இந்தக் காலத்தில் உள்ள குழந்தைகளிடமும் பெற்றோரிடமும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்னை இருக்கிறது. தேவையில்லாத பொருள்களை வாங்கி கொடுப்பதும், அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாமல் திணறுவதும்தான்.

குழந்தைகள் உண்ணும் உணவு முதல் அவர்கள் உடுத்தும் துணிகள், பயன்படுத்தும் பொருட்கள் வரை எல்லாம் விளம்பர உத்திதான். இதை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பயன்பாடு இல்லாமல் வாங்குவதால் தேவையில்லாத பொருள்கள் வீட்டின் மூலையில் குவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

இதைப் பற்றிய புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சாதாரணமாக செருப்பை எடுத்துக்கொண்டால் இங்கே ஒரு குழந்தைக்கே 3 ஜோடி செருப்புகள். என் வீட்டிலும் இதே கதைதான். இதைத் தவிர்க்கவே நானும் முயற்சி செய்து வருகிறேன். ஒரு பொருளின் பயன்பாடு முற்றிலும் முடிந்தவிட்ட பிறகே அடுத்த பொருளை வாங்க வேண்டும்.

முதலில் கூறுவது போல விளம்பர உத்தி ஒரு காரணம் என்றாலும் சுற்றியிருக்கும் நாம் பழகும் மனிதர்களும் இன்னொரு காரணம். அடுத்தது பெற்றோரின் கூடுதல் அன்பு என்ற பெயரில் குழந்தைகள் கேட்பதையும் கேட்காததையும் வாங்கிக் கொடுக்க நினைப்பது. ஒரு வேளை வாங்கிக் கொடுக்க இயலவில்லை என்றால் ‘ஐயோ, நம்மால் இயலவில்லையே’ என்ற எண்ணம்.

குழந்தைகளை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. பெற்றோரின் அளவுக்கு அதிகமான அன்பும் தேவையில்லாததாகச் சில நேரம் தோன்றும்.

மதி, செழியனிடமும் இந்தப் பழக்கம் உண்டு. ஓர் ஆண்டின் மூன்று பருவத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் போதும், “அம்மா, எனக்கு புது பேக், சிலேட், பென்சில் வேணும்” என்று கேட்பது வழக்கமாகிவிட்டது. அவர்கள் குழந்தைகள் தாமே!

ஆனால், அவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய பொருள் நல்லநிலையில் இருக்கும்போதே புதிய பொருள்கள் கேட்பது முரணானது. இதை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பை பிய்ந்த பிறகு புதுப் பை வாங்கித் தருகிறேன். இந்தப் பை நன்றாக இருக்கும் போதே புதுப் பை வாங்கினால் பழைய பை பயன்படுத்த முடியாமல் வீணாகும். இதனால் நமக்குப் பொருட்ச் செலவும் பூமிக்கு சூழல் பாதிப்பும்தான் மிச்சம். ஆனால், குழந்தைகள் அவ்வளவு எளிதில் அதை விடுவதில்லை.

“அவன் மட்டும் அப்படி வச்சிருக்கான். அவங்க வீட்ல வாங்கி கொடுக்காங்க, ஆனா, நீங்க மட்டும் எங்களுக்கு வாங்கித் தரமாட்டீங்க” என்று பதில் மொழி கூறுதலும் இங்கே நடக்கும்.

சில நேரம் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் போது, மதியும் செழியனும், “எப்படியும் நம்ம கேட்டதை வாங்கித் தர மாட்டாங்க” என்று சொல்வது உண்டு.
குழந்தைகள் மற்றவர்களை பற்றிக் கூறும்போது நீங்களும் சொல்லலாம், “உங்க கிட்ட இருக்கிற டிரஸ், பைகளைவிட எத்தனையோ பேர் எவ்வளவு மோசமான நிலையில் வச்சிருக்காங்க… அதைவிட உங்க கிட்ட நல்ல பொருளாதான் இருக்கு” என்று எடுத்துச் சொல்லலாம்.

‘யாரும் பென்சில் இல்லை, ரப்பர் இல்லை என்று கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும்’ என்று நான் சொன்னால், அதற்குப் பிள்ளைகள், ‘அப்போ இரண்டு பென்சில் வாங்கிக் கொடு. யாரு இல்லனு கேட்டாலும் கொடுக்கிறோம்’ என்று. குழந்தைகளைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.

குழந்தைகள் அடிக்கடி அதை வாங்கிக் கொடு இதை வாங்கிக் கொடு என்று கூறும் போதெல்லாம், உங்கள் பள்ளி சிறுசேமிப்பில் சேர்த்து வைக்கீறீர்கள் அல்லவா, இந்த வருடம் அந்தச் சேமிப்பு பணத்தை வைத்து உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொள்ளுங்கள் என்பேன். அதற்கு முதலில் நீங்க சேமித்து வைக்க வேண்டும் என்பேன்.

சிறு வயதிலே இந்தப் பழக்கத்தைக் கொண்டுவருவதன் மூலம் தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிக்காமலும் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.

குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். புத்தகங்களைப் பரிசளியுங்கள். சுற்றுலா, கண்காட்சி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள், இயற்கையை ரசிக்கச் செய்யுங்கள்.
பாடல்களைக் கேட்க அனுமதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து பாடுங்கள், ஆடுங்கள், விளையாடுங்கள். அவர்களைக் கொண்டாடுங்கள்.

அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். அவர்களையும் பேச அனுமதியுங்கள். அவர்கள் பேசுவதையும் பொறுமையுடன் கேளுங்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.