பாலியல் கல்வி என்கிற வார்த்தை இப்போதெல்லாம் பரவலாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் பள்ளிகளில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வைச் சொல்லித் தர தயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பாலியல் கல்வி என்பது ஏதோ கெட்ட விஷயம் அல்ல. பெண் குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளைப் பற்றியும், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், மாதவிடாய், கருவுறுதல் குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளவும், ஆண் குழந்தைகள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், பெண் குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகும். நம் உடல் மீது நமக்கு இருக்கும் உரிமைகளையும், அதில் அந்நியர்களைக் குறுக்கிடாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும், அவ்வாறு குறுக்கிடும் போது அவர்களை எதிர்கொள்வது எவ்வாறு என்றும் பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களை வளர் இளம் பருவத்தினர் முறையாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தவறான நபர்கள் மூலமாகவும், இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமும் தேவையற்ற, வேண்டாத தகவல்களைப் பெற்று, அதன் மூலம் தவறாக வழிகாட்டப்படுவார்கள் என்பதால் இப்போது இந்தக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

பள்ளிப் பருவத்திலேயே ஏன் சொல்லித்தர வேண்டும் என்றால், இப்போதெல்லாம் சிறு குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதோடு சொல்லவும் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த விழிப்புணர்வு இப்போதே ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். பின்னாளில் அடிமனதில் படியும் கசடுகளும் கசப்புகளும் தவிர்க்கப்பட இது ஒன்றுதான் வழி.

நான் ஏழாம் வகுப்பில் படிக்கும்போது ஆண், பெண் இனப்பெருக்க உள்ளுறுப்புகள் குறித்த வரைபடத்துடன் பாடம் இருந்தது. ஆனால், எங்கள் ஆசிரியர் அதை நடத்தவேயில்லை. இன்னொரு வகுப்பு ஆசிரியையோ அந்தப் பக்கத்தைத் திருப்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்று கண்டித்தார். பத்தாம் வகுப்பில் இனப்பெருக்க உறுப்புகள் குறித்து வரைபடங்களுடன் அறிவியல் பாடம் இருந்தது. எங்கள் அறிவியல் ஆசிரியை மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பட்டும் படாமல் வகுப்பெடுத்தார். அதில் அவருக்குச் சீக்கிரம் அந்த நேரத்தைக் கடத்த வேண்டும் என்கிற பதட்டம்தான் இருந்தது. இறுதியாக இந்தக் கேள்விகள் பரீட்சையில் வந்தால் தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு வேறொரு வகுப்புக்கு அறிவியல் பாடம் நடத்தும் ஆண் ஆசிரியர் எங்களை வெளியே அனுப்பி விட்டு நடத்தினார். பாலியல் குறித்த விழிப்புணர்வு அந்தப் பருவத்தில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தன்னார்வ நிறுவனத்தில் இருந்து வந்து பெண்கள் மாதவிடாய் சுழற்சி, அந்தச் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் ஆகியவற்றைச் சொன்னதோடு, வாழைப்பழத்தில் காண்டம் மாட்டி குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஒருவர் விளக்க ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் இருபாலரும் நெளிய ஆரம்பித்தனர். மாணவர்களிடையே கிசுகிசுவென்ற பேச்சோடு மெல்லிய சிரிப்பும் எழவே அத்துடன் நிகழ்ச்சியை முடிக்கச் சொல்லி தலைமை ஆசிரியை சொல்லிவிட்டார். அன்று  அறிவியல் பூர்வமான விளக்கங்களை எளிதாக எடுத்துரைக்க யாரும் முன்வரவில்லை. எந்த ஒரு விஷயமும் பொத்திப் பொத்தி வைப்பதால் அதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும்.

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

இந்தியாவில் 16 முதல் 19 வரையிலான வயதுடையவர்களில் 45 சதவீதத்தினர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலில்தான் இருக்கிறது. பாலியல் கல்வி என்றால் என்ன என்பது பற்றியும், அதன் அவசியம் பற்றியும், அதனால் சமுதாயத்துக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பாலியல் ஆரோக்கியத்துக்கான உலக கூட்டமைப்பு (World Association for Sexual Health) தெளிவாக விளக்குகிறது. அவர்கள் கூற்றுப்படி இந்தக் கல்வியை அந்தந்த நாட்டு மக்களின் வாழ்வியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க வேண்டும்.       

பதின்பருவத்திலிருந்து இளம் வயதுக்குள் நுழைவதால் அவர்கள் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்களும் சந்தேகங்களும் கேள்விகளும் எழும். அப்போது அவற்றுக்கான முறையான, சரியான பதிலை நாம் அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் தேவையற்ற முறையில் பதில்களைத் தேடி, வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

நம் கலாச்சாரத்தில் பதின் பருவத்தில் எழும் ஐயங்களுக்கு பெற்றோரிடம் விளக்கம் கேட்க இயலாத சூழலே நிலவுகிறது. அப்படி மீறிச் சந்தேகம் கேட்கும் குழந்தையின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. என் தோழி ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்திருந்த நேரம். அவரது உறவினர் பெண் குழந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது தோழியின் வீட்டில் குடியிருப்பவரின் மகன் பள்ளி செல்லாத வயதுடையவன் அங்கு வந்திருக்கிறான். அப்போது குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. தோழியும் உறவுப் பெண்ணும் குழந்தையைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். அப்போது அந்தச் சிறுவன் குழந்தையைச் சுட்டிக் காட்டி, “பாப்பாவுக்கு யூரின் போற இடம் வேற மாதிரி இருக்கு. எனக்கு வேற மாதிரி இருக்கு. ஏன்?” என்று கேட்க, இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. தோழி அவனை அங்கிருந்து விரட்டத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த உறவுப் பெண் அவரைத் தடுத்து, அந்தச் சிறுவனை அருகில் அமர்த்தி,”இதோ பாரு தம்பி.. நீ ஆண் குழந்தை. பாப்பா பொண்ணு. உடம்பு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சில பார்ட்ஸ் வேற வேற மாதிரிதான் இருக்கும்” என்றார். அதற்கு, “கை கால் எல்லாம் ஒரே மாதிரிதானே ஆண்ட்டி இருக்கு” என்றான் சிறுவன் குழப்பத்துடன். தோழி விழிக்க, உறவுப் பெண்ணோ அசராமல், “அதாவது அப்பாக்கு மீசை இருக்கு. அம்மாக்கு இல்லைல்ல. அது மாதிரிதான்.” கொஞ்சம் குழப்பம் நீங்கி தலையாட்டி இருக்கிறான். “நீ இன்னும் கொஞ்சம் பெரிய பையனாகி, ஸ்கூல் போகும்போது உன் சயின்ஸ் புத்தகத்துல இன்னும் புரியற மாதிரி போட்டிருக்கும்” என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். தோழி நிம்மதிப் பெருமூச்சுவிட, அந்தப் பெண், “எனக்கே சரியா விளக்கத் தெரியலை. இருந்தாலும் நாமளே இதைச் சொல்லத் தயங்கி மூடி மறைச்சா, அவனுக்கு இன்னும் குழப்பம்தான் வரும்.. அதுவும் இல்லாம இதுதான் பெண் உடம்பு. இதில் இன்னின்ன பிரச்னைகள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டா இயல்பா பெண்களோட பழகுவான். இல்லேன்னா பெண்களை ஒரு போகப் பொருளாகத்தான் பார்ப்பான்” என்றிருக்கிறார். தோழியும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகச் சொன்னார். 

இப்போதெல்லாம் ஆணுடலோ அல்லது பெண்ணுடலோ அவற்றின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அளந்து வைத்திருக்கிறார்கள். அதுபோல ஆக எல்லாருமே முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் உடலும் ஒவ்வொரு மாதிரி என்பதை எல்லாரும் மறந்துவிடுகிறார்கள். சைஸ் ஜீரோ மோகம் பெண்களை ஆட்டிப்படைக்கிறது. வயது ஏறும் போதும், ஹார்மோன்கள் மாறும் போதும் உடல்கள் தங்களை மாற்றிக்கொள்வது இயற்கைதான். ஆரோக்கியமாக உடலைப் பேணுவது குறித்தும் பாலியல் கல்வியில் கற்றுக் கொள்ளலாம். அழகு என்கிற ஒன்றும், சிவப்பழகு என்கிற ஒன்றும் வணிக நோக்குடன் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறின்றி உடல் நலனைப் பற்றிப் புரிந்துகொள்ள பாலியல் கல்வி அவசியம். இன்றும் இன்னும் நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வது என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு வயதிலேயே தாயாவது, சரிவிகித ஊட்டச்சத்துகள் இல்லாதது என்று பெண் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டுமென்றால் இந்தக் கல்வி பள்ளிகளில் கற்பிக்கப்படுவது மிகவும் அவசியம்.

இந்த டிஜிட்டல் மயமான இந்தியாவில் இன்றைய சூழலில் எல்லாக் குழந்தைகள் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் விளையாட்டுகளையும், கார்ட்டூன்களையும் மட்டுமேதான் பார்க்கிறார்கள் என்று நாம் முழுவதும் நம்பிவிட முடியாது. இப்போது அடல்ட் கார்ட்டூன்களும் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. எந்நேரமும் குழந்தைகளைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கவும் இயலாது. எனவே பள்ளிகளிலேயே பாலியல் கல்வி கற்றுத் தரப்படும் போது எதிர்பாலினத்தவரைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதனால் தேவையற்ற இனக்கவர்ச்சி தவிர்க்கப்பட்டு, இருவரும் சக உயிர்கள் என்ற புரிதல் ஏற்படும். பெண்ணும் ஆணும் ஒருவரை மற்றொருவர் மதிக்கும்போது, அத்தகையவர்களால் நிரம்பிய சமூகம் நிச்சயம் ஒரு பொறுப்பானதாக அமையும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை.

பிள்ளைப் பருவம் என்பது இனிய நினைவுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கு பாலியல் கல்வி குறித்த புரிதல் முதலில் பெரியவர்களுக்கு வேண்டும். கோயில்களில் பாலுறவுச் சிற்பங்கள் பலவும் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காகக் கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் மனம் கெட்டுவிடும் என்று சொல்வார்களா? அது போல்தான் இதுவும். பாலியல் குறித்துத் தெரிந்து கொள்ளும்போது, அவரவருக்கு எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் போது, அது குறித்த விழிப்புணர்வுதான் அதிகரிக்கும். 

உளவியல் ரீதியாகப் பாலியல் சந்தேகங்கள், தெளிவின்மை, தன்னைக் குறித்து அறிந்து கொள்ளாத நிலை போன்றவை மனிதனை பிரச்னைகளில் ஈடுபட வைக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகள் பாலியலை அடிப்படையாகக் கொண்டவைதான். திரைப்படங்களும் இணையம் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் பாலியல் குறித்துத் தவறாகப் பரப்பி வரும் கருத்துகளை ஒதுக்கவும், அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு தவிர்க்கவும் பாலியல் கல்வி பயன்படுகிறது. இருபால் குழந்தைகளையும் சமமாக நடத்துவதே அடிப்படை பாலியல் கல்வி. குழந்தைகள் மீதான வன்குற்றங்களைத் தவிர்க்க இத்தகைய கல்வி காலத்தின் கட்டாயம்.

2007ஆம் ஆண்டு மத்திய மகளிர் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  மூன்றில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப் படுவதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் உருவாவதற்கு இந்த அறிக்கை முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. 

குழந்தைகள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பள்ளிகளில் பாலியல் கல்வியைத் தொடங்க பெற்றோர், ஆசிரியர், மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், மனநல ஆலோசகர், தன்னார்வ அமைப்பினர் மற்றும் சமூக சேவகர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் அரசுக்குத் தங்கள் கருத்தை வலியுறுத்த வேண்டும். பாலியல் கல்வி கற்ற சமூகத்தில் பலாத்காரங்கள், வன்புணர்வுகள் போன்றவை ஒழிந்துவிடும். குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே முடிவு செய்யும் பெற்றோர்கள். வாழ்க்கைக்குத் தேவையான இந்தக் கல்வியை அவர்கள் கற்றுக்கொள்ளச் செய்வதே சாலச் சிறந்தது.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது.