மாதவிடாய்ப் பொருட்களின் வரலாறு மிகவும் நீண்டது. பண்டைய ரோமானியர்களின் கம்பளிச் சுருள்கள், எகிப்துப் பெண்களின் நீரில் ஊறிய பாப்பிரஸ், புல் நிரப்பிய துணிப்பட்டைகள் என்று காலத்துக்கும் இடத்துக்கும் தகுந்தாற்போல் இது மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. மாதவிடாய்க்கால ரத்தப்போக்குக்காகப் பெண்கள் கந்தல் துணிகளைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க நூல். முதலாம் உலகப் போரின்போது, ராணுவ வீரர்களின் காயங்களுக்குக் கட்டுப் போட பயன்படுத்தப்பட்ட செல்லுலோஸ் கொண்ட பஞ்சுகள், ரத்தத்தை நன்றாக உறிஞ்சியதை பிரெஞ்சு செவிலியர்கள் கண்டறிந்தார்கள். அதன் அடிப்படையில் காடெக்ஸ் என்ற சானிட்டரி நாப்கின் 1921ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, மாதவிடாய்ப் பொருட்களால் ஏற்படும் ஞெகிழி மாசுபாடு (Plastic Pollution) அதிகமாக விவாதிக்கப்படுகிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியக்கூடிய சானிட்டரி பேடுகள், டேம்பான்களில் 90% பாகங்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. மாதவிடாய் ஏற்படக்கூடிய ஒரு நபர் (திருநம்பிகளுக்கும் சிலநேரங்களில் மாதவிடாய் ஏற்படும் என்பதால் நபர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.) சராசரியாக ஒரு வாழ்நாளில் 11,000 பேடுகள்/டேம்பான்களைப் பயன்படுத்தித் தூக்கி வீசுகிறார் என்கிறது ஒரு புள்ளி விவரம். எடை என்று பார்த்தால் இது 150 கிலோ வரை வரும். இதிலிருக்கும் ஞெகிழி பாகங்கள் முழுவதுமாக மக்குவதற்கு 450 ஆண்டுகள் வரை ஆகுமாம்.

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில், மாதவிடாய் குப்பிகள் (Menstrual Cups) எனப்படும் சிறிய சிலிக்கான் குப்பிகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. “குப்பை மேடுகளில் மக்காமல் கிடக்கிற, பிளாஸ்டிக் நிறைந்த பேடுகளுக்குப் பதிலாக மாதவிடாய்க் குப்பிகளைப் பயன்படுத்துங்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்குகொள்ளுங்கள்” என்ற கூக்குரல் உலகமெங்கும் ஒலிக்கிறது. ஆனால், மாதவிடாய்க் குப்பிகள் 1937ஆம் ஆண்டிலேயே சந்தைக்கு வந்துவிட்டன என்கிறது வரலாறு.

தலை சுற்றுகிறதா… இதை அப்படியே நிறுத்திவிட்டுக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போகலாம் வாருங்கள். சானிட்டரி நாப்கின் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ரப்பரால் ஆன மாதவிடாய்க் குப்பிகளும் சந்தைக்கு வந்துவிட்டன என்றாலும், பெண்ணுறுப்பில் ஒரு குப்பியையோ டேம்பானையோ நுழைத்துக்கொள்வதில் இருந்த விக்டோரியன் காலத் தயக்கங்கள் காரணமாக, சானிட்டரி நாப்கின்களே பெரிதும் விரும்பப்பட்டன.

அந்தக் காலத்தில் குப்பி அல்லது டேம்பான் போன்ற பொருட்களால் பெண்களின் கன்னித்தன்மை போய்விடும் என்ற பயமும் இருந்தது. இன்னொருபுறம், இந்த மாதவிடாய்க் குப்பிகளை ஒரு முறை வாங்கிவிட்டால், அவற்றைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், குப்பிகளை விற்பனை செய்த பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஆகவே தொடர் லாபம் தராத மாதவிடாய்க் குப்பிகளை உற்பத்தி செய்ய நிறுவனங்களும் முன்வரவில்லை. மாதவிடாய் சார்ந்த முதலாளித்துவம் (Period Capitalism) என்ற இந்த அம்சமும் நாப்கின்களின் புகழுக்கு ஒரு முக்கியக் காரணம்.

“இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வந்து சேர்ந்தது இரண்டாம் உலகப் போர்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஷாரா வாஸ்ட்ரல். இவர் மாதவிடாய்ப் பொருட்களின் வரலாறு பற்றிய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். “இரண்டாம் உலகப் போரின்போது எல்லா அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதில் ரப்பரும் உண்டு. இருக்கும் கொஞ்சநஞ்ச ரப்பரும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் ராணுவ வாகனங்களின் டயர் செய்யவும் பயன்படுவதே சிறந்தது என்று அரசாங்கங்கள் யோசித்தன. பொருளாதார ரீதியாக அதுவே சரியான முடிவாகப் பார்க்கப்பட்டது. மாதவிடாய்க் குப்பி நிறுவனங்களில் மீதமிருந்த குப்பிகளைப் பெண்கள் தேடிப்பிடித்து வாங்கி சேர்த்துக் கொண்டார்கள். அத்தோடு விரைவிலேயே குப்பிகள் பெருமளவில் மறைந்துபோயின” என்று விளக்குகிறார்.

அப்போது சந்தையிலிருந்து மறைந்த குப்பிகள், இயற்கைப் பாதுகாப்பு என்ற பதாகையின்கீழ் திரும்ப வந்திருக்கின்றன. இதுவும் மாதவிடாய்சார் முதலாளித்துவத்தில் வருமா என்ற கேள்வி அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதைத் தள்ளிவைத்துவிட்டு நமது விவாதத்தைத் தொடரலாம்.

மாதவிடாய்க் குப்பிகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி பேடுகள், ரத்தத்தை உறிஞ்சக்கூடிய மாதவிடாய்க்கால உள்ளாடைகள் ஆகியவை மாதவிடாய்க்கால மாற்றுப் பொருட்களாக முன்வைக்கப்படுகின்றன. நாப்கின்கள், டேம்பான்களால் ஏற்படும் ஞெகிழி மாசுபாடு இவற்றில் இருக்காது என்பதால் இவை முன்னிறுத்தப்படுகின்றன. ஞெகிழிப் பிரச்னை இவற்றில் இருக்காது என்பதும், சுற்றுச்சூழலுக்கு இவை எந்தத் தீங்கையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் அறிவியல்ரீதியாக உண்மைதான். ஆனால், சமூகவியல் ரீதியாகவும் இவற்றை அணுக வேண்டும். முக்கியமாக, இந்தியா போன்ற ஒரு வளர்ந்துவரும் நாட்டில் இது சாத்தியப்படுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

சில புள்ளி விவரங்களைப் பார்க்கலாம். இந்தியாவில் மாதவிடாய் வறுமை என்று அழைக்கப்படும் Period Poverty மிகவும் அதிகம். மாதவிடாய்ப் பொருட்களை வாங்க முடியாத பொருளாதாரச் சூழல், விழிப்புணர்வின்மை, பொதுவான சுகாதாரப் போதாமைகள் ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கிய இந்த மாதவிடாய் வறுமை, சில இந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. பீஹாரில் உள்ள பெண்களில் 58 சதவீதத்தினர் மட்டுமே சரியான மாதவிடாய்ப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது 2019ஆம் ஆண்டின் ஐந்தாவது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு. இந்தியாவில் இருக்கும் 71% கிராமப்புற பெண் குழந்தைகளுக்குப் பூப்படைவதற்கு முன்னதாக மாதவிடாய் பற்றி எதுவும் சொல்லித் தரப்படுவதில்லை. இந்தியாவில் இருக்கும் 15,000 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளே கிடையாது. இப்போதும் இந்தியாவில் பூப்படைந்த பிறகு 20% பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிடுகிறார்கள்! மாதவிடாய் பற்றிய சமூக மதிப்பீடுகள், பள்ளியின் கழிவறை/தண்ணீர் வசதிகள், மாதவிடாய்ப் பொருட்களைச் சரியாக வாங்க முடியாத சமூக சூழல் ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இந்தியாவில் இருக்கும் 62% பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் துணியையே பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அதே ஆய்வில், இந்தத் துணிகளைச் சரியான முறையில் சுத்தம் செய்து, நீரில் சில முறை அலசி, வெயிலில் காயவைக்கப் பெண்களால் முடிவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாதவிடாய்த் துணிகள் பிறர் கண்ணில் படக்கூடாது என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணியில் நாம் மாற்று மாதவிடாய்ப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு நபரிடம் இரண்டு மாதவிடாய்க் குப்பிகள் இருந்தாலே அவரது ஒரு மாத சுழற்சியைச் சமாளித்துவிடலாம். ஆனால், இவை பெருநகரங்களில் மட்டுமே நேரடியாகக் கடைகளில் கிடைக்கின்றன. சிற்றூர்களில் இருக்கும் பெண்கள் இவற்றை இணையத்தில்தான் வாங்கவேண்டும். ஒரு குப்பியின் விலை 400 முதல் 800 வரை இருக்கிறது. குறைந்தபட்ச விலை என்று வைத்துக்கொண்டால்கூட ஒரு நபருக்கு 800 ரூபாய் செலவாகும். இதைத் தவிர, ஒரு மாதவிடாய்க் குப்பியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமானால் தனியான கழிப்பறை வசதி, கழிப்பறையில் தண்ணீர் வசதி எல்லாம் தேவை. ஒவ்வொரு சுழற்சியின் முடிவிலும் அதை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும் வேண்டும். இந்தியாவின் பல வீடுகளில் தனிக் கழிப்பறையே கிடையாது எனும்போது இது அவர்களுக்குச் சாத்தியப்படாது. துணி பேடுகளுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். நான்கு பேடுகள் சராசரியாக 500 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி அலசி வெயிலில் காயப்போட்டால் மட்டுமே சரியான பலன் இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் சாத்தியமா என்பது தெரியவில்லை.

துணியாலான பேடுகளைப் பயன்படுத்திப் பார்த்த சில பெண்கள், இவை காய்வதற்கு அதிக நேரம் எடுக்கின்றன எனவும், உள்ளாடையில் சரியாகப் பொருந்துவதில்லை எனவும் கூறுகின்றனர். கறை எதுவும் படவில்லை என்றாலும், உள்ளாடையில் பொருந்தாமல் இருப்பதால் அந்தப் பயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

“மாதவிடாய்க் காலத்தில் ஏற்கெனவே என்னுடைய மனநிலை கொந்தளிப்பாக இருக்கும், இந்தத் துணி பேடில் கறை ஏற்படுமா என்ற பயமும் சேர்ந்துகொண்டு எரிச்சலைக் கூட்டிவிட்டது” என்று தெரிவிக்கிறார் ஒருவர். சொல்லப் போனால் இவை கிராமப்புறப் பெண்களின் துணிகளைப் போலவே செயல்படுகின்றன என்பதால் இவை எப்படி மாற்றுப் பொருட்களாகும் என்றும் அதற்கு ஏன் 500 ரூபாய் விலை என்பதும் தெரியவில்லை.

சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்கள், கருப்பையுள்ளான சாதனம் (Intra Uterine Devices, காப்பர் டி முதலியன) பொருத்திக்கொண்டவர்கள், வேஜினிஸ்மஸ் எனப்படும் பெண்ணுறுப்பு வலி கொண்டவர்கள், குழந்தை பெற்றவர்கள், கருக்கலைப்பு செய்துகொண்டவர்கள் ஆகியோர் மாதவிடாய்க் குப்பிகளைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இதையும் நாம் கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு நபர் எப்படிப்பட்ட மாதவிடாய்ப் பொருளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன – ஒரு பொருள் கிடைக்குமா, அதன் விலை என்ன, அது சரியாகத் தன் வேலையைச் செய்யுமா, கறை ஏற்படுத்துமா, சுற்றியுள்ள பெண்களின் கருத்துகள், சமூக விழுமியங்கள், குடும்பத்தினரின் ஆதிக்கம் என்று எல்லாவற்றையும் தாண்டி, இறுதியாகத்தான் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு வருகிறது. மறுமுறை பயன்படுத்தும் பொருட்கள் என்று வரும்போது, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி ஆகியவையும் இதில் சேர்ந்துவிடும். காசே செலவழிக்காமல் வீட்டிலுள்ள துணியைக் கிழித்துப் பயன்படுத்தலாமா, அந்த மாத சுழற்சிக்காக மட்டும் 100 ரூபாய் செலவு செய்யலாமா, அடுத்த பத்து ஆண்டுகள் பயன்படும் என்ற எண்ணத்தில் மொத்தமாக 800 ரூபாய் பயன்படுத்தலாமா என்பன போன்ற தேர்வுகள் வர்க்கத்தால் நிர்ணயிக்கப்படும். பெண்ணுறுப்புக்குள் நுழைக்கவேண்டிய மாதவிடாய்ப் பொருட்களின்மீது இருக்கும் சமூக வெறுப்பும்கூட இதில் சேர்ந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் நபர்களின் நிலையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பொதுக்கழிப்பறைகள், அதில் இருக்கும் தண்ணீர் வசதிகள் ஆகியவற்றின் போதாமை இவர்களை மிக மோசமாகப் பாதிக்கிறது. சந்தையில் இருக்கும் மாதவிடாய்ப் பொருட்களில் இருப்பதிலேயே தங்களுக்கு வசதியானவற்றை இவர்கள் தேர்ந்தெடுப்பதே சரியானது. இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தக் கூடாது.

மாதவிடாய் வறுமை, மாதவிடாய் ரத்தம் மீதான மூட நம்பிக்கைகள், கன்னித்தன்மை பற்றிய கற்பிதங்கள், மாதவிடாய்த் துணிகள் மீதான வெறுப்பு, தீட்டு என்ற கலாச்சாரம், கழிப்பறை வசதியின்மை, தண்ணீர் வசதியின்மை ஆகியவை இன்றும் நிலவிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, மாதவிடாயை எதிர்கொள்ளும் எல்லா நபர்களுக்குமான ஒற்றைத் தீர்வாக எதையும் முன்வைக்க முடியாது. தங்களது உடல், சூழல், வர்க்கம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஏற்ற மாதவிடாய்ப் பொருட்களைச் சம்பந்தப்பட்ட நபர்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத மாதவிடாய்ப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்ட முடியாது. தீர்வுகள் அனைவருக்குமானவையாக இருக்க வேண்டும், அதுவே சூழல்சார் சமூக நீதி. மாதவிடாய்ப் பொருட்கள் ஏன் இலவசமாகக் கிடைப்பதில்லை, ஏன் மாதவிடாய்க் குப்பிகளின் விலை ஏன் இவ்வளவு இருக்கிறது, மாதவிடாய் வறுமை ஏன் ஒழிக்கப்படவில்லை என்பன போன்ற கேள்விகளை நாம் அரசாங்கங்களை நோக்கிதான் கேட்க வேண்டும். இது தனிநபர்களின் பொறுப்பு அல்ல. தீர்வுகளை அவர்களது தோளில் சுமத்துவது நியாயமில்லை.

மாதவிடாய்ப் பொருட்களின் சூழலியல்-அரசியல் வரலாறு இது. சமகால வரலாற்றின் மிக முக்கியமான ஒரு சூழல் பிரச்னையில் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள்? அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறதா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!