Esther Miriam Zimmer Lederberg (1922 – 2006)

அமெரிக்காவைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளரும் மரபணுவியலாளருமான எஸ்தர், பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். உலகளாவிய பொருளாதார மந்தநிலையின்போது எஸ்தரின் குடும்பம் கடுமையான வறுமையைச் சந்தித்தது. ஆனாலும் அவரது பெற்றோர் எஸ்தரைப் படிக்க வைத்தனர். பெண்களுக்கு அறிவியல் படிப்பு கடினமாக இருக்கும் என்று பேராசிரியர்கள் தடுத்தாலும், ஆர்வத்தின் காரணமாக உயிர்வேதியியல் படிப்பில் சேர்ந்தார் எஸ்தர். அடுத்தடுத்து மரபணுவியலில் பட்டங்களைப் பெற்றார்.

அப்போது மரபணுவியல் மற்றும் நுண்ணுயிரியலில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளராக இருந்த ஜோஷுவா லெடர்பெர்க்கைத் திருமணம் செய்துகொண்டார். முனைவர் பட்டம், முது முனைவர் பட்டங்களையும் பெற்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். ஓர் ஆராய்ச்சியின்போது லாம்டா வைரஸ் என்ற ஒருவகை நுண்ணுயிரியை எஸ்தர் கண்டறிந்தார். பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களைப் பற்றி நாம் படித்திருப்போம். அந்தக் காலத்தில், இதுபோன்ற பாக்டீரியா உண்ணிகள் எல்லாமே பாக்டீரியாக்களின் உடலுக்குள் தங்களது மரபணுக்களைச் செலுத்தி பாக்டீரியாவின் உடலை அழிக்கும் தன்மை கொண்டவை என்று நம்பப்பட்டது. ஆனால், எஸ்தர் கண்டறிந்த லாம்டா வித்தியாசமானதாக இருந்தது. பாக்டீரியாவின் உடலுக்குள் தனது மரபணுவைச் செலுத்தி, பாக்டீரியாவின் மரபணுவுடன் தன்னுடைய மரபணுவை இணைத்துக்கொண்டு வாழும் ஆற்றல் இதற்கு இருந்தது. இதை எஸ்தர் ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.

Fertility factor எனப்படும் ஒருவகை ப்ளாஸ்மிட் கணிமி, மரபணு மாற்றங்கள் எப்படி வருகின்றன என்பது போன்ற பல விஷயங்களைத் தனது கணவர் ஜோஷுவாவுடன் இணைந்து கண்டறிந்தார். குறிப்பாக, ஒரு நுண்ணுயிர்த் தட்டிலிருந்து இன்னொரு தட்டுக்கு உயிரிகளை மாற்ற வெல்வெட் துணியைப் பயன்படுத்தும் முறையை வடிவமைத்தார். ஆராய்ச்சியைத் தொடரவிடாமல் பல்வேறு சின்னச் சின்ன வேலைகள் தரப்பட்டாலும் அதையும் மீறி எஸ்தர் முன்னேறினார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஜோஷுவாவின் மனைவியாகவும் புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரின் உதவியாளராகவும் மட்டுமே எஸ்தரைப் பார்த்தனர். தனிப்பட்ட அறிவியலாளராக அவர் கவனிக்கப்படவில்லை.

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.

நோபல் பரிசு கிடைத்த உடனேயே ஜோஷுவாவுக்கு உயர் பதவியும் ஆராய்ச்சிக்கான அதிக அளவிலான நிதியும் தரப்பட்டன. எஸ்தருக்கு வேறு ஓர் ஆராய்ச்சிக்கூடத்தில் சாதாரணமான ஆராய்ச்சி உதவியாளர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுக்காகவும் அவர் போராட வேண்டியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு தற்காலிகப் பேராசியர் பதவி கொடுக்கப்பட்டது, இதை நிரந்தரமாக்க வழியில்லை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. விரக்தி அடைந்தாலும் எஸ்தர் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
எஸ்தரின் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) மற்றும் மரபணுப் பொறியியல் (Genetic Engineering) போன்ற துறைகள் உருவாவதற்கே அடிப்படையாக இருந்தன. ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் பதவி, அங்கீகாரம், விருது என்று எதுவுமே அவருக்கு வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் அவருக்குத் தேவையான ஆராய்ச்சி நிதிகூட ஒழுங்காகத் தரப்படவில்லை. ‘லெடர்பர்க்’ என்கிற பெயர் வேறு ஒட்டிக்கொண்டதால், எஸ்தரின் ஆராய்ச்சிகளைக்கூட ஜோஷுவா லெடர்பர்க்கின் ஆய்வுகளாகவே உலகம் நினைத்துக்கொண்டது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளைப் படித்ததாலோ என்னவோ, எஸ்தரும் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

எஸ்தரின் இரண்டாவது கணவரான மேத்யூ சிமோன், “பெண் என்பதாலேயே அவரது ஆராய்ச்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். எஸ்தரின் பங்களிப்புகள், அவரது அறிவியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்காக ஓர் இணையதளத்தை நிறுவி, அதில் எஸ்தரின் குறிப்பேடுகள் உட்பட எல்லாவற்றையும் பதிவேற்றம் செய்துவருகிறார்!

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!