ஒரு பெண்பிள்ளை வயதுக்கு வந்தால் அதன் பிறகாவது தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்ல அம்மா என்கிற ஓர் உறவு இருந்தது. ஆண்களுக்கு அதுவும் இருந்ததில்லை. ஆணும் வயதுக்கு வருகிறான் என்பது நம் மக்கள் எவ்வளவு பேருக்குத் தெரியும்? ஆணும் பூப்பெய்துவான் என்று சொன்னால் அதை அங்கீகரிக்குமா நம் சமூகம்?

ஆணினுடைய மனம், உடல் வளர்ச்சியைப் பற்றி நம் குடும்பங்களின் புரிதல் என்ன? அவனுக்கு இவற்றில் நாம் உறுதுணையாக நிற்கிறோமா? மனம்விட்டு ஆண் பிள்ளைகளிடம் பேசும் பெற்றோர் எத்தனை பேர்? சில பெற்றோர் பெண் பிள்ளைகளிடம் நன்றாகப் பேசிப் பழகுவர். பள்ளி, கல்லூரியில் இருந்து பெண் பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பியவுடன் காலை முதல் அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பெற்றோர் (குறிப்பாக அம்மாக்கள்) உண்டு. அப்படி எத்தனை பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகளிடம் பேசி இருக்கிறார்கள்? எங்கள் கால இந்திய அப்பாக்கள் பெரும்பாலும் ஆணாதிக்க மீசை முறுக்கிகள்தாம். அப்படி இல்லாது இருந்திருந்தாலும் பாலியல் கல்வி பற்றி எல்லாம் அவர்கள் அறிவு பூஜ்யம்தான். பின் எங்கே தங்கள் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர? தங்கள் ஆண் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசும் அப்பாக்கள் இன்றும் குறைவுதான். பாலியல் கல்வி இன்னமும் நம் இந்தியக் குடும்பங்களுக்குள் சகஜமாகச் சொல்லித் தரப்படுவதில்லை.

ஆண் பிள்ளைகள் கேட்கும் உடல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறோமா? ஆண் உடல் பற்றியும் அவனின் சக உயிரினமான பெண்ணுடல் பற்றியும் அவனுக்கு நாம் சொல்லித் தருகிறோமா? பெண்ணின் முதல் மாதவிடாய் போல ஆண் தன் முதல் விந்து வெளியேற்றலை குழப்பத்துடன் அல்லவா அணுகியிருந்திருக்கிறான் இத்தனை காலமும்.

ஆண் பிள்ளைகளும் பாலியல் துன்புறுத்துபவர்களுக்கும் சீண்டல்களுக்கும் ஆளாகிறார்கள் என்பது நம் பெற்றோர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பாலியல் தீண்டல்கள் ஒருவரின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. மனம், உடல் என்று இரண்டையும் பாதிக்கக் கூடியவை. அது ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும். பாலியல் தீண்டல்கள் என்பது சங்கிலித் தொடர் போல. பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் இன்னொருவர் பாதிக்கப்படலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. பாலியல் கல்வி கொண்டு அந்தச் சங்கிலியை உடைப்பதன் மூலம் பாலியல் தீண்டல்களைக் (குற்றங்களை) குறைக்க முடியும். முக்கியமாக இதில் பெரும்பாலும் ஆண்கள் பாதிப்பு ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாலியல் கல்வி தருவது இன்றியமையாதது ஆகிறது.

ஆண்குறி சிறுத்து விட்டதா?

தூக்கத்தில் விந்து வெளியேருகிறதா? சுயஇன்பம் செய்து ஆண்மை இழந்துவிட்டீர்களா? இப்படி ஆண் உடல் சார்ந்த பயமுறுத்தல்கள் எத்தனை எத்தனை? எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் திறன்பேசி யுகத்திலும் பெண்ணுக்கு ஆணுறுப்பின் அளவுதான் முக்கியம் என்று எண்ணி தன் ஆண்ணுறுப்பின் நீள அகலங்களைப் பதிவிட்டுக் கொண்டும் பெண்களுக்கு ஆணுறுப்பின் படங்களை அனுப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் நம் ஆண்கள்.

தன் உடல் மட்டுமின்றி பெண் உடலும் ஆணுக்கு அந்நியம்தான். ஒரு பெண் பருவமடைவது, அவள் உடல், மனம் பற்றி இந்தக் கணினி யுகத்திலும் ஆண்களுக்குத் தெரிவதில்லை. மாதவிடாய் அசிங்கம், தீட்டு என்பதிலிருந்து ஒரு பெண்ணின் மார்பகம் பெரிதானால் அது அவள் உடலுறவில் அதிகமாக ஈடுபடுவதால் என்று நம்புவது வரை அறிவீனத்தில் உழல்கிறார்கள். இவையெல்லாம் சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளுக்குப் பாலியல் கல்வி தராததன் காரணம்தான் அன்றி வேறென்ன?

பெண்ணின் உடல் மட்டுமல்ல அவள் மனமும் ஆண்களுக்கு அந்நியம்தான். இதில் படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லலாம் இல்லை. ஆணுக்குப் பெண்ணுடன் பழகச் சொல்லித் தருகிறதா நம் வீடுகள்? ஒரு பெண் ‘No’ என்று சொன்னால் அதை இயல்புடன், அவள் உரிமை என்று கடந்து போக கற்றுக் கொடுக்கிறோமா? காதலிப்பதையும் காதலிக்க வைப்பதையும் ஹீரோயிச மனப்பாங்குடன் அல்லவா கடத்துகின்றன நம் சினிமாக்கள். குறைந்தது பெண் தன் சரிபாதி உயிரினம் என்ற குறைந்தபட்ச அறிவாவது உண்டா நம் பெரும்பாலான ஆண்களுக்கு? பெண் உடல் உறுப்புகளின் பெயர்களை கெட்ட வார்த்தைகளாக மாற்றி வைத்திருக்கிறோம். ஏனெனில் பெண்ணின் பாலியல் சுதந்திரம் பற்றிய அறிவு ஆண்களுக்கு இல்லை. பெண்ணுறுப்புகள் ஆணுக்குச் சொந்தமானவை என்னும் எண்ணம் காரணமாக சக ஆணைத் திட்ட அவன் சார்ந்த பெண்ணின் உடலுறுப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறான் ஆண்.

சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, பிள்ளைகள் பராமரிப்பு, கல்வி, நிதி மேலாண்மை, சம்பாத்தியம், உயர் பதவிகள் வகிப்பது, உடல் உழைப்பு மிக்க கடின வேலைகள் செய்வது, நிர்வாகத் திறமை, ஓய்வு, பொழுதுபோக்கு, சுற்றுலா செல்வது என்று சகலமும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானவை என்பதைக் கற்றுத் தரும் பாலியல் கல்வி.

பாலியல் கல்வி அளிப்பதின் மூலமாக மட்டுமே இந்திய ஆண்களிடம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அது ஏதோ ஓர் இரவில் நடந்துவிடக்கூடிய விஷயமில்லை. பாலியல் கல்வியைச் சிறுவயதிலிருந்தே ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதி்ன் மூலம் மட்டுமே அவர்களின் பதின்ம வயதில் சமூகப் பொறுப்புள்ள, சுய ஒழுக்கங்கள் நிறைந்த ஆண்களாக வளர்த்தெடுக்க முடியும்.

பெற்றோர்களே… ஆண் பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் (அறிவார்ந்த உரையாடல்களுடன்) பேசத் தொடங்குங்கள்.

பெற்றோர்கள்தாம் தம் பிள்ளைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தர வேண்டும். ஏனெனில் அது ஒரு நீண்ட நெடிய கற்பித்தல் முறை. எனவே பெற்றோர்கள் முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

ஆண் பிள்ளைகளின் கேள்விகளுக்கு அப்போதே முடிந்த வரை அவனுக்குப் புரிகிற அளவுக்கு பதில் சொல்லிப் பழகுங்கள். தெரியாது என்று நீங்கள் மறுத்தால் அதை அவன் தவறாக கற்றுக்கொள்ள பல வழிகள் கொட்டிக் கிடக்கின்றன வெளி உலகில்.

ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.

மூளைக்குத் தெரியாதது பார்வைக்கும் தட்டுப்படாது. பாலியல் கல்விக்கும் இது பொருந்தும். பாலியல் கல்வியின் துணை கொண்டு ஆண் பிள்ளைகளை வளர்க்க முனைப்பெடுக்காமல் நல்ல ஆண் சமுதாயத்தை உருவாக்கிட முடியாது.

(தொடரும்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர், ஓர் ஆண் பிள்ளையை வளர்க்க கற்றுக்கொண்டிருக்கும் ஓர் அப்பா.