கல்லூரியில் தத்துவம் படித்த (larry sanger) லாரி சாங்கர் Y2K தொடர்பான வலைத்தளம் ஒன்றை நடத்திவந்தார். வருடத்தை 99 எனக் கடைசி இலக்கம் கொண்டு குறிப்பிடும்போது 2000 ஆவது வருடத்தை 00 அதாவது சுழியம் எனக் கணினி புரிந்துகொள்வதால் ஏற்படப்போகும் குழப்பங்கள் அப்போது வெகு பிரபலம். தீர்வுகளும் விவாதங்களும் எனக் கணினி உலகம் பரபரப்பாக இருந்த காலம் அது. தேதியுடன் தொடர்புடைய தரவுகளைச் சரியாக மாற்றத் தேவையான மனிதவளம் இந்தியாவிடம் இருந்ததால் ஐடி துறையின் பார்வை இந்தியாவில் விழுந்து பலரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது வரலாறு. கணினி இப்பாேது போல் அவ்வளவு பரவலாக இல்லாததால் 2000வது ஆண்டு பொழுது விடிந்த போது மில்லேனியம் பக் ஓர் ஊசிப்பட்டாசு போல ஆகிவிட்டது. இதன் பிறகு என்ன செய்வது என யோசித்த லாரிக்கு அறிமுகம் ஆனவர் ஜிம்மி வேல்ஸ் (Jimmy Donal Wales).

ஜிம்மி பங்கு வர்த்தகத் துறைப் பின்னணியில் இருந்து வந்தவர். பின்னர் நண்பருடன் சேர்ந்து இணையம் தொடர்பான தொழில்களில் முதலீடு செய்யும் பாமிஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். வர்த்தக நோக்கில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட முடியாமல் போனது. இந்த பாமிஸ் சார்பாக உருவாக்கப்பட உள்ள இணையதளத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, லாரியை அழைத்தார் ஜிம்மி வேல்ஸ். உலகில் உள்ள அனைவரும் தமக்குத் தெரிந்ததை ஒரே இடத்தில் பதிவு செய்து வைத்தால் எப்படி இருக்கும்? இதுதான் ஜிம்மி கொடுத்த இணையதள யோசனை. ஆரம்பத்தில் நுபீடியா (Nupedia) என்ற பெயரில் வேலையை ஆரம்பித்தார்கள். துறை சார்ந்த வல்லுநர்களிடம் மின்னஞ்சல் மூலம் கட்டுரைகளைப் பெற்று அதை எடிட்டர் சரிபார்த்து பின் தளத்தில் பதிவேற்றுவார்கள். இப்படிப் பலரைச் சார்ந்து இருந்த இந்த வேலை பல மாதங்கள் கடந்தும் 90களின் இணைய வேகம் போல மிக மெதுவாகப் போனது. பயனர்கள் தங்கள் கட்டுரைகளைத் தாங்களே பதிவேற்றும் ஒரு யோசனையைக் கேள்விப்பட்டார் லாரி சாங்கர். அதுதான் விக்கி செயலி.

விக்கிவிக்கி வெப் என்ற தளத்தை உருவாக்கிய வார்ட் கன்னிங்ஹம் (Ward Cunningham) தன் தளத்தில் பயனாளர்களே உருவாக்கவும் திருத்தவும் இயலும்படியான செயலியைப் பயன்படுத்தியிருந்தார். விக்கிவிக்கி என்றால் ஹாவாய் தீவின் பாலினேசியன் மொழியில் விரைவு என்பது பொருள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜருகண்டி ஜருகண்டி எனச் சொல்வது போல அந்தத் தீவின் விமான நிலையத்தில் வீக்கிவீக்கி எனச் சொல்வதைக் கேட்ட வார்ட், அந்தப் பெயரையே தன் தளத்துக்கு வைத்திருந்தார். நாம் நெடில் அல்லாது குறில் விக்கியையே பயன்படுத்துகிறோம். பயனரே எழுதவும் திருத்தவும் கூடிய இந்த விக்கி (wiki) செயலி பயன்படுத்தவும் கற்றுக் கொள்ளவும் எளிது. எனவே இதைத் தங்கள் நுபீடியா தளத்தில் பயன்படுத்த விரும்பினார் லாரி சாங்கர். வல்லுநர் குழுவின் ஒப்புதல் கிடைக்காததால் இதைத் தனியாக ஒரு தளமாக உருவாக்க முடிவு செய்தார்கள்.

எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பை கலைக்களஞ்சியம் – என்சைக்ளோபீடியா என்கிறோம். எனவே இணையத்தில் விக்கி செயலி மூலம் எழுத்து வடிவில் இருக்கும் கலைக் களஞ்சியத்துக்கு விக்கிபீடியா எனப் பெயரிட்டார் லாரி சாங்கர். விக்கிபீடியா எல்லாருக்குமானது. நுபீடியா கல்வியியலாளர்களுக்கு என்பது திட்டம். ஆனால், விக்கிபீடியாவுக்குக் கிடைத்த வரவேற்பு நுபீடியாவுக்கு அவசியம் இல்லாமல் செய்துவிட்டது. பின்னர் நுபீடியா தளம் கைவிடப்பட்டது.

2001, ஜனவரி 15ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது விக்கிபீடியா. நல்ல வரவேற்பு இருந்தது. பயனர் பங்களிப்பை இன்னும் அதிகரிக்க விதிகளே இல்லை எனும் விதியைப் பரிந்துரைத்தார் லாரி சாங்கர். பிட்சா மேல் எக்ஸ்ட்ரா சீஸ் போட்டது போல அராஜகப் பதிவர்வர்கள் மொத்த விக்கிபீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிழையான தகவல்களைப் பதிவேற்றுவது, வெறுப்பைப் பரப்புவது, வேடிக்கைக்காகப் பக்கங்களை உருவாக்குவது எனத் தொல்லை கொடுத்தார்கள். மனநலப் பிரச்னை உள்ளவர்களிடம் சிக்கிய மனநலமருத்துவமனை போலானது என இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் லாரி சாங்கர். இதன் பிறகே பயனர்கள் விவரங்களைப் பதிவேற்றினாலும் தன்னார்வலர்கள் குழுவாகக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யார் எந்த வகைத் திருத்தங்களைச் செய்கிறார்கள் என்பது பதிவு செய்யப்படுகிறது. தவறாக இருந்தாலோ அல்லது போதிய ஆதாரம் இல்லாமல் இருந்தாலோ பழைய நிலைக்கே எளிதாக மாறும்படி கட்டுப்பாட்டுக் குழுவால் செய்ய முடியும்.

சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அவர் படித்த பள்ளிகளின் சார்பாக தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் எனத் தகவலை திரும்பத் திரும்ப மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஒரே நாளில் கிட்டத்தட்ட 75 முறை இப்படி மாற்றினார்கள். விக்கிபீடியா தன்னார்வலர் கண்காணிப்புக் குழு அந்தப் பக்கத்தைத் திருத்துவதைத் தடை செய்தது. இப்படிப் பல நேரத்தில் தவறான தகவல்களால் விக்கிபீடியா செய்திகளில் அடிபட்டதுண்டு.

ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் விளம்பரங்கள் வருமாறுதான் இந்தத் தளத்தைத் திட்டமிட்டார்கள். தன்னார்வலர்களின் அபரிமிதமான பங்களிப்பு, அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இத்தளத்தில் விளம்பரம் வருவதற்கான வாய்ப்பில்லாமல் செய்தது. 2002 வாக்கில் விளம்பரம் வரும் என்ற செய்தியின் எதிரொலியாக ஸ்பானிஷ் மொழியில் தன்னார்வலர்கள் இணைந்து புதிய விக்கி தளத்தை உருவாக்கினார்கள். இதனால் விக்கிபீடியாவில் எப்போதும் விளம்பரம் வராது என்று அறிவித்தார்கள். இன்றும் இத்தளம் நன்கொடை, மானியம், தன்னார்வலர்கள் பங்களிப்பு இவற்றின் மூலமே செயல்படுகிறது. வருமானம் இல்லாத தளத்தை நிர்வகிக்க அதுவரை பண உதவி செய்த ஜிம்மி வேல்ஸ்ன் பாமிஸ் ஒவ்வொருவராக விக்கிபீடியாவில் வேலை செய்தவர்களை வீட்டுக்கு அனுப்பியது. தன்னார்வலராகத் தொடர்பவர்களை வைத்துக்கொண்டது. இணை நிறுவனர்களில் ஒருவரான லாரி சாங்கருக்கு அப்படித் தொடர விருப்பம் இல்லை. மேலும் அவருக்குச் சில புகார்களும் இருந்தது. குழுவாகக் கண்காணித்தாலும் அவ்வப்போது நிகழும் தவறுகள், வல்லுநர் கருத்துகளுக்குச் சரியான இடமில்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகளைச் சரி செய்யச் சொல்லி ஜிம்மியிடம் கூறினார். அவர் எதுவும் செய்யாததால் மொத்தமாக முழுக்குப் போட்டு விக்கிபீடியாவைவிட்டு வெளியேறினார் லாரி சாங்கர். இவர் போன பிறகு இதை உருவாக்கியதில் லாரிக்குப் பங்கில்லை என ஜிம்மி ஒரு வாதத்தை முன்வைத்தார். எனினும் இருவரும் இணைந்து விக்கிபீடியாவை உருவாக்கினர் எனும் வாதமே வெற்றி பெற்றது. ஜிம்மி இப்போதும் ட்ரஸ்ட் உறுப்பினராகத் தொடர்கிறார்.

தீர்வை முன்வைத்து உள்ளேயே இருந்து வழிநடத்தாமல் வெளிவந்தது சரியான முடிவல்ல என உணர்ந்ததாக லாரி சாங்கர் பின்னர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவ்வப்பாேது விக்கிபீடியாவை விமர்சனமும் செய்கிறார். இடதுசாரிகளின் கையில் விக்கிபீடியா சிக்கிக்கொண்டுள்ளது என்பது இவர் குற்றச்சாட்டு. தமிழகத்திலும் விக்கிபீடியா தனித்தமிழ் ஆர்வலர்களிடம் சிக்கியுள்ளது எனச் சிலர் குற்றம் சொல்வதுண்டு. எல்லா வார்த்தைகளையும் நனிதமிழில் மொழிபெயர்க்கத் தேவையில்லை என்கிறார்கள் சிலர். கட்டுரைகளின் நடை படிக்க எளிதாக இல்லை, தரமாக இல்லை என்று சொல்வோரும் உண்டு. குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் தாங்களே பயனராக உள்நுழைந்து வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது தமிழ் விக்கிபீடியர்களின் பதில். எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ்விக்கி (https://tamil.wiki/) என்ற பெயரில் போட்டி விக்கிபீடியா தளத்தை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை வெளியிடுகிறார். வெறும் தகவல்களாக இன்றி, வார, மாத இதழ்களில் வரும் கட்டுரையைப் போன்ற நடையில் இவை உள்ளன. சார்புடன் செயல்படுகிறார்கள், முன்னோடி ஆளுமைகளுக்குக் காழ்ப்புணர்வுடன் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என இவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் உலகம் முழுவதும் அடிப்படைத் தகவல்களை நாடுவோர் முதலில் செல்வது விக்கிபீடியாவுக்குத்தான். அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் விக்கிபீடியா இருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட மொழிகளில் பல நாடுகளில் இத்தளம் செயல்படுகிறது. பத்துக் கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பங்களிப்பைச் செலுத்தும் தன்னார்வலராக மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு கோடியை நெருங்குகிறது. ஆங்கிலத்தில் மட்டும் அறுபத்தேழு லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தளவில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் இருக்கும் தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ் விக்கிபீடியர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பான வகையில் உள்ளது. மூன்றாயிரம் கட்டுரைகள் வித்தியாசத்தில் இந்தி முதலிடத்தில் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் தன்னார்வலராக விக்கிபீடியாவில் புதிய பக்கத்தை உருவாக்கலாம். எல்லாத் தளங்களையும் போல பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்நுழைந்தால் இடது பக்கத்தில் உள்ள வாய்ப்புகளில் இருந்து வேண்டியதைத் தேர்வு செய்யலாம். புதிய பக்கத்தைத் தொடங்குவதற்கு முன் விதிகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். விளம்பரத்துக்கோ தனிநபர் புகழ்பாடவோ விக்கிபீடியாவைப் பயன்படுத்த முடியாது. நடுநிலையுடன் ஆதாரங்களுடன் இருக்கும் கட்டுரைகளை மட்டுமே எழுத வேண்டும். இதில் எழுதிப் பழக மணல்தொட்டி என்ற பகுதியும் உள்ளது. எப்படி, என்ன, எதை என்று எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கமாக விடைகள் விக்கிபீடியாவிலேயே இருக்கிறது.

புதுக் கட்டுரையாக இல்லாமல் ஏற்கெனவே இருக்கும் கட்டுரையில் மேலதிக விவரங்களைக்கூடத் ‘தொகு’ மூலம் சேர்க்கலாம். விளக்கங்கள் புரியவில்லை எனில் ஆலமரத்தடி, பேச்சு ஆகிய இடங்களில் கேள்விகளைக் கேட்டால் மற்ற தன்னார்வலர்கள் பதில் தருவார்கள். இதற்கு முன் திருத்திய வரலாறு, யாரால் திருத்தப்பட்டது போன்ற தகவல்களையும் அறிய முடியும்.

தன்னார்வலர்களை ஊக்குவிக்கும்படி அவ்வப்போது போட்டிகளும் உண்டு. தற்போதுகூடப் பெண்ணியமும் நாட்டார் மரபும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கிறது. அமெரிக்க டாலர்களில் பரிசும் கொடுக்கிறார்கள். இலவசப் படங்களுக்கு காமன்ஸ், பயணங்களுக்கு உதவும் விக்கிவாயேஜ், அகராதிக்கு விக்சனரி எனப் பல உள்ளன. விக்கிமீடியா, விக்கிமேற்கோள், விக்கிபல்கலைக்கழகம், விக்கியினம், விக்கிநூல்கள் என அனைத்தையும் இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்கள் பற்றிய ஆதாரங்களின் இணைப்புகள் கட்டுரையின் அடியில் இருக்கும். எனினும் இத்தகவல்கள் நூறு சதவீதம் நம்பத்தக்கவை அல்ல. எதைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அதைப் பற்றிய பின்னணித் தகவல்களும் மேற்கொண்டு கூகுளில் தேட கீவேர்ட்களும் எடுத்துக்கொள்ளலாம். வெளி இணைப்புகள், மேற்கோள் நூல்கள் மூலம் தேடலை விரிவாக்கலாம். உலகில் உள்ள அனைத்து அறிவும் ஒரே இடத்தில் இலவசமாகக் கிடைக்கும் என்ற கனவு தன்னார்வலர்களால் சாத்தியமாகிறது. எடுத்துக்கொள்வதைப் போல கொஞ்சம் நம் நேரத்தை கொடுக்கவும் முயலலாம். எனக்கு என்ன தெரியும் என யோசிக்காமல் தளத்தில் சென்று பதிவு செய்து கொண்டால், பங்களிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அறிவியல், ஆன்மீகம், மரவேலை, சமையல் குறிப்புகள் எனப் பல தலைப்புகளில் கட்டுரைகளை ஆக்கலாம். பகிர்ந்து கொள்வதில்தானே இருக்கிறது அறிவின் பயன்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.