தலைப்பைப் பார்த்தவுடன் ஆண்கள் அனைவரும் என்னை எதிர்க்கத் தயாராகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது நான் சொன்னதல்ல. பெரியார் சொன்னார். ஆண்களால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்பதும் பெண் முழுமையாக விடுதலைப் பெற ஆண்மை அழியவேண்டும் என்பதும் அவர் விடுத்த கூக்குரல்.

பெண் விடுதலைக்காகப் போராடியதில் பெரியாரின் பங்கு எத்தகையது என்பதை நாம் அறிவோம். அவரே, பெண்களால் மட்டுமே தங்களின் அடிமைத் தளைகளிலிருந்து வெளிவர இயலும் என்பதையும் அதற்கு ஆண்மை என்ற அடக்குமுறை அழிய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பெண்ணின் குணங்கள் என்ற உடனே பாமரனும்கூட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லிவிடுவான். ஆனால், ஆணின் குணங்கள் என்னவென்றால் நம்மில் பலருக்கும் தெரியாது. ’அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்றான் பாரதி. அத்தகைய மடமை சார்ந்த விஷயங்களையே பெண்ணின் குணங்களாக வகுத்திருக்கிறார்கள். ஆணின் குணங்களோ அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்ற அறிவு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன.

அறிவு என்பதையும் வீரம் என்பதையும் ஆண்களுக்கான குணங்களாகவே இச்சமூகம் எப்போதும் கட்டமைத்திருக்கிறது. அதனால்தான் ஆண்மை அழியட்டும் என்றார் பெரியார். சமதர்மமும் சமத்துவமும் ஓங்க வேண்டுமென்றால், பாலின பாகுபாடு மாற வேண்டுமென்றால், ஆண்மை என்ற அதிகாரம் அழியத்தான் வேண்டும்.

சங்க காலத்தில் பெண் அடிமையாக இருக்கவில்லை என்றும் சமமாக நடத்தப்பட்டாள் என்றும் பல சான்றுகள் நம்மிடம் இருந்தாலும் அக்காலகட்டத்திலும் பெண்கள் சமத்துவத்தோடு ஆணுக்கு நிகராக கருதப்படவில்லை என்பதே உண்மை. சுபவீரபாண்டியனின் பேச்சிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். சங்ககாலத்தில் ஓர் ஆண் தன் குடும்பத்தைவிட்டு நீங்குவதற்கு நான்கு காரணங்கள் இருந்தன. ஒன்று படிப்பதற்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது, இரண்டாவது தூதுவனாகப் பிரிந்து போவது, மூன்றாவது பொருள் தேடுவதற்காகப் பிரிந்து போவது, நான்காவது பரத்தையிடம் போவதற்காகப் பிரிந்து போவது. இந்த நான்கு பிரிவுகளிலும் ஆண்கள் மட்டுமே தங்கள் விருப்பப்படி செல்லலாமே தவிர, பெண்கள் எவ்விடத்திலும் அவ்வாறு சென்றதற்கான சான்றுகள் இல்லை என்று கூறினார். ஆக சங்க காலங்களிலும் பெண்களுக்கான உரிமைகள் அளந்தே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்திற்கும் அருகம்புல்லிற்குமான வித்தியாசம் சாதிப் பிரிவினைகளில் இருக்கிறது. அதைவிட மோசமான பேதம் இந்த ஆண் – பெண் பேதம் என்று குறிப்பிடுவார் பெரியார். அது உண்மைதானே. அவர் சொல்லிவிட்டுப் போய் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்னும் அந்தப் பேதங்களோடுதானே நம் சமுதாயம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆணவக் கொலைகளும் ஆசிட் வீச்சுகளும் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகத்தானே நிகழ்த்தப்படுகின்றன.

என் அப்பா கிராமத்திற்குப் போகும்போது எங்களைப் பார்த்துப் பலரும், ‘ஐயோ… மூணும் பொண்ணா? அப்பனுக்குக் கடைசிக் காலத்துல கொள்ளி போடக்கூட ஒரு வாரிசு (ஆண் பிள்ளை) இல்லயே’ என்று கூறுவார்கள். ‘அட, மட சாம்பிராணிகளா, கொள்ளி போட எதற்கு ஆண் மகனின் கைகள்?’ என்று தோன்றும். காலம் எவ்வளவோ மாறிவிட்ட இச்சூழலில் இன்னும் பல கடைக்கோடி கிராமங்களில் இவ்வழக்குச் சொற்கள் தேய்ந்து போய்விடவில்லை. நிலைமையும் முழுமையாக மாறிப் போய்விடவில்லை.

குடும்பத் தலைவியின் பெயரையும் புகைப்படத்தையும் கொண்டு குடும்ப அட்டை விநியோகிக்கலாம் என்பதே கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அமலாக்கப்பட்டது நாம் அறிந்த ஒன்றே. பத்துப் பிள்ளைப் பெற்றால் வீரத்தாய் என்று சொல்வழக்கு அந்தக் காலத்தில் உண்டாம். அத்தகைய தாய்மார்களுக்கு அதிகாரப்பூர்வமாகக் குடும்பத் தலைவி என்ற பெயர் வழங்கவே இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் உடலாலும் மனதாலும் வேறுபட்டவர்கள். அவர்களின் உடல் அமைப்பும் உடல் கட்டுறுதியும் வெவ்வேறானவை. அதற்காக இந்த ஏற்றத் தாழ்வுகளை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பு இல்லை என்று கும்மி கொட்டுவோம்.

பெண்ணடிமைத்தனத்தை முன்னெடுப்பதில் மதங்களின் மத நூல்களின் பங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. மனுநீதி மறைந்து அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் நீதிபதியாக இருந்தவர் முத்துசாமி அய்யர். கணவன் மனைவியின் வழக்கு ஒன்று அவரிடம் வந்தது. அதில் மனைவியின் கை கணவனால் உடைக்கப்பட்டது தவறல்ல என்று அந்த நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத நூல்களின் அடிப்படையில் இது போன்ற பல தீர்ப்புகளும் பெண்களுக்கும் சாமானியர்களுக்கும் எதிராக வழங்கப்பட்டிருக்கின்றன என்பது கண்டனத்திற்குரியது. லெனினின் கருத்துகள்தாம் நினைவிற்கு வருகின்றன. திருமணம் எனும் நிறுவனத்தில் ஆண் எப்போதும் முதலாளியாகவும் பெண் எப்போதும் தொழிலாளியாகவும் பார்க்கப்படுகிறாள் என்பது இன்னமும் மாறிவிடவில்லையே.

என்னுடைய இளவயதில் லைன் வீட்டில் இருந்தோம். பல குடும்பங்களும் அங்கு வசித்துவந்தார்கள். அதில் சில கணவன்மார்கள் மனைவிமார்களை அடித்துக் காயப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ரத்தம் சொட்டச்சொட்ட, காது கிழிந்து கம்மல் உடைய அவர்கள் காயப்பட்ட பல காட்சிகளையும் கண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களின் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். பத்து நாட்கள் அந்தக் காயங்களை எல்லாம் சரிசெய்துகொண்டு மீண்டும் கணவன் வீட்டிற்கே வருவார்கள். இந்தப் பத்து நாட்களும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற உபதேசமெல்லாம், கணவன் என்றால் அப்படித்தான் இருப்பார். ஆண் என்றால் அப்படித்தான் இருப்பார். குழந்தைகளுக்காகவாவது நீ இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள நீ அமைதியாகத்தான் இருக்க வேண்டும். கணவன் குடிப்பதையோ அடிப்பதையோ எல்லாம் நீ லட்சியப்படுத்தக் கூடாது. இப்படி அறிவுரைகளால் நிரப்பப்பட்டு அவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கப் படுவார்கள். எப்படி விதவையாக வாழ்வதைக் காட்டிலும் கணவனின் சிதையில் விழுந்து சாவதே மேல் என்று பெண்களையே எண்ண வைத்ததோ இச்சமூகம் அதைப் போலவே கணவனைப் பிரிந்து வாழ்வதைக் காட்டிலும் அவனால் செய்யப்படும் சித்ரவதைகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று பெண்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்காக வகுக்கப்பட்ட முக்கியமான சட்டங்களில் சில பின்வருமாறு:

1955 – பெண்களின் திருமண வயது 17 ஆக திருத்தச் சட்டம்

1956 – வாரிசு உரிமைச் சட்டம்

1956 – விதவைகள் மறுமணச் சட்டம்

1961 – வரதட்சணைத் தடுப்புச் சட்டம்

1961 – மகப்பேறு நலச்சட்டம்

1964 – சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்ட ரீதியான அங்கீகாரம்

1989 – பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் பங்குரிமை

1999 – பெண்களைத் தவறான முறையில் சித்தரிப்பதை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்வது.

இத்தகைய மாபெரும் சட்டங்களை அரசு கொண்டுவந்திருந்தாலும் இந்தச் சட்டங்கள் முழுமையாகப் பெண்களைச் சென்று சேர்ந்திருக்கிறதா என்ற கேள்வி தொக்கியே நிற்கிறது. இன்னமும் வரதட்சணைகள் வாங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் பெண்வீட்டார் சீர் என்ற பெயரில் வரதட்சணை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொடுத்தாலும் பல இடங்களிலும் பெண்பிள்ளைகள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் பெண்களுக்கு மறுமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. பல்வேறு உளச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதை கணவன் வீட்டாரே பெரும்பாலும் முடிவெடுக்கின்றனர்.

இன்னமும் பற்பொடி விளம்பரத்திலிருந்து சகல விளம்பரத்திற்கும் பெண்ணின் உடலே இச்சமூகத்தில் பலராலும் மூலதனமாகக் பயன்படுத்தப்படுகிறது. போக்சோ வரை சட்டங்கள் நீண்டாலும் இன்னமும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை ஆண் சமூகத்தின் ஆதிக்க உணர்வு என்பதை நாம் ஒருகாலும் மறுக்க முடியாது. அவ்வதிகாரத்தின் அடிப்படையைக் களைய வேண்டுமென்றால் அவ்வதிகார ஆண்மை அழிய வேண்டும்.

கவிஞரும் ஆசிரியையுமான மாயா ஏஞ்சலோவின் உருவம் அமெரிக்க டாலரில் பொறிக்கப்பட்டிருக்கிறது. உலகமெங்கிலும் அதைக் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பல காலமும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஆப்பிரிக்க அமெரிக்கரிலிருந்து ஒரு பெண் கவிஞருக்கு மரியாதை செலுத்தப்படுவது அவ்வினத்திற்கான, பெண்ணினத்திற்கான வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருக்குமான வெற்றி.

ஆண்மை அழியட்டும் என்ற தலைப்பை நாம் சரியாகப் புரிந்துகொள்ளும்போது அது ஒரு சமூக மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

தொடர்ந்து பேசுவோம்.

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.