ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

ஒரு ஃப்ளாஷ்பேக்குடன் தொடங்குவோம்! இருபது வருடங்களுக்கு முன்!

நான் வேலை பார்த்த கட்டடக்கலை அலுவலகத்தில், ஒரு ஐ.டி அலுவலகத்தின் வரவேற்பு அறையின் மேற்கூரை வடிவமைப்பு வரைபடத்தை என் கணினியில் உருவாக்கினேன். வளைவுகள் அதிகமாக இருந்த ஒரு வடிவமைப்பு. அதை பிரிண்ட் செய்து, கான்ட்ராக்டரிடம் கொடுத்தேன். அவ்வளவுதான், பார்த்த உடனேயே, “என்ன மேடம், பென்சிலும் பேனாவும் இருந்தா என்னவேணா வரைஞ்சிடுவீங்களா, இதை நாங்க மேற்கூரையில் எப்படிச் செய்வது” என்று சிரித்தவாறே எரிச்சலுடன் கேட்டார். நானும் படாதபாடுபட்டு எப்படியோ ஒரு வழியாக  அவருக்கு அதைச் செய்வதற்குப் புரிய வைத்து அனுப்பினேன்.

”உங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கவும் உங்க சோம்பறித்தனத்திற்கு வேலை கொடுக்கவும் உலகத்துல எங்கேயாவது ஒருத்தி பொறந்திருப்பா”  என்று சினிமா வசனத்தை மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். 

 2004 ஆம் ஆண்டில் கட்டடக்கலையின் உயரிய விருதான ‘பிரிட்ஸ்கர்’ பரிசைப் வென்ற முதல் பெண்மணி என்று கட்டடக்கலை இதழ் ஒன்றில் ஒருவரைப் பற்றிப் படித்தேன். அவருடைய  முகத்தையும் அவருடைய கட்டடங்களையும் பார்த்த பின், ‘ஆ! ஏற்கெனவே பொறந்தாச்சா!’ என்று சந்தோஷமடைந்தேன்.

அவர் ஜாஹா ஹாடீட்.

வழக்கமான கட்டட வடிவமைப்புக் கூறுகள் அதாவது சரியான கோணங்கள் அல்லது கட்டங்கள் போன்றவற்றிலிருந்து மாறுபட்டு கட்டிட வடிவத்தில் தீவிர சுதந்திரம் எடுத்துக் கொண்டு, ஒரு கட்டடத்தில் சிக்கலான தன்மையின் வெளிப்பாட்டை ஊக்குவிப்பது ஒரு வகையான கட்டடக் கலை. அதற்கு கட்டடக்கலையில் ‘DECONSTRUCTIVISM’ என்று பெயர். இந்த வகை கட்டடக்கலையின் தாய் இவர்.

ஜாஹா ஹாடீட் ஈராக்கின் பாக்தாத்தில் பிறந்து மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.  அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற பிறகு, கட்டடக்கலைதான் அவருடைய விருப்பமென முடிவு செய்து  லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஏ ஏ கட்டடக்கலை  கல்விக்கூடம் சென்றார்.

கல்லூரியில் அவருடைய நண்பர்கள் அவரை   ’89 டிகிரி கண்டுபிடிப்பாளர்’ என்று அழைப்பார்கள். அவர் உருவாக்கிய ஒரு கட்டடமும் 90 டிகிரியில் அதாவது நேரான கோணத்தில் இருந்ததில்லை என்கிற காரணத்தினால்!

அவரது முன்னாள் பேராசிரியர் கூல்ஹாஸ்,    “சாஹா தனது சுற்றுப்பாதையில் மட்டுமே  சுற்றிக்கொண்டிருந்த ஒரு கிரகம்” என்று அவரை விவரித்திருக்கிறார். ஜாஹா ஹாடீடின்    சகோதரர் அவரைப் பற்றிப் பேசும்போது  கட்டிடக்கலைஞராக இல்லாவிட்டால், அவர் ‘முதல் ஈராக்கிய விண்வெளி வீராங்கனை’யாக  இருந்திருப்பார் என்றார்.

44 நாடுகளில் 950 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் மதிப்புமிக்க விருதுகளின் நீண்ட பட்டியலுடன், “கட்டடக்கலை இனி ஒரு ஆணின்  உலகம் மட்டும் அல்ல. ஒரு பெண்ணால்  முப்பரிமாணமாகச் சிந்திக்க முடியாது என்கிற ஆணாதிக்க சமூகத்தின் எண்ணம் மிகவும் அபத்தமானது” என்று தனது அறிக்கையை உறுதியாக நிரூபித்து காட்டியவர் ஜாஹா ஹாடீட்.

தான் படித்த கல்லூரியிலேயே உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு, 1979 இல் தனது சொந்த அலுவலகத்தைத் தொடங்கி , பகலில் கற்பித்தல், இரவில் வேலை என்று தொடர்ச்சியான கடின உழைப்புடன் முன்னேறினார்.

1982 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஓய்வுநேர விடுதியை வடிவமைப்பதற்கான சர்வதேசப் போட்டியில் அவர் வென்றார். ஆனால், அந்தக் கட்டடம் சவாலானதாக இருந்த காரணத்தினால்   அது கட்டப்படவில்லை; அதைத் தொடர்ந்து பலர் அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். ‘காகிதக் கட்டடக் கலைஞர்’ என்று அவர் முத்திரை குத்தப்பட்டார்.

மனம் தளராத ஜாஹா ஹாடீட் பல முயற்சிகளுக்குப் பிறகு 1990 இல் ஒரு தீயணைப்பு நிலையத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் வென்று அந்தக் கட்டடம் கட்டவும்பட்டது. அன்று அவர் உலகமே வியக்கும் நம்ப முடியாத ஒரு சாதனையைப் படைத்திருந்தார்.

வளைந்த முகப்புகள், கூர்மையான கோணங்கள் மற்றும் உலகில் உள்ள வலிமையான பொருள்களாகிய கான்கிரீட், ஸ்டீல் போன்றவற்றைப் பயன்படுத்தி   மென்மையாகவும் அதே நேரத்தில்  உறுதியானதாகவும் வகைப்படுத்தப்படும்  கட்டமைப்புகளை உருவாக்கி, பலரை அதிர்ச்சியில் உறைய வைத்தார் ஜாஹா ஹாடீட்.

தனது கையால் வரைந்த கட்டடங்களை உணர தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தினார். அவரது புதுமையான தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதனை உருவாக்க ஏதுவாக இருந்தது.

360 டிகிரி வரை கோணங்கள் இருக்கும்போது எதற்கு அந்த நேர்கோணலான 90 டிகிரியையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். நானும் என் கட்டடங்களும் ஒரு போதும் நீங்கள் கட்டமைத்த பெட்டிக்குள் அடங்க மாட்டோம்” என்று அவர் மேடையில் பேசியபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது.

 2015 பிரிட்டிஷ் RIBA தங்கப் பதக்கத்தை வென்று தனது ஏற்புரையில். “இப்போது நாம், எல்லா இடங்களிலும் மிகவும் சிறந்த பெண் கட்டடக் கலைஞர்களைப் பார்க்கிறோம். இது எளிதானது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். பல நேரத்தில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் மலையைவிட மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

2016 ஆம் ஆண்டில் 65 வயதானஜாஹா ஹாடீட்  மியாமி மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக இறந்தார். உலகம் அன்று உண்மையான தொலைநோக்குப் பார்வையாளரை இழந்து தவித்தது.

‘எல்லாப் பெண்களையும் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும், கடினமானவர்களாகவும் பார்ப்பதினால் நான் ஒரு பெண்ணியவாதி ஆகிறேன்’ என்று அவர் பெருமையாகக் கூறுவார்.

தி கார்டியன் நாளிதழ் அவரை ‘வளைவுகளின் ராணி’ என்று அழைத்துப் பெருமைப்படுத்தியது.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது.