ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

செயென் (Cheyenne) பழங்குடி மக்கள், வட அமெரிக்க சமவெளி இந்தியர்கள். அல்கோன்குவியன் மொழி பேசுபவர்கள். 1700 ஆம் ஆண்டுக்கு முன், செயென் பழங்குடி மக்கள் மத்திய மினசோட்டாவில் வாழ்ந்தார்கள். அங்கு அவர்கள் விவசாயம் செய்து, வேட்டையாடி, காட்டு அரிசி சேகரித்து, மட்பாண்டங்கள் செய்தார்கள். பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஆர்கன்சாஸ் நதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் குதிரைகளைப் பெற்றனர். உணவுக்காக எருமைகளை அதிகம் நம்பியிருந்தனர்.

செயேன் பழங்குடி மக்கள் ஆன்மிகவாதிகள். வானம், பூமி, விலங்குகள், மனிதர்கள் மற்றும் இயற்கை அனைத்தும் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை என்ற நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் இரண்டு முக்கிய தெய்வங்களை நம்புகிறார்கள்: மேலே உள்ள ‘மஹியோ’ என்ற கடவுள், பூமிக்கு அடியில் வாழும் கடவுள்.

செயென் பழங்குடி மக்கள் சூரிய நடனத்தை நிகழ்த்துகிறார்கள். அப்போது அவர்கள் சிறப்பு சக்திகளைப் பெறுவதாக நம்புகிறார்கள்.

வனப் பகுதிகளில் வாழ்க்கை கடினமாக இருந்தது. பழங்குடியினர் தொடர்ந்து மோதிக் கொண்டு போட்டிகளை உருவாக்கினர். மேலும் தங்கள் குடியிருப்புகளை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . இதன் விளைவாக, செயேன் பழங்குடியினர் வலுவான போர்வீரர் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர். போர் புரிபவர்களாக அல்ல, மாறாக பாதுகாவலர்களாகவும் தலைவர்களாகவும் விளங்கினர்.

செயேன் பழங்குடியினர் குதிரையேற்றத்தில் மிகவும் திறமையானவர்கள். பழங்குடியினரின் போர் வீரர்கள் அவர்களின் திறமை, துணிச்சலுக்காகப் போற்றப்பட்டனர். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

செயென் பிரதேசத்திற்குள் அத்துமீறி அமெரிக்கர்கள் நுழைவதால் வன்முறையைத் தவிர்க்க முடியாது. காலப்போக்கில், அமெரிக்க ராணுவம் செயேன் மற்றும் பிற பூர்வீக அமெரிக்கப் பழங்குடியினரைத் தண்டிப்பதில் ஈடுபடும். இதன் காரணமாக அமெரிக்க ராணுவத்திற்கும் செயேன் பழங்குடியினருக்கும் இடையே பல போர்கள் நடந்தன.

செயேன் பழங்குடியினரின் வீரதீர வரலாற்றைப் பொருட்படுத்தாமல், செயேன் பெண்கள் உன்னதமானவர்களாகவும் தாய்மை பண்புகளுள்ளவராகவும் இருந்தனர். வீடு, கணவர், குடும்பத்திற்கான அவர்களின் சுய தியாகம் போற்றப்பட்டது. இப்படித்தான் ஆண்கள் எழுதிய வரலாற்றில் செயேன் பழங்குடி பெண்கள் சித்தரிக்கப்பட்டனர்.

செயேன் பெண்கள் வீடு கட்டுபவர்கள், போர்வீரர்கள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டி, கூரையைப் பராமரித்து, பிற பழங்குடியினருக்கு வீடுகளை உருவாக்கினர். அவர்கள் விலங்குகளின் எலும்பில் இருந்து கருவிகள், ஆயுதங்களை உருவாக்கினர். பெண்களுக்கு அதிக குணப்படுத்தும் சக்தி இருந்ததால் மருத்துவப் பெண்களாக மாறினர் . அவர்கள் சிலர் போர்த் தலைவர்களாகப் போர்களிலும் பங்கேற்றனர். பெண்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை, தங்கள் குடும்பங்களை, தங்கள் பழங்குடியினரை, தங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் போர்வீரர்களாக இருந்துள்ளனர். நீண்ட காலமாக மறைக்கப்பட்ட ஆவணங்கள், தொல்லியல் மற்றும் நாட்குறிப்புகள் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் அவர்களின் கணவர், உறவினர்களுக்காகத் துணிச்சலாகவும் கடுமையாகவும் போராடினார்கள் என்பது தெளிவானது.

எவ்வளவு துணிச்சலான வீரர்களிருந்தாலும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் ஒரு தேசம் போரில் எப்போது வீழும் தெரியுமா? அந்தத் தேசத்துப் பெண்களின் இதயங்கள் நிலத்தின் மேல் விழும்போதுதான்! – செயேன் பழமொழி

செயேன் குடும்ப அமைப்பு, தாய்வழி வழக்கத்தைச் சுற்றியே இருந்தது, அதாவது குடும்பக் கோட்பாடுகள் குடும்பத்தின் பெண்களால் தீர்மானிக்கப்பட்டன. பெண்களைப் பொறுத்தவரை, இது பழங்குடி வாழ்வில் வலுவான செல்வாக்கைக் குறிக்கிறது. போரின் போது, இருக்கும் வீடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது, அல்லது விரைவாகத் தப்பிக்க வேண்டியிருக்கும் போது, குடும்ப உடைமைகளை விரைவாகப் பட்டியலிட்டு, முகாமை உடைத்து, உடமைகள் மற்றும் உணவைப் பாதுகாப்பது பெண்களின் பொறுப்பு. வேட்டையாடிய பின் ஆண்கள் முகாமுக்குத் திரும்பும்போது, ஒரே நாளில் பெண்கள் இரண்டு மூன்று எருமைகளை அறுத்து, தோல் பதனிடுவதற்குத் தயார் செய்கிறார்கள். நீண்ட கம்புகளில் இறைச்சி உலர தொங்கவிடப்படுகிறது. பின்னர் அது எதிர்காலப் பயன்பாட்டிற்காக உலர்ந்த பைகளில் அடைக்கப்படுகிறது. எலும்புகள் பெண்களால் சுத்தம் செய்யப்பட்டு பின்னர் ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் அவற்றை கருவிகளாக மாற்றுவார்கள்.
செயேன் பெண்கள் வேலை நேரத்தில் ஒன்றுகூடி சகோதரத்துவத்தை நிலைநாட்டினர். வேலை காரணமாக ஒன்றுசேர்வது, தோண்டுவது, வரிசைப்படுத்துவது, உலர்த்துவது, போர்த்துவது மற்றும் உணவைச் சேமித்து வைப்பது என்று குழுக்களாக வேலை செய்தனர். கிசுகிசுக்கவும் சிரிக்கவும் பாடவும் பழகவும் இந்த நேரம் அவர்களுக்கு வாய்ப்பளித்தது. சில நேரம் பெண்கள் கூடும்போது, பழங்குடியினர் அனுபவித்த மரணம், கஷ்டங்களைப் பற்றிப் பேசுவார்கள், அவற்றைக் கடக்கப் போராடுவார்கள். இந்தக் கூட்டங்களின் போதுதான் அவர்கள் தங்கள் தொலைந்து போனவர்களுக்காக வருந்துவார்கள். பெண்கள் பாடல்களையும் பாடுவார்கள்.

போரில் ஈடுபட்ட வீரமங்கைகளில் சிலரை இங்கே நினைவு இவர்களுடன் கூறுவோம்!

பஃபலோ கால்ஃப் ரோடு வுமன் (Buffalo Calf Road Woman)

ரோஸ்பட் (rose bud war) போரின்போது, கிரேஸி ஹார்ஸின் தலைமையில் செயேன் படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் காயமடைந்த தலைவரைப் போர்க்களத்தில் பார்வையிட்டுவிட்டுச் சென்றனர். திடீரென்று பஃபலோ கால்ஃப் ரோடு வுமன் முழு வேகத்தில் போர்க்களத்திற்குச் சென்று தனது சகோதரனைக் காப்பாற்றினார். அவரது துணிச்சலான மீட்பு செயேன் படையினரைத் திரளச் செய்து, ஜெனரல் ஜார்ஜ் குரூக்கையும் அவரது படைகளையும் தோற்கடித்தனர். அவரின் நினைவாக, இந்த ரோஸ்பட் போரை (rose bud war) ‘பெண் தன் சகோதரனைக் காப்பாற்றிய சண்டை’ என்று அழைத்தனர். லெப்டினன்ட் கர்னல் ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரை அவர் இறப்பதற்கு முன் இந்தப் பெண்மணி குதிரையில் இருந்து அடித்த அடியை நினைவுகூர்கிறார்கள்.

மோச்சி ( Mo -Chi )

சாண்ட் க்ரீக் படுகொலை நவம்பர் 29, 1864இல் நடந்தது. நூற்றுக்கணக்கான குதிரைப்படை வீரர்கள் செயென்னைத் தாக்கினர். செயென் மக்கள் இருநூறு பேரைக் கொன்றனர். பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான ஆண்கள். மோச்சி என்கிற இளம் செயேன் பெண் உயிர் பிழைத்தார், ஆனால் அன்றைய நிகழ்வுகள் அவளது குடும்பம் மற்றும் மக்களின் மரணத்திற்கு பழிவாங்கும் பாதையில் அவளை அழைத்துச் சென்றது. அடுத்த 11 ஆண்டுகளுக்குப் படையெடுப்பு, போரில் ஈடுபட்டாள். மோச்சி தனது கணவருடன் பல போர்கள், தாக்குதல்களில் சண்டையிட்டார். அமெரிக்க ராணுவத்தால் போர்க் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ப்ரிட்டி நோஸ் (Pretty Nose)

அரபாஹோ பெண், இருப்பினும் சில ஆதாரங்களில் அவர் செயென் என்று குறிப்பிடப்படுகிறார், அவர் லிட்டில் பிகார்ன் (little big horn war) போரில் பங்கேற்றார். 101 வயது வரை வாழ்ந்த ஒரு போர்த் தலைவர் இவர்.

போரில் தங்கள் பங்கிற்கு உரிய மரியாதையைப் பெண்களுக்கு வழங்குவதில் ஆண் சமுதாயம் எப்போதும் பாரபட்சத்துடனேயே செயல்பட்டது.

(தொடரும்)