பொதுவாக ஆண்டின் முதல் ஞாயிறு, மூன்று அரசர்கள் திருவிழா  DÍA DE LOS REYES   எனக் கொண்டாடப்படுகிறது. அன்று தான் மூன்று அறிஞர்கள் சொரூபத்தை குடிலின் அருகில் வைக்கிறார்கள். கீழே உள்ளவற்றில் முதல் இரண்டு படங்கள் கிறிஸ்துமஸ் அன்று எடுத்தவை. இரண்டாவது படத்தில் அவர்கள் வந்துகொண்டிருப்பதை உணர்த்துவதாக, தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.

மூன்றாவது படம், முதல் ஞாயிறு அன்று எடுத்தது. இதில்தான் மூன்று அரசர்கள்  சொரூபம் குடில் அருகில் உள்ளது. 

இவ்வாறு பல்வேறு நாடுகளில் மூன்று அரசர்கள் திருவிழா, ஆண்டின் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டாலும், மெக்ஸிகோ மக்கள் ஜனவரி 6 ஆம் நாளைத் தான், மூன்று அரசர்கள் நாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆர்மீனியா போன்ற சில நாடுகளில் ஜனவரி 6 ஆம் நாளை கிறிஸ்துமஸ் நாளாகவே கொண்டாடுகின்றார்கள்.

மெக்ஸிகோ, அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. உலகின் தொடக்க நாகரிகத்தின் ஆறு தொட்டில்களில் ஒன்றாக மெக்ஸிகோ உள்ளது. குறிப்பாக மாயன் மற்றும் ஆஸ்டெக்ஸ் (Maya and the Aztecs) நாகரீகங்களின் பிறப்பிடமாக இது உள்ளது.

1521 ஆம் ஆண்டில் இருந்து, புதிய ஸ்பெயின் (New Spain) என அழைக்கப்பட்ட ஸ்பெயின் அரசு, மெக்ஸிகோ, அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் பிலிப்பைன்ஸ் மற்றும் குவாம் (Guam) ஆகியவற்றை உள்ளடக்கிய பல பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்டங்கள், போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

ஸ்பெயினிலிருந்து மெக்ஸிகோவிற்கு கத்தோலிக்கமும் மொழியும் இறக்குமதி ஆகின. இன்று மெக்ஸிகோவில் ஸ்பானிய மொழியே முதன்மையான மொழியாக உள்ளது. கத்தோலிக்கம் முதன்மையான மதமாக உள்ளது.

மெக்ஸிகோ, அமெரிக்கா இரு நாடுகளும் பல இடங்களில், நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதாலும், கலிஃபோர்னியா போன்ற பகுதிகள் ஒரு காலகட்டத்தில் மெக்ஸிகோவின் ஒரு பகுதியாக இருந்ததாலும், நாங்கள் வாழும் சான் பிரான்சிஸ்கோ பகுதியில், மெக்ஸிகோ நாட்டுப் பண்பாட்டு விழுமியங்களை அனைத்து இடங்களிலும் காணலாம். பள்ளி முதல் அனைத்து இடங்களிலும் விடப்படும் சுற்றறிக்கைகள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கும்.

மெக்ஸிகோ மக்களில் வழக்கப்படி கிறிஸ்துமஸ், லாஸ் போசாடாஸ் (Las Posadas) விழா என டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. மெழுகுவர்த்திகளை ஏந்திக் கொண்டு, மக்கள் பாடி குழந்தைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வது அவர்களின் வழக்கமாக உள்ளது. பெத்லகேமுக்கு வரும் யோசேப்பு, மரியாவிற்கு குழந்தைகள், வீடு வீடாகச் சென்று தங்குமிடம் தேடுவதாக இந்த ஐதீகம் தொடர்கிறது.

ஜனவரி 6 ஆம் நாளை மூன்று அரசர்கள் திருவிழாவாக (DÍA DE LOS REYES அல்லது THREE KINGS DAY) கிறிஸ்துமஸிற்கு இணையாகச் சொல்லப் போனால், ஒரு படி மேலாகவே கொண்டாடுகிறார்கள்.

இயேசு பிறந்த போது, வானத்தில் புதிதாக ஒரு விண்மீன் தோன்றியது. அந்த விண்மீனைப் பின்தொடர்ந்து வந்த மூன்று அரசர்கள், இயேசுவுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்ததன் அடையாளமாக, இது பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நாளாக உள்ளது. குழந்தைகள் தங்களின் பூட்ஸ்களை வீட்டு வாசலில் வைக்கிறார்கள். மூன்று அரசர்கள் வந்து, அதனுள் பரிசுப் பொருட்கள் வைத்துச் செல்வார்கள் என்பது ஐதீகம்.

இப்போது குழந்தைகள் கிறிஸ்மஸிற்கு சாண்டாவிடமும் DÍA DE LOS REYES அன்று மூன்று அரசர்களிடமும் பரிசைப் பெறுகிறார்கள்.

இந்த நாளில், மெக்சிகன் ரோஸ்கா டி ரெய்ஸ் அல்லது கிங்ஸ் கேக்கைப் (Rosca de Reyes, or King’s Cake) பரிமாறுகிறார்கள். ரோஸ்கா என்றால் மாலை ரேய்ஸ் என்றால் மன்னர்கள். ரோஸ்கா டி ரெய்ஸ் ஒரு கிரீடத்தின் அடையாளமாக ஓவல் வடிவத்தைக் கொண்டுள்ளது. உள்ளே ஒரு சிறிய பொம்மை இருக்கும். இது ஏரோது மன்னனின் படைகளிடம் இருந்து குழந்தை இயேசு மறைந்து, காப்பாற்றப்பட்டதைக் குறிக்கிறது.

இயேசு பிறந்த போது, பெரிய ஏரோது, உரோமப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட யூதேயா நாட்டின் மன்னராக இருந்து வந்தார். மூன்று அரசர்கள், மன்னனிடம் யூதர்களின் மன்னர் எங்கே பிறந்துள்ளார் எனக் கேட்டனர். ஏற்கெனவே பெத்லகேமில் தான் இஸ்ராயலேயரை ஆள்பவர் பிறப்பார் என அந்நாட்டில் கருத்து நிலவியது. ஏனென்றால் பெத்லகேம் தான் மன்னர் தாவீதின் ஊர். (யோசேப்பு தாவீதின் வழிவந்த, அரியணைக்குரியவர் எனக் கருதப்படுகிறார்.) இதனால் ஏரோது பெத்லகேம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்த இரண்டு வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்றார். ஆனால், யோசேப்பு குழந்தையையும் மனைவியையும் கூட்டிக் கொண்டு எகிப்து நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். இவ்வாறு இயேசு தப்பித் சென்றதைக் குறிப்பிடும் விதமாக ரோஸ்காவினுள் சிறிய பொம்மை வைக்கிறார்கள்.

இன்று நாங்கள் வெட்டிய கேக்கில் இருந்த பொம்மை.

பொம்மையுடன் கேக் துண்டைப் பெறுபவர் கிறிஸ்துமஸ் விழாக்கால கொண்டாட்ட இறுதி நாளான, பிப்ரவரி இரண்டாம் நாள் நடைபெறும் டியா டி லா கேண்டலேரியா (Día De La Candelaria) எனப்படும் மெழுகுவர்த்தி திருவிழா அன்று விருந்து நடத்த வேண்டும். இதனால், கேக்கை வெட்டும் போது தங்களின் துண்டில் பொம்மை வந்து விடக்கூடாது என அனைவரும் நினைப்பார்களாம். சில இடங்களில் குழந்தை பொம்மைக்குப் பதிலாக மூன்று அரசர்கள் பொம்மை வைப்பதும் உண்டு என சீனியர் சென்டர் நிர்வாகி சொன்னார். மூன்று அரசர்களும் ஏரோது மன்னரிடம் இருந்து ஏறக்குறைய மறைந்து சென்றவர்கள் தாம். அதனால் அவ்வாறு அவர்கள் பொம்மை வைக்கும் வழக்கம் உருவாகி இருக்காலாம்.

ரோஸ்காக்கள் டூட்டி ஃப்ரூட்டிகளால் (Tutti frutti) அலங்கரிக்கப்படுகின்றன. இடையிடையே உள்ள இனிப்பு கிரீமின் சுவை, ஏறக்குறைய butter biscuit போன்று இருக்கிறது. இவை ஒரு கிரீடத்தில் இருக்கும் பல நகைகளைக் குறிக்கின்றன.

கிங்ஸ் கேக் என இது சொல்லப்பட்டாலும், சுவையில் மிகவும் உயர்ந்த தரமான bun போல இருக்கிறது. அதனுடன் பொதுவாக அடோலே (Atole) பரிமாறுவார்களாம். அடோலே என்பது மக்காசோளம் கொண்டு செய்யப்படும் மெக்சிகன் பானம்.

சமய விழாக்கள் குறிப்பிட்ட பொது இடங்களில் கொண்டாடக் கூடாது என விதிமுறை இருப்பதால், சீனியர் சென்டர் நிர்வாகி கலாச்சார விழாவாக இதை நடத்துகிறார். வழக்கமாக நல்ல முறையில் அலங்கரித்து இருப்பார். இந்த ஆண்டு தளர்த்தப்பட்ட கொரோனா விதிமுறையின்படி உள்ளே அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. அதனால் சிறிய நிகழ்வாக வெளியே வைத்திருக்கிறார்.

அடோலே என்பது மக்காசோளம் கொண்டு செய்யப்படும் பானம் என்பதால் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் என்பதற்காக சீனியர் சென்டரில், கிங்ஸ் கேக்குடன், பட்டை (Cinnamon) சேர்த்து செய்யப்படும் Hot Chocolate பரிமாறுவார்கள். இரண்டும் சேர்த்து சாப்பிடும்போது, சுவை அபாரமாக இருக்கும்.

பொதுவாகவே சமயம் எங்கிருந்து வந்தாலும், அந்தந்த ஊரின் மண்வாசனையோடு தான் உலகெங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கு, நம் நாட்டில் நடத்தப்படும் மூன்று ராஜாக்கள் பொங்கல்,  மெக்சிகோவில் நடத்தப்படும் ரோஸ்கா டி ரெய்ஸ் போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.