ஒரு பெரிய எழுத்தாளரின் தலை சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் உருட்டப்படுகிறது. தன்பால் ஈர்ப்பு கொண்ட அந்த எழுத்தாளர் இலக்கியம் பேச வந்த தன்னை ‘பாலியல் ரீதியில் துன்புறுத்தினார்’ என்று அது குறித்துப் பல நாள் தயக்கத்துக்குப் பின்னர் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அதனைத் தொடர்ந்து நிறையப் பேர் அந்த எழுத்தாளருடனான தங்களது ‘கசப்பான’ அனுபவங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி அந்த எழுத்தாளர் தனக்கு இலக்கிய அனுபவத்தையும் இதுபோல்தான் இரண்டு பிரபல எழுத்தாளர்கள் ஊட்டியிருப்பதாகவும் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாதிக்கப்பட்டவர். ஒருவரின் சம்மதமின்றி பாலியல் ரீதியாக அணுகுவது மிகப்பெரிய தவறு. இத்தகைய கோணங்கி சேஷ்டைகள் நிகழ்த்தியவர் இன்னும் பாதிக்கப்பட்டவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

எழுத்தும் எழுத்தாளரும் ஒன்று போல் இருந்தால் மட்டுமே, அதாவது சொல்லும் செயலும் ஒன்றியிருந்தால் மட்டுமே அந்தப் படைப்பு படிப்பவருடன் ஒட்டும். இரண்டும் வேறு வேறு பாதையில் பயணித்தால் அந்த எழுத்தே அர்த்தமிழந்து போய்விடும். நூறு சதவீதம் ஒன்றியிருக்க வேண்டாம். குறைந்தபட்ச அளவாவது எழுத்துக்கு நேர்மை செய்ய வேண்டாமா? ஓர்பால் விழைவு என்பது இருவருக்கும் சம்மதமாகி நிகழ்ந்தால் அது பொதுவெளிக்கே வந்திருக்காது. விருப்பமின்றி நிகழும் எதுவுமே சர்ச்சைக்குரியதுதான். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் தவறு தவறுதானே? அவருக்கு முட்டுக் கொடுக்கும் இலக்கியவா(வியா)திகளைப் பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது. இந்தக் கட்டுரை அந்தக் கோணங்கிகளைப் பற்றியது அல்ல.

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டே LGBTQIA+ பிரிவுகள் இருக்கிறது. ஆனால், அதை அன்றைய பழஞ் சமூகம் அங்கீகரிக்கவில்லை. மதத்தின் பெயரால் அவை கொடுங் குற்றமாக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவான தன்பால் ஈர்ப்பு சமூகத்தினராக ஆண்கள் அதிகளவு சீனாவில் அறியப்பட்டுள்ளனர். பழைய சீனாவில் ஆண்களின் தன்பால் ஈர்ப்பும் உறவும் சகஜமாக நிலவி வந்துள்ளதற்கு நிறைய வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பழங்கால சீனாவின் பேரரசராக இருந்தவரின் காதலன் மிஜி ஸியா, ஒருநாள் அரசருடன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த போது, கனிந்து சாறு கொட்டும் ஒரு பீச் பழத்தைப் பாதி கடித்து சுவைத்து அதன் ருசியில் மயங்கியவன், மீதியை அரசருக்கு அளித்தான். அவர் அதை வாங்கிச் சுவைத்துக் கொண்டே தன் மீது அவன் கொண்டிருக்கும் அலாதியான காதலை ரசித்து உருகினார்.

இந்த இருவரிடையே நிலவிய ஒருபாலுறவு குறித்து வரலாற்று வல்லுநர் ஹான் ஃபெய் பதிந்திருக்கிறார். தனது அன்னை உடல்நலமில்லாமல் இருந்தார் என்றறிந்ததும், மிஜி ஸியா அரசரின் ரதத்தை அனுமதி பெறாமல் உரிமையோடு எடுத்துக்கொண்டு சென்று பார்த்ததை அவனது தாய்ப் பாசம், அன்னை மீதான பக்தி என்றெல்லாம் பாராட்டுவார். பின்னாளில் காதலனுடைய அழகனைத்தும் மங்க ஆரம்பித்ததும் அவனைப் பிடிக்காமல் போகவே, அவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தும் போது அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, தன் ரதத்தை அவன் திருடியதாகச் சொல்வார். பாதி கடித்த பழத்தைக் கொடுத்ததையும் குற்றமாகவே சொல்வார். அவன் அவரிடம் முன்பு போலவே பிரியமாக இருந்தாலும் அவன் மீதான அரசரது ஈர்ப்பு மறைந்துவிடும். இதேபோல தொடக்கத்தில் அழகன்களுடைய வசீகரமும் புத்திசாலித்தனமும் மன்னர்களாலும் பிரபுக்களாலும் போற்றப்பட்டு பின்னாளில் அவர்களால் தூற்றவும் பட்டன. மன்னனின் விருப்பம் ஆண் துணை மீதிருக்கும் சூழலில் அரண்மனை அந்தப்புரங்களில் தனிமையில் தவிக்கும் பெண்களிடையே ஓரினச் சேர்க்கைகள் தோன்றிய நிகழ்வுகளும் யிங் ஷாவ் (கி.பி 140-206) போன்றவர்களின் சில பதிவுகளில் கிடைக்கின்றன.

இவையெல்லாம் வெளிநாட்டுச் சம்பவங்கள் தாமே என்று சொல்பவர்கள் கவனத்துக்கு, நமது இந்தியாவிலும் இத்தகைய உறவுகள் இருந்தன. இன்னும் இருந்து கொண்டுமிருக்கின்றன. உலகின் எல்லாக் கலாச்சாரங்களிலும் இத்தகைய தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது குற்றமோ அல்லது மனநோயோ கிடையாது. American Psychological Association (APA) 1973ஆம் ஆண்டே தன்பால் ஈர்ப்பு ஒரு மனநோய் அல்ல என்று அறிவித்துவிட்டது. World Health Organization (WHO) 1981ஆம் ஆண்டு தன்பால் ஈர்ப்பு ஒரு நோயல்ல என்று அறிவித்தது. நமது இதிகாசங்கள்,  புராணங்களில் எல்லாம் இத்தகைய உறவுகள் காணப்படுகின்றன. 

பிற்கால எழுத்தாளர்களில் பலர் ஓரினச்சேர்க்கை குறித்தெழுதும் போது ‘பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளனர். தன்பால் உறவில் ஈடுபடும் ஆண்கள் மகிழன் என்றும், பெண்கள் மகிழினி என்றும் சுட்டப்படுகிறார்கள். மகிழன்கள் வலது காதில் அணியும் வளையம் அவர்களுக்குள்ளான குறியீடாகக் கருதப்படுகிறது.

ஓரினச் சேர்க்கையைக் குற்றச் செயலாக வரையறுக்கும் அரசியல் சாசனத்தின் 377வது பிரிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சட்டம் ஏற்றுக் கொண்டாலும் இன்னும் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்பாலீர்ப்பாளர்களைப் பகடி செய்பவர்களும் அருவருத்து ஒதுக்குபவர்களும் அவர்கள் மீதான வன்மத்தை அதிகபட்சமாக வெளிப்படுத்துபவர்களுமாகத்தான் இந்தச் சமூகம் இன்னும் இருக்கிறது. இப்போதுதான் இத்தகையவர்கள் குறித்து வெளிப்படையாகப் பேசவே ஆரம்பித்திருக்கிறோம். அவர்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள இன்னும் நீண்ட போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் தன்பால் ஈர்ப்பால் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வெளியானது. வாழ்த்தியவர்களைவிட அவர்களை வசை பாடியவர்களும் மிக மோசமான ஆபாச கமெண்ட்டுகளைப் பதிவிட்டவர்களும் கணிசமாக இருந்தார்கள். அவர்களை வாழ்த்தும் அளவுக்கு விசாலமான மனம் நமக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தேவையற்ற கருத்துகளைச் சொல்லாமல் இருந்தாலே போதும். காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வார்கள். சாதி, மதம், வயது வேறுபாடுகள் இல்லை. அதனுடன் இப்போது பாலினத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம் ஒழுக்கம் என்று வரையறுத்து வைத்திருப்பவை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களை அவரவர் இயல்புப்படி ஏற்றுக்கொள்வோம். அதுவே நமது குறைந்தபட்ச அறம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.