Rosalind Franklin (1920-1958)

டி.என்.ஏ என்று அழைக்கப்படும் Deoxy Ribo Nucleic Acid என்பது உயிரின் அடிப்படை. இந்த டி.என்.ஏ என்ற நியூக்ளிக் அமிலம், இரட்டைச்சுருள் (Double Helix) வடிவம் கொண்டது எனவும், அதை ஜேம்ஸ் வாட்ஸன், ஃப்ரான்சிஸ் க்ரிக் ஆகிய இருவரும் கண்டறிந்தனர் எனவும் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். இந்தக் கண்டுபிடிப்புக்காக 1962ஆம் ஆண்டில் இவர்கள் இருவருக்கும் மௌரீஸ் வில்சன் என்ற அறிவியலாளருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், உண்மையில் இந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடித்திருக்க வேண்டியது ஒரு பெண் அறிவியலாளர்.

அவரது பெயர் ரோஸலிண்ட் ஃப்ராங்க்லின். பிரிட்டனில் பிறந்த இவர், சிறுவயது முதலே அறிவியல் ஆர்வம் கொண்டிருந்தார். முதுநிலைப் படிப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் நிலக்கரி பயன்பாடு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். நிலக்கரியில் இருக்கும் துளைகளை ஆராய்ந்து, வெவ்வேறு வகையான நிலக்கரிகள் எப்படிப்பட்ட வகையில் எரியும், எரிபொருட்களாக அவற்றின் பயன்பாடு என்ன என்பது பற்றிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். பிறகு லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் எக்ஸ்-ரே படிகவியலில் (X-ray crystallography) ஆராய்ச்சி மேற்கொண்டார். எக்ஸ்ரே கதிர்களை ஒரு பொருளின்மீது பாய்ச்சி, அவற்றின்மீது பட்டுத் திரும்பி வரும் கதிர்களை ஆராய்ந்து அதன்மூலம் அந்தப் பொருளின் வடிவத்தை அறியும் செயல்பாடு இது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனி உணவுக்கூடங்கள், சக மாணவர்கள் ஒத்துழைக்காத சூழல் என எல்லாவற்றையும் மீறி ரோஸலிண்ட் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்.

இந்தப் படிகவியல் ஆராய்ச்சியில் டி.என்.ஏ படிகங்களை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியில் 1952ஆம் ஆண்டில் Photo 51 என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற படிகவியல் படம் எடுக்கப்பட்டது. இந்த ஒரு புகைப்படத்தை எடுக்கவே 100 மணி நேரம் ஆனதாம், புகைப்படத்திலிருந்து கிடைத்த தரவுகளைக் கணக்கிடவே ஓர் ஆண்டு ஆகியிருக்கிறது! இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட 51வது புகைப்படம் என்பதால் அப்பெயர் வந்தது என்பதும் கூடுதல் தகவல். இந்த 51வது புகைப்படம்தான் டி.என்.ஏ வடிவத்திற்கான முழுமுதல் ஆதாரமாக மாறியது.

படம் கிடைத்த பின்னரும் சில விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் ரோஸலிண்ட் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார், எல்லாக் கணக்குகளையும் செய்து முடித்து சரிபார்த்தார். உறுதியாகத் தெரியாதவரை எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அடுத்தடுத்த ஆதாரங்களைச் சேகரித்தார்.

இன்னொருபுறம் ஜேம்ஸ் வாட்ஸன், ஃப்ரான்சிஸ் க்ரிக் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள், டி.என்.ஏவின் வடிவம் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். வெவ்வேறு வடிவங்களைக் கற்பனை செய்து பார்த்தும் கணக்குகள் போட்டும்கூட இறுதி முடிவை அவர்களால் எட்ட முடியவில்லை.

இந்தச் சூழலில் ரோஸலிண்டின் ஆய்வுக்கூடத்தில் அவருடன் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது சக ஊழியரான மௌரீஸ் வில்கின்ஸை வாட்ஸன், க்ரிக் ஆகிய இருவரும் சந்தித்தனர். வந்திருந்த இருவரிடமும் ரோஸலிண்டின் படிகப் புகைப்படத்தையும் அவரது குறிப்புகளையும் வில்கின்ஸ் காட்டினார். டி.என்.ஏ-வின் வடிவம் எப்படி இருக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்த இருவரும் நேரடியான ஒரு வடிவ மாதிரி கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதை அடிப்படையாக வைத்து சில வடிவங்களை உருவாக்கிக் கணக்குப் போட்டுப் பார்த்ததில், சுருள் வடிவம் கணக்குகளுடன் சரியாகப் பொருந்தவே, அதையே இறுதியாக வைத்து ஒரு கட்டுரையை எழுதி முடித்தனர்.

இந்தப் பக்கம் ரோஸலிண்டும் தன்னுடைய ஆராய்ச்சியை முடித்திருந்தார், டி.என்.ஏ-வின் இரட்டைச் சுருள் வடிவத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அவர் நேச்சர் சஞ்சிகைக்கு அனுப்பினார். வாட்ஸன், க்ரிக்கின் ஆராய்ச்சி அடுத்த சில நாட்களில் நிறைவுபெற்றது, அவர்களும் அதேபோன்ற ஒரு கட்டுரையை எழுதி நேச்சர் இதழுக்கு அனுப்பினர். தங்களது கட்டுரையில், ரோஸலிண்ட் என்பவரின் ஆராய்ச்சி தங்களுக்கு உதவியது என மருந்துக்குக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை! நேச்சர் இதழிலும் இவர்களது கட்டுரை முதலாவதாகவும் ரோஸலிண்டின் கட்டுரை இரண்டாவதாகவும் பிரசுரிக்கப்படவே, ரோஸலிண்டின் ஆராய்ச்சி முதலில் வந்தது என்பது மறைக்கப்பட்டது. இந்த இருவரின் கண்டுபிடிப்பை ரோஸலிண்டின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், ‘உயிரின் ரகசியத்தை’ கண்டறிந்ததாகப் புகழ் மழையில் நனைந்த வாட்ஸனும் க்ரிக்கும் ரோஸலிண்டின் பெயர்களை கவனமாகத் தவிர்த்தனர். குறிப்பாக வாட்ஸன், தன்னுடைய நூலில், ‘முட்டாள் பெண்மணி’, ‘சராசரி உடைகள் அணிந்த மூர்க்கமான பெண், அழகானவர் என்றாலும் தனது பெண் தன்மையை நிராகரிக்கும்படி உடை அணிகிறார், சொல்வதைக் கேட்காமல் எதிர்ப் பேச்சு பேசுகிறார்’ என்றெல்லாம் ரோஸலிண்டை நேரடியாகவே தாக்கினார்! தனது ஆய்வுப்படத்தை அவர்கள் பார்த்திருப்பதையோ தன்னைப் பற்றி அவர்கள் இப்படிப் பேசுவதையோ அறியாத ரோஸலிண்ட் புற்றுநோயால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இறந்தார்.

1962ஆம் ஆண்டு வாட்ஸன், க்ரிக், வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் நடைமுறை இல்லாததால் ரோஸலிண்டுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் இரட்டைச்சுருள் டி.என்.ஏ வடிவத்துக்காவது Rosalind-Watson-Crick மாடல் என்று பெயரிட்டிருக்கலாம், அதுவும் நடக்கவில்லை. வாட்ஸன் – க்ரிக் மாதிரி என்றே இந்த இரட்டைச்சுருள் வடிவம் அழைக்கப்படுகிறது.

சில ஆண்டுகளில் ‘ரோஸலிண்ட்டின் ஆராய்ச்சி இல்லாமல் எங்களது கண்டுபிடிப்பு சாத்தியமாகியிருக்காது’ என்று க்ரிக் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், வாட்ஸன் தொடர்ந்து ரோஸலிண்ட்டின் ஆராய்ச்சியை மறுதலித்தார். ‘ரோஸி’ என்று அவராகவே ஒரு பெயரை வைத்து ரோஸலிண்டைப் பற்றிக் குறைவான கருத்துகளை வைத்தார். இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

ரோஸலிண்டின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதிய ஹொவர்ட் மார்கெல், ‘அவர் ஒரு சக ஆராய்ச்சியாளராகவே பார்க்கப்படவில்லை. பெண் ஒருவரின் ஆராய்ச்சி என்பதால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மனநிலையே அந்தக் காலத்தில் இருந்தது’ என்கிறார்.

நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டிய ஒரு விஞ்ஞானி, பள்ளிப் பாடங்களில் டி.என்.ஏ பற்றிய குறிப்பில் ஒரு ‘கூடுதல்’ பெயராக மட்டுமே நின்றுவிட்டார். குறைந்தபட்சம் முழுவதும் மறைக்கப்படாமல் பாடங்களில் அவரது பெயர் இருப்பது பற்றி ஆறுதலடைய வேண்டியதுதான்.

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!