முன் குறிப்பு – இது கட்டுரை அல்ல கதை.

ஏன் இந்த விஷயத்தை கட்டுரையாக எழுதினால் என்ன? என்கிறது என் மூளைக்குரல். கட்டுரை எனில் தரவுகள், மேற்கோள்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. சும்மா குருட்டாம் போக்கில் எதையாவது எழுதினால் இது கட்டுரை எனக் கொள்ளும் தகுதியே இல்லை எனப் பத்து விதிகள் எதையாவது சொல்லி ஆண் மைய விளக்கவுரை கொடுப்பார்களே! எதையாவது எழுதிவிட்டு சைடுநவீனத்துவம், முன்னோக்கிய மாய யதார்த்தம் என ஏதாவது புதுப் பெயர் வைத்துக்கொள்வது எளிதான வேலை. இதற்கு முன் உதாரணங்கள் பல இருக்கின்றன. அதுமட்டுமில்லை உள்ளுணர்வு, நுண்ணுணர்வு, எதிர்காலத்தை யோசிக்கும் திறமை என்று சொல்லிவிடலாம்.

பத்திருபது வருடம் கழித்து வந்து நீ யூகித்தது போல நடக்கவில்லையே என யார் நம்மைக் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நான் எச்சரிக்கை செய்ததால் வந்த மாற்றம் என நமக்கு நாமே பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துக்கொள்ளலாம். பின்னர் நம் ஆட்களை வைத்து விழா எடுத்து விருதும் பெற்றுக்கொண்டால் சரித்திரத்தில் நம் பெயர் நின்றுவிடும்.

என் மூளைக்குரல், “த்தூ இதெல்லாம் ஒரு பிழைப்பா?” எனக் கழுவி ஊற்றியது. கலைஞர்கள் அவமானங்களுக்கு அஞ்சக் கூடாது எனும் வைராக்கியத்துடன் கட்டுரையை ச்சீ கதையைத் தொடர்ந்து எழுதினேன்.

எழுத்தாளர்கள் என்றால் வார மாதப் பத்திரிகைகளில் கதை எழுதுவார்கள். கதைகளைத் தொகுத்து புத்தகமாக்குவார்கள். நாவல், குறுநாவல், சற்றே பெரிய சிறுகதை எனச் சக்திக்கு ஏற்றவாறு அவர்கள் எழுத்து புத்தகமாகும். எப்போதாவது அவர்கள் நேர்காணல் வெளியானால் அவர்களின் அக உலகம், சமூக கருத்துகள் பற்றித் தெரியவரும். அந்தக் கருத்துகளைத் தெரிந்துகாெள்ளாமலே ஒருவரின் எழுத்தை வாசிக்கும் வாய்ப்பும் இருந்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது சமூக வலைத்தளங்கள் வந்தபின் எல்லாமே மாறிவிட்டன. அதிலும் இந்த யூடியூப் செய்தித்தளங்கள் பார்வையாளர்கள் குறைவதாகத் தெரிந்தாலே தூக்கமின்றித் தவிக்கிறார்கள். “சரி நம்மாளுதான் இருக்காரே, போய்ச் சும்மா பேசிட்டிருந்தா போதும். எதாச்சம் கன்டெண்ட் தருவாப்ல” எனக் கிளம்பி விடுகிறார்கள். “நம்ம எப்பவும் ட்ரெண்ட்லயே இருக்கணும். எழவு வீடா இருந்தாலும் எனக்குத்தான் மாலை மரியாதை எல்லாம் கிடைக்கணும்” எனும் அற்ப புத்தியுடன் தெளிவாக யோசித்து சுயபுத்தியுடன் வன்மக் கருத்துகளை வாந்தி எடுக்கிறார்கள் சிலர். “என்ன பெரிசா செஞ்சிடுவீங்க? கெட்ட வார்த்தையில ஃபேஸ்புக்ல திட்டுவீங்க. நாங்க பாக்காத கெட்ட வார்த்தையா? நாங்க வாங்காத திட்டா?” என எகத்தாளமாக அந்த நேர்காணலிலேயே, “இன்னும் உங்ககிட்ட கொஞ்சம் அதிகம் எதிர்பாக்கிறோம் பாஸ்” என்ற தொனியில் சவாலும் விடுக்கிறார்கள்.
வின்னர் படத்தில் வடிவேலைப் பார்த்து, “உன்ன அடிச்சும் பாத்தாச்சு, அவுத்தும் பாத்தாச்சு. இன்னும் உன்ன என்னதாண்டா செய்றது?” என வில்லன் குரூப் மண்டை காயும். அப்படி ஆகிவிட்டது எதிர்தரப்பின் நிலை. அவர்களை நினைத்துக் கொஞ்சம் பாவ உணர்வு எழுகிறது. ஆனால், கெக்கே பிக்கே எனச் சிரிப்புதான் அதிகம் வருகிறது. நம்ம எழுத்தாளரைப் பார்த்து அடடா எவ்வளவு அறிவு எனக் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கிறது.

நம் ஆழ்மனம் கெட்டதை ரசிக்கிறது. சமூகத்தில் தவறாக நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவே அதை நாம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. மூளையில் இதற்காக பிரத்யேக ரசாயனம் டோபமைன் சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்லதை பேசினாலோ, எழுதினாலோ, படித்தாலோ இப்படி ஸ்பெஷலாக எதுவும் சுரக்காது என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக எழுத்தாளர்களை வைத்து நடந்த ஆய்வில் இந்த டோபமைன் சுரப்பி 24 மணி நேரமும் வேலை செய்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது எழுதும்போது மட்டுமின்றி அவர்கள் சும்மா இருந்தாலும் அவர்கள் மூளை தப்புத் தப்பாகவே யோசிக்கிறதாம்.

எழுத்தாளர் சுஜாதா மனிதனின் வன்முறை எண்ணங்களுக்குத் தீனியாக டிஸ்கவரி சேனல்கள் இருக்கிறது என்று சொன்னார். சிங்கம், புலி எல்லாம் மானைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுவதைப் பார்த்து மனிதன் தன் வன்முறை எண்ணத்தைத் தணித்துக்கொள்கிறான். இதெல்லாம் இல்லாவிட்டால் மனிதன் நிஜவாழ்வில் வன்முறையாளனாக இருப்பான். ஆபாசப் படங்களைப் பார்க்காவிட்டால் காமக் கொடூரனாக மாறி எல்லார் மீதும் பாய்வான் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஐயா நேற்றுகூட வளர்ப்பு நாயை வன்புணர்வு செய்ததாக ஒருவர் சிசிடிவி ஆதாரத்தின் மூலம் கைது செய்யப்பட்டாரே என்றெல்லாம் நாம் கேட்க முடியாது. நீங்களும் டோபமைன், சுஜாதா மேற்கோள் எல்லாம் உண்மையா என என்னைக் கேட்கக் கூடாது. வேதியியல் பெயர்கள், ஆண் எழுத்தாளர் மேற்கோள் இருந்தால் நம்பகத்தன்மை கூடும். பெண் எழுத்தாளரை மேற்கோள் காட்டினால் அது பெண்ணிய எழுத்து வகைமைக்குள் போய்விடும். இதெல்லாம் பாலபாடம்.

நடுக்குறிப்பு – போய் முதல் வரியைப் படித்துவிட்டு மேலே கதையைப் படியுங்கள்.

நீ இன்னும் கதைக்குள்ளயே போகல, கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவில்லை, காட்சி எதுவும் இல்லை என நீங்கள் காண்டாவது தெரிகிறது. எனக்குத்தான் கதை எழுதத் தெரியாதே இப்படிக் கதை எனச் சொல்லி ஆரம்பித்து விட்டேனே என்று நான் மறுகுகிறேன். என் மூளைக்குரல் என்னைச் சமாதானப்படுத்துகிறது. “கடைசியா மறுகுதல் என்ற வார்த்தையை இவங்க எப்ப படிச்சிருப்பாங்க? அதைப் பார்த்தே அவங்க நீ ஒரு எழுத்தாளர்னு நம்பி இருப்பாங்க. சரியா வரலனா பயப்படாம தமிழ்ச்சமூகம் இக்கதையைப் புரிந்துகொள்ள இன்னும் பத்து வருடங்கள் ஆகும்னு கடைசில ஒரு வரியைச் சேர்த்துக்கோ. ரொம்ப கேள்வி கேட்டா இந்த உள்ளுணர்வு, நுண்ணுணர்வுகூட அதீதப் பிறழ்வையும் சேர்த்துடலாம். சட்டப்படி தண்டனை கிடைக்கற தவறுக்கே இதைச் சொல்ல முடியும். அம்மஞ்சல்லிக்குப் பெறாத உன்னோட கதைக்கு இத சொல்லக் கூடாதா? தலையில புளிச்ச மாவ வீசினாலும் தொடச்சுக்கணும். மூஞ்சய சிரிசாப்ல வெச்சிக்கிட்டு எனக்கு வலிக்கலயே. நான் தைரியமான ஆளுனு உதார் விடணும். என்ன கருமத்தையாவது எழுதிக்கிட்டே இருக்கணும். அதான் முக்கியம். மனச விட்றாத. தொடர்ந்து எழது.” இப்படியெல்லாம் எதை எதையோ சொல்லியதால் கட்டுரையை அடச்சீ கதையைத் தொடர்கிறேன்.


தற்காலத்தில் ஓர் அபாயகரமான போக்கு பரவுகிறது. நான் எழுத்தாளர்னு என் ஆழ்மனசுல யாரோ திடீர்னு பதிய வெச்சதால, எழுத்தாளரா இருக்குறவங்க இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இதையெல்லாம் உன்னிப்பா கவனிச்சு கருத்து சொல்வது முக்கியங்கிறதால நான் கண்ணுல சொட்டுமருந்து விட்டு நல்லா கவனிச்சு இதைக் கண்டுபிடிச்சிருக்கேன். எதிர்காலத்த கவனிக்க முடியாது கணிக்கத்தான் முடியும்னு யாராச்சும் வந்தா மூக்குலயே குத்துவேன். நான் பெண் என்பதால் இரக்கமற்றவள் என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்க வேண்டும். அறியாமை உங்கள் குற்றம். நான் எதை வேண்டுமானாலும் பேசுவேன், எழுதுவேன். என்னைச் சட்டப்படியோ, தார்மீக ரீதியாகவோ யாரும் கேள்வி கேட்க முடியாது.

என் மூளைக்குரல் நடுவில் உற்சாகமாகக் குறுக்கிடுகிறது. “செம்மை. அப்படித்தான் நல்லா தைரியமா எழுது. இவ்வளவு நாள் உனக்கு இவ்வளவு பவர் இருக்குனு உனக்கே தெரியாம இருந்துருக்க. சரியான மக்கா இருந்த உன்னோட அறிவுக் கண்ண திறந்ததுக்கு நீ அந்த எழுத்தாளருக்குக் கண்டிப்பா நன்றி சொல்லணும். செய்வாய் கிரக விருதகூட வாங்காம இத வாங்கினா என்னையும் செய்வாய் கிரகத்த சேர்ந்தவன்னு சொல்லி மறுத்த தியாகி அவரு.”

உடனே நான், “மண்ணாங்கட்டி. அவரப் பாத்து என்ன கத்துகிட்ட நீ? செம்மையா இருந்தா அதெல்லாம் நானே சொந்தமா யோசிச்சதுனுதான் சொல்லணும். அதுக்கெல்லாம் யாருக்கும் க்ரெடிட் தரக் கூடாது. ஏற்கெனவே இருந்தாலும் நான்தான் கண்டுபிடிச்சேன்னு அடிச்சிவிடணும். ஆதாரம் காமிச்சா என்ன மாதிரி படிப்பாளிக்கே தெரியாம இருந்தா அது இருந்ததாவே ஒத்துக்க முடியாது. நான் சொன்னப்புறம் பிரபலம் ஆனதால நான்தான் கண்டுபிடிச்சேன்னு அழிச்சாட்டியம் பண்ணணும். நடு நடுவுல எதையாவது சொல்லி ஃப்ளோவா போகுறத கெடுக்காத” எனக் கண்டித்துவிட்டுக் கதையைத் தொடர்கிறேன். ஆஹா! நானே இந்த முறை சரியாகக் கதை என்றே குறிப்பிட்டுவிட்டேன். நானே நம்பிவிட்டேன் எனில் இன்னும் நாலுபேர் இதைக் கதை என்று நிச்சயம் நம்புவார்கள். சரி கதையைத் தொடரலாம்.

எங்க விட்டேன்? ஆங், அபாயகரமான போக்கு. அது என்னன்னா இந்த எழுத்தாளர்கள் எழுத வெகுசில பத்திரிகைகள் அல்லது புத்தகம் என்ற வகையில் குறைவான வாய்ப்பிருந்தபோது இந்த வன்மக் குடோன்களைத் தவிர்க்க நமக்கும் எளிதாக இருந்தது. இந்தச் சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு எப்பப் பாரு எதையாவது தினமும் எழுதித் தொலைக்கிறார்கள். மனநல அமைதி கருதி இவர்களைப் பின்தொடரமல் இருந்தால் இதெல்லாம் நம் கண்ணில் படாது என்கிற நிலையும் இல்லை. நண்பரின் நண்பர், அவரின் எதிரி, எதிரியின் நண்பர் என ஏதோ ஒரு தொடர்பில் ஸ்க்ரீன்ஷாட்டாக நம் கண்ணில் பட்டுவிடுகிறது. அப்படியே தவிர்த்தாலும் அதை இந்த யூடியூப் செய்தியாளர்கள் செய்தியாக்கி விடுகிறார்கள். அங்கிருந்து தப்பித்தாலும் அடுத்த நாள் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிலேயே அவர் இதைச் சொன்னார், பதிலுக்கு இவர் அதைச் சொன்னார், சமூக வலைத்தளத்தில் பரபரப்பு எனச் செய்தி போட்டுவிடுகிறார்கள். இந்த வன்மங்கள் கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர்க்காமல் ஓய மாட்டேன் என்கிறார்கள்.

இப்படி எல்லாருக்கும் பரவின செய்திகளில் எப்படி ஒரே மாதிரியான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது, எப்படி இதை உண்மை என நம்ப வைக்க தனித் தனியாக ஆனால், ஒரே மாதிரி பொய் சொல்கிறார்கள் என்பதைச் சொல்லத்தான் இந்தக் கதை. கதையில் என்ன கருத்து இருக்கிறது என்பதை நானே சொல்ல வேண்டிய அவல நிலையை எழுத்தாளருக்குக் கொடுப்பது வாசகரின் தவறே அன்றி எழுத்தாளரின் தவறல்ல. கூடவே நான் ஓர் இரக்கமற்ற பெண் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஓவரா குறுக்குக் கேள்வி கேட்காமல் மேலே படியுங்கள்.

“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள். டேஷு…. குடும்ப நீதிமன்றத்தில்தான் குடும்பப் பெண்கள் விவாகரத்து கேட்டு வருவார்கள். மழைக்காலத்தில் மழை பெய்கிறது என்பது மாதிரி இதெல்லாம் ஒரு லாஜிக்கா? குற்றவியல் நீதிமன்றத்தில் போய் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்துக் கணக்கெடுத்தால் தெரியும். துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தவன், ரயில் முன் பிடித்துத் தள்ளியவன், ஆசிட் வீசியவன் எல்லாம் அங்குதான் இருப்பான். பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் இடுகாட்டிலோ சுடுகாட்டிலோ இருப்பார்கள். இடுகாடோ, சுடுகாடோ செல்வதற்குச் சில படிகள் முன்பே சுதாரித்துக் கொண்டவர்கள் குடும்பநல நீதிமன்றத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் ஒரு சதவீதம். அதற்கே நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்கள்!

பெண்கள் வீட்டில் சும்மாவே உட்கார்ந்து ஆண் உழைப்பை உறிஞ்சித் தின்னும் அட்டைப்பூச்சிகளாக இருக்கிறார்கள் என்பது இதே பெண்கள் மீது இத்தனை காலம் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இப்போது பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் ஆண்கள் மகிழ்ச்சியடைவதுதானே நியாயம்? அக்கா, தங்கச்சிகளைக் கட்டிக்கொடுத்து கரை சேர்க்காமல் ஓர் ஆண் தன் வாழ்வைத் தொடங்க முடியாது. அந்தக் கடமையை முடித்துவிட்டு கல்யாணம் செய்து கொண்டாலும் மனைவிக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் உழைத்துக் கொட்ட வேண்டும். வளர்ந்த பிறகு மகளுக்கும் பணம் செலவு செய்து திருமணம் செய்ய வேண்டும். இவ்வளவு அழுத்தத்தை ஏன் ஆணின் தலையில் சுமத்துகிறீர்கள்? இந்த நிலையில் மனைவி சம்பாதித்து குடும்பத்துக்குக்கூட கொடுக்க வேண்டாம், அவள் செலவுகளை அவளே செய்துகொண்டால்கூட ஆணின் மேல் இருக்கும் அநியாய சுமையில் கொஞ்சமேனும் குறையுமே? அதைக் கண்டு ஏன் பல ஆண்கள் பயந்து கூக்குரலிடுகிறார்கள்? உண்மையில் பெரும்பான்மை பெண்களின் ஏடிஎம் கார்டை ஆண்களே வைத்திருக்கிறார்கள். தங்கள் பணத்தைத் தாங்களே கையாளும் பெண்கள் இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் எதிர்காலத்தைக் கணித்து பெண்களை கொடுமைக்காரர்களாக, பேராசைக்காரர்களாக, பணப்பேய்களாக, திமிர்பிடித்தவர்களாக, இரக்கமற்றவர்களாக கட்டமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டார்கள். ஆண்களுக்கு நன்மை பயக்கும் ஒரு விஷயத்தை எதற்காக அஞ்சி நடுங்கும் ஒன்றாக மாற்றுகிறார்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை. எனில் குடும்ப அமைப்பில் சும்மா இருந்து உழைப்பை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள், ஒட்டுண்ணிகள் பெண்களா, ஆண்களா? யார் அதிகம் லாபம் அடைகிறார்கள் இந்த அமைப்பில்?

என்ன பெரிய சுரண்டல்? சமைத்துப் போட்டு வீட்டைப் பார்த்துக்கொள்வது பெரிய வேலையா என்றால் நிச்சயம் அது பெரிய வேலை கிடையாது. பணமாக மதிப்பிடப்படாது போனால் அதை மதிக்க உனக்கும் தெரியவில்லை. அந்த வேலைகளை நாக்குதள்ள நாள் முழுக்கச் செய்யும் எனக்கும் தெரியவில்லை. கடினமான வேலை இல்லை என்பதுதான் என் கருத்தும். உப்பு, புளி, காரம் சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்தால் குழம்பு தயார். பருப்பு சேர்த்தால் சாம்பார். அதற்கு பதில் அரசியும் சிக்கனும் கொஞ்சம் இஞ்சி பூண்டும் சேர்த்தால் பிரியாணி. இதற்குப் பெண்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் கருத்தும். அதை அம்மாவின் கை மணம், பக்குவம் என்றெல்லாம் ஆண்கள் அதிகம் கொண்டாடத் தேவையில்லை. பிடுங்கப்படும் அந்த ஆணிகள் எல்லாம் தேவையில்லாதவைதான். இந்த அற்ப விஷயத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு தலைக்கணம் பிடித்தாடும் பெண்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் ஆசை.

நீதான் அறிவு, ஆற்றல், வலிமை எல்லாவற்றிலும் பெண்ணைவிடச் சிறந்தவன் ஆயிற்றே! நான் கேஸ் சிலிண்டரை உருட்டிக்கொண்டு வரவேண்டும். நீ தூக்கிக் கொண்டே வந்துவிடுவாய். தாளிக்கும்போது கடுகு வெடித்து 400 டிகிரி சூட்டுடன் என் கையில் வந்து விழுந்தால் மலரினும் மெல்லிய நான் துடிதுடித்துப் போவேன். வெளியில் வெயிலில் திரிந்து உழைப்பால் தடித்த எருமைத் தோல் கொண்ட உனக்கு அந்தச் சூடு உறைக்காது. எனக்கு கணக்கு, எண்கள், நேரம் இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அறிவு குறைவு. எத்தனை நிமிடம் ஆகும் வெண்டைக்காய் வேக, எத்தனை கிராம் உப்பு போட்டால் ரசம் ருசியாக இருக்கும் எனக் கணிதப்புலியான உன்னால் மிக எளிதாகக் கணக்கிட முடியும். விண்ணில் ஏவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை செய்தித்தாள் வைத்தே அறிந்துகொள்ளும் உனக்கு துணி துவைத்தல், வீடு பெருக்குதல் போன்று அற்ப வேலைகளைக் கற்றுக்கொள்ள எத்தனை நாட்களாகிவிடப் போகிறது? தாங்கள் ஒட்டுண்ணியாக இருக்கிறோம் என்ற அவப்பெயரைத் துடைக்க பெண்கள் படித்து வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்றால் அற்ப வீட்டு வேலைகளைப் பழகிக்கொண்டு ரத்த வெறி பிடித்தலையும் பெண்களிடம் இருந்தும் சுலபமாகத் தப்பித்துவிடலாமே ஆண்கள்? என்ன பாஸ் நீங்க, இந்த சப்ப மேட்டர்கூட தெரியலையே எனச் சொன்னால் பெண்ணியவாதி என முத்திரை குத்துகிறார்கள். எங்களுடைய நல்ல மனதை இந்த ஆண்கள் புரிந்துகொள்ளவில்லையே எனத் தினமும் நான் அரை மணிநேரம் ஆழமாகச் சிந்தித்து கண்ணீர் வடிக்கிறேன். நான் அழுகிறேன் என்பதே நான் பெண்ணியவாதி இல்லை என்பதற்கான ஆதாரமாகக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆண்களின் நலன் தவிர வேறெந்த நோக்கமும் என் எண்ணத்தில் இல்லை என்பதையும் தெளிவு படுத்திவிடுகிறேன்.

அடுத்து மிக நுட்பமாக இவர்கள் ஆண்களை மூளைச் சலவை செய்கிறார்கள். “ஆண் பெண்ணைச் சார்ந்தே இருக்கப் பழகிவிட்டதால் பெண்ணை தற்கால ஆண்கள் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் இந்தத் திமிர் பிடித்த பெண்களை எதிர்த்துப் பேசாமல் காலம் தள்ளப் பழகிவிட்டார்கள்” என்றெல்லாம் சொல்லி நீயெல்லாம் ஆம்பிளையா எனச் சுற்றி வளைத்துக் கேட்கிறார்கள். இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தினால்தான் ஆண் என்கிற பழைய கற்பிதத்தைத் தவறெனெ உணரும் ஆண்களை அதை மறக்க விடாமல் குழப்புகிறார்கள். “இப்படி மென்மையான ஆணை, பெண்ணே மதிக்க மாட்டாள். பெண் வலிமையைத்தான் தேர்வு செய்வாள். அதுதான் பெண்ணின் இயல்பு. அதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன” என்றெல்லாம் பெண்களை மதிக்கும் ஆண்களைத் தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்கிறார்கள். இவர்களுக்குப் பாலினத் தேர்வுகள் பற்றிய அறிவோ அறிவியலோ எதுவும் தெரியாது. ஆண், பெண் என்கிற இரட்டைக் கண்ணோட்டத்தைத் தாண்டி பாலின விதிகள் மிக விரிவானது. அறிவியல் தெரியவில்லை என்றால் அதுதான் படைப்புத்திறனுக்கு முக்கியம் என்று கூடுதல் பாயிண்ட்டாக சேர்த்துக்கொள்வார்கள்.

பெண் தேர்ந்தெடுத்தல் விதிகளில் வலிமை முக்கிய விதி என்றே கொண்டாலும் பரிணாம வளர்ச்சி என்பதே அடிப்படையில் மாறிக்கொண்டே இருப்பதுதான். “நாங்க கொஸ்டீன் பேப்பரை அடிக்கடி மாத்துவோம். நீங்கதான் சரியான பதில சொல்லக் கத்துக்கணும். நான் படிச்ச பதிலுக்கு ஏத்த கேள்வியத்தான் நீ கேக்கணும்னு சொன்னா தேர்வில் ஃபெயில் ஆயிடுவீங்க” என்று வகுப்பெடுக்க வேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு இந்த மக்கு மாணவர்கள், நல்லா படிச்சு தேர்ச்சி அடையும் ஆணை இந்தத் தேர்வு, மதிப்பெண் எல்லாம் மாயை எனக் குழப்புவது போலத்தான் மென்மையான ஆண்களை பெண்கள் புறக்கணிப்பார்கள் எனப் புரளி கிளப்புவது. உலகம் மாறும் போது தன்னை மாற்றித் தகவமைப்பதும் முன்னேறுவதும்தான் அறிவுடையவர்கள் செய்வது. அங்கனயே குத்த வச்சி உக்காந்திருந்தா, “நான் கரையேறிட்டேன் நீங்க எப்ப ஏறப்போறீங்க?” எனக் கேட்கத்தான் செய்வார்கள். அதற்குத் தீர்வாக அறிவை வளர்க்க வேண்டும். உங்களுக்கு அறிவு இல்லை. இருந்தால்தான் வளரும் என்பது புரிகிறது. பொய்களைப் பரப்ப மட்டும் அந்த அறிவு எப்படி வேலை செய்கிறது என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. நீ பைத்தியமா, பைத்தியம் மாதிரி நடிக்கிறீயா என எனக்குப் புரிவது முக்கியமல்ல, உன்னைப் பின்தொடர்பவர்களுக்குப் புரிய வேண்டும்.

இத்துடன் இந்தக் கதை முடிந்தது. நன்றி.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.