பொங்கல் என்பது அறுவடை நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா என்பதும் அனைவரும் அறிந்தது. அதற்கு நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். எங்கள் இளமைக் காலத்தில் நான் கொண்டாடிய பொங்கல் குறித்த மலரும் நினைவுகளே இந்தப் பதிவு.
நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் என் ஊர். ஊர் அவ்வளவு செழிப்பான ஊர் இல்லை என்றாலும், பொங்கல் காலகட்டம், நல்ல செழிப்பாகவே இருக்கும். ஊரில் கிறிஸ்தவர்கள் பொதுவாக கோவில் திருவிழாவிற்குத் தான் வெள்ளை அடிப்பார்கள். ஆனால் இந்துக்கள் பொங்கலுக்குத் தான் வெள்ளை அடிப்பார்கள். மார்கழி மாதம் முழுவதும், வாசலில், சாணி உருண்டை மீது பூசணிப்பூ வைத்து அழகாக கோலம் போடுவார்கள். பொங்கலன்று வீதி முழுவதும் கோலம் போட்டு அலங்கரிப்பார்கள்.
எங்கள் வீட்டின் அருகே உள்ள அந்தோணியார் கோவிலில், ஜனவரி எட்டாம் தேதி தொடங்கி, பத்து நாள்கள் திருவிழா கொண்டாடுவர். அதனால் பொங்கல் பொதுவாக ஏழாவது அல்லது எட்டாவது திருவிழா அன்று வரும். கிறிஸ்தவர்கள் பொதுவாகவே விழாக்களை, கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். அது போலவே பொங்கலுக்கு, அந்தோணியார் திருப்பலிகள் நடைபெறும்.
கோவிலை கரும்பு கொண்டு அலங்காரம் செய்திருப்பார்கள்.
பொதுவாக திருப்பலியில் நான்கு பாடல்கள் பாடுவார்கள்.
முதலில் பாடப்படும் வரவேற்பு பாடல்
விளைச்சலைத் தந்த இறைவனுக்கு பலி
விருப்புடன் செலுத்திட வாரீர்
தங்க நிற கதிர் குவிகிறது
நம் தமிழகம் துள்ளி மகிழ்கிறது
பொங்கலின் நறுமணம் கமழ்கிறது -புது
பொலிவே எங்கள் முன் தவழ்கிறது
கன்னலின் சாறு இனிக்கிறது
தெய்வ கருணையை மனது நினைக்கிறது
ஒன்றுமே செய்ய இயலாது
அருள் உதவியில்லாது இந்த புவி மீது
இரண்டாவது காணிக்கைப் பாடல்
முதல் கனிகளை யாம் எடுத்து வந்தோம்
முழு முதற் பொருளே உமக்கு படையல் செய்தொம்.
இதயத்தின் நன்றியை இமை சொல்லும் அன்பாய்
ஏற்றருள்வாய் அன்பாய் வாழ்வளிப்பாய்
நிலத்தை உழுது விதை விதைத்தோம்.
நிதம் நெற்றி வியர்வையில் முத்துதித்தோம்
பல மடங்காய் பெறுக வைத்தாய்
அதை பணிவுடனே உம் பதம் வைத்தோம்
இனிதே பொங்கல் சமைத்தளித்தோம் – எம்
இன்னுயிராக உமை மதித்தோம்
கனிவகையோடு தானியங்கள் – உம்
கரங்களில் படைக்கப் பணிகின்றோம்.
கோவிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பலருக்கும் தோட்டம் உண்டு. பொதுவாகவே தோட்டம் உள்ளவர்கள் வீடுகளில் பொங்கல் ஒருவிதமான உணர்வுபூர்வமாக இருக்கும். இந்த பாடல் பாடும் நேரத்தில், அவர்கள் வீட்டில் இருந்து ஒருவராவது வந்து, அவர்கள் தோட்டத்தில் விளைந்த பொருளைக் காணிக்கையாக கொடுத்து விட்டு செல்வார்கள். கோவிலில் வைத்து கும்பிட்டு புதிதாக விளைந்த பொருளை எடுத்துச் செல்வதும் உண்டு. அவர்களில் பலரும் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் தான். திருப்பலி முடிந்து அந்த வழியாக செல்பவர்களுக்கு அவர்கள் சர்க்கரைப் பொங்கல் கொடுப்பார்கள். என் பள்ளித் தோழி வீடு அங்கு இருந்ததால் அவள் கூப்பிட்டுத் தருவாள். இப்போது அந்த வழக்கம் இருக்கிறதா என தெரியவில்லை. ஏனென்றால் இப்போது தோட்டமே இல்லை.
—
மூன்றாவது பாடலில் கிறிஸ்தவர்கள் நற்கருணை என குறிப்பிடும் அப்பம் கொடுப்பார்கள். அதற்கான பாடல்
பொங்கல் விழா விருந்தாக வாராய்
அன்பு பொங்க வரும் வானமுதே
குறை யாவும் தீராய்
எங்கள் மன கோவிலிலே வாழ்க
நாம் எந்நாளும் பேரின்ப வெள்ளத்திலே மூழ்க
உண்ண உண்ண தெவிட்டாத அன்னம் – அது
உண்மையிலே நம்மை கிறிஸ்து மயமாக்கும் அது திண்ணம்
—
நான்காவது பாடல் இறுதியாக, நன்றி சொல்லும் பாடல்
விண்ணும் மண்ணும் அமைத்தோய் போற்றி
விதைகள் முளைக்க செய்தோய் போற்றி
கண்ணை இமை போல் காத்தோய் போற்றி
கருக விடாமல் வளர்த்தோய் போற்றி
மழையும் வளமும் அருள்வோய் போற்றி
மருகும் களைகள் களைவோய் போற்றி
பூத்து காய்க்க புரிவோய் போற்றி
பொன்போல் கதிரை வளர்த்தோய் போற்றி
ஏற்றிப் புகழ்வோம் என்றும் போற்றி
எல்லாம் வல்ல இறையே போற்றி
திருப்பலி முடிந்ததும் கட்டிய கரும்பை வெட்டித் தருவார்கள். இப்போது கோவிலில் பொங்கலும் வைக்கிறார்கள்.
அப்போது ஊரில் திருவள்ளுவர் மன்றம் ஒன்று இருந்தது. அவர்களும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவார்கள். கோவிலிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவார்கள். இருவரும் பேசி வைத்து ஒருவருக்கொருவர் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் காலை திருவள்ளுவர் மன்றம் நடத்தும் விழாவில் பரிசு பெறுவார்கள் தான் மாலை அந்தோணியார் கோவிலிலும் பரிசு பெறுவார்கள்.
இரவு கலை நிகழ்ச்சிகள்
திருமணத்திற்குப் பின்னும் பொங்கலுக்கு நான் எங்கள் (அம்மா) ஊருக்குச் சென்று விடுவேன். என் தோழி வீட்டில், நாங்கள் என்றும் பொங்கல் விருந்தாளி தான். நான் ஊரில் இருந்தால் அவள் வீட்டிற்குச் சென்று விடுவோம். இவை கடந்த முறை ஊர் வந்த போது எடுத்த புகைப் படங்கள்.
================================
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.