1962 டிசம்பர் 10 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள அரங்கில் கைத்தட்டல்கள் ஆர்ப்பரிக்க பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன், மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு டிஎன்ஏ மூலக்கூறு அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. டிஎன்ஏ என்று சொன்னதும் ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் வடிவம்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அமைப்பைக் கண்டுபிடித்ததற்காகத்தான் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்றும் நம் அறிவியல் புத்தகங்களில் டிஎன்ஏ வடிவம் வாட்சன், கிரிக்ஸ் மாடல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

இதை வாட்சன், கிரிக்ஸ் மாடல் என்று குறிப்பிடப்படுவது சரிதானா என்ற கேள்வியை எழுப்புகிறது, ரோசாலிண்ட் பிராங்க்ளின் குறித்து நாம் அறியும்போது. யார் இந்த ரோசாலிண்ட் பிராங்க்ளின்?

1920 ஜூலை 25 அன்று லண்டனில் பிறந்த ரோசலிண்ட் (Rosalind Elsie Franklin), நியூன்ஹாம் கல்லூரியில் (Newnham College) இயல் வேதியியல் (physical chemistry) படித்தார். 1941இல் பட்டம் பெற்ற இவருக்கு கேம்பிரிட்ஜில் இயல் வேதியியலில் ஆராய்ச்சி நடத்த ஃபெல்லோஷிப் கிடைத்தது. பிரிட்டிஷ் நிலக்கரி பயன்பாட்டு ஆராய்ச்சி சங்கத்தில் (CURA) உதவி ஆராய்ச்சியாளர் வேலை கிடைத்ததால், ஃபெல்லோஷிப்பை விட்டுவிட்டார்.

அங்கு முழு சுதந்திரத்துடன் ஆராய்ச்சிகளைச் செய்து நிலக்கரியின் இயற்பியல் அமைப்பு பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள், ஆவணங்களை வெளியிட்டார். தனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக பாரிஸ் சென்றார் ரோசாலிண்ட். அங்கு பிரபலமான ஆராய்ச்சியாளர் மார்செல் மாத்தியூ ரோசாலிண்ட்டின் திறமையால் கவரப்பட்டு, வேலை கொடுத்தார். அங்கே ஜாக் மெரிங்கிடம் (Jacques Mering) இருந்து எக்ஸ் கதிர் விலகல் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1951லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ரோசலிண்ட்டிற்கு 3 ஆண்டுகளுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் கிங்ஸ் கல்லூரியில், எக்ஸ்ரே படிகவியல் பிரிவை நிறுவி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எத்தனித்தார். ஆனால், ஏற்கெனவே அங்கு மாரிஸ் வில்கின்ஸ் எக்ஸ்ரே படிகவியல் நுட்பத்தைப் பயன்படுத்தி டிஎன்ஏ குறித்த தகவல்களை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

வில்கின்ஸ் அங்கு இல்லாத நேரத்தில் ஆராய்ச்சிக் கூடத்திற்கு ரோசாலிண்ட் சென்றிருந்தார். வில்கின்ஸ் திரும்பி வந்தபோது, ரோசாலிண்ட் தனக்கு உதவியாளராகப் பணியில் அமர்த்தப்பட்டவர் என்று நினைத்தார். உண்மை அதுவல்ல எனத் தெரிந்தவுடன் வில்கின்ஸ் ரோசாலிண்ட்டை வெறுக்க ஆரம்பித்தார். கிங்ஸ் கல்லூரியில் நிலவிய ஆணாதிக்க சூழலில் ரோசலிண்ட் தனிமைப்படுத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்ட நிலையிலும் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை நிறுவவும் தன் முத்திரையைப் பதிக்கவும் கடுமையாக உழைத்தார்.

அங்கு வேலை செய்யும் போது எக்ஸ் கதிர் விலகர் மூலம் படிகப்படுத்தப்பட்ட டிஎன்ஏ இழைகளின் படங்களை உயர் தெளிவுத்திறனுடன் எடுத்தார் ரோசலிண்ட். அதிலிருந்து டிஎன்ஏ இழைகளின் அடிப்படை பரிமாணங்களையும் பாஸ்பேட்டுகள் ஹெலிகல் அமைப்பின் வெளிப்புறத்தில் இருக்கலாம் எனவும் அவர் கண்டறிந்தார்.

இவர் எடுத்த இந்தப் புகைப்படம்தான் உலகில் முதன் முதலில் எடுக்கப்பட்ட டிஎன்ஏ படம்.

ஜேம்ஸ் வாட்சன் ‘தி டபுள் ஹெலிக்ஸ்’ (The Double Helix) என்கிற புத்தகத்தில், கிங்ஸ் கல்லூரியில் ரோசாலிண்ட் தான் டிஎன்ஏ குறித்து கண்டுபிடித்தவற்றைப் பற்றி ஒரு விரிவுரை நடத்தினார் என்றும் அதில் கலந்துகொண்ட வாட்சன் ரோசாலிண்ட்டின் பேச்சில் கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அது சார்ந்த விஷயங்களைத் தன்னுடன் டிஎன்ஏ ஆராய்ச்சியில் ஈடுப்பாடிருந்த பிரான்சிஸ் கிரிக்கிடம் முழுமையாக விவரிக்க முடியவில்லை என்றும் எழுதியுள்ளார்.

வாட்சன், கிரிக் குறித்து ரோசாலிண்ட் அறிந்திருக்கவில்லை, முக்கியமாகத் தன்னுடன் பணியாற்றிய வில்கின்ஸுக்கு இவர்கள் இருவருடனும் இருந்த தொடர்பு குறித்தும் அறியாத ரோசாலிண்ட், தன்னுடைய டிஎன்ஏ ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில் ரோசலிண்ட் எடுத்த எக்ஸ்ரே படத்தை வாட்சன், கிரிக்கிடம் ரோசாலிண்ட்டின் அனுமதியின்றி வில்கின்ஸ் காட்டினார். வாட்சன், கிரிக் ஏற்கெனவே டிஎன்ஏ அமைப்பைக் கண்டுபிடிக்கவும் அது குறித்த தகவல்களை அறியவும் செய்து வந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக்கியது ரோசாலிண்ட்டின் இந்தப் படம். இந்தப் படத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சிகள் செய்து, டிஎன்ஏ வடிவம் இப்படி இருக்கலாம் என ஒரு கோட்பாட்டை நிறுவினர் இருவரும்.

இதே நேரத்தில் தான் எடுத்த படத்தை வைத்து டிஎன்ஏ குறித்த தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்த ரோசாலிண்ட், ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு தன் ஆராய்ச்சி முடிவுகளையும் எக்ஸ்ரே தரவையும் வெளியிட, அதே நேரத்தில் வாட்சன், கிரிக்கும் ரோசாலிண்ட் எடுத்த எக்ஸ்ரே படத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளையும், டிஎன்ஏ குறித்த கோட்பாட்டையும் ஆய்வரிக்கையாக வெளியிட்டனர். ஒரே நேரத்தில் வெளியான இந்த இரு ஆய்வறிக்கைகளில் வாட்சன், கிரிக்கின் ஆய்வறிக்கைகள் மட்டுமே பிரபலமாகப் பேசப்பட்டன. இது குறித்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ரோசலிண்ட், 1953இல் கிங்ஸ் கல்லூரியில் இருந்து வெளியேறி பிர்க்பெக் (Birkbek) ஆராய்ச்சிக் கூடத்தில் Tobacco Mosaic Virus குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்த ஆராய்ச்சி தொடர்பாகவும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட ரோசாலிண்ட், 1958இல் புற்றுநோயால் மரணமடைந்தார்.

1962 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன், மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு டிஎன்ஏ கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவித்தனர். உலகம் கொண்டாடும் அறிவியலாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர் இருவரும்.

முதன் முதலில் டிஎன்ஏ படமெடுத்த ரோசலிண்ட்டின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த வெகுமதிகளும் இல்லாமல், டிஎன்ஏ கட்டமைப்பின் தாய் என உலகம் போற்ற வேண்டியவர் காற்றில் கரைந்து காணாமல் ஆக்கப்பட்டார், இப்போது வரலாற்றில் அவர் டார்க் லேடி ஆஃப் டிஎன்ஏ (Dark Lady of DNA) என்றே நிலைத்துவிட்டார்.

வரலாறு நெடுக பெண்களின் சாதனைகள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்துள்ளது. அப்படி வரலாறு மறைத்தாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அறிவியல் துறையில் மிக முக்கியக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி, அறிவியல் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றிய ரோசாலிண்ட் பிராங்க்ளின் மாபெரும் அறிவியல் மேதையாக இப்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.

படைப்பாளர்:

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். நாத்திகவாதி. பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.