இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ராணுவத் தேவைகளுக்காக அறிவியல் துறைகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது. குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில் படையெடுத்துச் செல்லும்போது மலேரியா தாக்காமல் இருப்பதற்குக் கொசுக்களை ஒழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தச் சூழலில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த டிடிடி (DDT – Dichlorodiphenyltrichloroethane) என்ற வேதிப்பொருளுக்குப் பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

டிடிடி என்ற பெயரைக் கேட்டாலே இப்போது நடுங்குகிறோம். ஆனால், பூச்சிக்கொல்லியாக அறிமுகமானபோது இதை எல்லாரும் கொண்டாடினார்கள் என்பதே வரலாறு. “மனித இனத்துக்கே ஒட்டுமொத்தமாக பயனளிக்கும் வேதிப்பொருள்” என்று அதை விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். டிடிடியின் பூச்சிக்கொல்லிப் பண்பைக் கண்டறிந்த ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானியான பால் ஹெர்மனுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது! காடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவேண்டிய வீரர்களின் தலையில் நேரடியாகவே அதைத் தெளித்து அனுப்பியிருக்கிறார்கள்! இது பேன்களைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்ததால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களின் தலையிலும் டிடிடியைத் தெளித்திருக்கிறார்கள்.

வேறு ஓர் ஆவணத்தில் டிடிடியின் பயன்பாடு பற்றிய சில விவரணைகளைப் படிக்க அதிர்ச்சியாக இருந்தது. “எங்களது குழந்தைப் பருவத்தில், அதாவது 1940களில், டிடிடி இருக்கும் ஸ்ப்ரே துப்பாக்கியைக் கொடுத்து செடிகளில் தெளிக்குமாறு அப்பாவும் அம்மாவும் தந்துவிடுவார்கள். வீட்டைச் சுற்றியுள்ள பூச்சிகளைக் கொல்வது, சும்மா விளையாட்டுக்கு ஒருவர் மீது இன்னொருவர் ஸ்ப்ரே அடிப்பது என்று அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தினோம். ஒரு ஸ்ப்ரே துப்பாக்கி எங்களிடம் தரப்பட்டதே பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்” என்று எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். நாற்பதுகளில் அமெரிக்காவில் பிறந்த பலரும் இதைப்போலவே பல அனுபவங்களைப் பகிர்கிறார்கள். குழந்தைகளின் கையில் ஒரு விளையாட்டுப் பொருளாக நச்சுப்பொருள் நிரப்பிய துப்பாக்கிகளைத் தந்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கும் நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், பூச்சிக்கொல்லிகளால் வரும் ஆபத்துகளை யாரும் உணராத காலகட்டம் அது. டிடிடி புழக்கத்துக்கு வந்து, சுமார் பத்து ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பிறகே அதன் தீமை பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. “அந்தக் காலகட்டம் அப்படிப்பட்டது. மக்கள் பெருநிறுவனங்களை நம்பினார்கள். சிகரெட் விளம்பரங்கள் பிரபல வானொலி நிகழ்ச்சிகளின்போது நேரடியாகவே ஒலிபரப்பாகும். கோககோலா அப்போது ஒரு முழுமையான பானமாகப் பார்க்கப்பட்டது. வேதிப்பொருள்கள் வாழ்வை மேம்படுத்துகின்றன என்று உலகெங்கும் நம்பினார்கள். அப்படியான ஒரு காலம் அது” என்று விளக்கம் தருகிறார் மார்கரெட் அட்வுட்.

பூச்சிக்கொல்லிகள் பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஞ்ஞானி ரேச்சல் கார்ஸன், இதில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார். டிடிடியின் பின்விளைவுகள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கு உதவுமாறு பலமுறை பத்திரிகைளிடம் கேட்டுப் பார்த்தார். யாரும் முன்வராததால் தானே அதுபற்றிய தகவல்களைச் சேகரித்தார். தனது ஊரில் வழக்கமாகக் காணப்படும் பறவையினங்கள் திடீரென்று இறக்கத் தொடங்கியிருப்பதாக அவரது நண்பரிடமிருந்து கடிதம் வருகிறது. பறவைகளுக்கும் டிடிடிக்குமான தொடர்பைத் தேடிப்போன ரேச்சல் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். பறவைகளற்ற வசந்தத்தைக் குறிக்கும்படி ‘மௌன வசந்தம்’ (Silent Spring) என்ற ஒரு தலைப்பை வைத்து, பூச்சிக்கொல்லிகளால் உணவுச்சங்கிலி, சூழல், மனித இனம் என எல்லாவற்றுக்கும் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிய ஒரு விரிவான புத்தகத்தை எழுதத் தொடங்கினார்.

மௌன வசந்தம் நூலில் வரும் ‘Fable for Tomorrow’ என்ற அத்தியாயம் முக்கியமானது. அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெயரற்ற சிறு நகரத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கட்டுரை அது. ஒரு மர்மமான நச்சு தாக்கிய பின்பு அந்த ஊரில் இருக்கும் கால்நடைகள், கோழிகள் ஆகியவை இறந்துவிடுவதாகவும், பாடுவதற்குப் பறவைகள்கூட இல்லாமல் சாவின் நிழலில் ஊரே அமைதியாகவிட்டதாகவும் சொற்களாலேயே ஒரு சித்திரத்தை வரைந்தார் ரேச்சல் கார்ஸன். கட்டுப்பாடற்ற முறையில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று எச்சரித்தார். மரபணு பாதிப்புகள், புற்றுநோய், சூழல் சீரழிவு போன்ற பாதிப்புகள் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படுகின்றன என்று சான்றுகளோடு நிறுவி, பூச்சிக்கொல்லிகளைச் சரியான முறையில் ஆராய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். முன்னேற்றம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவை உண்மையில் நச்சுப்பொருள்கள் என்று ரேச்சல் அந்த நூலில் தெரிவித்திருந்தார்.

ரேச்சல் கார்ஸன்
ரேச்சல் கார்ஸன் தலையில் பூச்சிக்கொல்லி மருந்து

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பைபிள்’ என்று இன்றும் பாராட்டப்படும் நூல் அது. ஆனால், 1962இல் மௌன வசந்தம் வெளியானபோது கலவையான எதிர்வினைகள் ஏற்பட்டன. பலரும் நூலை வாசித்தார்கள் என்றாலும் அதில் இருக்கும் கருத்துகளை மக்களால் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கைக்கு எதிராக மனிதன் நின்று ஜெயித்துக்காட்ட வேண்டும் என்பதை முன்வைத்துக் கட்டமைக்கப்பட்ட அமெரிக்கக் கலாச்சார மரபில் இயற்கையின் அழிவைப் பேசுவது சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்பட்டது. தங்களைச் சுற்றியுள்ள தோட்டங்கள், காடுகளில் நேரடியாகப் பாதிப்பை கவனித்தவர்கள் நூலைக் கொண்டாடினார்கள். ஆனால், மற்றவர்களுக்கு நூலின் கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

நூலின் கருத்துகள் விவாதப்பொருளானது தெரிந்ததும் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்கள் ரேச்சல் மீதான தனிநபர் தாக்குதலில் இறங்கின. அவரது அத்தியாயத்தைப் போலவே தலைப்பிட்ட பகடிச் செய்திகளைத் துண்டுப் பிரசுரங்களாக்கி மக்களிடம் விநியோகிப்பது, ரேச்சலுக்கு மனநோய் இருக்கிறது என்று பரப்புவது, ‘ஒரு அறிவியலாளராக இல்லாமல் சும்மா பித்துப்பிடித்த பிரச்சாரகர் போல எழுதுகிறார்’ என்று விமர்சிப்பது எனக் கீழ்த்தரமாகச் செயல்பட்டன. “எல்லா முன்னேற்றங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்மைக் கற்காலத்துக்குப் போகச் சொல்லும் ஒரு ஆபத்தான புரட்சியாளர்” என்று பெருநிறுவனத்தினர் ரேச்சலை வர்ணித்தார்கள். அழகாக இருந்தும் அவருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று சம்பந்தமே இல்லாமல் அபத்தமாகக் கேள்வி எழுப்பினார்கள். இந்த மூர்க்கமான எதிர்வினைகளின் உச்சமாக, “திருமணமாகாத, குழந்தைகள் இல்லாத ஒரு பெண்ணான அவர், மரபணு பாதிப்பைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறார்?” என்று உயர் பதவியில் இருக்கும் ஒருவர் கேள்வி எழுப்பினார்!

விமர்சனங்களுக்கு அஞ்சாத ரேச்சல், “நான் மௌனமாக இருந்துவிட்டால் எதிர்காலத்தில் என் மனசாட்சி என்னை அமைதியாக இருக்க விடாது” என்று தெரிவித்தார். தன்மீதான அத்தனை எதிர்வினைகளையும் தைரியத்துடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டார்.

அதே நேரம் நாளுக்கு நாள் நூலின் விற்பனை அதிகமாகிக்கொண்டே போனது. மௌன வசந்தம் நூலால் வந்த பாதிப்பில் மக்களிடம் மெதுவாக ஒரு மன எழுச்சி ஏற்பட்டது, பூச்சிக்கொல்லிகள் பற்றிய பொதுப்புரிதல் மெதுவாக மாறியது. அரசியல், சட்டரீதியான செயல்பாடுகளுக்கும் சுற்றுசூழலுக்கும் தொடர்பில்லை என்று அரசுகள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் நூலின் மீதான புகழ் வெளிச்சம் அதிகாரத்தில் இருப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்களும் ரேச்சல் என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர்.

“சும்மா பயம் காட்டுகிறார்” என்ற குற்றச்சாட்டுக்கு ரேச்சல் நேரம் செலவழித்து பதில் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்தவர்களுக்கு நூலின் பிரதிகளை வழங்கினார். சுமார் 55 பக்கங்கள் கொண்ட நீண்ட தரவுகள், குறிப்புகளின் பட்டியலைப் பார்த்த அதிகாரிகள் வியந்துபோயினர். நூலில் இருந்த ஒவ்வொரு புள்ளிவிவரத்துக்கும் சரியான ஆதாரங்களை ரேச்சல் வழங்கியிருந்தார்! நூலின் அறிவியல் துல்லியத்தை மக்கள் கவனிக்கத் தொடங்கியதும், நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் வெற்றுக் கூச்சல்கள்தாம் என்று அனைவருக்கும் புரிந்தது. ரேச்சலின் புத்தகத்தை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரத் தொடங்கின. புத்தகம் வெளிவந்த ஒரே வருடத்துக்குள் தனது நூலின் தரத்தாலேயே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரேச்சல். அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியிடம் டிடிடி பற்றிய விவரங்களைச் சமர்ப்பிப்பது, திட்டவரைவுகளைப் பரிந்துரைக்கும் அமெரிக்க அரசின் உயர்மட்டக் குழுவினருடன் கலந்தாலோசிப்பது என தொடர்ந்து செயல்பட்டார். மௌன வசந்தம் நூல் வெளியாகி 10 ஆண்டுகளில், அதாவது 1972இல் அமெரிக்க அரசு டிடிடி பூச்சிக்கொல்லியை முழுமையாகத் தடை செய்தது. ஒரு பெண் அறிவியலாளரின் தளராத முயற்சிக்கும் எழுத்துக்கும் கிடைத்த வெற்றி அது.

தடை செய்யப்பட்டாலும் அப்போதைய பயன்பாட்டின் நச்சு எதிரொலி இன்று வரை தொடர்கிறது என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிடிடி பயன்பாடு அதிகமாக இருந்த நாற்பதுகளில் குழந்தைகளாக இருந்தவர்களிடம் ஆரம்பித்த பாதிப்பு, அவர்களது மூன்றாம் தலைமுறை வரை தொடர்கிறதாம். “நான் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். 40களில் குழந்தைகளாக இருந்தவர்களின் மூன்றாம் தலைமுறை, அதாவது அந்தப் பாட்டிகளின் பேத்திகளை ஆராய்ந்து வருகிறேன். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன” என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பார்பரா கோன். இவரது ஆராய்ச்சி முடிவுகள் 2021இல் வெளியிடப்பட்டன. தலைமுறைகள் கடந்தும் இந்தப் பூச்சிக்கொல்லி தொடர்ந்து தாக்கும் என்பதை அவர் அதிகாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்! கருவுற்ற தாயின் உடலில் இருக்கும் ரத்தத்திலும் தாய்ப்பாலிலும்கூட டிடிடி கலந்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கருவிலிருக்கும் குழந்தையே டிடிடியின் தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டுதான் பிறக்கிறது!

இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப்பொருளின் பயன்பாட்டை, எழுத்தையே ஆயுதமாக வைத்து ரேச்சல் கார்ஸன் கட்டுப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் பொதுபுத்தியில் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அவர்தான் கொண்டு சேர்த்தார். சேகரித்த தகவல்களை ஓர் ஆய்வுக்கட்டுரையாக மட்டும் அவர் சுருக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். பொதுமக்களிடம் அது சென்றதால்தான் அனைவரும் அதுபற்றிப் பேசத் தொடங்கினர், நிறுவனங்கள் பயந்தன, பொதுமக்களின் எழுச்சியால் அதிகார மையங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது, ஒரு தீர்வும் கிடைத்தது. அறிவியல் ஏடுகளில் ஆய்வுக்கட்டுரையாக மட்டுமே ரேச்சல் கார்ஸன் இதை எழுதியிருந்தால், அவரது தரவுகள் புழுதி படிந்த பல்கலைக்கழக நூலகங்களில் கரையான்களுக்கு இரையாகியிருக்கும்.

ரேச்சல் கார்ஸனின் பயணத்திலிருந்து சூழல் போராளிகள், குறிப்பாகச் சூழல் செயல்பாட்டில் இருக்கும் பெண்கள் பல அனுபவப் பாடங்களைப் பெறலாம். ஒருவர் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி எழுதுகிறார், அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒருவர் எழுதுகிறார், “கற்காலத்துக்கு நம்மைப் போகச்சொல்லும் ஆபத்தான புரட்சியாளர்” என்று அவரை விமர்சிக்கிறார்கள். இன்றைய இணைய ட்ரோல்களின் ஆதி வடிவங்கள் இவை. ஆனால், வடிவம் மாறினாலும் கேள்விகள் மாறவில்லை. பொதுவெளியில் சூழல் பாதுகாப்பு பற்றியும் அதிகாரத்துக்கு எதிராகவும் பெருநிறுவனங்களை எதிர்த்தும் குரல் கொடுப்பவர்கள் இன்றும் இத்தகைய விமர்சனங்களையே சந்திக்கிறார்கள். தன் மீதான தாக்குதல்களை ரேச்சல் எதிர்கொண்ட விதம் சுவாரசியமானது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் எழுதிய நூலின் அறிவியல் துல்லியத்தாலேயே விமர்சனங்களுக்கு ரேச்சல் பதிலடி கொடுத்திருக்கிறார். சூழல் போராளிகள் அனைவருக்கும் இந்த வழி சாத்தியப்படாது/பயன்படாது என்றாலும் அவரது செயல்பாடு ஒரு நல்ல முன்னுதாரணம்.

அறுபதுகளில் சூழலுக்காகப் போராடியவரின் வரலாறு இது என்றால், இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒரு சூழலியல் பிரச்சனைக்காகப் பல இளம் பெண்கள் களத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார்?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!