயிருக்கு’ என்று ரெகார்டில் தேடிவிட்டு நடிகை நக்மா அதிர்ச்சியாவார்.

அதேபோலத்தான். பொழுதுபோக்கு சார்ந்து இயங்கும் இந்த வெகுஜன பெண் எழுத்துலகத்திற்கு இதுவரை ரெகார்டு எதுவும் கிடையாது. அடையாளம் கிடையாது. அங்கீகாரம் கிடையாது. விருதுகள் கிடையாது.

ஆனால், தீவிர இலக்கியவாதிகளை விடவும் அதிதீவிரமாக எழுதுபவர்கள். இந்தத் தொடர் மூலமாக அத்தகைய உலகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறேன்.

இதில் பெண்ணியம் காதல், காமம், சண்டை, கலவரம் என்று சொல்ல நிறைய விஷயம் உண்டு.

‘இது என்ன வெறும் பொழுதுபோக்கு எழுத்துதானே’ என்று கடந்து போகும் இந்த உலகத்திலும் உச்சபட்ச ரிக்டர் அளவில் பூகம்பங்கள் வந்துள்ளன.

அந்த உலகத்தில் இயங்குபவளின் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் கதைகளின் கதையைக் கேட்க வாருங்கள்! 

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.