“நிலா…”

“ம்ம்…”

“ஒரு தவுசண்ட் ருபீஸ் தர்றீயா?”

“என்ன செலவு? போன மாசம் மட்டும் எவ்ளோ செலவு பண்ணிருக்கேன்னு பார்த்தியா? நீ கேட்கும் போதெல்லாம் பணம் குடுத்துருக்கேன்.”

….

“உங்கப்பா ஹாஸ்பிடல்ல இருந்தாங்க. பழம், ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கணும்னு பணம் கேட்டே. அப்புறம் உன் தம்பி பிறந்தநாளுக்கு எவ்ளோ காஸ்ட்லி கிரிக்கெட் பேட் வாங்கிக் குடுத்தே? இப்ப என்ன செலவு?”

“ஜட்டி எல்லாம் பழசாயிடுச்சு நிலா. புதுசு வாங்கணும்.”

“ம்ம்… அப்டியா? சரி உன் சைஸ் எனக்குத் தெரியும், நானே வாங்கிட்டு வரேன்.”

“இல்ல நிலா, நானே பார்த்துப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கிறேனே… என் ஏடிஎம் கார்டைக் குடேன்” என்று லேசாகப் பொறுமையிழந்தான் வருண்.

“ஓ… அந்தளவுக்கு வந்துட்டியா? உனக்கு விவரம் பத்தாது. கன்னாபின்னான்னு செலவு பண்ணாதேன்னு சொல்லி நீயும் சரின்னு ஒத்துகிட்டப்புறம்தானே கார்டை நான் வாங்கி வெச்சிருக்கேன்.”

“நான் உன் கார்டைக் கேட்கல நிலா. என்னோடதைத்தான் கேட்கறேன்.”

“உன் பணத்தை நான் பதுக்கி வெச்சிருக்கேன்னு சொல்றியா?”

“ஐயோ… அப்டி இல்ல, உன் கிட்ட ஒவ்வொண்ணுக்கும் கேட்டுக்கிட்டு இருந்தா உனக்கும் தொந்தரவா இருக்குல்ல…”

“ஆஹா, என்ன இவ்ளோ சாமர்த்தியமா பேசுற? உங்க அப்பா சொல்லிக் குடுத்தாரா?” நிலாவின் குரல் அபாயகரமாக உயர்ந்தது.

“இப்ப எதுக்குத் தேவையில்லாம எங்கப்பாவை இழுக்குற?” வருணுக்கும் கோபம் வந்தது.

“ஓ… என்னைவிட அதிகமா சம்பாதிக்கிற திமிர்தானே? இந்தா, உன் கார்டை நீயே வெச்சிக்கோ” என்று கைப்பையில் இருந்த வருணின் கார்டை எடுத்து அலட்சியமாகத் தரையில் வீசி எறிந்தாள் நிலா.

“அப்பா, அம்மா வரேன்.”

“நிலா… நிலா… சாப்டாம போறியே?”

வருண் கதறியதைக் காதிலேயே வாங்காமல் பைக்கைக் கிளப்பிக் கொண்டு பறந்துவிட்டாள் நிலா.

“என்ன, என்னாச்சு? நிலா ஏன் சாப்டாம போறா?” மாமியார் ஓடிவந்து வருணிடம் விசாரித்தார்.

வருணுக்கு அடிவயிற்றில் சொரேரென்றது. இவரிடம் எப்படிச் சொல்வது? ஜட்டி வாங்க வேண்டுமென்று பணம் கேட்டேன்; அதில் தான் சண்டை தொடங்கியதென்று?

“என்னப்பா நீ? இப்டி ஒரு நாளைப் போல சண்டை போட்டா எப்டி?”

வருணுக்கு அழுகை வந்தது.

“ம்கும்… எல்லாம் நீ குடுக்கற செல்லம்தான். அவன் இப்படி ஆடறான். என் பொண்ணு பாவம், இந்த மாசத்துல நாலாவது தடவை அவ இப்டி சாப்டாம போறது” என்று மாமனார் பொருமித் தீர்த்தார். செல்ல மகளல்லவா! மாப்பிள்ளை சண்டையிட்டதால் அவள் சாப்பிடாமல் போனால் கோபம் வராதா என்ன?

“ஐயோ… இல்ல மாமா, நான் ஒண்ணுமே சொல்லல.”

ஐயோ சாப்பிடாமல் போய் விட்டாளே… மாமா சொல்வது நியாயம்தானே, காலையில் கிளம்பும் நேரத்தில் இந்தப் பேச்சை எடுத்திருக்க வேண்டாமே! லஞ்ச் கட்டாமல் விட்டுவிட்டோமே… என்று வருத்தப்பட்டான் வருண்.

“அது என்ன?”

கீழே கிடந்த கார்டை எடுத்தார் மாமியார்.

தங்களுக்குள் சண்டை மூட்டிவிட்ட அந்த கார்டைப் பார்க்கவே வருணுக்கு வெறுப்பாக இருந்தது. தன் மீதுதான் தவறோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.

ஆமாம், தனக்குப் பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாது என்று வீட்டில் அம்மாவும் அக்காவும்கூடச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அப்பா வேலைக்கே போகவில்லை. அம்மா அவருக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா?

நான் வேலைக்குப் போகிறேன் என்பதற்காகத் திமிராக நடந்துகொள்கிறேனோ? அன்றுகூட எனக்குப் பிடித்த நிறத்தில் டிஷர்ட் வாங்கிவந்து சர்ப்ரைஸ் கொடுத்தாளே நிலா… நான் ஏன் இவ்வளவு அல்பமாக நடந்து கொண்டேன் என்று மறுகினான்.

“இந்தாங்க அத்தை. எல்லாம் இந்த கார்டாலதான். நீங்களே வெச்சிக்கோங்க. எனக்குப் பணம் வேணும்னா உங்க கிட்டயே கேட்டு வாங்கிக்கிறேன்.”

அத்தை முகம் மலர்ந்து, “சரி சரி, போய் முகத்தைத் துடைச்சிக்கிட்டு வேலைக்குக் கிளம்பு. நிலாவுக்கு அப்புறமா போன் பண்ணி சாரி சொல்லிடு, சரியா? எவ்ளோ பணம் வேணும்?” என்று இதமாகக் கேட்டார். மாமனார் முகத்தைச் சுளித்துக்கொண்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்ததும் ரொம்ப யோசித்து, தயங்கித் தயங்கிக் கேட்டான் வருண்.

“ஒரு… ஐநூறு ரூபா தாங்க அத்தை.”


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.