ஹார்மோன்களினால் பதின் பருவத்தில் ஆரம்பித்து மெனோபாஸ் காலம் வரை ஏகப்பட்ட சிக்கல்களை அனுபவிக்கும் பெண்களுக்குக் கூடுதல் சுமையாகக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு என்னும் அறுவை சிகிச்சையும் தொடர்கிறது. எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து, எப்போது குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் தீர்மானிக்க முடிவதில்லை.

சில வருடம் முன்பு வரை பிரசவத்தின்போது பெண் குழந்தை பெற்றுவிட்டால் அடுத்து ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரை அவள் தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இன்றும் முதல் குழந்தை பெண் என்றால் அடுத்த குழந்தை ஆணாக இருக்காதா எனும் ஆசையில் இரண்டு, மூன்று குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் உண்டு. ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதை பெருமையாகவும் பெண் குழந்தையா என்று சற்று இளக்காரமாகக் கேட்பதையும் பல இடங்களில் பார்க்கலாம். நகர் பகுதிகளிலேயே இந்த வித்தியாசம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும்போது, கிராமப்புறங்களில் கேட்கவா வேண்டும்.

பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி உரிமை அனைத்தும் போராடி பெற்றாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதில் அது நடப்பதில்லை. சமீபமாகத்தான் பெண் கல்வி கற்று முன்னேறி வருகிறாள் எனும் போதும் இன்னும் அவளின் உரிமைகள் பற்றிய புரிதல் அவளுக்கோ சமூகத்துக்கோ பெரிதாக இல்லை. அதனால் பெண் குழந்தை என்றால், திருமணமாகி வேறு ஒருவர் வீட்டுக்குச் செல்பவள், ஆண் குழந்தை என்றால் தம்முடன் கடைசிக் காலம் வரை இருந்து தம்மையும் தம் சொத்தையும் காப்பாற்றுபவன் என்ற சிந்தனை ஆண்களுக்கும் ஆண் மைய சமூக அமைப்பு உருவாக்கிய பெண்களுக்கும் தொடர்கிறது.

அதன் விளைவாகத்தான் ஆண்களுக்குச் சாதகமான விஷயங்கள் மட்டும் சரி என்பது நடைமுறையில் உள்ளது. பெண்ணின் உடல் நலம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவள் சார்ந்த ஆண்களின் நலம்தான் முதன்மை என்று பெண்ணுக்குள் ஊற்றி வளர்க்கப்படுகிறது.

ஒரு பெண் முதல் குழந்தை பெற்ற பின் அவளது உடலில் நடக்கும் ஹார்மோன்களின் ஆட்டம் கொஞ்சம் சமநிலை அடைய தொடங்கும்போதே, அடுத்த குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவதற்காக அல்லது முற்றிலும் வேண்டாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஒரு குழந்தை போதும் என்று தற்போது சிலர் நினைத்தாலும், இன்றும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

கர்ப்பத்தடை மாத்திரை, பாதுகாப்பான கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பெண்ணின் முன்னேற்றத்தில் ஒரு பெரிய மைல் கல் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை என்றாலும், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை, கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போட மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆணுக்கு மிக எளிதானது. ஆனால், பெரும்பாலும் பெண்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எந்தத் தொந்தரவும் தராத ஒரு தரமான ஆணுறை கரு உருவாவதைத் தடுக்க போதும் என்றாலும், பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும் காப்பர் டி, பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் ஹார்மோன் மாத்திரைகள்தாம் இன்றளவும் பல பெண்களின் கர்ப்பத் தடை சாதனமாக இருந்து வருகிறது.

தற்போது கர்ப்பம் தரிக்க வேண்டாம் எனக் கர்ப்பத்தடை வழிமுறைகளை மேற்கொண்ட பெண்களாகட்டும், அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவில் இருக்கும் பெண் முன்னேற்பாடுகளை மீறி கருத்தரித்துவிட்டால் அவ்வளவுதான். அவள் உடல் ஒரு பரிசோதனை சாலைபோலதான் அவளாலும் பிறராலும் கையாளப்படும். மிகப் பைத்தியக்காரத்தனமான, அறிவியலுக்குச் சிறிதும் ஒவ்வாத பல்வேறு நடைமுறைகள் கருக்கலைப்பு பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்ட வருகிறது. பப்பாளிப் பழம், அன்னாசிப் பழம், எள்ளுருண்டை சாப்பிடுவது என ஆரம்பித்து எருக்கம் குச்சியைப் பிறப்புறப்பில் நுழைப்பது வரை பல கொடூர வழிமுறைகள் பின்பற்ற வந்ததுடன், இன்றும் ஆங்காங்கு மறைமுகமாக நடந்து வருகிறது.

எதிர்பாராத கர்ப்பம் அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தில் அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்களாகத்தான் இருக்க முடியும். அது திருமணத்திற்கு முன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் என்றாலும், திருமணம் முடிந்த பின் ஏற்படும் கர்ப்பம் என்றாலும் அதன் பக்க விளைவுகள் என்னவோ பெண்ணுக்குதான். ஆனால், ஆண் பதற்றமாகி பெண்ணிடம் மாத்திரை எடுக்கவில்லையா, அது கூட ஒழுங்கா செய்ய மாட்டியா என்று பெண்ணைத் திட்டுவதும், அல்லது இப்போ குழந்தை வேண்டாம், அபார்ஷன் பண்ணிடலாம் எனக் கொஞ்சி கெஞ்சுவதும் சகஜம். ஆனால், என்ன நடந்தாலும், ஏற்படப் போகும் வலிகளை அந்தப் பெண்தான் சுமக்க வேண்டும்.

பாலியல் விழிப்புணர்வு இல்லாத நம் நாட்டில் முறையான திருமண உறவில் கரு உண்டாகி, மருத்துவமனையில் கணவர் துணையுடன் கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கே அவ்வளவு வலிகளும் இன்னல்களும் காத்திருக்க, சமூகத்தால் முறை தவறிய கர்ப்பம் என்று வரையறுக்கப்பட்ட கருவைச் சுமக்கும் பெண்களின் நிலை கொடூரமானது. மருத்துவமனைக்குச் செல்லாமல் இயற்கை வழியில் கருக்கலைக்கிறேன் என்று கண்டவற்றையும் தின்று, அதில் பலன் ஏதும் கிடைக்காமல் போலி மருத்துவர்களிடம் சென்று கருக்கலைப்பு செய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் பெண்கள் அநேகம் பேர்.

கருக்கலைப்பில் உயிரிழப்பு, கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்து கருவைக் கலைப்பது என்பது இன்றளவும் நடக்கிறது. சமீபத்தில்கூட திருவண்ணாமலையில் மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர்கள் மூலமாக அரசு அனுமதியின்றி இத்தகைய கருக்கலைப்புகளைச் செய்து வந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. இதெல்லாம் கடந்த நூற்றாண்டு கதை அல்ல. ஓரிரு ஆண்டுகளுக்குள் அரங்கேறியதுதான். இது போல பல முறையான மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவர்கள் அல்லாது போலி மருத்துவர்களால் அரசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடத்தப்படும் மருத்துவமனைகள் ஆங்காங்கு பெண்களின் உயிரோடு விளையாடிக் கொண்டு இருக்கின்றன.

டி அண்ட் சி எனப்படும் கருக்கலைப்பு பெண்ணின் உயிருக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பது குறித்த புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு கணவர் தற்போது இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று கூற, எனக்கும் முதல் குழந்தை பிறந்து மசக்கையில் ஆரம்பித்து பிள்ளைப்பேறு வரை சந்தித்த வலிகளும் கண்முன் வந்து போக, கருக்கலைப்புக்குச் சம்மதித்து விட்டேன். எனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரிடமே கூற அவர் மறுநாள் வருமாறு கூறிவிட்டார். வீட்டில் என் அம்மா மறுக்க, சித்தியுடன் மருத்துவமனை சென்று கருக்கலைப்பும் செய்து வந்துவிட்டேன்.

இப்போது போல அப்போது எளிய முறை இல்லை. என்ன வலி மரத்துப் போக ஊசி போட்டாலும் கத்த வேண்டும் போல வலி இருக்கதான் செய்தது. நம் உள்ளுறுப்புக்குள் சுரண்டி சுத்தப்படுத்துவதை நன்றாகவே உணர முடியும். முடிந்து வீட்டுக்கு வந்த பின் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆஹா, வாந்தி இல்லை என்று சந்தோஷத்துடன் இரண்டு நாள் கழிய, மூன்றாம் நாள் ஆரம்பித்தது வயிற்று வலி. உயிர் போகும் வலி, பிரசவ வலியைவிட அதீதமான வலியும் கட்டுக்கடங்கா உதிரப்போக்கும் பீதியைத் தர, என் அம்மாவோ சொன்னேனா கேட்டியா என்ற ரீதியில் வார்த்தைகளால் வறுக்க, கணவருக்கோ கையறு நிலை.

காலையில் ஆரம்பித்து மாலை வரை இது தொடர, அதற்கு மேல் முடியாத என்ற நிலையில் மருத்துவரிடம் சென்றோம். மருத்துவர் உள்ளே பிசுறுகள் இருக்கும் நாளை காலை மீண்டும் டி அண்ட் சி செய்கிறேன் என வலி குறையவும், தூக்கத்துக்கும் ஊசி மாத்திரைகள் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு கூறிவிட்டார். மருத்துவரின் வீடு மருத்துவமனை மாடியில் என்பதால் துணிந்து தங்கி, இரவு முழுவதும் எந்த ஊசிக்கும் அடங்க மறுத்த வலியுடன் போராடி, மறுநாள் மயக்க மருந்தோ ஊசியோ போடப்படாமல் வலியில் கதற கதறதான் ரீ டி அண்ட் சி நடந்தது.

கருக்கலைப்பு என்பது எவ்வளவு வலி மிகுந்தது, சற்றே பிசகினால் உயிருக்கே உலை வைக்கக்கூடியது என்பது அப்போதுதான் புரிந்தது. ஆனால், இன்றளவும் அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் கடைகளில் கிடைக்கின்றன என்று வாங்கிச் சாப்பிட்டு, முழுதாகக் கரு வெளியேறாமல் இருந்தால், அவர்கள் நிலை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

கரு உண்டாகாமல் இருக்க பாதுகாப்பான வழிமுறைகளுடனான உடலுறவுதான் சிறந்தது என்றாலும் எதிர்பாராமல் கரு உருவாகி வேண்டாம் எனக் கருதினால், கருக்கலைப்பு செய்யலாம். அது சம்மந்தப்பட்ட பெண்ணின் உரிமை. அதை முறையாக மருத்துவமனைகளில் மருத்துவரின் மேற்பார்வையில் செய்ய வேண்டியது அவசியம். திருமணம் ஆகாத பெண்களுக்குக்கூட எதிர்பாராத கர்ப்பத்தைக் கலைக்க உரிமை இருக்கிறது என்று சட்டம் இருக்கும்போது சமூகத்தின் நாக்குக்குப் பயந்து திருட்டுத்தனமாகப் போலி மருத்துவமனைகளிலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகத்தில் விற்கப்படும் கருக்கலைப்பு மாத்திரைகளையும் உட்கொண்டு விபரீதங்களை எதிர்கொள்ள வேண்டுமா?

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.